பித்தளை தூக்குச்சட்டியில்
கறிக்குழம்புக்குள்
கிடக்கும் கரிக்கட்டையைப்போல
மாறிவிட்டது வாழ்க்கை.
பாதுகாப்பிற்கான தேடுதலில்
கிடைத்தவற்றைப் பிடித்து
கரையேற நினைத்தாலும்
வழுக்கி விடுகிறது வாழ்க்கை.


அப்படியே
என்னைப் போல இருக்கும்
உன்னைப் பார்த்தவர்கள்
யார் இவளென கேட்கக்கூடும்.
தந்தை என நீயும்
மகளென நானும்
பகிர்ந்து விட்டு நகர்கையில்
தாத்தாவைப் போலிருக்கிறார்கள்
எனது மகனும், பேத்தியும்
என்று கூறுகிறாள் அம்மா.

சின்ன வயது
புகைப்படத்தில்
இரட்டை ஜடை போட்டிருப்பதைப் பார்த்து
சிரித்தே விட்டாள் இலக்கியா.
மாமா மடியில் வைத்து
காது குத்தினார்களா அப்பா என கதைக்கும்
அவளிடம்
குத்தாத காதிற்காக
கருவேல முள் எடுத்து
காது குத்தியதை
எப்படிச் சொல்வது?

கருப்பணசாமி கோவிலில்
சுழலும் இசைக்குறுந்தகட்டின்
பக்தி கானத்தில்
கரைந்து போகிறது
வெட்டப்படும்
ஆடுகளின் மரண ஒலிகள்.
 
இந்த வீட்டில்
கன்னித்தெய்வம் ஒன்னு
குடியிருக்கிறது
என பத்தாண்டுகளுக்கு மேலாக
குறி சொல்லும்
சாமகோடாங்கியிடம்
சொல்லிவிட வேண்டும்
அடுத்த மாதம்
அக்காவிற்கு வரன் வந்திருக்கிறது என்று.

Pin It