ஒரு நக்சலைட் எப்படி உருவாகி அராஜக பயங்கரவாதக் கும்பலிடம் சிக்கி அழிந்து போகிறான் என்பதைக் கதை கருவாக்கி வெளிவந்துள்ள குறுநாவல் "கிருஷ்ணா நதிக்கரையிலிருந்து" ஒரு மர்ம நாவலைப் போல பரபரப்பான திரைப்படம்போல 98 பக்கங்களும் ஓடுகின்றன. இது புதிய பாணியாகவும் உள்ளது.

தீவிரவாதிகளைத் தேடும் போலீஸ் டிஐஜியின் ஒரே மகன் கோபி. கெமிக்கல் என்ஜினீயராக்க வேண்டும் என்று டிஐஜி வரதராஜலு கோபியைப் பற்றிக் கனவு காண்கிறார். அவனே புத்தி சுவாதீனமற்றவன் போல் நடித்து ரகசியமாக தமிழ் விடுதலைக் குழுவோடு இணைகிறான். மர்மமான அவனது நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் டிஐஜி தவிக்கிறார். அவரது தந்தையின் பழைய போட்டோ ஒன்று காணாமல் போகிறது. அப்படத்தில் அவரது தந்தையுடன் இருப்பவர் கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் பி.சுந்தரய்யா. அந்தப்படம் காணாமல் போனது பற்றி டிஐஜி பதற்றம் அடைகிறார். மகன் கோபி படத்தை பிரேம் மாற்றக் கொடுத்திருப்பதாய் கூறவே நிம்மதியடைகிறார். எனினும் மகன் மீது அவருக்குச் சந்தேகம் வருகிறது.

புரட்சிகர மக்கள் இயக்கங்கள் என்பதன் பேரால் துப்பாக்கியின் மூலம் விடுதலை என்று கோஷமிடுவோர் போதை மருந்துக் கடத்தலிலும், ஆயுதக்கடத்தலிலும் ஈடுபட்டுப் பணம் தேடுகிறார்கள். அப்பாவி மக்களைத் தங்கள் வலைகளில் வீழ்த்துகிறார்கள். பணம் பெறுவதற்கு ஆள்கடத்தல், சீட்டிங், காண்ட்ராக்டர்களிடம் லஞ்சம், வியாபாரிகள், முதலாளிகளிடம் மாமூல் என்று 'புரட்சி இயக்கம்' கொடிகட்டிப் பறக்கிறது. இந்த விசயங்களை நாவல் அம்பலப்படுத்துகிறது.

இறுதி அத்தியாயங்களில் கோபியும் அவனது தமிழர் விடுதலைப் படையும் வெடிகுண்டுக்குப் பலியானதோடு கதை முடிகிறது. சக மனிதனின் துயரங்களைச் சகிக்க முடியாத தேசபக்தி கொண்ட இளைஞர்கள் நேர்மையற்ற பயங்கரவாத இயக்கங்களின் வலையில் விழுந்து அனாவசியமாய் செத்துப்போகிறார்கள். இதைச் செவிட்டில் அறைந்து சொல்கிறது காஸ்யபனின் கதை.

நீண்டகால எழுத்தாளர் என்பதால் ஒரு சீரியசான கதையை லாவகத்தோடு எழுதி வெற்றி பெற்றுள்ளார். குறு நாவலை என்.சி.பி.எச்.நிறுவனம் அழகுற அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

- பி.வசந்தா.

வெளியீடு

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,

அம்பத்தூர்,

சென்னை - 600 098

விலை ரூ.45/

Pin It