பாசியென மனம் படிந்தவளின்
பெயர் செதுக்கி சுவாசிப்பவனுக்கு
கரும்பலகையாகிறது பாறை...

படலாக பாறை மறைக்க
முத்தமிட்டுக் கொண்டிருந்தனர்
இணைகள் பசலை நீங்க...

ஆண்டு தோறும் உறவுகளோடு
படையலிட்டு வணங்கிடும்
குலசாமியாகிறது பாறை...

ஆடு, புலியென
மாறிடும் இருவருக்கு
பாறை யுத்த களமாகிறது.

திருட்டு தம்மடித்து
போதை ரசிக்கும் சிறார்களின்
கொண்டாட்டத்தைப் பகிர
குடையாகிறது பாறை...

சறுக்கிடும் குழந்தைகளுக்கு
பாறை வழுக்கு மரமாகிறது...

 இரைக்காகத் திரியும் ஆடுகளை
கை விரித்தழைக்கும் மேய்ப்பாளனுக்கு
பரணாகிறது பாறை...

பறவை இட்டுச் செல்ல
வெடிப்பில் தேக்கிய நிலத்தால்
பாறை விளைவிக்கிறது மரத்தை....

பேச விரும்பா துயர்களால்
கெட்டித்த பெண்ணாய்க் கிடக்கும்
பாறையிலமர்ந்து கவிஞன்
எழுதிக் கொண்டிருக்கிறான் தன் வலியை....

சந்தடிகளைத் தவிர்த்து
அமைதி வேண்டித் தவிப்பவனுக்கு
வாசிப்பறையாகிறது பாறை...

தனை நேசிக்கும் நாய்க்கு
உன்னி பிடுங்கிக் கொண்டிருந்தாள்
பாறையின் வெது வெதுப்பை
உடலேற்றிய பாட்டி..

யோகி ஒருவர்
தியானித்தபடி இருந்தார்
பாறையின் குளிர்விப்பில்....

மூதாதையரின்
வாழ்வை உயிர்ப்போடு
கல்வெட்டுகளில் காத்து
வரலாற்றுப் பெட்டகமாகிறது பாறை...

நினைவுள் காட்சிகள் பிடுங்க
சிசு சிதைத்த சூல்பையென
நலிந்த பெரும் பள்ளங்களை
மண் நிரப்பி மனையாக்குகிறது
காலம்..

Pin It