மேகலிங்கத்தை விட தேவிதான் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாள். பத்திரகாளியாய் வெடித்தாள். கத்தரி வெயிலின் தகிப்பாய்க் கொதித்தாள். ரௌத்ரத்தின் வெம்மை முகத்தில் பரிணாமித்தது. பட்டாசு வார்த்தைகள் வெடித்துச்சிதறின.

"என்னங்க, எத்தன நாள்தான் வேலையை விட்டுட்டுப் போறது. அந்த மேனேசர் மனசில என்னதான் நினைச்சிட்டிருக்கார். நம்மளப் பாத்தா இளப்பமாத் தெரியுதா? இன்னைக்கு நானும் வரேன். அந்த ஆள உண்டு இல்லன்னு நாலு கேள்வி உறைக்கிற மாதிரி கேட்டாத்தான் அறிவு வரும்"

"இதுவரக்கி நாலுநாள் வேல போச்சி. இன்னைக்குக் கண்டிப்பாத் தர்றேன்னு சொல்லியிருக்கார். பார்ப்போம். "கானல் நீர் நம்பிக்கையில் மேகலிங்கமும் மனைவியைச் சாந்தப்படுத்தினான்.

"இன்னைக்கு மட்டும் தரலேன்னா. . . "-தேவிக்குப் பேச்சே எழவில்லை.

"அப்பா, பேங்க்ல லோன் வாங்கிறதுக்கு ஏற்கனவே மூணு நாள் லீவு போட்டுட்டேன். இன்னைக்கும் கூப்பிடுறீங்க. பிரின்சிபல் சந்தேகப்படுகிறார். லோன் விசயமா பேங்குக்குத் தான் வந்தேன்னு மேனேஜர்கிட்ட எழுதி வாங்கிட்டு வரணுமாம். அப்பத்தான் நாளைக்கி காலேஜ்ல பெர்மிட் பண்ணுவாராம் "தனது ஆரம்பகாலக் கல்லூரி வாழ்க்கையின் நெருக்கடியில் தத்தளித்தான் மூத்த மகனும்.

"சொன்னாலும், கேக்காம கூலிக்காயா இருபது தேங்கா, அஞ்சாறு கிலோ கருப்பட்டி, தேன் பாட்டில் ரெண்டு கொடுத்தீக. இன்னைக்கு வேற ரெண்டு கிலோ தேன் கேட்டார்னு எடுத்து வச்சிட்டீக. கணக்குப் பாத்தா இதுவே ஆயிரக்கணக்கில வருது. இதுக்கு மேல அவர் என்ன எதிர்பாக்கிறார்னு தெரியலயே" தேவியும் அங்கலாய்த்தாள்.

"கவர்மென்ட் காலேஜில புரபசரா இருக்கிற மாமாவே செக்யூரிட்டி கையெழுத்து போட்டுட்டார். நம்மகிட்ட இருக்கிற அரை ஏக்கர் வயலோட ஒரிஜினல் பத்திரத்தையும் கொடுத்துட்டீங்க. இன்னும் என்ன வேணுமாம் அவருக்கு. அப்பா, நீங்க யார்கிட்டேயும் இதுவர கடனே வாங்கினதில்ல. "

"படிப்புக்குத்தானே? நல்ல விசயத்துக்குக் கடன் வாங்குனா தப்பில்ல. இன்னைக்குத் தந்திருவார். " மகனையும் ஆறுதல்படுத்தினார் மேகலிங்கம்.

"என்னத்த தருவார். 62,000 ரூபா பீஸ்கட்ட 40,000ந்தான் தருவார்னு சொல்றீக. அதுக்கே ரெண்டு மாசமா அலையிறீக. கடவுள்தான் கண்ணு திறக்கணும்" தேவி கடவுளை நம்பினாள்.

"மூவரும் வங்கிக்குக் கிளம்பினர். சைக்கிளின் முன்புறம் மகனையும் பின்னே மனைவியையும் ஏற்றிக் கொண்டார். 'உன்னி உன்னி' அழுத்தி மிதித்தார். மேகலிங்கத்தின் வாழ்க்கைச் சக்கரம் போல் சைக்கிளின் சக்கரமும் மெதுவாகத்தான் உருண்டது.

"ஏங்க, வேகமாய் போங்க. மத்தியானம் பண்ணைக்குப் போயி பயினி காய்ச்சணும். நீங்களும் பன சீவணும்ல" அவசரப்படுத்தினாள் தேவி.

தேவிக்கு பதனீர் காய்ச்சும் வருசத்தில நான்கு மாதம் ஓய்வு சிறிது கூட இருக்காது. எப்போதும் ஒரே நச்சரிப்பு வேலை. நெருப்பின் தகிப்பு அனலாய்க் கொதிக்கும். வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்த விவசாயக் குணத்தில் வளர்ந்த தேவிக்கு புதிதாய்ப் பனையேறிப் பண்பும் கருப்பட்டியாத் தித்தித்தது. அதன் நெளிவு சுளிவுகளை பக்குவத்தை புதிதாய்க் கரம்பிடித்த வாழ்க்கைத் தோழனிடம் கற்றது பேரானாந்தம்.

அதுவும் மேகலிங்கம் மாதிரி பாசக் கனிவான- அதேநேரம் உழைப்பே வெறியாகக் கொண்ட கணவனிடம் பதனீர் காய்ச்சும் பாடம் கற்றது அலாதியான அனுபவம்.

அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து விடுவான்.

பழைய சோற்று நீச்சித் தண்ணீரை செம்பு நிறைய குடிப்பான். ஐந்த மணிக்குள் வயலுக்குச் சென்று முதல் பனையைத் தொட்டு விடுவான். ஒரு நிமிடம் குலதெய்வத்தை வணங்கிவிட்டு பனையேறி பதனீர் இறக்குவான். முப்பத்தைந்து வருடப் பழக்கம்.

தேவியும் எட்டு மணிக்குள் வயலுக்கு வந்து விடுவாள். மேகலிங்கம் முட்டியில் (மண்பானை) இறக்கிய பதனீரை பண்ணை (குடிசை) யில் சேர்ப்பாள். பெரிய அண்டாவில் ஊற்றி விறகு பற்ற வைப்பாள். பனை ஓலைகள், மட்டைகள், பாளைகள் என கட்டுக்கட்டாக விறகுகளை உள்வாங்கி எரியும் நெருப்பு. அதன் வெப்பத்தின் தகிப்பில் வியர்வைத் துளி சொட்டும்.

பதனீர் சூடேறி சூடேறி அடர்த்தியாகும். நிறம் மாறும். பாகுவாய்க் குழையும். விளக்கெண்ணெய் அல்லது இடித்த ஆமணக்கு விதைத் துகள்களை நேரம் பார்த்து விட்டுக் கிளறிக் கொண்டேயிருப்பாள்.

பனையேறுவதை விட்டுவிட்டு பாகு குழையும் பக்குவத்தை நேர்த்தியாய் சொல்லிக் கொடுப்பான். பாகு கிளறும் வாக்கில் தேவியையும் கிளறுவான். அவன் குறும்பையும் ரசித்து நெகிழ்ச்சியில் திளைப்பாள்.

பண்ணையின் ஈசான மூலையில் மணல் பரப்பியிருக்கும். அதன்மேல் சுத்தமான பழைய துணி விரிக்கப்படும். நனைத்த சிரட்டைகளை அதில் நேராய் அழுத்தி வைக்கப்படும். பாகு சரியான பருவம் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவேண்டும். லேசாகத் தீயும் எரியும். சூடான பதனிப் பாகுத் துளிகளை தண்ணீரில் விட்டு பதம் பார்க்கப்படும். தேவையான பதம் வந்ததும் சிரட்டையில் ஊற்றப்படும். பாகு இறுகிக் கருப்பட்டியாய்ப் பரிணாமிக்கும். இந்த வித்தையை சூட்சுமத்தை பாசம் கலந்து பக்குவமாய்க் கற்றுத் தேர்ந்தாள் தேவி.

பனையேறும் காலங்களில் மேகலிங்கத்திற்கும் அவ்வப்போது நோவு வந்துவிடும். ஒரு நாளில் காலை, மாலை என இரண்டு வேளை பனை ஏறி இறங்க வேண்டும். பாளைகளை இடுக்கி, நுணுக்கமாய்ச் சீவி, முட்டியில் சுண்ணாம்பு தடவி பதனீர் இறக்குவதற்குள் உடம்பு காந்தும். வலி விண் விண்னென்று தெறிக்கும். மதியம் அரைமணி நேரமாவது தூங்கினால் தான் களைப்பு தீரும். வயிற்று வலி, வயிற்றுக் கடுப்பு, வயிற்றுழைச்சல் போன்ற வயிற்று நோய்கள் அழையா விருந்தினர் போல அல்லல் கொடுத்துவிட்டுப் போகும். எல்லாவற்றையும் காரம் குறைத்து, தயிர் மோருடன் தேவியின் பாசமும் குழைந்து பெற்று சமாளிப்பான் மேகலிங்கம்.

பதனீருக்குப் பதிலாக சுண்ணாம்பு சேர்க்காமல் கள் இறக்கினால் லாபம் அதிகம் கிடைக்கும். தேவியும் பதனீர் காய்ச்ச வேண்டியதில்லை. நெருப்பில் வெந்து வியர்வை சிந்த வேண்டியதில்லை. ஆனால் அரசாங்கம் கள் இறக்க அனுமதிப்பதில்லை. கோடி கோடியாய் லாபமீட்டும் முதலாளிகள் மட்டும் உயர்ரக மதுபானங்கள் தயாரிக்க அனுமதி வழங்கும். ஏழைப் பனையேறித் தொழிலாளர்களுக்கு இயற்கையான கள் இறக்கும் அனுமதி கிட்டாததன் ரகசியம் மேகலிங்கத்திற்குத் தெரியாமலில்லை. தமிழகத்தின் மாநில மரமான பனையை மட்டுமே முழுமையாய் நம்பி வாழும் தொழிலாளிகளின் வாழ்க்கை படு பாதாளத்தில் தான்.

இதைவிடக் கொடுமை கருப்பட்டிக்கு இவர்களால் விலை நிர்ணயம் செய்ய முடியாது. நெல், கோதுமை போன்ற விளைபொருட்களுக்கு விலை நிர்ணயிக்கும் அரசு கருப்பட்டிக்கு ஆதாரவிலை நிர்ணயிப்பதில்லை. கருப்பட்டிக்காக மலைபோல் உழைப்பையும் இஷ்டப்பட்டுச் செய்யும் தொழிலாளிகளுக்கு அதன் விலை வேப்பங்காய்க் கசப்பு.

மேகலிங்கம் தற்போது கடன் வாங்குவது கூட ஆழிப்பேரலையாய் இவர்களை அலைக்கழித்த கருப்பட்டி விலையால் தான்.

"பத்து வருசத்துக்கு முந்தி ஒரு பவுன் நகை நாலாயிரம் ரூபா. இப்ப இருபதாயிரம் ரூபா. இப்ப நூற்றியிருபது ரூபா கொடுத்தாலும் விவசாயத்துக்கு ஆள் கிடைக்கல. ஆனா கருப்பட்டி விலை மட்டும் இருபது ரூபாயிலிருந்து முப்பத்தஞ்சு ரூபான்னுதான் கூடியிருக்கு. இது எனக்குக் கட்டுப்படியாகாது. வடக்க போறேன். நீயும் வாரியா?" என்று கேட்ட- பனையேற்றத்தையே விட்டுவிட்டு ஊரிலிருந்து வெளியேறிய நண்பன் அய்யனாரிடம்,

"இந்த மண்ணையும் மனுசங்களையும் விட்டுட்டு எங்கயும் போறதில்லை" மறுத்துவிட்டான் தீர்க்கமாக மேகலிங்கம்.

போன வருசம் முப்பத்தைந்து ரூபாய்க்கு வித்த கருப்பட்டி அதிசயமாய் கிலோ தொண்ணூறு ரூபாய்க்குக் கூடிவிட்டது. பனையேறிகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பெரும்பாலனோர் உடனடியாக விற்று காசு பார்த்துக் கொண்டனர். சிலர் விற்கவில்லை. இன்னும் விலை ஏறும் என்று வியாபாரிகள் உறுதியாய்ச் சொன்னதாலும் உடனடியாகத் தேவைப்படாததாலும் மேகலிங்கம் கருப்பட்டியை 'இருப்பு' வைத்தான்.

ஆனால் இப்போது மூத்த பையன் படிப்புக்குப் பணம் தேவைப்படுகிறது. கருப்பட்டியை நம்பியிருக்கிறான் மேகலிங்கம். விற்கப்போகும் போது வியாபாரியின் பேச்சு சுனாமியாய்த் தாக்கியது.

"கிலோ நாப்பது ரூபாய்க்குத்தான் போகுது. அதுவும் உங்க கருப்பட்டி தங்கம் மாதிரி. நல்ல கலரா இருக்குது. அதனால தான் இந்த விலை. ஒரு மாசத்துல பணம் வாங்கிக் கோங்க. "

"அண்ணாச்சி, பையனுக்கு காலேஜ் பீஸ் கட்டணும். உடனே கொடுத்தீங்கன்னா உதவியாயிருக்கும். " ஒரு மாதம்னு சொல்லிவிட்டு மாசக்கணக்குல இழுத்தடிக்கும் வியாபாரியிடம் கெஞ்சினான் மேகலிங்கம்.

"முப்பத்தெட்டுன்னு முடிக்கலாம். உடனே பணம். "

பேசிப்பேசி இறுதியில் முப்பத்தொன்பது ரூபாய் என முடிவு செய்யப்பட்டது.

"அடப்பாவமே, மோசம் போய்ட்டோமே. கடவுள் நம்மள ஏந்தான் சோதிக்கிறான்னு தெரியலயே. . . . " ஈடு கட்ட முடியாத இழப்பின் வேதனையில் தேவியும் ஒடுங்கிவிட்டாள்.

'போன வருசமே வித்திருந்தா முப்பதாயிரம் கூடக் கிடச்சிருக்கும். பேங்கில லோனும் வாங்க வேண்டியதில்லை' வெளியில் சொல்ல முடியாமல் உள்ளூரப் பொறுமினான் மேகலிங்கம்.

வங்கிக்கு வந்துவிட்டனர். கூட்டம் அதிகமாக இருந்தது. நேரடியாக மேலாளர் அறைக்கு மூவரும் சென்றனர். அங்கு புதிய நபர் ஒருவர் அமர்ந்திருந்தார். இவர்களால் யாரென்று யூகிக்க முடியவில்லை.

"நீங்க மேகலிங்கம் தான? வாங்க. இன்னைக்கு உங்களுக்கு லோன் கிடைச்சிரும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" -என்றைக்கும் எரிந்து விழும் மேலாளர் தன்மையாகப் பேசினார். இவர்களுக்கு ஆச்சரியமும் சந்தோசமும் தாங்க முடியல.

வங்கியில் மனிதக் கூட்டம் பரபரத்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்தனர். எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு அது ஒரு யுகமாய்த் தெரிந்தது. மேலாளர் அழைத்தார். அந்தப் புதிய நபரைக் காட்டி,

"இவர் எல்ஐசி ஏஜெண்ட், உங்களுக்காகத் தான்இவர வரச் சொல்லியிருக்கேன். பையன் பேர்ல ஒரு பாலிசி எடுத்தா உடனே லோன் தந்திர்றேன். "

உள்ளுக்குள் கொதிபதனீராய்க் கொதித்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்

"எவ்வளவு சார் பணம்?" மெதுவாகக் கேட்டார் மேகலிங்கம்.

"வெறும் பன்னிரண்டாயிரம் மட்டும் தான். மாசம் மாசம் ஆயிரம் ரூபாயாக் கூட கட்டலாம். ரொம்ப கம்மியான பணம் தான்"

". . . . . . . . . . . . . . "

"பையனுக்கு சேமிப்பு மாதிரியும் ஆச்சு. பிற்காலத்தில் ரொம்ப பிரயோசனமாக இருக்கும். பையன் கையெழுத்து போட்டா போதும். அப்ளிகேசன் நிரப்பியாச்சு. "

மேலாளரே எல்ஐசி ஏஜெண்டாகப் பரிணாமித்து தூண்டில் போட்டார். எல்ஐசி ஏஜெண்டோ தனது வேலை சுலபமாய் முடிந்துவிடும் நம்பிக்கையில் அமைதியாக இருந்தார்.

"சார். . . இதப்பத்தி நீங்க சொல்லவேயில்ல சார். . . . " பையன் மெதுவாகக் கேட்டான்.

"அதான் இப்ப சொல்றேன்ல. எல்ஐசி எடுத்தா லோன். இல்லன்னா கிடையாது. " மேலாளர் வழக்கமான அதிகாரத் தோரணையில் ஆவேசமானார்.

"சார், ஒரு நிமிசம் வெளியே போய், கலந்து பேசிட்டு வர்றோம் சார். . "

மூவரும் வெளியேறினர்.

"ஏங்க மஞ்சத் தாலிக் கயறு ஒன்னு வாங்குங்க. செயினக் கழட்டிட்டு அதில இருக்கிற தாலியை கயத்தில கோர்த்துப் போட்டுக்கிறேன். இந்தப் பேங்குப் பக்கமே வரமாட்டேன். செயின அடகு வச்சி பையனைப் படிக்க வைப்போம். ராசபாளையம் பேங்கில போய் அடகு வைப்போம்"

"சரி. . . " என்று மேகலிங்கமும் மகனும் ஒருசேர சம்மதித்தனர். உள்ளே சென்றாள்.

"என்ன சார் அநியாயமா இருக்கு. ரேசன் கடையில போனா அவன் சோப்பு, டீத்தூள் வாங்கணும்னு கண்டிப்பா சொல்றான். நீங்க என்னடான்னா லோன் வாங்க எல்ஐசி போடணும்னு கட்டாயப்படுத்துறீங்க. படிக்காதவங்களப் பாத்தா உங்களுக்கு எளப்பமா தெரியுதா. லோனும் வேணாம். ஒண்ணும் வேணாம்" ஆவேசமாகி வைராக்கியத்துடன் வெளியேறினாள்.

"அக்கா. . அக்கா. . . பன்னண்டாயிரத்துக்குப் பதில் ஒம்பதாயிரம் தந்தாப் போதுக்கா" எல்ஐசி ஏஜண்ட் சொன்னபோது அவள் வாசலைக் கடந்துவிட்டாள்.

Pin It