தான் பெற்ற பிள்ளைகளை
தானஞ்செய்வது போல்
வயிற்றுச்சோத்துக்கு
வேலைக்கனுப்பி நொந்தவர்கள் நாங்கள்.

சாணியெடுத்து
சாக்குப் பையில் படுத்து
ஏனமெடுத்து ஏந்தியுண்டு
எட்டி நின்று வாழ்பவர்கள் நாங்கள்.

சித்திரை வெயிலும்
மார்கழிப் பனியும்
பழகிப்போன உடலுக்கு
பழையதை வாங்கி உடுத்துவோர் நாங்கள்

முள் குத்தி கல்குத்தி
ஆணிக்காலானது பாதங்கள்
நம்பிக்கையில்லா வாழ்க்கைத் தடத்தை
நம்பியே நடைபோடும் நாங்கள்.

எங்கள் ஆழ்மனதை அறிந்தவராய்
சிங்கமென வந்தார் சீனிவாசராவ்.

அடிமை விலங்கொடிக்க
அடியுங்கள் முரசை என்றார்
கூனிக் குறுகியிருந்த எங்களை
கூலி கேட்க வைத்தார்.

அடித்தால் திருப்பி அடியுங்கள்
ஆண்டவன் கட்டளையல்ல
அடியேன் கட்டளை என்றார்.

சிவந்தது எங்கள் முகம்
சினந்தது எங்கள் மனம்
செங்கொடி ஏந்தி நின்றோம்.

நெடிய பாதை
நம்பிக்கையான பாதை
விடியலை நோக்கிய பாதை
வெல்வது நாங்களே!

- ஈரோடு கே. துரைராஜ்

Pin It