வெளிச்சம்
தொலைத்த தேசத்தில்
இருளின் ராஜ்ஜியம்.
சிக்கிமுக்கிக் கற்களை
உரசிக்கொண்டே
சிறுநெருப்புக்காக
யுகயுகமாய்
காத்திருக்கும்
பேதைகள்.
கனவுகளில்
அவ்வப்போது
சூரியன்
நிலவு
நட்சத்திரங்கள்
வந்து போகும்.
மின்மினிப்
பூச்சிகளைக்கூட அவதாரமாய்
வழிபடும் மக்களின்
காலுக்குக் கீழே
நவரத்தின புதையல்கள்.
நாய்களின் துணையோடு
அடுத்த வேளை உணவுக்கு
எலி, முயல்களைத்
தேடும் கூட்டத்திற்கு
கிடைக்கும்
ஈசல்கள் மட்டுமே.
மழைக்கால
உணவுக்காக
வளர்த்து வந்த
ஆடு கோழிகளை
புலி, சிங்கம்
நரிகளுக்கு பலிகொடுத்து
உயிரைக் காத்துக்
கொண்டவர்கள்
வான்நோக்கி
கைகளுயர்த்தி
வேண்டுகிறார்கள்
தேசத்தின்
தொலைந்த
வெளிச்சத்திற்காக

- இலமு

Pin It