அவரை விதைச்சா துவரை முளைக்குமாம், துவரை விதைச்சா அவரை முளைக்குமாம், அப்பேர்க்கொத்த பூமியில யோசனைகாருக் கெல்லாம் யோசனை சொல்ற அந்த ஊராள்ற ராசகுமாரி தூரில்லாத பானையைக் கொண்டுக் கிட்டு கரையில்லாத கண்மாய்க்கு தண்ணிக்குப் போனாளாம்.

அந்தக் கண்மாய் பாதையோரமா வாயில்லாத மான் ஒண்ணு வேரில்லாத புல்லை மேய்ஞ்சிக் கிட்டிருந்தது. அதை கண்ணில்லாத கபோதி ஒருத்தன் பார்த்து, கையில்லாத முடவன் கிட்டெ சொல்ல, அவன் அந்த மானை வில்லால குறி பார்த்து அடிச்சான்.

வில்லிலிருந்து படுவிசையாக் கிளம்பிப்போன அம்பு, மேய்ஞ்சிக்கிட்டிருந்த மான் மேலே படாம மான் வயித்துக்குள்ளிருந்த குட்டி மேல பாய்ஞ்சி, குட்டி இறந்து போச்சி.

செத்துப்போன குட்டியை மான் மேனியில கைபடாம உரிச்சி கொண்டு வந்து ஊருக்குள்ள தீட்டே படாத வீட்டுல, அதுவும் பரம்பரை பரம்பரையா முட்டு காணாத பெண்டுக கைப்பக்கு வத்துல பொரிச்சி சாப்புட்டா நூறாயுசுக்கும் மேல நோய் நொடியில்லாம வாழலாம்ன்னு, பழைய சோறு போட்டா பசியாம இருக்கிறதுக்கு மருந்து தர்ற மாயாவி சொன்னாம்ன்னு மூணு கல்லு வச்சி அடுப்புக் கூட்டி சட்டியை தூக்கி வச்சி எண்ணை சீசாவை எடுத்துப் பாத்தா அதிலே ஒரு பொட்டு எண்ணை கூட இல்லை.

அதனாலயென்ன பரவாயில்ல, இந்தா இப்பொ ஒரு வீச்சுல ரெடி பண்ணீர்றதோம்ன்னு பரம்பரை பரம்பரையா முட்டு காணாத வீட்டைச் சேந்த பெண்டுக ஊருக்கு தெக்கிட்டு முடுக்காத்துப் பக்கமா எட்டுக்குறுக்கம் நிலத்துல எள்ளு விதைச்சது ஞாபகத்துக்கு வர, அங்கெ போய்ப் பாத்தா அவ்வள கோடி நிலத்துல விதைச்சதெல்லாம் கருகி கட்ட மண்ணாய்ப் போயி காடு தரிசாகி புல்லு மண்டிப் போய்க் கிடந்தது.

பொல்லாத காலத்திலயும் ஒரு நல்ல வேளைன்னு அந்த ஈசான மூலையில் ஒரே ஒரு எள்ளுச் செடி மட்டும் முளைச்சிருந்தது. அதுலே ரெண்டே ரெண்டு இலை விட்டிருந்தது. அதிலே ஒண்ணு பழுத்து உதிர்ற பருவத்துலயிருந்த இலைக்குப் பின்னாடி கண் மறைசல்ல எள்ளுக்காயி கொத்துக் கொத்தா தொங்கிக் கிடந்தது.

அதிலே ஒரே ஒரு காயைப் புடுங்கி, அந்தக் காயை உரிச்சி ஒரு எள்ளை எடுத்து அந்த எள்ளோட மூக்கைக் கிள்ளி, மூக்கோட முனையைக் கிள்ளி, முனையோட நுனியைக் கிள்ளி கிணறு அகல செக்குல அதைப்போட்டு தேர் உயர உலக்கையைக் கொண்டு ராவெல்லாம் ஆட்டி ஆள் உயர அண்டா நிறைய எண்ணை எடுத்தாக.

எண்ணை ரொம்புன அண்டாவை வாசப்படிக்கு நேராஅடுப்புக்கூட்டி அதிலெ தூக்கி வச்சி அஞ்சாறு ஆலமரத்து தூருகளைத் கொண்டு சூடாக்கி மான் துண்டத்தை எடுத்து போடப் போகும்போது வீட்டு உத்தரத்து மேல போய்க் கிட்டிருந்த எறும்பும் எறும்புக் குட்டியும் தொபுக்கடீன்னு அண்டாவுல தவறி விழுந்து கொதிக்க கொதிக்கயிருந்த ஒரு அண்டா எண்ணையையும் கீழே கொட்டி விட்டிருச்சி. விடாப்படாதுடா அந்த எறும்பை! வளைங்கடா வளைச்சுப் புடிக்கடான்னு ஊர்ச்சனமே விரட்டிப் போயி எறும்பைப் புடிச்சி மரத்துல கட்டி ஒருவாரம் போல அதுக்கு சோறு தண்ணி அன்ன ஆகாரம் கொடுக்காம, எறும்புக் குட்டியையும் அதுகிட்டெ பால் குடிக்க விடாம, எறும்போட காம்பிலிருந்து ஒட்ட ஒட்ட பாலைக் கறந்து நாலு குலுக்கையில ஊத்தி வச்சி ஆளும் பேருமா காலா காலத்துல அதைக்காய்ச்சி உறைக்குத்தி தயிராக்கி ஊரே கேளு நாடே கேளுன்னு அல்லும் பகலும் கடைஞ்சி மோராக்கி சின்ன மலைக்கு ஒரு மலை அளவு வெண்ணெயெடுத்து அதை முண்டக் கண்ணியம்மா கோயிலு பெரிய தேக்சாவிலே உருக்கி பழையபடி மான் துண்டத்தை எடுத்து பொரிக்கப் போடப்போற நேரம்பாத்து எங்கிருந்தோ வாயில்லாத காக்கா ஒண்ணு விருட்டுன்னு பறந்து வந்து அதை கவ்விக்கிட்டு போயிருச்சி.

அதை வாய் பேசாத ஊமைக் காவல்காரன் பாத்து அவயம் போட்டு பின்னாடியே விரட்டிப் போகையில அவன் கால்ல கண்டங்கத்திரி முள்ளுக்குத்தி அது தலைக்கு மேல நீட்டிக்கிட்டு வந்திருச்சி.

ஐயையோ இதென்னடா துயரம் இதுக்கு உடனே வைத்தியம் பாக்கணுமே, இல்லேன்னு புண்ணு புரையோடி உசிருக்கே வினையாகிப் போகுமேன்னு நூறு காத தூரத்துக்கு அப்பாலிருக் கிற வைத்தியர்கிட்டே ஆறுநாள் அடை மழை பிடிச்சி பெய்ஞ்சாலும் இடத்தைவிட்டு அசையாத எருமைமாட்டு மேல ஏறி விரசலா போனாங்க.

அங்கே போனா வைத்தியரு இல்லாத கருப்புப் பூனையை இருட்டு வீட்டுக்குள்ள இருபத்திநாலு மணி நேரமும் தேடிக்கிட்டிருந்தாரு. அவருகிட்டே விவரஞ் சொன்னாங்க. அவரோ, ஐயா நான் பூனையைப் பிடிச்சு புணுகுயெடுத்து பூசைக்கு வச்சி பூர்வீகம் அறியப் போறேன். இந்த மும்முரத்துல பழைய வைத்திய முறைகளெல்லாம் எனக்கு அயத்துப் போச்சி. இப்படியே போனா இன்னும் ஒரு நூறுகல் தொலவுள என் குருநாதர் மூணு தலைமுறையா வைத்தியம் பாக்குறார். ரொம்ப ஞாபக சக்திக்காரர். அவரைப் போய் பாருங்கன்னார்.

அப்படியே அலைஞ்சி திரிஞ்சி அந்த குருநாதரைப் போய்ப் பாத்தா, அவரு வீட்டு மொகட்டுல உட்கார்ந்து கூரையை பிரிச்சிக் கிட்டிருந்தாரு. அவரு சொன்னாரு, ஐயா சித்த நாழி பொறுங்க. என் பொடி மட்டைய இந்த கூரையில எங்கெயோ சொருகி வச்சேன், வச்ச லெக்கு தெரியல, இதைப்பிரிச்சி மட்டையை எடுத்ததும் திரும்ப கூரையை மேய்ஞ்சி முடிச்சதும் உங்க வியாதிக்கு பொக்குன்னு ஒரு மருந்து சொல்றேன்னார்.

அந்தா இந்தான்னு சின்ன மாசத்துக்கு ஒரு மாசமாகிப் போச்சி. வைத்தியர் வந்தார். ஐயா ஆல இலை அரச இலை அத்தி இலை பூவரசஇலை புங்கை இலை, இந்த அஞ்சு வகையையும் கைப்படாம புடுங்கி அம்மி படாம விழுதுபட அரைச்சி தொண்டையில படாம குடிங்க இப்படி ஒரு வாரப்பத்தியம்.

சிந்தாமணிக் கொட்டை, சிரியா நங்கைப் பட்டை, சித்தெறும்பு முட்டை மூணையும் ஒவ்வொரு மூடை சேர்த்து மழை காணாத தண்ணியில போட்டுக் குழைச்சி, எண்ணி நூறுதரம் எண்ணாம நூறு தரம் உள்ளங்கையில அள்ளி, மலர்த்துன உள்ளங்கையில மருந்திருக்க புறங்கையை நக்கணும். இப்படி நாற்பத் தெட்டு நாள், அதாவது ஒரு மண்டலம் போல செய்து வந்தா அந்த ஆண்டவன் கிருபையில இந்த நோய் தீர்றதுக்கான வாப்பினை இருக்குன்னார்.

இப்பேர்ப்பட்ட வைத்தியஞ் சொன்ன வைத்தியருக்கு நாம ஏதாவது ஏன்டதை செய்தாகணும்ன்னு சொல்லி வீட்டுக்கு ஓடோடி வந்து, அடுக்குப்பானையில இருந்த ஆழாக்கு உளுந்தைக் கொண்டு போய் களத்துல கொட்டி, தூரில்லாத மரக்காலைக் கொண்டு அடியில்லாத சாக்குல விடிய விடிய அளந்து போட்டு ரெண்டு பைதாயில்லாத வண்டியில இடத்தையில ரெண்டு சோடி மாடும் வலத்தையில நாலு சோடி மாடும் பூட்டி, உளுந்தம் மூடைகளை வண்டியில அட்டீல் போட்டு குருட்டுப்பய வழி சொல்ல செவிட்டுப்பய வண்டியப்பத்தி போய்க்கிட்டே இருந்தானாம்.

இதை வாசிச்ச உங்களுக்கு கதை விளங் கலைன்னா அதுதான் தத்துவம். இதை எழுதுன வனுக்கே விளங்கலைன்னா அதுதான் மகா தத்துவம்.

Pin It