அதோ...
அன்று ஓடிய நதிதான் அது
இன்று நதியின் வாழ்க்கை
நாக்கறுந்து கிடக்கிறது

நதியின் மூலமும் ஆழமும்
கண்டதில்லையாம் அன்று
சொல்லும் முதியவருக்கு வயது தொண்ணூத்து எட்டு.

மட்டை அடித்து விளையாடும்
சிறுவனுக்கு இன்றது மைதானம்

சிறுவர்கள் மீன்களாகவும்
மீன்கள் சிறுவர்களாகவும்
மாறிக் கொண்டோம் (நீந்தினோம்)

ஏக்கத்துடன் பேசிய முதியவருக்கு
நகரத்து நீச்சல் குளத்தில்
நண்டுகளாய்ப் போய்விட்ட சிறுவர்கள்
வந்து என்ன சொல்லக்கூடும்?

பூகோளத்தில்
நதியைப் படித்த பள்ளிச்சிறுமி
நதியைப் பார்க்க வந்து
பூகோளம் பொய்யென்று சொன்னாள்
நகரத்துச் சாக்கடை நன்றாய் நகைத்தது

புகையைக் கக்கியபடி
ஓடும் பேருந்துகளிலிருந்து
ஓடாத நதியைப் பார்க்கிறேன்
நதியின் கண்களில்
நுரைத்த அழுக்குகளுடன்
பொங்கியெழும் நீர்.

நதியின் கண்ணீரை
மொழி பெயர்க்க முடியாமல்
விரைவாக நகர்கிறது காலம்.

நதியின் உதடுகள்
மெல்ல முணுமுணுத்தது
நான்.... எப்போது ... நதியாவேன்?

- மஞ்சுளா

Pin It