விடியற்காலை பால் வாங்க வெளியில் வந்த போது பகீரென்றது சண்முகத்துக்கு. கொஞ்சம் இருந்தால் புதைகுழி மாதிரி அப்பிக் கிடந்த சேற்றில் இடறி விழுந்து நாசமாய்த் தான் போயி ருப்பான். அவன் குடியிருந்த அடுக்குமனைக் குடி யிருப்பு இருந்த வாடை நெடுக தெருவின் ஓரம் முழுதும் கால்வாய்க்குத் தோண்டுவது போல் மண்ணைத் தோண்டிப் போட்டுவிட்டுப் போயிருக் கிறார்கள். அதன் மீது பெய்திருந்த முந்தைய இரவின் திடீர் மழை செம்மண்ணில் நிரம்பிக் குழைத்துக் கலக்கி காவு வாங்கக் காத்திருப்பது மாதிரி ஆக்கி வைத்திருந்தது. மாநகரின் பேருந்து களும், வாகனங்களும் இடைவிடாது ஓடிக் கொண் டிருந்த முக்கிய இணைப்புச் சாலை அது. எதிரும் புதிருமாய் ஒரு உயர்நிலைப் பள்ளியும் அதன் விளையாட்டு மைதானமும் வேறு அமைந்திருந் தன அந்தச் சின்னத் தெருவில்.

காலை வைத்த மாத்திரத்தில் குழம்பிக் கிடந்த சேற்றுமண் ‘உள்ளே வா வா’ என்று காலை இழுக்க ஆரம்பிக்கவும், எல்லாம் முடிந்தது மாதிரி தோன்றி விட்டது சண்முகத்துக்கு. ஒரே ஒரு தற்காப்பாக அடுத்த காலை அபார்ட்மெண்டின் சிமெண்ட் தரையைவிட்டு வெளியே எடுக்கவில்லை. பின் னாக வளைந்து சர்க்கஸ் வேலை செய்தபடிக்கு இரும்புக் கதவைப் பின்னங்கை வளைத்துப் பிடித்துக் கொண்டு ஒரு உந்து உந்திக் காலை மீட்டுக் கொண்டான். யாரும் பார்க்கவில்லையே என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டான். சாலை இருளிலிருந்து விடுபட இன்னும் நேரம் எடுக்கும் போலிருந்தது. ஆட்டோ ஒன்று உறுமிக் கொண்டு கடந்து செல்லவும், பேரிரைச்சலோடு காலியாக இருந்த பேருந்து ஒன்று தறிகெட்ட வேகத்தில் சண்முகத்தின் குடியிருப்பு இருந்த இடத்தை எச்சரிப்பது போல பார்த்துப் போனது.

விடிந்த பிறகு பெரிய பலகை ஒன்றை எடுத்துக் குறுக்காகப் போட்டு வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே, மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறுகோண வடிவிலான சிமெண்ட் வில்லைகள் ஒன்றிரண்டை எடுத்துக் கொண்டுவந்து சேற்றின் குறுக்கே கால்வைத்துக் கடக்கிற திட்டத்திற்கு பரிசோதித்துப் பார்த்துவிட்டு வைத்தான் சண்முகம். பிறகு அச்சத்தோடு காலை வைத்துக் கடந்து அந்தப் பக்கம் போய் பால் பூத்திற்கு விரைந்தான். இன்னமும் அவனது உடம் பில் படபடப்பு விலகாதிருந்தது.

யார் வேலையாயிருக்கும். எவனெவனோ தோண்டிவிட்டுப் போகிறான். தொலைபேசி ஆசாமிகளா, மின்சாரத்துறையா, யார் கண்டது, கொஞ்ச நாட்களாகத் தனியார் செல்ஃபோன் கம்பெனி ஆட்கள் வேறு சாலையில் கை வைக்கி றார்கள். தெருவின் மூலையில் வைக்கப்படும் பெயர்ப்பலகைகள் ஏதாவது ஒரு கட்டத்தில் தெரு விற்குச் சொந்தக்காரர் இன்னார் என்று மாற்றப் படும் அளவுக்கு நாடு போய்க் கொண்டிருக்கிறதோ என்று கூட சண்முகத்திற்கு கோபம் கோபமாய் வந்தது. சுரணையற்றுப் போய்க் கொண்டிருக் கிறது நமது சனம் என்றுகூட பட்டது அவனுக்கு.

வரும் வெள்ளிக்கிழமை, குடியிருப்பின் மாதாந் திரக் கூட்டத்தில் இந்தமுறை கடுமையான சண்டை வலிக்க வேண்டுமென்று நினைக்கத் துவங்கிய நேரத்தில் தூறல் போட ஆரம்பித்தது. அவசரம் அவசரமாக பால் பாக்கெட்டுகளை வாங்கிப் பையில் திணித்தபடி சட்டையின் மேல் பொத் தான்களைக் கழற்றிச் சட்டையை இலேசாக முதுகுக்கு மேல் உயர்த்தித் தலைக்கு முக்காடாய் மாற்றியவனாய் வீடு நோக்கி விரைந்து நடக்க ஆரம்பித்தான். பழையபடி அபார்ட்மெண்ட் வாசலில் சேற்றுக் குழம்பைத் தாண்டிக் குதிக்கை யில் அச்ச உணர்வு சிலீரென்று நடுமுதுகில் இறங் கியது. அதே வேகத்தில் மனைவி கமலியிடம் போய் இரைந்தான்.

அவள் தனது பங்கிற்கு இவன் மீது விழுந்து பிடுங்கக் காத்திருந்தாள். பாத்ரூமில் ஒரு குழாய் எப்போது உடையலாம் என்ற கதியில் மிரட்டிக் கொண்டிருக்கிறது. வெஸ்டர்ன் டாய்லட் இணைப்புக் குழாயும், மூடியும் தங்களது வாழ்க் கையின் இறுதிக் கட்டத்திற்கு வந்திருந்தது. என்றைக்கு ஆளை அழைத்துவந்து ரிப்பேர் செய்யப் போறீங்க என்பதாக அவளது கத்தல் இருந்தது. தெரு முக்கிலிருந்த நேரு பிளம்பிங் கடை ஆளுங்க கிட்டே நேரில் பார்த்துச் சொல்லி யாச்சு, ரெண்டு முறை ஃபோன் போட்டுப் பேசியாச்சு. அவனுங்க வந்தாத் தானே, நான் என்ன பண்ண...என்று இவன் பதிலுக்குச் சத்தம் போட்டான்.

வீட்டு வேலைக்கெல்லாம் கண்டவனை நம்பி உள்ளே விட்ற முடியாது என்பதில் இரண்டு பேருமே தெளிவாய் இருந்தனர். முதல் வேலையா சாலை முழுக்க அப்பிக் கிடந்த சேற்றுச் சனியனுக்கு என்ன செய்வது என்று யோசிக்கணும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டே காலையின் அன்றா டங்களின் தொடரோட்டத்தில் போய்ப் பொருந் திக்கொண்டு நல்ல பிள்ளையாய் அலுவலகத் திற்குப் போய்ச் சேர்ந்தான்.

மதியம் உணவுக்காக உட்காரப் போன போது கை கழுவும் இடத்தில் வீட்டுக் குழாய் ரிப்பேர் வேலை நினைவிற்கு வந்தது. சட்டைப் பையி லிருந்து கிழிந்து கந்தர்கோலமாய்க் கிடந்த அழுக்கு தொலைபேசிச் சிற்றேடுகளில் ஏதோ எண்களைத் தேடி எடுத்து பிளம்பரை அழைத்தான். வழக்கம் போல் ஏதோ சால்ஜாப்பு. ‘ ரெண்டு பய இருந்தாங் கள்ள, ஒருத்தன் போக்கு சரியில்லன்னு நிறுத்தி யாச்சு, இன்னொருத்தனை வைத்துக் கொண்டு எத்தன எடத்துக்குத்தான் அனுப்ப’ன்னு கேட்டுட் டாரு கடை ஓனர். ‘இன்னிக்குத் தப்பினா நாளை காலையில் எட்டு மணிக்கு ஒங்க வீட்டு வாசல்ல தான் நிப்பான்’ என்று இறுதியாக ஓர் உறுதி மொழி. எப்படித்தான் கூசாமப் பொய் பேச வருதோ என்று நினைத்துக் கொண்டான் சண்முகம்.

எந்தப் பையனை வேலையிலருந்து எடுத்துருப் பான் கடைக்காரன். கருப்பா ஒரு குட்டைப் பையன் இருப்பானே, அவன் சூட்டிகையான ஆளாச்சே, அவனா இருக்கக் கூடாது என்று தோன் றியது சண்முகத்துக்கு. இந்த இரண்டு வருசமா இந்த வீட்டுக்குக் குடி வந்ததிலருந்து ஏதாவது குழாய் ரிப்பேருன்னா அந்தப் பையன் தான் வந்து நிக்கறது. வேலை முடிஞ்சு புறப்படறப்ப டீ கொடுத்தா அத்தனை நன்றியோடு கண்கள் சிரிக்க வாங்கி உறிஞ்சிக் குடிப்பான். தனது உயரத்திற்கு எட்டாத ஒரு சைக்கிள். அதில் பெடலைத் தவ்வித் தவ்வி ஓட்டியபடி சிரித்த முகத்தோடு வழியில் வாடிக்கையாளர்களைக் கடந்தபடி போகும் அவனுக்கு என்ன வயதிருக்கும்.....குழந்தைத் தொழிலாளி கணக்கில் வருமோ... ?

எங்கே இல்ல குழந்தைத் தொழிலாளி, காலையில் பேப்பரக் கொண்டு வந்து போடற தில்லருந்து, ஓட்டல், ஆபிஸ், சினிமா தியேட்டர், சலூன் எங்கே தான் இல்ல.....எந்த டீக்கடையில் போய்ப் பார்த்தாலும் அரியலூர்க்காரன் சார் என்று சொல்லிக் கொண்டு அரை டிரவுசரோட சின்னப் பசங்க எத்தனை பேர் அடியும், உதையும் வாங்கிக்கிட்டு அலைஞ்சுக் கிட்டிருக்கானுவ....

அலுவலகக் காகிதத்தில் ஏதோ கண்ட மேனிக்குக் கிறுக்கிக் கொண்டிருப்பதை அப் போதுதான் கவனித்தான் சண்முகம். ‘சே’ என்று எல்லாவற்றையும் கிழித்தெறிந்து விட்டு வேறு காகிதங்களை எடுத்துக் கணக்குகளை எழுதத் துவங்கினான். ஆறு மணி ஆனது தெரியாமல் வேலை இழுத்து ஆட்கொண்டிருந்தது அவனை. திடீரென்று மனைவி தொலைபேசியில் அழைத்து எத்தனை மணிக்கு வருவீங்க என்று கேட்ட போது தான் அந்த உலகிலிருந்து மீண்டான். ‘இன்னிக்கு எப்படியும் ஒன்பது ஆகிவிடும் வீடு திரும்ப’ என்று மட்டும் சொல்லிக் கொண்டான். பிறகு அவள் வைத்துவிடப் போகிறாள் என்ற பதட்டத்தோடு, ‘பிளம்பர் பையன் எவனாவது வந்தானா....’என்று கேட்டான். ‘எவன் வரப்போறான், ஒருத்தனையும் காணல இங்க...’என்று பொட்டென்று வைத்தாள் அவள்.

ரயில் நிலையத்தில் இறங்கி வெளியே வந்தபோது ஆட்டோ எதுவும் தட்டுப்படவில்லை. களைப்போடு நடக்கத் தொடங்கினான் சண்முகம். எங்கும் பெரிய ஆள் நடமாட்டம் இருக்கவில்லை. மெலிதான நிராகரிப்பின் ராகம் இழுக்கும் உறுமல் களோடு நாய்கள் ஒன்றிரண்டு அவனை உற்றுப் பார்த்துக் கடந்து போய்க் கொண்டிருந்தன.

வீடு நெருங்க நெருங்க, அப்போதுதான் சேற்றுக் குழம்பாய் வழியும் தெருவோரத்தின் நினைவுகளும், குழாய் ரிப்பேர் வேலையும், இதுவும் அதுவும் என்று வீட்டுக் கவலைகள் ஒவ் வொன்றாய் அலைக்கழிக்கத் தெருவை நெருங் குகையில் அசாதாரண அமைதி குடி கொண்டி ருப்பது போலிருந்தது சாலை. இரைச்சலாய்க் கடந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவனை இடிப்பதுபோல் விர்ரென்று கடந்து போகவும் அச்சம் கவ்விச் சென்றது.

அடுக்குமனை வீடுகள் எதிலும் விளக்கு எரிவது போல் தோன்றவில்லை. தெருவிளக்கின் உதவியில் கடிகாரத்தில் நேரம் பார்த்தான் சண்முகம். பத்து முப்பது ஆகியிருந்தது. வீட்டிற்கு முன் வந்து நிற்கவும் அங்குமட்டும் பாதி தெருவிற்குச் சேறு அநியாயத்திற்கு இழுபட்டு இறைந்து கிடந்தது மாதிரி தெரிந்தது. பெரிதும், சிறியதுமாய் சக்கரங்கள் அழுந்தி ஓடியிருந்த தடத்தில் உலர்ந்தும் உலராதிருந்த சேற்றுச் சகதியினூடே ஜாக்கிரதை யோடு தாவி அந்தப் பக்கம் குதித்து இரும்புக் கதவைத் திறந்து கொண்டு நுழைந்தான்.

மாடிப்படிகளில் கூட விளக்கெரியக் காணோம். சத்தம் வராத நகரத்தின் நாகரீகத் தனத்தோடு மெது வாகப் பாதங்களை வைத்து இரண்டாவது மாடிக் குப் போய்ச் சேர்ந்து, அழைப்பு மணியில் கை வைத்தான்.

வீட்டுக் கதவு வெடுக்கென்று திறந்து கொண்ட தில் ஏதோ பதட்டம் இவனுக்குப் பரிமாறப் பட்டாற் போலிருந்தது.

 “உஸ்...ஸ்..உள்ள வாங்க சீக்கிரம், மாடிப்படி விளக்கை எதுக்கு எரிய வச்சிட்டு வர்ரீங்க...கீழ கிரில் கேட்டைச் சாத்திட்டுத் தான வந்தீங்க...இந்த வாட்ச்மேன் வேற எங்க போய்த் தொலஞ்சான் இன்னிக்குன்னு பார்த்து......” என்று ஏதோ வேக வேகமாய்ப் பேசிக் கொண்டிருந்தவளைப் புரியாமல் பார்த்தான் சண்முகம்.

“என்ன ஆச்சு உனக்கு...” என்றான் அவன்.

“ராத்திரி நம்ம அப்பார்ட்மெண்டுக்கு நேர் எதிர ஒரு பஸ் ஆக்சிடண்டுங்க....ஒரு பையன் சக்கரத் துக்குக் கீழ மாட்டிக்கிட்டான்...நம்ம வீட்டுக்குக் கூட குழாய் ரிப்பேர் பாக்க வருவானே, அந்தப் பையங்க... அடிபட்டுட்டாங்க...” என்று விசும்ப ஆரம்பித்தாள்.

“யாரு யாரு...எவனைச் சொல்ற... என்னன்னு ஒழுங்கா சொல்லு...” என்று திக்கித் திணறியபடி கேட்டான் சண்முகம்.

 அவள் மெதுவாய்ச் சொல்லத் தொடங்கினாள். இரவு எட்டு மணி போல இருக்கும். அந்தக் கறுப் பான குட்டைப் பையன் சைக்கிளில் எதிர்ப்பக்கம் இவர்கள் வீட்டை ஒட்டி சாலையில் வந்திருக் கிறான். எதிரே பஸ் ஒன்று, ஆட்டோவையோ வேறு எதையோ ஒடித்துக் கொண்டு வலப்பக்க மாய் முந்த வந்த நேரத்தில் இவன் நேரெதிரே சிக்கிக் கொண்டான். தனக்கு இடப்பக்கமாய் ஒதுங்க அவனுக்கு ஒரு இடமும் வாய்க்கவில்லை. சாலையோரம் தான் சேற்றுப் புதைகுழி கால்வாய் வெட்டப்பட்டிருக்கிறதே... படுபாவிப்பயல், அதில் சைக்கிளை ஓட்டிப்போய் விழுந்து தொலைத்திருக்கக் கூடாதா, அவன் யோசித்திருக் கலாம். அதற்குள் பேருந்து அவனை அரைத்துத் தள்ளிக் கொண்டு போயே விட்டது...... இரைச் சலும், மோதல்களும் வலுத்திருந்த நேரத்தில் யாரோ அதட்டல் போட்டு அந்த வழியாக வந்த வண்டியை நிறுத்திப் பையனை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்கள்.

“ஏங்க, அவன் பிழைப்பானான்னு பயமா இருக்குங்க... சின்ன பையங்க... பெத்த வயிறு எப்படி பத்தி எரியுமோ....”

 கமலி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள். அவளுக்கு பதினைந்து வயதில் இரத்தப் புற்று நோயில் மரித்துப் போன தனது தம்பி குமாருடைய நினைவு வந்துவிட்டது.

சண்முகத்திற்கு இயல்பாக உட்கார்ந்திருக்க முடியவில்லை. எழுந்தான், எதையோ முறைத்துப் பார்த்தான், உட்கார்ந்தான், பிறகு எழுந்து, “கீழே இறங்கிப் போய்ப் பார்த்துட்டு வரேன்” என்று இறங்கினான். வேண்டாம், வேண்டாம் என்று அவள் அரற்றிக் கொண்டிருந்தாள்.

 வாசல் நெடுக ஒரு அப்பாவி எதிர்கொண்ட மரணத் துரத்தலின் அவலச் சித்திரம்போல் சேறு சிதறிக் கிடந்தது. டார்ச் லைட் அடித்துப் பார்த்தான். இரத்தம் படிந்து கிடந்ததாகவும் தென்பட்டது, இல்லாதது போலவும் தெரிந்தது.

கிரில் கேட்டைப் பூட்டிக் கொண்டு பதட்டத் தோடு தட்டுத் தடவிப் படிக்கட்டுகளில் ஏறி வீட்டுக் குள் நுழைந்தான். உடை மாற்றிக் கொண்டதும், குளித்துவிட்டு வந்ததும் அனிச்சையாய் நிகழ்ந்தது மாதிரி இருந்தது. இராத்திரிக்குச் சாப்பிட எதுவும் வேணாம் என்று சொன்னபோது தான் அழுதுவிடு வோமோ என்று கட்டுப்படுத்திக் கொள்ளத் தவித்தான். இரவு வீட்டில் வைத்துப் பார்க்கக் கொண்டு வந்த அலுவலகக் காகிதங்கள் எதையும் தொடும் துணிச்சல் கழன்று போயிருந்தது.

“குழந்தைங்க எங்கே...சாப்பிட்டாங்களா இல்லயா” என்று கேட்டபடி மூன்று வயது மகனின் அருகே உட்கார்ந்து, உறங்கிக் கொண்டிருந்த அவனைத் தனது மடிமீது எடுத்துப் போட்டுக் கொண்டு தலையைக் கோதிவிட்டு முத்தமிட்டான். குழந்தை சடாரென்று அரைகுறையாய்க் கண் விழித்து, “அப்பா, அந்த அண்ணன் செத்துரு மாப்பா.....” என்று முனகினான். சாக மாட்டான் என்று மெதுவாய்ச் சொல்லியபடி, கண்ணிமை களை நீவிக் கொடுத்துத் தூங்க வைத்தான்.

அப்படியே படுக்கையில் சரிந்தான். கமலி அருகில் வந்து படுத்தவள் அவனது கையை ஆதுர மாகத் தனது கையில் பற்றியபடி, “ஏங்க அந்தப் பையன் பிழைச்சிருவான் இல்ல...” என்றாள். அவனிடமிருந்து பதில் வராமற் போகவே இருட்டில் அவனது கண் இரப்பைகளைத் தீண்டி அவை ஈரமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்து அவனை இதமாகத் தட்டிக் கொடுக்கலானாள்.

பேச்சற்று நகர்ந்து கொண்டிருந்தது அந்தப் பாழிரவு. கடிகாரத்தின் ஓசை கூடத் துல்லியமாக ஒரு மரணச் செய்திக்காக ஒலித்துக் கொண்டி ருப்பது போலத் தோன்றியது.

ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் கடந்தி ருக்கும். திடீரென்று, “அய்யோ.....ஏ ராசா..... போயிட்டியே.... அய்யோ விட்டுப் போயிட் டியே......போச்சே போச்சே எல்லாம் போச்சே, எம் புள்ளையக் கொன்னுப்புட்டாங்களே” என்று பெருங்குரலெடுத்து யாரோ கதறுவது கேட்டது.

 விருட்டென்று எழப் போனவனை கமலி தடுத் தாள். “இருங்க, பதறாதீங்க...மெதுவா மெதுவா..” என்றாள். படுக்கையறையின் சன்னல் வழியே இரண்டாவது மாடியிலிருந்து கீழே பார்த்தார்கள் இருவரும்.

அபார்ட்மெண்ட் வாசலில் சேற்றுக் கறைகளின் தடயத்தின்மீது கைகளை அறைந்து அறைந்து ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அரற்றிக் கொண்டிருந் தாள். அவளை சமாதானப் படுத்த முடியாது திண றியபடி மூன்று நான்கு ஆண்கள் அவளை அங்கிருந்து அகற்றி அழைத்துப் போகத் துடித்துக் கொண்டிருந்தனர்.

 விளங்கிவிட்டது. மருத்துவமனையில் செய்ய எதுவும் இல்லாது போய்விட்டிருக்கிறது. அவனைப் பறிகொடுத்த நெஞ்சங்கள் அவன் அடி பட்ட இடத்தைத் தேடி வந்து கதறிக் கொண்டிருக் கிறார்கள் என்று புரிந்தபோது மீண்டும் நடுங்கியது சண்முகத்திற்கு. தனக்கு அறிமுகமான பையனு டைய அறிமுகமற்ற தாயின் கதறல் அவனது உயிரை உறிஞ்சி எடுப்பது மாதிரி அரட்டியது.

அன்றைய இரவு கடக்க மறுத்தது. அவர்கள் போய் நீண்ட நேரம் ஆனபின்னும் யாரோ ஓல மிட்டுக் கொண்டிருப்பது மாதிரியே கேட்டது. தெருவின் இருபக்கமும், மாநகரின் மனிதர்கள் யார் காதுகளிலும் எந்தச் சத்தமும் கேட்காதது மாதிரி இறுக்கமான வீடுகளெங்கும் இருள் நிறைந் திருந்தது.

மறுநாள் விடியற்காலையில் பால் வாங்க இறங்கும்போது அப்பார்ட்மெண்டின் வாசலைக் கடக்கும்போது, இடதுபக்கம் மாடிப்படிக் கட்டுகளின் கீழ்ப் பகுதியில் மின்சார மீட்டர்கள், அவரவர்க்கான அஞ்சல் பெட்டிகள் எல்லாம் இருந்த இடத்தின் அருகே தரையில் ஒரு துணிப்பை காலில் இடித்தது. 

விளக்கைப் பொருத்திப் பார்க்கவும் அது அந்தப் பையனின் பிளம்பர் வேலைக்கான கருவிகள் வைத்திருந்த பை என்று தெரிந்தது. விபத்தின்போது சைக்கிளில் இருந்து விழுந்ததை யாரோ உள்ளே எடுத்து வைத்திருக்கின்றனர். அதைக் குனிந்து எடுத்த போது இந்தப் பையை கேரியரில் வைத்தபடி அந்தப் பையன் அரை பெடல் அடித்துக் கொண்டே சைக்கிளின் மணியை ஒலித்துச் செல்லும் காட்சி கண்ணுக்குள் விரிந்தது.

சண்முகத்திற்கு தனக்கு எதிரே அந்தக் குடும்பம் முழுக்க நின்று நியாயம் கேட்பது மாதிரி தோன்றியது.

 ‘நான் தான், நான் தான்’ என்று அவனது வாய் அனிச்சையாக முணுமுணுத்தது.

Pin It