உறக்கத்தை விரட்டி விரட்டி

பாப்லொ நெருதா கவிதையை

வாசித்த வினாடியில்

வீட்டு விதானத்திலிருந்து இறங்கிய

குழந்தையற்ற தூளி

இளங்காற்றில் முன்னும் பின்னும்

மிதந்தாடுவதைப் போல

உடல் அசைந்து கொடுத்த

மெல்லிய மயக்க உணர்வுக் கணத்தில்

மேசை மீதான நீர்க்குவளை தடதடத்ததும்

அஞ்சனம் படர்ந்த மேக வெளியில்

அலறியக் காக்கைக் கூட்டத்தின்

இறக்கைச் சடசடப்பும்

அசைந்தாடிய பெண்டுலம் நின்று காட்டிய

சுவர்க் கடிகாரத்தின்

அதிகாலை ஒரு மணியில்

உணர்ந்தேன் நிலநடுக்கம்

ஒளிர்ந்த தொலைக்காட்சிப் பெட்டியும்

ரிக்டர் அளவு 7 என செய்தி காட்டியது.

Pin It