தெருவிற்குள் கல்யாணவீட்டுச் சாப்பாடு வெகுமும்முரமாய் விற்பனையாகிக் கொண்டி ருந்தது.

இவன், கையில் பிடித்திருந்த பாத்திரங்கள் தன்னை எள்ளி நகையாடுவது போல உணர்ந் தான். சாப்பாட்டுக் கடையை இன்னமும் நெருங்கவில்லை. பெண்களும், குழந்தைகளுமாய் தள்ளுவண்டியில் விரித்திருக்கும் கடையைச் சுற்றிலும் வட்டம் போட்டு குழுமி நின்றி ருந்தனர்.

bus_370இவன், பத்தடிக்கு முன்னால் இருந்த மூக்கம் மாக் கிழவியின் பெட்டிக் கடைத் திண்டில் சாய்ந்து நின்று கொண்டான். கையிலிருந்த ஈயச்சட்டியையும், சருவச் செம்பையும், எவர் சில்வர் தம்ளரையும் ஒன்றுக்குள் ஒன்றாகப் போட்டு கடைப் பலகையில் சாத்தி வைத்தான்.

எளந்தாரி வயசில் வீட்டுக்கு காப்பி வாங்கக்கூட தூக்கு வாளியைத் தொட்டது இல்லை. அம்மாவும் தொடவிடாது. “ எச்சிப் பாத்தரத்த எளந்தாரிப் பயலத் தூக்கச் சொல்லாதடீ.. “ - என தங்கச்சி பெருமாயியைத் திட்டும்.

“நாளைக்கி வேலைக்கிப் போறப்ப எப்பிடியும் தூக்குப்போனியில சோறு செமந்துதான போகணும்.. அப்ப என்னா செய்வ..?” - தங்கச்சிமார் கடுப்பில் பேசுவார்கள். அதற்கும்கூட அம்மா சரியாய் பதில் கொடுக்கும். “எம்புள்ளய நா எம்மே பீயே ன்னு படிக்கவச்சு சலுக்கார் வேலைக்கில்ல அனுப்புவே..”

பாவம் அம்மா. ஆறாம்வகுப்பு லீவின் போது ஒற்றை மாட்டுவண்டி ஓட்ட ஆரம்பித்தவன், பிள° ஒண்ணில் ஆட்டோ டிரைவர் ஆகிவிட்டான். ப்ளஸ்டூ முடிக்கிறபோது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த கோகிலாவோடு காதலாகி முழுப்பரிச்சை துவங்கிய நாளில் கலியாணம் முடிந்துபோனது. நல்ல வேளையாய் பெருமாயியின் சாபம் ஈடேற வில்லை. ஆட்டோஓட்டி என்பதால் வீட்டுக்கே வந்து சாப்பிட்டுப் போகும்படியான சூழல் அமைந்து போனது.

கோகிலாவும் அப்படியாப்பட்ட பொம்பளை இல்லைதான். எது ஒன்றையும் தன்னை தொட் டுத் தூக்க விடமாட்டாள். “தடிமாடு கணக்காத்தே தடந்தெரியாம ஒழப்பிக் கிட்டிருப்ப, எதயும் பதனமா செய்யச் சொல்லி ங்கோத்தா ஒனக்குச் சொல்லித் தரலியா..? “ - என்று ஏதாவது காரணம் சொல்லி ஒதுக்கி விடுவாள்.

வீட்டில் எப்பவாவது சின்னதாய்ச் சண்டை வந்து விட்டால்தான், அத்தனையும் மூடிக் கொள்ளுவாள். பாத்திரத்தில் சோறு இருக்காது, பானையில் தண்ணீர் இருக்காது, அடுப்பு அணைந்துபோய் சாம்பல் பிடித்துக் கிடக்கும். அவசரத்துக்கு சுடு தண்ணி வைக்கக்கூட முடியாதபடிக்கு தீக்குச்சிகூட கிடைக்காது.முக்காடு போட்டவளாய் மூக்கைச் சிந்திச்சிந்தி முடங்கிக் கொள்ளுவாள். அல்லது வீட்டைப் பூட்டிவிட்டு எங்காவது காணாமல் போய்வி வாள்.

அன்றைக்கு பிள்ளைகளின் லச்சை தாங்க முடியாது. ஆத்தாள் இல்லையென்றால் அவர் களுக்கு அப்படிப் பசிக்கும் போல, எந்த நேரமும் “அய்யா சோறு.., அய்யா முட்டாயி .., அய்யா காசு..” - அதிலும் இந்த செல்போன் வாங்கிய பிறகு கூடுதல் தொந்தரவு. வீட்டுக்கும் தனக்கும் பேசினால் ‘ப்ரீ’ என ஆப்பரில் வாங்கியது, இப்படி தனது காலை இறுக்கிப் பிடிக்கும் என நினைக்கவில்லை.

நிம்மதியாய் ஒரு சவாரி எடுத்துப் போக முடியவில்லை. ஸ்டாண்டுக்குப் போவதற்குள் ரெண்டு தரம் போன், “அய்யா .. நீ குடுத்த காச வாங்கிக் கிட்டு அக்கா என்னிய அடிக்கிறா..” , “ நீ தானய்யா மதியானத்துக்கு காசத் தரச் சொன்ன ..? இவ இப்பவே வேணும்னு புடுங்குறா ..!”  “சவாரி முடிஞ்சிவாரப்ப பால்பன்னும் சீனிச்சேகும் வாங்கிட்டு வந்துருய்யா..!”

போனை அணைத்துப் போட்டால் வாடிக்கையாளர் பாதிப்பு வரும். பேட்டரி சார்ஜரை ஒளித்து வைத்துப் பார்த்தான். பக்கத்து வீட்டில் இரவல் வாங்கி ஏற்றிக் கொண்டார்கள். பலமுறை அழைப்பு வந்த நிலையில் போனை எடுக்காமல் தவிர்த்தான். ஆனாலும் பதட்ட மாய் இருந்தது. ஏதாவது முக்கியமான காரியமாய் இருந்தால்.. ஒரு வேளை கோகிலாவே சமாதானமடைந்து, “வந்திட்டேம் மாமா” என்கிற அழைப்பாக இருந்தால்...

இப்படியேதான் ஏமாற்றத்துடனேயே ஓடுகிறது வாழ்க்கையும்..!

“ஒரு டம்ளர் சாம்பார் ரெண்டு ரூவா.. கப்புன்னா அஞ்சு ரூவா .. ரசம் கப்பு ரெண்டு ரூவாதேன்.. நெதெமுமா சொல்லுவாக..” - ரெம்பவும் கறாராகப் பேசினார் கருப்பசாமியின் பொண்டாட்டி.                  

தேனியில் கல்யாணமண்டபம் ஒன்றில் கருப்பசாமியும் அவரது பொண்டாட்டியும் வேலை பார்க்கிறார்கள். விசேஷங்களில் மீதம் விழுகிற பதார்த்தங்களை சமையல்க்காரரிடம் கெஞ்சிக் கூத்தாடி வாங்கி வருவார்கள். அதற்கு கைமாறாக மண்டபத்துப் பாத்திரங்களைக் கழுவிக் கொடுப்ப தும் இன்னும் பலவிதமான ரூபங்களிலும் சென்றடையும்.

முகூர்த்த நாட்களில் பெரும்பாலான நாட்கள் சாதகமாகவே இருக்கும். ஒன்றிரண்டு நாட் களில் தான் எதுவும் கிடக்காது.  சமயங்களில் கறிபிரியாணி கூட எக்காச்சக்கமாய்  மீந்து விடுவதுண்டு. அந்தச் சமயத்தில் தள்ளுவண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு உணவு அய்ட்டங்களை மண்டபத்துப் பாத்திரங்களிலேயே அள்ளிப் போட்டுக் கொண்டு தெருவுக்கு தள்ளிக் கொண்டு வந்துவிடுவார்கள்..    

சாப்பாடு 10 ரூபாய், காய்கறி அய்ட்டம் 5 ரூபாய், சாம்பார்  2, ரசம்  ரூ 1. என்று நிச்சயிக்கப் பட்ட விலை உண்டு..   

கூட்டம் கொஞ்சம் குறைந்ததுபோலத் தெரிந்தது. தாமதித்தால் வீட்டிலிருந்து பிள்ளைகள் தேடி வரலாம். கோகிலா வர வாய்ப்பு இல்லை. ஏனென்றால் இன்றைய அவளது கோபம் சாதாரணமாகத் தீரக்கூடியதல்ல.

பாத்திரங்களைக் கையிலெடுத்தான். அது குறுகலான சந்து. பாத்திரங்களைக் கையிலேந்திய படி இரண்டுபேர் எதிரெதிர் வந்தாலே மோதிக் கொள்ளும் அமைப்பு. அதோடு வீட்டின் ஒவ் வொரு வாசலிலும் சாக்கடையை மறித்து குளிய லறையும், வாசல்படியும் வைத்திருந் தார்கள். அதுமட்டுமல்லாது, பெட்டிக்கடை இட்டலிக் கடைகள் தனி. 

சாப்பாட்டு வண்டி தங்கம்மா இட்டிலிக்கடை ஓரமாய் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. இவனுக்கு முன்னால் சிறுவன் ஒருவன் பார்சல் வாங்கிக் கொண்டிருந்தான். வண்டியை மறித்து நின்றிருந்த பெண்கள், ஆளாளுக்கு அண்டாவுக்குள் கைவிட்டு சோற்றை அள்ளி ருசி பார்த்துக் கொண்டிருந்தனர்.

கருப்பசாமி புருசனும் பொஞ்சாதியுமாய், பண்டங்களை ஆளுக்கு ஏற்றபடி விளம்பிக் கொண் டும், விரட்டிக் கொண்டும் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தனர். தெருமுழுக்க சாம்பாரும் ரசமுமாய்  மணத்துக் கொண்டிருந்தது.

“ஆருக்கும் கடன் இல்ல..  உள்ளதுக்குத் தக்கன வாங்கிக்கங்க.. ! ரொக்கத்துக்குத்தே ஏவாரம்..!” - கருப்பசாமியின் சம்சாரம் சட்டமாய்ப் பேசியபடி   காசை வாங்கி சுருக்குப் பைக் குள் திணித்துக் கொண்டிருந்தாள்.

”அடடே .. வாய்யா.. ட்ரைவரூ..!”  என வரவேற்றார் கருப்பசாமி, “ந்தா ..கொஞ்ச ஒதுங்கிக் கங்கம்மா.. ஆம்பளயாள் நிக்கிறாப் லல்ல..” - என்று பெண்களை ஒதுக்கி இவனை முன்புறம் வரச் செய்தார்.

“முன்னாடி வந்தவங்க வாங்கிக்கட்டும் ண்ணே” , -இவன் கூச்சத்தோடு வந்தான்.

“அவங்களா..? அதுக கடனுக்கு நிக்கிறா கப்பா..” என்றவர், “நீ என்னா தெருவுக்குள்ள திரியிற..?” - என்றார்.

“ணே .. நா இந்த ஊர் தா ண்ணே ..!”

படீரெனச் சிரித்தர்.” அது தெரியாதா தெரியும்பா... ‘குட்டியான’  ஓட்டிகிட்டு இருந்தீ கல்ல... எங்கிட்டாச்சும் மெட்ராசு... பெங்களூ ருன்னு சவாரி போய்க்கிட்டு இருப்பீகள்ல.. அதத்தே இங்கன திரியறேன்னு கேட்டேன்..” - நீளமாய் விளக்கம் அளித்தார். 

“தம்பி இப்ப ஆட்டா ஓட்றதில்லயா..?” - கருப்பசாமியின் சம்சாரம் புன்னகையோடு கேட்டார். அப்போது அவரது கால்களுக்கடி யிலிருந்து ஒரு நாய் எட்டிப் பார்த்தது. தள்ளுவண்டி யின் மேல் நீட்டிக் கொண்டிருந்த வாழைஇலைத் துணுக்கை வாயில் கவ்வி இழுத்தது. இவன், அதனைச் சுட்டிச் சொல்வதற்குள் அந்தம்மாவே அனிச்சையாய் காலை பின்புறமாய் மடித்து நாயை உதைத்து விரட்டினார்.

“ஆட்டாவா.. அதெல்லா விட்டு, இப்ப பெரிய வண்டிக்கு மாறியாச்சு..” - கருப்பசாமியே பதில் சொன்னார்.

“அப்படியா..! எங்குட்டோ நல்லாருக்கட்டும்..!”

“ஆமா.. ஆட்டாவ ஓட்டி பத்தும் இருவதுமா பாத்து என்னிக்கு விடிய..! பெரிய வண்டின்னா ஒரு நாலுலோடு போய்வந்தா என்னத்தியோ ஒரு ஆயிரம் ரெண்டாயிரம் மிச்சம் பாக்கலாம். ஊரோட நாமளும் ஒராளாகலாம். இல்லியா..!”  

“உம்மதாங்ணே.. !”

“சாப்பாடா.. ? டிப்பனா..தம்பி ” கருப்பசாமி மனைவியின் கேள்வி இவனுக்குப் புரியவில்லை. ‘டிப்பன் வேற இருக்கிறதா..?’

“ம்.. பொங்கல் ..கேசரி.. சட்டினி  இருக்குல்ல!”

“சாப்பாடே குடுத்துருங்க ணே . அதுதே நெரந்துவரும்..!”  சட்டியை நீட்டினான்.

“டிப்பன் சூப்பரா இருக்கும்ப்பா.. நெய்ப் பொங்கலு.. வாசனையப் பாத்தீல்ல.. பூராம் முந்திரிப்பருப்புதேன்.. அம்ம பாய் மகெ, வீரு.(பீருவை வீரு என்றுதான் விளிப்பார்) சமயலு..”  பொங்கல் கொஞ்சம் எடுத்து ருசித்துப் பார்க்கக் குடுத்தார். பூராமும் சாப்பாடாகத்தான் போய்க் கொண்டிருந்தது. இவனாவது பொங்கல் வாங்கிப் போவான் என்றுதான் இத்தனைப் பேச்சு. சோறு மீந்தால்கூட புளியோ எலுமிச்சையோ தாளித்து மறுநாளைக்கு விற்றுக் கொள்ளலாம். பொங்கல் தாங்காது. கொஞ்ச நேரத்தில் வீச்ச மெடுத்துவிடும். நேரம்போகப் போக கடன் கொடுத்துத்தான் தீர்க்கவேண்டும்.

இவனுக்கும் குழப்பமாகத்தான் இருந்தது. ஆனாலும் சப்பாடுதான் புத்தியில் நின்றது. அதையே சொன்னான். ஒருகப் கேட்டவனுக்கு பொங்கல் ஒருகப் சேர்த்து அள்ளிவிட்டார். அதே போல சாப்பாடும் காய்கறியும் செழிப்பமாய்த் தந்தார். கடைசியில் “அஞ்சு ரூவாய்க்கு மட்டும் கேசரி வாங்கிக்க.. பிள்ளை களுக்குக் குடு.” -என்று வாழைஇலையில் மடித்து சாப்பாட்டின் மேல் வைத்து அனுப்பினார்.

காசைக் கொடுத்துவிட்டு நகர்ந்தான். “எதும் பத்தலேன்னா சங்கடப்படாம ஏனத்தக் குடுத்து விடுப்பா..” கரிசனம் மிகுந்த குரலில் சொன்னாள் கருப்பசாமியின் மனைவி.

வீட்டுக்குள் பிள்ளைகள் மூன்றுபேரும் கோகிலா வைச் சுற்றி உட்கார்ந்திருந்தனர். இவன், சாப்பாட்டுப் பாத்திரங்களோடு வருவது கண்டும் அவர்கள் அசையவில்லை. எதையோ சொல்லி கோகிலா அவர்களை அடக்கி வைத்திருக்கிறாள். பிள்ளைகள் அம்மாவிடத்தில் அமர்ந்திருந்தாலும், பார்வை, பூராவும் தன்பக்கமே இருக்கக்கண்டான்.

“கோயிலா.. சண்டையெல்லாம் அப்பறமா வச்சுக்கல்லாம்.. மொதல்ல சாப்பிடலாம் வா..” - சட்டியிலிருந்த உணவு வகைகளை தனித்தனியாய்ப் பிரித்து வைத்தான்.

கேசரியை மட்டும் முன்னால் பார்வைக்கு தெரியும் விதமாய் வைத்தான். வாழையிலை கட்டப்படாததால் மூடியகை விரித்ததுபோல இலையினை விரிக்க, கேசரியின் மஞ்சள் நிறம் வெளிப்பட்டு நெய் மணம் பரப்பியது.

கோகிலாவின் பக்கமிருந்த கைப்பிள்ளை, கேசரியின் வாசனைக்கு தவழ்ந்து வந்தது. 

“யே ... அவளப் புடிடி புடிடி..!” - மூத்தவளை ஏவிவிட்டாள் கோகிலா., அது எழுந்து வருவதற் குள் இவன் தூக்கிக் கொண்டான்.

“ நீதேன் அய்யா பிள்ள..! ஒனக்குத்தே பூராக் கேசரியும்..” - எனக் கொஞ்சியபடி,  கேசரியை எடுத்து அதற்கு ஊட்டினான்.

வாயில் திணித்த கேசரியைச் சப்பிச் சப்பி ருசித்தபடி கடவாயில் அதன் கூழ் ஒழுக அய்யாவின் மேல் சினேகமாய்ப் படர்ந்தது. வாயோரம் ஒழுகிய அந்தக் கூழ், அடுத்த பிள்ளையை இம்சித்தது. அது அம்மாவைச் சுரண்டலானது. “பசிக் கிதும்மா..”

கோகிலா கண்களில் நெருப்புப் பொறி காட்டினாள்.

“நெசம்மா ம்மா.. சோறே துன்னல.. “

“ஒருநாளைக்கி தின்னாட்டி செத்தா போயிரு வீங்க..” -  உண்மையில் கேசரியின் வாசனை அவளுக்குமே கிளர்ச்சி ஊட்டியது. ரவிக்கைக்குள் கைவிட்டு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து நீட்டினாள். “போ போயி முட்டாய் வாங்கித் தின்னு”

“ஏம் படிப்புத்தான ம்மா.. வகுத்தக்கூடத் தொட்டு பாருமே.. பசிக்குதுமா..” - நாடகம் போல பாவனை காட்டிய அந்த ரெண்டாவது பிள்ளையை கால் போன போக்கில் உதைத்து விரட்டினாள். “ போ.. போயி.. பீ ..தின்னு..!” சொல்லியபடி மூத்த பெண்ணைப் பார்த்தாள்.

“எனக்கெல்லா பசிக்கலம்மா...! நாஞ் சாப்புட மாட்டெ..”- சொல்லிவிட்டு தாயைப் போல முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டது அந்தப்பிள்ளை.

“கோயிலா.. ஒன்னத்தாண்டி.. நா என்னத்தச் செஞ்சுப்புட்டேன்னு இம்பிட்டு விசுக்காரத்தில இருக்கவ..? எவளயாச்சும் கூத்தியாள சேத்து வச்சிருக்கனா.. இல்ல குடிச்சு தன்னால கெடந்து காசக் களவு குடுத்து வர்ரனா..? ரெம்பத்தே ஆடுறவ..! “சத்தம் குடுத்து அடுத்த ஆட்டம் துவக்கலானான் இவன்.

“வேணாம் பக்கத்தில வராத.. நானே தன்னால வெறி புடிச்சு நிக்கிறேன்.. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிரும்..”

பிள்ளையை இறக்கிவிட்டு தன்னை நோக்கி வந்த இவனை விரல் நீட்டி எச்சரித்தாள்.

இவனுக்கும் அவள்மேல் பயம் இருந்தது. பத்துவருச தாம்பத்யத்தில் நிறைய அடி வாங்கி யாயிற்று.

தனக்கு முன்னால் மூத்தமகளின் தலையில் தட்டி அனுப்பினாள், “ போ.. போயி நிய்யும் தின்னு.. பெரிசா.. ஆத்தாளுக்கு வாக்கு காக்க மொளச்சி ருக்கா.. போ சாப்புட்டு படி..” ஓங்கித் தள்ளியதில் அது சோத்துச் சட்டியின் முன்னால் வந்து நின்றது.

கோகிலா படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து இவனோடு சண்டைக்குத் தயாரானாள்.

இவன், மினி லாரி ஓட்டுவது கோகிலாவுக்கு இஷ்டமில்லை. அதுவும் நாலுவழிச் சாலை யில் பயணிக்கக் கூடாது என்பதே அவளது கோரிக்கை. எல்லாம் இவனால் வந்ததுதான். தங்க நாற்கரச் சாலையைப் பற்றி தாறுமாறய்ச் சொல்லியிருந்தான். அதன் பிரம்மாண்டம், அதில் பயணிக்கும் வேகம், என்று பெருமை பீற்றியதில் அவளுக்கு வாழ்க்கைமீது பயம் ஏற்பட்டு விட்டது. இவனது ஒவ்வொரு விவரிப்பிலும் அவளுக்கு வாழ்வின் அ°தமனமே தெரிந்தது.

“அந்த ரோட்டப் பாத்தேன்னா...!”

அதனை டி வி யில் பார்த்திருக்கிறாள். முடிவற்ற அதன் நீளம்.. பெருத்த அரக்கனின் தொங்கவிட்ட நாக்காய்த் தெரிந்தது. தவளையைப்போல கைகளை ஊன்றி நாக்கை சாலையில் கிடத்திக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். தங்கச் சாலையில் வருகிற வாகனங்கள் ஒவ்வொன்றும் அரக்கனின் வயிற்றுக்குள் அடைக்கலமாகின்றன.

வாகன ஓட்டிகளின் பொட்டிழந்த மனைவி மார்கள், தவளை முட்டை போடுகிற தரு ணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். முட்டையை உடைத்துக் கொண்டு பூவோடு வரு வானா எம் புருஷன்..?

“இங்கிட்டு திண்டுக்கல், .. ஒரு கொட்ர எறக்கிட்டு ஆக்ஸிலேட்டர மிதிச்சா ஆறு மணி நேரத்தில கோயம்பேடு.! மதுரப் பக்கமா.. அஞ்சே மணி நேரந்தே..!” - வீட்டுக்கு வருகிற சொந்த பந்தங்களிடம் தவறாமல் நாற்கரச் சாலையைப் பற்றிப் பேசுவான்.

“ நமக்கு கோட்ரெல்லா. சுஜூபி.. ஆப்ப ஏத்துனாத்தே கண்ணுல வெளிச்சம் பெறக்கும்.  வண்டி கண்ட்ரோல்ல நிக்காது... ஆனாலும் கிளீனாப் போய்ச் சேந்துரும்..”

“ஒரு வேள தடுமாறுச்சுன்னா..? - கிரிக்கட் பார்க்க வந்த கொகிலாவின் சித்திமகன் கேட்டான்.

“தடுமாறுனா சங்கு தே..! ‘ - ஹா°யமாய்ச் சொல்ல, மறுநாளே பக்கத்து வீட்டில் ராமனாத னின் மகன் விழுப்புரம் தாண்டிய ரோட்டில் சகதி யாகிக் கிடந்தான். கூட்டி அள்ளியும் எலும்போ சதையோ தேறவில்லை. சட்டை வேஷ்டியை மட்டும் எடுத்து வந்தார்கள்.

கோகிலா போர்க்கொடி தூக்கலானாள்.

“ஊர்ல எல்லார்க்குமே அப்பிடீன்னு நெனைக்க லாமா..?” -  பவ்யமாய்ப் பேசினான்.

“ நெதமுந்தான நடக்குது. டி.வி.லதெம் பாக்றமுல்ல..”

“யே பட்டிக்காடு.. போர் ரோடுன்னா என்னான்னு தெரியுமா..? நாலுரோட்லயும் எந் தெந்த வண்டி போகணும்னு விதி இருக்கு.அதுப்படி போனா ஆயிரம் வண்டி ஓடுனாலும் ஒண் ணும் ஆகாது.”

“ஆகுதுல்ல..”

விதிகளைக் கடைப்பிடிக்காமை.., நடை முறைப்படுத்துவதில் உள்ள ஓட்டை.., இதை யெல்லாமும் மீறி.... நாலுசக்கர ஓட்டி என்கிற அந்த°து.. ட்ரிப்பு.. ரெ°ட்டு.. என்கிற பந்தா.. கைநிறைய புழங்குகிற பணம்.. சம்பளம்...

“எதும் வேணாம்.. !” - தலையைக் குலுக்கினாள் கோகிலா. “ நீ அஞ்சு ரூவாய்க்கி ஆட்டா ஓட்டிட்டு வா, அது போதும்..”

“ நா செத்துருவேன்னு பயக்குறியா..?”

“பிள்ளைகள வச்சுக்கிட்டு என்னால நடுத் தெருவில அல்லாட முடியாது..!”

மூன்றுநாட்களாய் ஒரே தகராறு.. ஓய்வே இல்லை. இன்றைக்கு அடுப்புபக்கமே போக முடியாது என்று படுத்து விட்டாள்.

இரவுக்கு வண்டி எடுக்கவேண்டும், பொள் ளாச்சி சந்தை லோடு.

“சரி.. மெட்ரா° பக்கம் போகல... லோக்கல் மட்டும் ஓட்றேன்.. வந்து சாப்பிடு..!” - அவளை எழுப்பினான்.

“சரி.. சப்பிடுறேன்.. நீ எங்க வேணாலும் போ..!” - அவளும் முடிவுக்கு வந்தவளாய் சாப்பிட உட்கார்ந்தாள்.

இவனுக்கு ஆச்சர்யமும் பயமும் கலந்து வந்தது. சம்மதம் நிஜமானதுதானா.. பின்னணியில் ஏதும் பதுங்கி இருக்கிறதா..? தெளிவு படுத்தாமல் வண்டி ஓட்ட முடியாது.

எந்தவிதமான பேச்சும் காட்டாமல் சாப்பிட்டு முடித்தாள்.

“கோயிலா...!” - மாறாத கேள்வியோடு அவளை எதிர் நோக்கினான்.

“அதேன் வ்வோ இஷ்டம்னு சொல்லீட் டேன்ல..” - சொல்லிக் கொண்டே எச்சில் பாத்திரங் களை ஒதுக்கினாள்.

“அப்படீன்னா .. நா . னைட்டு வண்டிக்குப் போகணும்ல.. சித்த ஒறங்கிக்கிறட்டா...!”

“அப்பவே சொல்லீட்டேன்..!” - என்றவள், போறதுக்கு முன்னாடி என்னிய டைவர்° பண்ணிரு... எனக்கு என்னோட வாழ்க்கையும் முக்கியம்..” - என்றபடி இவனுக்கான படுக்கை விரிப்பைத் தூக்கிப் போட்டாள்.

மழை ஓயவில்லை...  தூவானமும் இல்லை என்பதும் புரிந்தது இவனுக்கு. இன்னொரு களத் தில் செல்கிறது யுத்தம்.உணர்ச்சி வசப்பட்ட நிலையில் நிற்கும் அவளுக்கு விளங்கும் விதத்தில் உரையாடலைத் துவக்க, கொஞ்சம் இடைவெளி கொடுத்தான்.

நாட்டின் வளர்ச்சி, வாகனப்போக்குவரத்தின் பெருக்கம், நாற்கரச்சாலையின் தேவை... அப்படின்னு ஆரம்பிக்கவா... இல்லே... மாரியாத்தா துணையிருக்க... அப்படின்னு ஆரம்பிக்கவா... என்று மனசுக்குள் ஓட்டிப்பார்த்தான்.

Pin It