பெண் கவிஞர்களில் பா. உஷாராணியின் இடம் தனித்துவமிக்கது. மரபு சார்ந்த வாழ்வியல் முட்டைக்குள் புதுமை சார்ந்த நவீன சமத்துவக் கொள்கை கருக்கொண்டு வளர்வதைப்போல இவரது கவிதைகளில் மரபார்ந்த வாழ்வியல் கூறுகளுக்குள் நவீனத்துவ மானுடச் சிந்தனைகள் கவித்துவ லட்சணங்களுடன் வெளிப்படும்.

'மரம் வைத்த வீடுகள்' என்ற கவிதைத் தொகுதி இவரது படைப்பாக வெளிவந்திருக்கிறது. உதயக்கண்ணனின் 'அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்' கச்சிதமான வடிவமைப்புடன் உருவாக்கியிருக்கிறது.

தொகுப்பின் எல்லாக் கவிதைகளிலும் ஒரு புதிய கோணத்தை - புதிய தெறிப்பை- புதுத்திசைச் சிந்தனையை அனுபவமாகப் பெற முடிகிறது.

அனைத்துக் கவிதைகளையும் வாசித்து முடித்தவுடன் கண்களை மூடிக்கொண்டு மனஉலகத்துக்குள் பார்த்தால். . . அங்கே பிரம்மாண்டமான 'தாய்மை' இருக்கிறார்கள். ஏராளமான எண்ணிக்கையில் பல் வகைப்பட்ட மரங்கள் இருக்கின்றன. பலப்பல வண்ணங்களும் வாசங்களுமான பூக்கள் இருக்கின்றன. அனைத்தையும் உயிரால் தழுவி உணர்வால் வருடி நேசிக்கத் தூண்டுகிற பேரன்பு இருக்கிறது. பேரன்பின் காரணமாகவே சிறுமைகளின் மீதெழுந்த கோபமும் இருக்கிறது.

'நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்' என்கிற மகாகவியின் இயற்கைப் பாசம் இக்கவிதைகளுக்குள் வேறு வேறு உடுப்புகளோடு உலவுகின்றன.

தாய்மனசின் ஆகாயப் பண்பைச் சித்தரித்துவிட்டு, தாய்மை எனும் பேரன்புக்கு புதுப்பரிமாணம் தருகிறது, "என் சன்னதி தேவதை" கவிதை.

"பிரளய வலியின் உக்கிரமொன்றின்/ வேதனைத் துடி துடிப்பில் / உன்னுடலை வருத்தி ஜனித்த/ என்மேல்/ எப்படி வந்தது/ இத்தனை பேரன்பு?" என்ற கேள்வியில் முற்றிலும் புதிய கோணம் தெறித்து வந்து விழுகிறது. வாசிப்பவரைப் புரட்டிப்போடுகிற புதிய பார்வை.

'பிறிதின் நோய்' என்ற கவிதை, வித்தியாசமான சிந்தனை. மனசைப் பிசைகிற சோகப் பேருணர்ச்சி. பொன் வண்டு, வண்ணத்துப்பூச்சி, தேள், பூ ராண், கரப்பான்பூச்சி, தவளைகளைக் கொன்றொழித்த பால்ய கால நினைவுகளுடன் "அவைகளின் மரண அரற்றலெல்லாம்/ பேரொலியாய் எழுந்து/ தீமுள்ளாய் உள்ளிறங்க என் குரூரத்தின் ஆணிவேரைப் / பிடுங்கி வீசுகிறது/ நோயின் கோரப்பிடியில் சிக்கி/ உயிருக்காய் பரிதவிக்கும்/அம்மாவின் இறுதிமூச்சு/" என்ற சம்பவத்தை இணைக்கிற கவிதை, வாசிப்பவரை அன்பால் நிரப்பி, சோகத்தால் அலைக்கழிக்கிறது.

தெருவிலுள்ள வீடுகளையெல்லாம் வளரும் மரங்களால் அடையாளப்படுத்துகிற தெருப்பழக்கம் வித்தியாசமான அனுபவம்.

அம்மா, மரணமாகவும், வாழ்வு வாசமாகவும், பாசநெகிழ்வாகவும், கெஞ்சல் உணர்வாகவும் பல இடங்களில் வருகிறாள். பேரன்பின் பேரொளி எல்லாக்கவிதைகளிலும் பொங்கித் ததும்புகிறது. பேரன்பின் காரணமாகவே சீறிக் சினந்து கனல் வீசுகிற கண்ணகி கோபங்களையும் வீசுகின்றது. மென்மையின் உச்சமான அனிச்சமலர் குணமும், அனைத்துச் சிறுமைகளையும் சுட்டெரிக்கும் வன்மையின் உக்கிர நெருப்புச் சீற்றமும் கொண்டக் கவிதைகள் முழுவதிலும் ஒரு தாய்மைப் பேருணர்வின் நெகிழ்வு தென்படுகிறது.

அடர்த்தியான வார்த்தைச் செறிவு மிக்க சிற்பநுட்பமும், அனைவருக்கும் அனுபவமாகிற எளிமையும் ஒருசேரப் பெற்ற கவிதைமொழியைக் காண முடியுமா? பா. உஷாராணியின் கைவசம் அது உயிர்ப்புடன் இயங்குகிறது.

-

அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்

41, கல்யாணசுந்தரம் தெரு

பெரம்பூர், சென்னை-600011

உலாபேசி: 9444640986

விலை ரூ. 60-

Pin It