மொழியால் தமிழன் பிறப்பால் மனிதன்
மொழிந்திடு தமிழா! நீயொரு புனிதன்
பழியிருள் விரட்டு பகுத்தறி வூட்டு
பழையன கழியநீ புதுமைகள் நாட்டு.

உனைப்போல் ஒருவன் உனக்கவன் தோழன்
உறவெனக் கூறு ஒதுக்(ங்) குதல் தவறு.
தினைத்துணை உதவு பனையென உயரு
தீண்டாமை ஏன்? ஏன்? சேர்வது தேன்தேன்.

சலுகைகள் கொடுத்தே சாதிகள் வளர்ப்பர்
சாதிகள் சொல்லியே தலைவர்கள் வருவர்
சலுகை போனால் அத் தலைவர்கள் இல்லை
தமிழனாய்ச் சேர்ந்தால் சாதிகள் இல்லை.

உத்த புரங்கள் உத்தம புரங்களாய்
உருவா கிடவே நாம்குரல் கொடுப்போம்;
புத்தகம் வேண்டும் பொதுமையைத் தூண்டும்
புதிய தலைமுறை இனிவர வேண்டும்.

பிறந்தால் பிள்ளை இறந்தால் பிணம்நீ
பிறகேன் உயர்வு தாழ்வெனும் பிரிவு.
மறந்தா போனாய் மனிதா! இனிதாய்
வந்திவண் சேரு; நாம்நிகர் என்றே.

Pin It