அருந்ததிய ரெல்லாம்

அரசன் காலத்திலும்

ஆண்டிகள் போலே

அழுதே வாழ்ந்தார்,

பசியில் உழன்றும்

பரணியில் வாழ்ந்தும்

குடிசை கண்டபின்

குடியும் இருந்தார்.

நெல்லைக் காணவே

நிலத்தை உழுதும்

நீசர் உலகிலே

நிம்மதி இழந்தார்,

மலத்தைச் சுமந்தார்

மனதைக் கல்லாக்கி,

பிணத்தை எரித்தார்

பிலாக்கணம் வைத்தார்.

வலிகளைத் தாங்கி

வறுமையில் வாடி

உழைத்தும் கூட

ஒருபிடி சோறில்லை,

படிக்கும் நினைப்பை

பார்க்கவழியில்லை,

படித்து விட்டாலோ

பாவம் வேலையில்லை

நாகரிகம் வந்தும்

நலிந்தே வாழ்ந்தார்

நல்லது பொல்லது

காணாது இருந்தான்,

குடும்பம் கண்டார்

குறுகியே வாழ்ந்தார்

ஆதரவின்றி அவரே

அழுதே வாழ்ந்தார்.

கனவுகள் தொடர்ந்தன

காலமும் நீண்டது

ஒருகொடி உயர்ந்தது

ரத்தச் சிவப்பாய்,

ஒருதாய் மக்களாய்

ஒன்றாய்த் திரண்டனர்

எல்லாம் ஒழிந்திட

இடமும் ஒதுங்கியது.

இடறியே விழாமல்

இடது பக்கமாய்

அருந்ததியர் வந்தனர்

அருந்தவம் யாத்தனர்,

வெற்றிக் களிப்பில்

விண்ணில் பறந்தனர்

வழிகாட்டும் கொடியை

வரமாய்ப் பெற்றனர்!

Pin It