ஒரு டாலர் எண்பத்தேழு செண்ட். அவ்வளவுதான். அதிலே அறுபது செண்ட் வெறும் சில்லறையாக இருந்தது. பல சரக்குக் கடைக் காரரிடமும், காய் கறி விற்பவரிடமும் பேரம் பேசி கொஞ்சம் கொஞ்ச மாக மிச்சம் பிடித்த சில்லறை. காசில் ரொம்ப சிக்கனமானவள். திரும்ப திரும்ப மூன்று முறை எண்ணி விட்டாள். அதே ஒரு டாலர் எண்பத்தேழு செண்ட்தான். விடிந்தால் கிறிஸ்துமஸ்.

செய்வதற்கு வேலை ஒன்றும் இல்லை. பழைய கட்டிலொன்று நைந்து போன விரிப்புடன் சன்னலோரத்தில் இருந்தது. டெல்லா அதன் மேல் முழங்காலிட்டு எதையோ நினைத்தபடி இருந்தாள். துக்கமும், புன்னகையும் வாழ்க்கையில் கலந்திருந்தாலும், தற்போது அவள் முகத்தில் ஏக்கப் பெரு மூச்சுகள் தான் மேலோங்கி இருந்தது. கன்னத் தின் வழியே நீர்த்துளிகள் இறங்கிக் கொண்டிருந்தன.

ஒரு தம்பதிகள் புழங்கக் கூடிய அளவிற்கு ஒடுக்கமான வீடு. வாரமானால் எட்டு டாலர் வாடகை. வீட்டினுள் நுழைந்து நோட்ட மிட்டால் ஏதோ ஒரு ஆதரவற்றவர்களின் கருணை இல்லம் போல் இருந்தது. வீட்டின் நுழைவாயிலில் கடிதங்களே வராத ஒரு அஞ்சல் பெட்டி. மேலே கதவோரம் விரல்களே படாத அழைப்பு மணி பொத் தான். வீடு என்று ஒன்றிருந்தால், பெயர்ப் பலகை இருக்க வேண்டும் என்பது போல், திரு.ஜேம்ஸ் தில்லிங்கம் என்ற பெயரைத் தாங்கி ஒரு பலகை முன்னால் தொங்கிக் கொண்டிருந்தது.

வாரம் முப்பது டாலர் சம்பாதிக்கும் போது ‘தில்லிங்கம்’ என்று பெயர்ப் பலகையில் ஜொலித்துக் கொண்டிருந்தது. தற்போது இருபது டாலர்தான் வார வருமானம். சம்பாத்யம் சுருங்கி யதைப் போலவே, பெயர்ப்பலகையிலுள்ள எழுத்துக்களும் மங்கி உதிர்ந்து ‘ஜிம்’ என்ற எழுத்துக்கள் மட்டுமே தெரிந்தது. அதுவே அவருடைய பெயராக மருவி, அவர் வீட்டிற்கு வரும் போதெல்லாம் ‘ஜிம்’ என்றே அழைக்கப் பட்டார். அவரது மனைவி டெல்லாவும் கூட.

டெல்லா கண்ணீர் சிந்துவதை நிறுத்தி, கட்டிலிலிருந்து கீழே இறங்கி, நன்றாக முகத்தைக் கழுவித் துடைத்து, கன்னங்களில் அழுத்தமாகப் பவுடர் பூசினாள். வெளியே டிசம்பர் மாத பனி பெய்து கொண்டிருந்தது. சன்னலோரம் நின்று வெளியே பார்வையை செலுத்தினாள். சாம்பல் நிற பூனை ஒன்று சோம்பலுடன் பின்பக்கத்தில் நடந்து சென்று கொண்டிருந்தது. நாளை கிறிஸ்துமஸ். உலகிலுள்ள உயிர்களையெல்லாம் ரட்சிக்கும் தேவனின் பிறந்த நாள். இந்த நன்நாளில் கணவர் ஜிம்முக்கு என்ன பரிசளிப்பது? வீட்டுச் செலவில் ஒரு மாதமாக மிச்சம் பிடித்ததுதான் இந்த ஒரு டாலர் எண்பத்தேழு செண்ட். வாரத்தில் இருபது டாலர் போன வேகம் தெரியவில்லை. ம்..ம்.. என்ன செய்ய? கணக்குப் போட்டதை விட கூடுத லான செலவு. பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. சமாளிக்க முடிய வில்லை. கையில் இருக்கிற இந்த பணத்திற்குள் தான் கணவருக்கு ஏதாவது பரிசுப் பொருள் வாங்க வேண்டும். கணவரைப் பராமரிப்பதிலும், அவருக் காக நேரத்தை செலவிடுவதிலும் அவளுக்கு எப்போதுமே அலாதியான ஆனந்தம். ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெறுவதில் இருவருமே ஒருவரையொருவர் முந்திக் கொள்வார்கள்.

அறையின் இரு சன்னல்களுக்கிடையில் ஒரு பெரிய நிலைக் கண்ணாடி இருந்தது. எட்டு டாலர் வாடகை கொடுக்கப்படுகிற வீட்டில் ஆளுயரக் கண்ணாடி இருப்பது அதிசயம் தான். கலையம்சம் பொங்கும் மரச்சட்டத்தில் பொருத்தியுள்ள கண் ணாடியில் ஒரு ஒல்லியான மனிதர் பலவித வடி வத்தில் தன் முழு உருவத்தைக் காணும் படியாக டெல்லா தன் கைவண்ணத்தில் உருவாக்கி இருந் தாள். கண்ணாடியை மேலும், கீழும், பக்கவாட்டி லும் திருப்பும் வசதி இருந்தது.

திடீரென அவளின் கண்கள் பிரகாசமாயின. சன்னலிலிருந்து விடுபட்டு ஒரு அபிநயத்தோடு நிலைக் கண்ணாடி முன் நின்றாள். அழகுக்கு அழகு செய்யும் அவளுடைய அள்ளி முடித்த கூந்தலை தடவிப் பார்த்தாள். சில வினாடிகள் அவள் முகம் கறுத்தது. மறுநிமிடமே முடிக்கற்றையைத் தளர்த்தி விட்டாள். முதுகு வழியே இறங்கி முழங்காலுக்குக் கீழ் நின்றது.

ஜேம்ஸ் தில்லிங்கம் தம்பதிகள் இரண்டு பெருமைக்குரிய பொருட்களைப் பெற்றிருந் தார்கள். கணவன், மனைவி இருவருமே அவற்றை மிகவும் அரிய செல்வமாக போற்றிப் பாதுகாத்து வந்தார்கள். ஒன்று ஜிம்மினுடைய தங்கக் கடிகாரம். அவருடைய தாத்தா அந்தக் கடிகாரத்தைக் கட்டி அழகு பார்த்து, அவருக்குப் பின் அவருடைய மகன் அதை அனுபவித்து, தற்போது மூன்றாவது தலை முறையாக ஜிம்மிடம் வந்துள்ளது. இன்னொன்று டெல்லாவின் அழகிய கூந்தல் பல நேரங்களில் தன்னுடைய நீண்ட தலைமுடியை சன்னலுக்கு வெளியே தொங்கவிட்டு உலர்த்தும்போது, கூந்தலி லிருந்து வருகின்ற ஒருவித மின்னலொளி ராணியின் தங்க கிரீடத்தையே மழுங்கடித்து விடும். அதைப் போல வெல்வெட் துணியினால் உறையிடப்பட்ட சிறிய மரப் பேழையிலுள்ள தங்கக் கடிகாரத்தை ஜிம் தினமும் வீட்டிலிருந்து வெளியேறும் போ தெல்லாம் ஏக்கப் பெரு மூச்சோடு திறந்து பார்ப் பார். சோகங் கலந்த ஏமாற்றத்துடன் தாடியைத் தடவி விட்டு, கடிகாரத்தை மூடி வைத்துவிட்டு வெளியே செல்வார்.

நீரின் மேற்பரப்பில் நெளியும் மெல்லிய அலை போல் அவளுடைய கூந்தல் அசைந்தாடியது. கோதுமை வண்ணத்திலான சிறிய நீர் வீழ்ச்சியைப் போல் அவள் முழங்காலுக்குக் கீழே இறங்கி ஒளிர்ந்து கொண்டிருந்த அவளுடைய தலைமுடி அவளுக்கு ஒரு ஆடையாகவே காட்சியளித்தது. நிலைக் கண்ணாடி முன் ஒய்யாரமாய் நின்று, சிறு நடை பயின்று முடி அழகை ரசித்த பின் அள்ளி முடிந்தாள். அவள் கண்களிலிருந்து இரண்டு துளி நீர் கீழே சிவப்புக் கம்பளத்தில் விழுந்து தெறித்தது.

டெல்லா ஆடைகளைக் களைந்து, புரோவுன் கலர் ஜாக்கெட்டை அணிந்து, அதே கலரில் தொப்பியை எடுத்து மாட்டிக் கொண்டாள். குடை போல் சுழலும் குட்டைப் பாவாடையுடன், மின் னொளி வீசும் கண்களில் பெருமிதம் பொங்க வீட்டைப் பூட்டி விட்டு தெருவில் இறங்கி நடந் தாள்.

வேகமாக நடந்து, நடந்து ஒரு சிகையலங் காரக் கடை முன் நின்றாள். ஒரு நிமிடம் தயங்கி, பின் விர்ரென்று உள்ளே சென்று சுற்று முற்றும் பார்த்தாள். வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை. ஒரு நடுத்தர வயதுள்ள பெண் சேர், டேபிள் போட்டு அமர்ந்திருந்தாள். நல்ல வேளை... யாருமில்லை.

 

“என்னுடைய முடியை வாங்கிக் கொள்வீர் களா மேடம்?” கடைக்காரப் பெண் அவளை ஏற இறங்கப் பார்த்தாள் “ம்... வாங்கிக்கலாம். தொப்பியை எடுத்து விட்டு, தலைமுடியை அவிழ்த்து விடு.” -கோதுமை நிறத்து சிறிய நீர்வீழ்ச்சி முதுகு வழியே இறங்கியது.

கடை உரிமையாளரின் மூளையில் வியாபாரத் தந்திரம் உதித்தது. நுகர்வோரின் தேவையை யொட்டியே பண்டங்களின் மதிப்பு உருவாகிறது. கிறிஸ்துமஸ்க்கு முதல் நாள் முடியை விற்க வருகிறாள் என்றால்... இவளுக்கு என்ன நெருக்கடியோ...

“இருபது டாலர் தாரேன்.....”

டெல்லாவின் முகத்தில் பூரிப்பு. “சரி. சீக்கிர மாய்க் கொடுங்கள்”

அசட்டுப் பெண்! இவ்வளவு குறைவான தொகைக்கு சம்மதித்து விட்டாளே....

கடைக்காரப் பெண் முடியிறக்கும் வேலை யைத் துவக்கினாள்.

கணவன் ஜிம்முக்கு பரிசுப் பொருள் வாங்க இரண்டு மணி நேரமாக கடைவீதியையே அலசி எடுத்துவிட்டாள். நெரிசல் மிக்க நகரின் பண்டிகைக் கால மனிதர்களின் கூட்டம் அலை மோதுவதைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல், வீட்டை மறந்து ஒரே வெறியுடன் அலைந்தாள். கடைசியாக பரிசுப் பொருள் கண்டுபிடித்தாயிற்று. இது ஜிம்முக் காகவே செய்யப்பட்டிருக்க வேண்டும். எத்தனையோ கடைகளில் ஏறி இறங்கி இங்குதான் கிடைத் திருக்கிறது.

பிளாட்டினத்திலான கைக்கடிகாரச் செயின், தூய எளிமையான கலையம்சத்தோடு இருந்தது. அந்த உலோகத்திலான ஆபரணம் கவர்ச்சியாய் மின்னுவதால் மட்டும் அதற்கு மதிப்பு வர வில்லை. டெல்லாவின் கனவு, தன்னால் பொக்கி ஷமாக பாதுகாத்து வைத்திருந்ததை கணவனுக்காக அர்ப்பணித்து அதன் மூலம் வாங்கிய இப்பொருள் அவளுக்கு விலை மதிப்பில்லாதது. இது ஜிம் முடைய தங்கக் கடிகாரத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கும். இந்த பிளாட்டினம் செயினை கடையில் பார்த்த உடனேயே, இது ஜிம்முவின் கையில் தான் மின்ன வேண்டுமென முடிவு செய்தாள். கணவர் இதைப் பார்த்ததும் மிகவும் பூரித்துப் போவார். சலனமற்று ஒளிரும் அவளின் மனங்கவர்ந்த செயினுக்கு இருபத்தோரு டாலரை கடைக் காரரிடம் கொடுத்து விட்டு, மீதி எண்பத்தேழு செண்ட் உடன் வீட்டிற்கு விரைந்தாள்.

கடைவீதியில் பனி விழுந்து கொண்டிருந்தது. பாரம்பரியம் மிக்க கைக்கடிகாரத்திற்கு பழைய தோலிலான கைவார்தான் இருக்கிறது. அதை ரகசியமாகத் தாழ்வு மனப்பான்மையுடன் தினமும் பார்த்து வந்தவர்க்கு இந்தச் செயினைப் பொருத்தி அழகு பார்த்தால் ஜிம்முக்கு எவ்வளவு பெருமை யாக இருக்கும்... அவருடன் பணிபுரிபவர்களும், அவருடைய நண்பர்களும் இந்த செயினைப் பார்த்து அவருக்கு உயர்ந்த மதிப்பளிப்பார்கள்...

கணவருக்காக மிகப்பெரிய சாதனை செய்த மகிழ்ச்சியில் டெல்லாவுக்கு வழிநெடுக உள்ள மெல்லாம் பூரித்து பொங்கியது. வீடு வந்து சேர்ந்ததும், தலையில் படிந்திருந்த பனித்துளி களைத் தட்டி விட்டாள். விளக்கைப் பொருத்தி, வாசல் பாதையை மூடியிருந்த பஞ்சு போன்ற பனிக் கற்றைகளை அகற்றி வழியை சீர்படுத்தினாள். அவள் செய்யும் வேலையில் எப்போதும் நளினம், நேர்த்தி இருக்கும். இப்போது மனம் நிறைந்த கணவனுக்கு புதிதாய் ஒன்று கொடுக்கப் போகி றோம் என்ற உவகையில், ஆனந்தமெல்லாம் ஒன்று கூடி பேரானந்தமாக அவள் உள்ளம் கடல் போல் ஆரவாரம் செய்தது.

நாற்பது நிமிடத்திற்குள் அவள் கைவண்ணத் தில் தன் கத்தரித்த தலைமுடியை நெளி நெளி யாக்கி, குட்டையான முடிகளை சுருளாக்கி, பள்ளி மாணவியின் தலைபோல் கவர்ச்சியாக்கினாள். அவளுடைய நிழலுருவத்தை நிலைக் கண்ணாடி யில் நீண்ட நேரம் பார்த்துக் கொண்டே இருந்தாள். ‘நான் செய்தது சரிதானா...?’ முகத்தில் கவலை ரேகைகள் படர்ந்தது.

ஜிம் என்னை ஒன்றும் கொன்றுவிடமாட் டார். அவர் என்னைப் பார்த்த முதல் பார்வை யிலேயே கோனித் தீவிலுள்ள சேர்ந்திசைக் குழு பாடகி போல் உள்ளேன் என்று சொல்லக் கூடும்.... அல்லது வேறு ஏதாவது உதாரணம் சொல்லி பாராட்டுவாரா... ம்... எப்படியெல்லாம் மனதைத் தேற்ற வேண்டியிருக்கிறது. ஒரு டாலர் எண்பத் தேழு செண்ட் கையில் வைத்துக் கொண்டு நான் வேறென்ன செய்ய முடியும்?

இரவு ஏழு மணியாயிற்று. அடுப்பின் மேலே சுடு பாத்திரத்தில் காப்பி உள்ளது. கணவர் வந்த பின் சூடாக சூப் தயாரிக்க வேண்டும். ஜிம் எப் போதுமே தாமதிக்க மாட்டார். சரியான நேரத் திற்கு வந்துவிடுவார். கணவர் உள்ளே நுழைந்த வுடன் செயினைக் காட்டி விட வேண்டும். அதனால் தான் கதவுக்கு அருகிலுள்ள மேஜை மீது உட்கார்ந்து கையிலுள்ள புத்தம் புது செயினையும், வழியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் மாடிப்படிகளில் காலடிச் சத்தம் கேட்டது. ஷ்..ஷ்.. ஜிம் வந்து விட்டார். உடம் பெல்லாம் ஏன் நடுங்குகிறது? நிதானித்துக் கொண்டாள். இது மாதிரியான சந்தர்ப்பங்களில் அவள் கடவுளை வேண்டிக் கொள்வாள். ஆண்ட வரே! நான் இப்போதும் அழகாய்த்தான் இருக்கி றேனென்று அவர் மனதில் நினைக்க வையும்....ஆமென்.

கதவு திறந்தது. ஜிம் உள்ளே நுழைந்து கதவைக் சாத்தினார். ஒல்லியான தேகம். படபடப்புடன் காணப்பட்டார். இருபத்தி இரண்டு வயது தானி ருக்கும். அதற்குள் திருமணம். குடும்பச் சுமை. நியூயார்க் நகரின் லட்சக்கணக்கான ஏழைகளில் அவரும் ஒருவர். பாவம்! இந்தப் பனிக் காலத்தில் மேல் கோட்டோ, கையுறைகளோ வாங்கு வதற்குக்கூட அவருக்கு வசதியில்லை. ஒரு அடி எடுத்து வைத்தார். மனதில் ஏதோ ஒரு சஞ்சலம். நறுமணத்தை நுகர்ந்து அசைவற்று நிற்கும் அடர்ந்த முடியுடைய நாயைப் போல் அமைதியாய்த் திரும்பினார். அவரின் கண்கள் டெல்லாவின் மீது நிலை குத்தி நின்றது. அவர் பார்வையின் அடர்த் தியை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை. பயந்து நடுங்கினாள். அவர் முகத்தில் கோபமா, அதிர்ச்சியா, ஆச்சர்யமா, ஏமாற்றமா? அல்லது அத்தனையும் கலந்ததா? இதற்கு முன் அவரிடத்தில் இது போல் கண்ட தில்லை.

டெல்லா ஓடிச்சென்று அவரைக் கட்டிக் கொண்டாள் “ஜிம்... என்னை அப்படிப் பார்க் காதே.... கிறிஸ்துமஸ் நாளன்று உனக்கு பரிசளிக் காமல் என்னால் எப்படி இருக்க முடியும்? அதனால் தான் எனது தலைமுடியைக் கத்தரித்து விற்றுவிட்டேன். அன்பே! நீ ஒன்றும் கலங்க வேண்டாம். என் தலைமுடி வெகு வேகமாக வளர்ந்து விடும். என்னைப் பார். மகிழ்ச்சியாய் இரு.” அவர் முகத்தைத் திருப்பினாள். “எனக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ல மாட்டாயா... உனக்குத் தெரியுமா? நான் அழகிய பரிசுப் பொருள் ஒன்று உனக்காக வாங்கி வந்திருக் கிறேன்....”

“அடிப்பாவி! தலைமுடியை விற்று விட்டாயா?” ஜிம் பரிதாபமாகக் கேட்டார். ‘முன் கூட்டியே வந்திருந்தால் தடுத்திருக்கலாம்.’ கருத் தால் பாடுபடும் கடுமையான உழைப்பாளியான ஜிம் தனக்குள் நினைத்துக் கொண்டார். இன்னும் அவரால் நம்ப முடியவில்லை. மீண்டும் கேட்டார். “முடியை உண்மையிலேயே விற்று விட்டாயா?” மனதிற்குள் ஏமாற்றம்.

“அதுதான் சொன்னேனே.... முடியில்லா விட்டால் என்ன? அது இல்லாமல் என்னை விரும்ப மாட்டாயா?”

ஜிம் அறை முழுவதும் நோட்டமிட்டார்.

“நம்பமாட்டாயா... உண்மையிலேயே விற்று விட்டேன். நீ வீட்டில் எங்கும் தேட வேண்டிய தில்லை. ஜிம் ... கவலையை விடு. தேவமைந் தனின் பிறந்த நாள். சந்தோசமாக இருப்போம். முடியைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக் கிறாய். உனக்கொன்று சொல்லட்டுமா? என் தலை யிலுள்ள முடியைக்கூட ஒவ்வொன்றாக எண்ணி விடலாம். ஆனால் உன் மீது கொண்டுள்ள காதல் அளவிட முடியாதது....”

இந்த வார்த்தைகளுக்குள் பொதிந்துள்ள அழுத்தமான பொருள் விளங்கியதும் ஜிம் பரவசப் பட்டார். வாழ்க்கைத் துணை என்பதற்கு முழு அர்த்தமாக விளங்கும் அவளை ஆரத் தழுவிக் கொண்டார். மனித வாழ்க்கையில் சில நேரங்களில் எதார்த்தத்திற்கு மாறான நிகழ்ச்சிகள் மாற்றுத் திசையில் செல்லக் கூடும். வாரத்திற்கு எட்டு டாலர் அல்லது ஆண்டுக்கு பத்து லட்சம். இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன? கணிதம் படித்தவர்களோ, கதை சொல்பவர்களோ கூட இதற்குச் சரியான விடையளிக்க முடியாமல் போகலாம். பணமோ, செல்வமோ மட்டுமே குடும்ப வாழ்க்கையில் நிறைவைத் தருவதில்லை. ஆனால் நமது பாரங் களையெல்லாம் சுமக்கும் தேவன் நமக்கு மதிப் பில்லா பரிசுகளை வழங்குகிறார்.

ஜிம் தனது கோட் பையிலிருந்து சிறு அட்டைப் பெட்டியை வெளியில் எடுத்து மேஜை மேல் எறிந்தார்- “டெல்லா! என்னைத் தவறாகப் புரிந்து கொண்டாய். சிகையலங்காரம் செய்வ தாலோ, வாசனைத் திரவியங்கள் பூசிக் கொள்வ தாலோ நான் என் மனைவியை நேசிக்கவில்லை. அக அழகைத் தவிர, உன் புறத் தோற்றத்தை நான் பொருட்படுத்துவதே இல்லை. இந்தச் சிறிய பெட்டியைப் பிரித்துப் பார். எனக்காக நீ முதலில் போயிருக்க வேண்டியதில்லை என்பது புரியும்.”

அவளுடைய வெள்ளை விரல்கள் அட்டைப் பெட்டியை மிகுந்த பரபரப்புடன் பிரித்தன. அவள் மனதில் எதிர்பார்ப்பு கலந்த மகிழ்ச்சி. அதிசயம் கண்ட பிரமிப்பு. அந்தோ! என்ன ஆயிற்று? அவள் உடலில் ஏதோ ரசாயன மாற்றம். கண்களில் நீர் அருவியாய்க் கொட்டியது. உணர்ச்சிப் பிழம்பாய் ஓ வென்று கதறினாள்.

பெட்டிக்குள் சீப்பு, தலையில் அணியும் விதவிதமான ஆபரணங்கள். இவற்றையெல்லாம் வாங்க வேண்டுமென்று டெல்லா நீண்ட நாட்க ளாக கனவு கண்டிருந்தாள். சுத்தமான ஆமை ஓட்டில் செய்த அழகான குப்பிகள். அவற்றின் விளிம்புகளில் வைரம் பதித்த பிரேம்கள். அவற்றைத் தலையில் அணிந்தால், அவளுடைய அழகான கூந்தலை மறைக்கும் அளவுக்கு ஒளி வீசும். இவையெல்லாம் மிக விலை உயர்ந்த ஆபரணங்கள் என்று அவளுக்குத் தெரியும். அவள் வாழ் நாளில் எதை அடைய வேண்டமென்று விரும்பினாளோ, எதை அணிந்து அழகு பார்க்க வேண்டுமென்று கனவு கண்டாளோ அவை யெல்லாம் இப்போது அவள் கையில். ஆனால் இந்த ஆபரணங்களையெல்லாம் அணிந்து, அலங் கரித்து, அழகு பார்க்க அவளின் கூந்தல் இப்போது இல்லை.

ஜிம் கொண்டுவந்த ஆபரணங்களையெல் லாம் எடுத்து நெஞ்சாரக் கட்டிக் கொண்டாள். கண்கள் பொங்கியது. இமைகளை மூடி லேசாகச் சிரித்தாள். கண்ணீர்த் துளிகள் கீழே விழுந்தது. கணவனின் அபரிமிதமான அன்பை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மகிழ்ச்சியில் அவளையறியாமல் வார்த்தைகள் வெளியேறின. “ஜிம்! சீக்கிரம் என் தலைமுடி வளர்ந்துவிடும்..... சீக்கிரம் வளர்ந்து விடும்....”தனக்குத் தானே அவள் சமாதானம் சொல்லிக் கொண்டாலும், அடக்க முடியாமல் தேம்பித் தேம்பித் அழுது கொண்டிருந் தாள்.

ஜிம் சூழ்நிலையை மாற்ற எண்ணினார். “டெல்லா... நீ வாங்கிய பரிசுப் பொருளைக் கொடு பார்க்கலாம்..” அவளுடைய அழுகை யெல்லாம் பஞ்சாய்ப் பறந்தோடியது. அவள் உள்ளங்கையிலிருந்த செயினைக் காட்டினாள். “யே! யப்பா... இவ்வளவு அழகான செயினை இதுவரை நான் பார்த்ததே இல்லை.”

அவளுக்கு உச்சி வரை குளிர்ந்தது.

ஜிம் அதையே பார்த்துக் கொண்டிருந்தார். டெல்லாவின் உணர்வுகளும், கனவுகளும் சேர்ந்து அந்த உலோகம் ஒளிவீசிக் கொண்டிருந்தது.

“ரொம்ப நல்லா இருக்குல ஜிம்.... இந்த நகரம் முழுக்க தேடியலைந்து உனக்காக இதைத் தேர்ந்தெடுத்தேன். தினமும் இதை நூறு தடவை யாவது பார்த்துக் கொண்டே இருக்கப் போகிறாய். உன் கைக்கடிகாரத்தை எடு. இந்தச் செயினை மாட்டி எவ்வளவு அழகாக இருக்கிறதென்று பார்க்கலாம்...”

அவள் சொல்வது எதையும் காதில் வாங் காமல் ஜிம் அருகிலிருந்த கட்டிலில் தொப்பென்று விழுந்தார். கைகள் இரண்டையும் பின்னந் தலை யில் வைத்து, கால் மேல் கால் போட்டுக் கொண்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தார். பைத்தியக்காரப் பெண்...

“என்ன... நான் கேட்டுக்கிட்டே இருக்கேன். பேசாம போறே.. உன் வாட்ச்சைக் கொடு.” டெல்லா கேட்டாள்.

“அன்பே டெல்லா! நாம் இருவரும் வாங்கி யுள்ள கிறிஸ்துமஸ் பரிசுகளை முதலில் பீரோவில் வைத்து விட்டு வா. நாம் ஒருவருக்கொருவர் வைத்துள்ள காதலுக்கு முன் இவையெல்லாம் வெறுமனே ஜடப் பொருட்கள்தானே. உன் கூந்தலுக்கு சீப்பும், தலை ஆபரணங்களும் வாங்குவதற்காக எனது தங்க கடிகாரத்தை விற்று விட்டேன். உனக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். போய் சூடாக சூப் போட்டுக் கொண்டு வா....”

“என்னது?”

“ஆமாம் உண்மையிலேயே விற்றுவிட்டேன். சீக்கிரம் வேறு ஒரு புதுக்கடிகாரம் வாங்கிக்கலாம்.”

வான மண்டலத்தின் கிழக்கே இருந்து வந்த தேவதூதர்கள் உண்மையிலேயே ஞானப் பிதாக்கள் தாம். அவர்கள் தானே இந்த உலகத்தில் பாவிகளை ரட்சித்து மோட்சம் கொடுக்கவும், வருத்தப்பட்டு பாரஞ் சுமப்பவர்களின் சுமையைப் பெற்றுக் கொள்ளவும் குழந்தை ஏசுவுக்கு ஞானஸ்தானம் செய்தார்கள். அதுதான் சிறந்த பரிசு. தேவ தூதர்கள் தந்த பரிசு. உயிர்களிடத்தில் அன்பைப் பரிமாறுவது போல் பரிசுகளும் கொடுத்து வாங்குவதற்கு அவர்கள்தான் வழிகாட்டியாக இருக்கிறார்கள்.

எதிர்பாரா நிகழ்வுகளால் பின்னப்பட்ட இரண்டு அசட்டுக் குழந்தைகள் ஒருவருக்கொருவர் அப்பாவித்தனமாகத் தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களிடத்தில் தங்கம், வெள்ளி, வைர ஆபரணங் கள் இல்லை. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து தாம்பத்ய வாழ்வின் உச்சநிலையை அடையும் பேரானந்தம் எனும் மாபெரும் புதையல் அல்லவா அந்த வீட்டில் இருக்கிறது. அந்த இருவருக்கும் ‘மன நிறைவான இன்பம்’ என்ற பரிசை வழங்கியவர்கள் தேவதூதர்கள். எவரெல் லாம் அன்பெனும் பரிசளித்து, அன்பைப் பெறு கிறாரோ அவரே தேவனுக்குச் சமமானவர். எங் கெல்லாம் உயிர்களிடத்தில் இரக்கம் காட்டப்படு கிறதோ அங்கெல்லாம் தேவ தூதர்கள் இருக்கிறார்கள்.

- ஓ.ஹென்றி

தமிழில்: மாதா

Pin It