இருட்டு விலகாத அதிகாலைப் பொழுதில் உறக்கம் நீங்கிக் கண்விழித்துப் பார்த்தேன். அருகில் மனைவி படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். எதிரே மெர்க்குரி வெளிச்சம் பிரகாசித்த சுவர்க் கடிகாரத்தில் மணி 5.30 ஆகி இருந்தது. அரை மணி நேரம் முன்னதாகவே முழிப்புத் தட்டிவிட்டது.

அருமையான மனைவி; கோவம்பழம் போல வசீகரத் தோற்றம். அடடே! கோவம்பழம் என்றா சொன்னேன்? அந்த சொல்லாட்சி இப்போது பொருந்துமா என்று தெரியவில்லை. நுனி சிவந்தும், மிளகாய்ப்பழம்போல நீள் வடிவத்தோடும் ஜொலிக் கும் இயற்கைக் கோவம் பழங்கள் அருகி வருகின்றன. செயற்கைக் காளான்போல செயற்கைக் கோவங்காய்கள் தோட்ட வெளிகளில் விளையத் தொடங்கிவிட்டன. அவை குழம்பு வைக்க மட்டுமே பயன்படுகின்றன. இனிப்புச் சுவைக்கும், வசீகரத் தோற்றத்துக்கும் பொருந்தவில்லை.

எழுந்து கதவருகே சென்று ஸ்விட்சைப் போட்டேன். இரண்டு முறை மின்னலடித்து விட்டுக் குழல் விளக்கு எரியத் தொடங்கியது. மனைவியின் ஜடை முடியில் குண்டு மல்லி கசங்கிக் கிடந்தது. சேலை மூடாத ரவிக்கை...

படுக்கையறை ஜெகஜோதியாய்க் காட்சியளித்தது. மேற்குப் புறம் தலைமாட்டில் வால்பேப்பர்கள் பளிச்சிட்டன. வியாபார நோக்கில் தயாராகும் மணல், நதி, ஒற்றையடிப்பாதை என்ற வகையினதாய் இல்லாமல், மன்மதன் ரதியின் மேல்அம்பு விடும் தோரணையில் அமைந்திருந்தது. கிழக்குச் சுவரில் புள்ளி ஓவியங்கள்! சூரிய பகவானும், சந்திரமதியும், ஆரத் தழுவியபடி! ... ஆண் உடம்பின் இடது பகுதியும், பெண் உடம்பின் வலது பகுதியும் இணைந்த ஓவியம் இன்னொன்று! லிங்கத்துக்கு அன்றி பெண்மைக்கு மதிப்பளிக்கும் ஓவியம் அது. 11க்கு 16 அளவுள்ள படுக்கை அறையின் முழு நிறைவாய் அமைந்திருந்தன இந்த ஓவியங்கள்.

கதவைத் திறந்த போது சூரியப் பெண் சின்னச் சின்ன கோடுகள் போட்டு விடியலை வரவேற்றுக் கொண்டிருந்தாள். செங்கல் நிறத்தில் விடிந்தது பூமி. மேற்கு தூரத்தில் நீலமலைச் சிகரம் காட்சியளித்தது. மலை ஏன் நீல நிறமாய் இருக் கிறது? அருகில் போய் பார்த்தால் பச்சைத் தாவரங் களும் பழுப்புப் பாறைகளும்தானேஇருக்கின்றன? தூரதூரமாய் விலகும் போது நிறங்களும் பண்பு களும் மாறுகின்றன போலும்!

மீண்டும் மனைவியைப் பார்த்தேன். தூக்கம் கலையாத முகம் ஜோதியாய் ஜொலித்தது. அவள் தூங்கட்டும் என்று கதவை லேசாகச் சாத்திவிட்டு பெருவறைக்குள் நுழைந்தேன். பீரோவைத் திறந்து பணம் எடுத்து உள்பாக்கெட்டில் வைத்தேன். வயர்க் கூடை இரண்டு பெரிய துணிப்பை ஒன்று, கட்டப்பை ஒன்று எடுத்துக் கொண்டு படியில் இறங்கி, புழக்கடையில் இருந்து இரு சக்கர வாகனத்தை எடுத்து வெளியே நிறுத்தினேன். இரும்பு கேட்டைச் சாத்தி நாராங்கி போட்டு விட்டு வண்டியைக் கிளப்பினேன். உழவர் சந்தைக்குச் சென்று காய்கறி வாங்கி வர வேண்டும்.

இன்று எனது பால்ய சிநேகிதன் முகுந்தனின் புதல்வன் சரவணக்குமாரனும், அவர் மனைவியும் விருந்துக்கு வருகிறார்கள். காதலித்துக் கல்யாணம் முடித்து பத்து வருடங்கள் வெற்றிகரமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். போன மாதம் அவரைச் சந்திக்க நேரிட்டபோது விருந்துக்கு அழைத்தேன். சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார். ஏழைக் குடும்பத்தில் பிறந்து வைராக்கியமான உழைப்பி னால் முன்னேறியவர். அந்தத் தம்பதியருக்குச் சிறப்பு விருந்து படைக்க வேண்டும்.

உழவர் சந்தையில் காய்கறி வாங்கிக் கொண்டு அருகில் இருந்த கண்மாய்க் கரைக்குப் போனேன். ஜிலு ஜிலுவென ஈரக்காற்று வீசியது. நாலைந்து பேர் மீன் பிடித்து விற்றுக் கொண்டிருந்தார்கள். கட்லா மீன் நிறைய இருந்தது. பிராய்லர் கோழி போல செயற்கை மீன் அது. இயற்கை மீன் கிடைக்குமா என்று விசாரித்தேன். ஒருவன் நீர் நிறைந்த ஈயக் கூடையைத் திறந்து காட்டினான். ஆராவும், வெரா மீனும் உயிருடன் தத்தளித்துக் கொண்டிருந்தன. இன்னொரு சின்ன வாளியில் அயிரை மீன்கள்; மூன்றையும் விலை பேசி வாங்கிக் கொண்டேன்.

எனக்குச் சந்தோஷமாய் இருந்தது. சிறப்பு விருந்தாளிகளுக்கு சிறப்பு உணவு படைக்கப் போகிறேன். வாழ்வில் வெற்றியடையும் மனிதர் கள்தான் சிறப்பான வரலாற்றைப் படைக்கிறார்கள் என்று எங்கோ படித்திருக்கிறேன். வெற்றி பெற்ற மனிதர்களில் சரவணனும் ஓருவர். அவரின் உன்னத உழைப்புக்கு உறுதுணையாய் இருப்பவர் அவர் மனைவி! அவர்களின் தாம்பத்யம் வாழ்க! வண்டி எதிலோ ஏறி இறங்கி நிலை தடுமாறியது. ஆக்ஸிலேட்டரைத் தளர்த்தி பிரேக்கை இறுக்கிப் பிடித்து நிப்பாட்டினேன். சிந்தித்துக் கொண்டே ஓட்டி வந்ததால் சாலைத் தடையைக் கவனிக்க வில்லை. வாகன ஓட்டிகள் மயிரிழையில் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சாத்தியபடியே இருந்தது. கதவு. அவள் இன்னும் விழிக்கவில்லை போலும்.

வண்டியை வாசலிலேயே நிறுத்தி விட்டு மீனை யும், காய்கறியையும் அடுப்பறையில் போய் வைத்தேன். மீண்டும் கடை வீதிக்குப் போய் முட்டையும், பாசுமதி அரிசியும் வாங்கினேன். பட்டை, சோம்பு, கசகசா , அஜினமோட்டா என்று எல்லாவற்றையும் ஞாபகத்தோடு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன். மீனின் மேல் மரத் தூளைத் தூவி கழுவும் அறையில் கிடத்திவிட்டு அடுப்பில் தீயேற்றி குக்கரில் பால் காய வைத்தேன். சில நிமிடங்களில் சூடேறி விட்டதாக விசில் ஊதி அறிவித்தது குக்கர். சாதாரணச் சட்டியாய் இருந் தால் பால் காய 15 நிமிடங்களாவது ஆகும். விஞ்ஞான வளர்ச்சி நேரத்தை மிச்சப்படுத்துகிறது.

ஆனால் சிலர் குக்கருக்கு எதிராக சண்டமாருதம் செய்கிறார்கள். வெந்து நெகிழும் அரிசியே சோறு ஆகும். குக்கரில் இட்டு வேக வைத்தால் அரிசி வெம்பிப் போகிறது. வேக்காடு என்பதற்கும், வெம்பல் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இயல்பாய்ப் பழுக்கும் பழத்திற்கும் , ரசாயனக் கல்கொண்டு பழுக்க வைக்கப்படுவதற் கும் உள்ள வித்தியாசம் போன்றது என்பது அவர் கள் வாதம்.

எல்லா வாதத்திலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் வாழ்க்கை அரங்கத்தில் குக்கர் நிரந்தரமான இடத்தைப் பிடித்துவிட்டது. எதிர்காலத்தில் வேறு மாதிரியான மாற்றங்கள் வரக்கூடும்.

 அடுப்பின் மேல் திண்டில் இரண்டாம் வரிசையில் இருந்த காபிப் பொடியையும், ஜீனி டப்பாவையும் எடுத்து சூடான பாலில் கலக்கி னேன். கமகமவென மணந்தது.

கைப்பிடியுள்ள வட்டகையில் காபி நிறைத்து இரண்டு டம்ளர்களையும் எடுத்துக் கொண்டு படுக்கையறைக்குப் போனேன். அப்போதுதான் எழுந்து உட்கார்ந்து தலையை நேர் செய்து கொண்டிருந்தாள் மனைவி.

கட்டில் முனைக்கு நகர்ந்து கால்களைத் தொங்க விட்டபடி “நீங்க ரெம்ப மோசம்” என்றாள். சிணுங்கலுடன் கூடிய வார்த்தை உச்சரிப்பில் பூரிப்பும் புளகாங்கிதமும் பளிச்சிட்டன. சந்தோஷக் கோடுகள் முகத்தில் ஓவியம் வரைந்திருந்தன.

ஏன் என்பதுபோல் ஏறிட்டுப் பார்த்தேன். குறும்பு நகை பூத்த உதடுகளைக் குவித்து ‘வெவ்வே’ என்று வக்கணம் காட்டினேன்.

“சீ! போங்க” என்றவள் காபியை டம்ளரில் ஊற்றி ஆற்றத் தொடங்கினாள். புதுப்பெண் போல நாணிக் கோணி நளினம் காட்டினாள்.

காபி அருந்திவிட்டு இருவரும் சேர்ந்து அடுப்படிக்குப் போனோம்.

முதலில் மீனை உரசி உப்புக் கலந்த நீரில் கழுவி சுத்தப்படுத்திப் பொடி பொடியாய் நறுக்கினேன். கண்ணில் நீர் வழியும்படியாய் வெ ங்காயம் உரித்தாள் மனைவி. பெரு வெங்காயத்தை இழை இழையாய்த்துருவி வைத்தாள். எல்லாம் முடித்து அடுப்பைப் பற்ற வைத்தாள்.

இன்று மாதாந்திர மின் வெட்டு நாள். மின் தடை நீக்கி (ருஞளு) வேலை செய்யவில்லை. ஏராளமாய் மசால் அரைக்க வேண்டும். மீன் குழம்பு மற்றும் வறுவல் முட்டை பிரியாணி , சாம்பார், பச்சடி, ரசம் ஆகியவற்றுக்கு அரைத்து ஊற்ற வேண்டும். மிக்ஸியை இயக்க முடிய வில்லை. தயாரிப்புப் பொடிகளைப் பயன்படுத்தி னால் சுவை குறையும். விருந்தினரை சுவையான உண்டிகள் மூலம் வாழ்த்த வேண்டும்.

தீவிர யோசனைக்குப்பின் அம்மியில் அரைப் பது என முடிவெடுத்தோம். யந்திர யுகத்தில் கை அரவை சரியாய் வருமா என்று தெரியவில்லை. ஆனாலும் திடகாத்திரமான வைராக்கியத்தோடு களத்தில் இறங்கினேன்.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன் மாமனார் வீட்டுச் சீதனமாய்க் கிடைத்த அம்மியும், குழவியும் கன்னி மூலையில் கேட்பாரற்றுக் கிடந்தன. தமிழர் பண்பாட்டில் அம்மியும், உரலும் தாய்க்குச் சமம். குழவியும் , உலக்கையும் அவற்றின் குழந்தைகள் என்று எங்கோ சொற்பொழிவில் கேட்டது ஞாபகத்துக்கு வந்தது.

அரைக்க ஆரம்பித்தேன். தமிழ்ச் சமையல் மரபுப்படி முதலில் மஞ்சள், அடுத்து கொத்தமல்லி, நெருநெருவென அரைபட நேரம் பிடித்தது. அடுத்தது சீரகம், கசகசா, வெந்தயம், புளி, நிறைவாக உப்பு. தேங்காயைத் துருவிப் போடுவதா, அரைப்பதா என இருவரும் கலந்து பேசினோம். துருவல் தினமும் நடைபெறும் பொதுவினை. அரைப்பது என முடிவெடுத்து அதையும் நானே செய்தேன்.

தேங்காயைச் சிரட்டையில் இருந்து சில்லுச் சில்லாய்ப் பிரித்தெடுத்து அம்மியில் இட்டு அரைத்த போது வழுக்கிக் கொண்டு விலகியது. விலகியவற்றை ஒன்று கூட்டி குழவியால் நையப் புடைத்தேன். எந்தத் தாக்குதலுக்கும் மசியாமல் எகுறிக் குதித்து முகத்தில் அறைந்தது. மசால் துளியுடன் கூடிய தேங்காய்ச் சில் முகத்தில் பட்டுக் கன்னம் காந்தியது. சின்னச் சில் ஒன்று தவ்வி வந்து என் கண்ணுக்குள் மோதியபோது சுரீரென வலித்தது. நரம்பு மண்டலத்தில் மின்சாரம் பாய்வதுபோல் விறுவிறுவெனப் பாய்ந்து மூளையில் முட்டியது. மூளை மடிப்புக்கள் ‘உய்யென’ ரீங்காரமிட்டு அலறின. நீல நிற ரீங்காரக் கோடுகள் உடம்பு முழுவதையும் வளைய மிட்டு இறுக்கின. உடம்பு நிதானமிழந்து மயங்கிச் சரிந்தது.

“என்னங்க” என்று கத்தியபடி ஓடி வந்து தாங்கிப் பிடித்தாள் மனைவி.

“ ஒண்ணுமில்ல; லேசா வழுக்கிடுச்சு” சுதாரித்து எழுந்து உட்கார்ந்தேன். மின் அம்மி கண்டு பிடிக்கப்படுவதற்கு முன் வாழ்ந்த பெண்கள் எல்லாரும் என் கண்முன் தெய்வங்களாய்த் தோன்றி நின்றார்கள். அன்பு கலந்த ஆதங்கத்தோடு என் கண்ணில் நீர் தெளித்து சேலை முனையால் ஒத்தி எடுத்தாள் மனைவி.

மீண்டும் அரவையை ஆரம்பித்தேன். ‘நச்’ ‘நச்’ சென்று நையப் புடைத்து “சக் சக்” கென விரைந்து அரைத்து அம்மிப் போராட்டத்தை நிறைவு செய்த போது மேமூச்சு கீமூச்சு வாங்கி சோர்ந்து போனேன்.

எழுந்து வெளியே வந்த போது ஜில்லென வீசிய இளங்காற்று உடம்பை வருடி ஆறுதல் கூறியது. எல்லையற்று விரிந்து கிடந்த வான்வெளிப் பரப்பில் நின்று பழங்காலத்துப் பெண் ஒருத்தி நையாண்டியாய்ச் சிரித்தாள்.

கைகள் வலித்தன. மணிக்கட்டு, கெண்டைக் கை, முழங்கை, தொடைப் பகுதி என்று வித்தியாச மில்லாமல் விண் விண் என்று தெறித்தது. நரம்பு மண்டலம் ஜிவ்வென இழுபட்டது. கையை முன்னும் பின்னும் உதறி சோர்வு விலக்கினேன்.

சிறிது நேர ஓய்வுக்குப்பின் அடுக்களைக்குள் நுழைந்தேன். முகமெல்லாம் முத்தாய்ப் பூத்து நின்றாள் மனைவி. முந்தானையால் முகம் துடைத்து வேலையைத் தொடர்ந்தாள்.

ஒரு வழியாய் சமையல் முடிந்தது. மீன் குழம்பு, வறுவல், பிரியாணி, பதினொரு வகைக் காய்கறி களுடன் கூடிய சாம்பார், தக்காளி ரசம், முருங்கை இலையும் கொட மிளகாயும் இட்டுத் தாளிக்கப் பட்ட பசுந்தயிர் , மனைவியின் பல்வரிசை போல பூத்துக் கிடந்த பொன்னி அரிசிச் சாப்பாடு , நவரத்தினக் கற்கள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட கலைக் கூடம்போல சமையலறை காட்சியளித்தது. நானும், மனைவியும் இணைந்து உருவாக்கிய பதார்த்தக் கூடம். ஜீவனற்ற ஒளிக் கற்களால் ஆனது! கலைக்கூடம் என்றால் , ஜீவத் துடிப்புடன் கூடிய அங்ககப் பொருட்களால் ஆனது பதார்த்தக் கூடம். பார்வைக்கும், நுகர்வுக்கும் சிந்தித்து மகிழ்வதற்கு மான சாதாமுதக் கூடம்! எங்கள் உழைப்பின் சாரமாய் நின்று ஜீவ புன்னகை புரிந்தது அது.

மின் தடை விலகவும், விருந்தாளிகள் வீட்டிற் குள் நுழையவும் சரியாய் இருந்தது. மனைவிதான் முந்திச் சென்று அவர்களை வரவேற்றாள். இருவருக்கும் ரோஜாப் பூக் கொடுத்து முக மலர்ச்சியோடு “வாங்க, வாங்க” என்றாள். அவளைப் பின் தொடர்ந்து சென்று நானும் கை குலுக்கி வரவேற்றேன்.

இருவரும் கைகூப்பியபடி வீட்டுக்குள் நுழைந்து சோபாவில் உட்கார்ந்தார்கள். முதல் உபசரிப்பாய் நிறை செம்பு நீர் தந்து அருந்தச் செய்தேன். மரபு வழிப்பட்ட விரும்தோம்பலின் முதல் பரிமாற்றம் தண்ணீர். தண்ணீரைப் போல் குற்றம் இல்லாதது எங்கள் உபசரிப்பு என்று அர்த்தம்!

எனது பால்யகால நண்பரின் மகன் அவர் .எடுத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வல்லவர். வீதிவீதி யாய் அலைந்து பழைய பேப்பர் வியாபாரம் செய்யத் தொடங்கிய அவர் இப்போது “சரவணா பேப்பர் மாளிகை” என்ற நிறுவனத்தின் உரிமை யாளர்.

“அப்பா இன்னும் அதே கோபத்தோடதான் இருக்காரா?” என்றேன்.

இவர்களின் காதல் மணத்தை அங்கீகரிக்காமல் வீட்டை விட்டு விரட்டி விட்டவர்.

“இச்” என்று சலிப்படைந்த தொனியோடு நாக்கில் சொடக்குத் தட்டினார்.

“இருந்துட்டுப் போகட்டுமே எனக்கென்ன?”

“நீங்களும் அவங்களப் பாக்கப் போற தில்லயா?”

“நான் ஏன் போகணும்?” என்று வீராப்பாய்க் கேள்வி எழுப்பினார். மீசைக்குள் இருந்து வெளிப் பட்ட குறுநகையில் அகம்பாவத்தின் சாயல் படிந்திருந்தது.

“அவருக்கு சவுரியமில்லைன்னு கேள்விப்பட்டேன். ஒதவி செய்ய வேணாமா?”

“அவருக்கு இருக்குற வீம்பு எனக்கும் இருக்கு முல்ல. என்னக்கி வந்து என்னிட்ட மன்னிப்புக் கேக்குறாரோ அன்னக்கித்தான் அவர் மூஞ்சியுல முழிப்பேன்”.

‘அடப்பாவி’ என்று மனசுக்குள் திட்டினேன். பத்து வருஷம் கழிந்த பின்னும் வன்மம் விலக வில்லையே!

“கஞ்சிக்கில்லாம அலஞ்சாத்தான் அவருக்குப் புத்தி வரும்” என்ற சரவணக் குமரனின் வார்த்தை கள் என் காதுக்குள் கடப்பாரைகளாய் இறங்கின. கழுவில் ஏற்றப்பட்டதுபோல் ஆன்மா துடிதுடித் தது. சுயமாய் முன்னேறத் தெரிந்தவனுக்கு சுயத்தைத் தந்த ஆத்மாக்களை அரவணைக்கத் தெரிய வில்லையே! வாசுகிப் பாம்பினால் வஜ்ர மேருவைக் கட்டி தேவர்களும், அசுரர்களும் பாற் கடலைக் கடைந்த போது அமுதம் கிடைத்தது. அதோடு ஆலகால விஷமும் சுரந்தது என்பார்கள். அந்தப் புராணக் கதையின் உள்ளடக்கத்தை இன்றும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறான் சரவணன்.

என் அந்தரங்க வெளியில் தகித்துக் கொண்டி ருந்த கோபக் கனலின் வீரியத்தை வெளிக் காட்டாமல் “வாங்க, சாப்பிடலாம்” என்றேன்.

Pin It