மாடு போடும் சாணியை
எப்படா போடுமுன்னு எதிர்பார்த்து! காத்து கிடந்து
ரோட்டில் போட்டதை புதையல் கிடைத்ததை போல மகிழ்ந்து
யாரும் அள்ளிவிடக்கூடாதுன்னு
அதுக்கொரு கோடு போட்டு அடையாள மிட்டு
சாணிக்குள்ளேயே வாழ்க்கை கழுத்தை மாட்டிக் கொண்டு
செக்குமாடாக சுற்றிவரும் எம்மக்களுக்கு
“புண்ணாக்கு” தெரியுமே தவிர
விலைவாசி உயர்வுக்கான
ஊக பேர வாணிகத்திற்கும் உங்களுக்கும் ஏற்பட்ட
புரிந்துணர்வு ஒப்பந்தம் எங்கே புரியப்போகிறது? உம்.. .ஊஹூம்

சாக்கடையில் மட்டுமா புழு நெளியும்
தெருவில் ஊர்ந்து செல்லும் புழுவாக நாங்களும்
ஆறுமணிக்கு கழிவுகளை அள்ளி சுமக்கணும்
எங்க புள்ள குட்டிங்கல்லாம்
தெருவும் திண்ணையுமாய்
தின்னாலும் சரி திங்காட்டியும் சரி
உங்கள மாதிரி ஒய்யாரமாய் உட்கார்ந்து
புள்ளைக்கு ஷூ மாட்டி சோ று ஊட்டி கார்ல ஏத்தி
டாடி டாட்டா, மம்மி டாட்டான்னாலும் சொல்ல முடியாது
சாக்கடை அள்ளுவதும் மனித சாணியை அள்ளி சுமப்பதும்
செத்ததை தூக்குவதும் பொளப்பு எங்களுக்கு

தண்ணீரிலிருந்து தூக்கி போட்டா
செத்து போகும் மீனைபோல
எங்கள சாக்கடையிலிருந்து மீளமுடியாம சதி பண்ணி
சகதிக்குள்ளேயே அமுக்கி வச்ச

உங்கள் கால்களை இன்னும்
புனிதமான பாதங்களாக பூஜித்து வரும் எங்க மக்களுக்கு
ஆணுக்கும் பெண்ணுக்கும்
“தண்ணி” அடிக்கத் தெரியுமே தவிர
ஷாம்ப்பெயன் மதுவை கிண்ணங்களில்
ஊற்றி பரிமாற்றத்துடன்
விலைவாசி உயர்வுக்கான காரணமான
பங்குசந்தை சூதாடிகளும் நீங்களும் போடும்
புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ன புரியவாப் போகிறது? உம். ஊஹூம்

முப்பது நாளும் உன் தினவுக்கு
பொம்பள வேணும்
அந்த மூனு நாள் தவிர ...
அன்னிக்கு அவளோ ஒரு தீட்டு துணியாக
தள்ளி வைச்ச உன் அகங்காரம்...
தீட்டு துணியை வள விலேயும்
அழுக்குத் துணியை மூலையிலேயும்
விட்டெறிஞ்சி கிடக்கம் கேட்பாரற்று
நீ விலக்கி வைச்ச தீட்டு துணிய
தொட்டு தூக்கி வெள்ளாவியில
வேகவச்சி தாணும் அதோட வெந்து
கல்லுல போட்டு நெஞ்சடியா அடிச்சி துவைச்சு
காயப்போட்டு மடிச்சி எடுத்து
நெஞ்செல்லாம் காய்ப்பேறி
நிமிர்ந்து நிக்க முடியாம குறுக்கெலும்பு ஒடிஞ்சி
கேள்வி குறியாய் நிற்கும் எம்மக்களுக்கு
ஊன் அழுக்கை போக்கும் “காரம்” தெரியுமே தவிர
விலைவாசி உயர்வுக்கான காரணமும்
பதுக்கல்காரர்களுக்கும் உனக்கும் ஏற்பட்ட புரிந்துணர்வு
ஒப்பந்தம் என்ன புரியவா போகிறது? உம்... ஊஹூம்
மாடோடு மாடாய் தானும் உழுதுஉழன்று
போட்ட பயிரை காப்பாத்த கங்கணம் கெட்டி
கொக்கு விரட்ட குருவி விரட்ட
வைக்கோல் கட்டி
கரிசட்டிப்பானைய தலையில கவுத்தி
கரும்புள்ளி செம்புள்ளி வைச்சி
மனுசன் நிப்பதைப்போல கம்புல நிக்க வைச்ச
சோள காட்டு பொம்மை போல
வாழ்க்கை மெலிஞ்சி கிடக்கும்; எங்க மக்களுக்கு
வயல்வரப்புல ஓடும் நண்டு தெரியும்
நத்தை ஊமச்சி தெரியுமே தவிர
கண்ணுக்கு தெரியாமலேயே
பயிர்குருத்தை உறிஞ்சி அழிக்கும் பூச்சி போல
நீங்களும் உலக வர்த்தக நிறுவனமும் போடுற
புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ன புரியவா போகிறது? உம்... ஊஹூம்
ஒட்டுமொத்த மக்களெல்லாம் இப்படி இருக்க
நாங்க ஒண்ணு தெரியாம இருக்கிறது உங்களுக்கு நல்லது!!
உங்கள நல்லா தெரிஞ்சுக்கிறது எங்களுக்கு நல்லது

Pin It