நூல்மதிப்புரை: என்.ராமகிருஷ்ணன் எழுதிய ஒரு கம்யூனிஸ்டாக இருப்பதன் நன்மை

நூலின் தலைப்பை சாதாரணமாகப் பார்க்கையில் பலருக்கும் ஒரு வித்தியாசமாகத் தோன்றும். நூலா சிரியரும்கூட “இந்தப் புத்தகத்தின் தலைப்பைக் கண்டதும் சிலருக்கு வேடிக்கையாகக்கூட இருக்கலாம்” என்றே கூறுகிறார். நன்மைகள் என்றால் பணம் ,சொத்து சம்பாதிப்பது, பற்றியதாகத்தான் பொதுவாக இன்றைய சமூக அர்த்தம் உள்ளது. இன்று சில நூல்கள்  அப்படித் தான் வந்து கொண்டிருக்கின்றன.

‘ஒருவர் கம்யூனிஸ்ட்டாக இருந்து கொண்டு சம்பாதிக்க முடியுமா’ என்று ஆதங்கப்படுவதும், எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர்களாக இருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் மற்ற முதலாளித்துவக் கட்சித் தலைவர்களைப்போல் பதவிகளைப் பயன்படுத்தி சொத்துக் குவிக்காமல் இருப்பதைப் பார்த்து ‘இவர்களெல்லாம் பிழைக்கத் தெரியாதவர்கள்’ என்று ஏமாளிகளாகக் கருதும் தொனியில் சிலர் சொல்லுவதும் உண்டு. ஆனால் இந்த நூல் அது பற்றியதல்ல “அறிவை விரிவுசெய்..! அகண்டமாக்கு..!” என்று பாவேந்தர் பாரதிதாசன் சொன்னாரே, அவ்வாறு அறிவு விரிவு பெற வழி சொல்லும் நூல் இது. ஒருவர் கம்யூனிஸ்ட் ஆகிறபோது முதலில் அவர் பெறுவது வர்க்கக் கண்ணோட்டத் துடனான சமூகப் பார்வை, உலகப் பார்வை எனும் அறிவுச் சொத்து ஆகும்.

“அரசியல், தத்துவம், விஞ்ஞானம், பொருளாதாரம், அறிவியல் முன்னேற்றம், உலக நடப்பு, நாட்டு நடப்பு என்று ஒவ்வொன்றையும் அறிந்து கொள்ள வேண்டிய தேவை அவருக்கு உள்ளது. ஏனென்றால், ஒரு கம்யூனிஸ்ட் என்பவர் உலக மனிதர், சமுதாய மனிதர். இதன் காரணமாக அவர் தனது அறிவை, புரிதலை இடைவிடாது அதிகரித்துக் கொண்டே ஆக வேண்டும்” என்று, ஒரு கம்யூனிஸ்ட் பெற வேண்டிய அறிவு மேன்மையை எடுத்துரைக்கிறார் என்.ராமகிருஷ்ணன். “இந்த ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்..?” என்ற பெருமை கம்யூனிஸ்ட்டுக்கு உண்டு.

இந்த ஞானத்துடன் தேசத்திற்கும் உழைக்கும் மக்களுக்கும் அருந்தொண்டாற்றிய பல கம்யூனிஸ்ட் தலைவர்களைப் பற்றிய பல குறிப்புகள் அவர்களது படங்களுடன் இந்நூலில் உள்ளன. கொடுமைகளைக் கண்டால் கொதித் தெழுபவன்; அதற்குத் தீர்வுகாணப் போராடுபவன். அந்தப் போராட்டத்தின் முன்னணி ஊழியன். அதன் காரணமாக கம்யூனிஸ்ட்டுகளுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை வருகிறது; எதிர்காலத்தில் நம்பிக்கை வருகிறது’ என்ற நம்பிக்கை மொழியோடு தமது முன்னுரையில் இந்நூலைப் பாராட்டியிருக்கிறார், மார்க்சிஸ்ட் தலைவர் கே.வரதராசன்.

வெளியீடு : சித்திரைப் பதிப்பகம்,சென்னை. விற்பனை உரிமை : பாரதி புத்தகாலயம், 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600 018. விலை : ரூ.10

Pin It