இம்முறை பார்த்த படங்கள் மூன்று.

மூன்றையும் பார்ப்பதற்கு மூன்று காரணங்கள் இருந்தன. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

1. ஏழாம் அறிவு

இது ஓர் ஆபத்தான காமெடி பீஸ் என்று சொல்ல வேண்டும். படத்தைப்பற்றி இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளர் உதய்நிதி ஸ்டாலின் இருவரும் கொடுத்த கட்டுமானங்களால்(அதாவது- பில்டப்புகளால்) ஈர்க்கப்பட்டு இப்படம் பார்க்கப்போனோம். முந்தைய காட்சி முடிந்து வெளியே வந்த சனங்களை உற்றுப்பார்த்துக்கொண்டே உள்ளே போனோம். முருகதாஸ் பிரகடனம் செய்தது போல தமிழன் என்கிற திமிர் ஏற்றப்பட்டுத் தள்ளாடி வருகிறார்களா அல்லது சும்மா சாதாரணமாக வருகிறார்களா என்று பார்த்தோம். எல்லோரும் அசந்து போய்த்தான் வந்து கொண்டிருந்தார்கள்.

முதலில் படத்தின் கதை என்கிற காமெடியைப் பார்ப்போம். போதிதர்மன் தமிழகத்திலிருந்து சீனாவுக்குப் போய் அங்குள்ள மக்களுக்கு மூலிகை வைத்தியம், வர்மக்கலை(அதில் முக்கியமானது நோக்கு வர்மம்-பார்த்தாலே அவனவன் சுட்டுக்கிட்டு சாவான்), போர்க்கலை எல்லாம் கற்றுக்கொடுத்துவிட்டு அவர்கள் செய்த நல்லெண்ணச் சதியால் அங்கேயே இறந்து விடுகிறான். இப்போ என்னா ஆச்சுன்னா நம்மாளு கிட்டேயே கலையைப் படிச்ச சீனாக்காரன் நம்ம நாட்டையே அழிக்க ஒரே ஒரு சீனாக்காரனை அனுப்புறான். (எவ்வளவு கொழுப்பு அவனுக்கு..)அவனுடைய முக்கியமான வேலை இங்கே உள்ள ஒரே ஒரு பொண்ணைக்கொல்றது. ஏன்னா அவ ஒரு மரபணு பொறியாளர். அது தான் சுருதிஹாசன். போதிதர்மனின் மரபணுவை அதே வம்சத்தில் வந்த சர்க்கஸ் கலைஞனான சூர்யாவின் உடம்பிலே ஏத்தி போதிவர்மனிடம் இருந்த சக்தி பூராத்தையும் சூர்யா உடம்புக்குள்ளே ஏத்திடலாம்னு அந்தப்பொண்ணு ஒரு ஆராய்ச்சி பண்ணுறா. அதுதான் ஏழாம் அறிவுண்றாங்க. அதை அவளுடைய பேராசிரியரே சீனாவுக்குக் காட்டிக்கொடுத்திடறார். ஆகவே அவளைக்கொண்டே போடணும்னு சீனாக்காரன் ஜானி திகுயேனை அனுப்பறான். மற்றகதை நாம சொல்லவேண்டியதில்லை. சூர்யா போதி தர்மனாகி சீனாக்காரனை அழிச்சாத்தானே தமிழ்ப்படம்.

அடுத்து சரித்திரம். காஞ்சிபுரம் ஒரு பௌத்த மையமாக இருந்தது உண்மை. போதிவர்மன் என்பவன் நந்திவர்ம பல்லவனின் மூன்றாவது மகனாக இருந்ததும் உண்மை. பௌத்தர்கள் தொடர்ந்து பயணத்திலேயே இருப்பார்கள். சீனர்கள் இந்தியாவுக்கு வருவதும் இந்தியர்கள் சீனாவுக்குப் போவதும் சர்வசாதாரணமாக அப்போது நடக்கும். பௌத்த தத்துவம் பயில ஒவ்வொரு உயர்கல்வி நிலையமும் ஒவ்வொரு ஊரில் இருக்கும். காஞ்சிபுரத்தில் ஒரு நிலை வரை படித்தால் அடுத்த நிலைக்கு நாளந்தா போக வேண்டியிருக்கும். இது பௌத்த மரபில் இருப்பது. ஆகவே அவர்கள் பயணம் உண்மை அவ்வளவுதான் இந்த மூன்று வரிகளை வைத்துக்கொண்டு பல ரூம்கள் போட்டு பல நாள் யோசித்து இப்படத்தின் கதையை எழுதியிருக்கிறார்கள்.

தமிழன் என்கிற பெருமை-திமிர்தான் படத்தின் அடிப்படை என்று பிரச்சாரம் செய்தார்கள். பல்லவர்கள் தமிழர்களா என்கிற சர்ச்சை ஆய்வாளர்கள் மத்தியில் இன்னும் தீராதது ஒரு புறம் இருக்க, இப்படம் தெலுங்கிலும் வந்துள்ளது. அதில் போதிதர்மன் குண்டூரில் பிறந்து தெலுங்கனின் பெருமை பேச இந்தியில் வந்துள்ள ஏழாம் அறிவு போதிதர்மன் பம்பாய் தாராவியில் பிறந்ததாக மராட்டியப் பெருமை பேசுகிறது. கதை இப்படி போகுது. இதெல்லாம் வியாபார தர்மமய்யா. தமிழும் தமிழ் உணர்வும் ஈழத்துத் தமிழர்களின் கண்ணீரும் ரத்தமும் இப்படத்தில் வியாபாரச்சரக்குகளாக மாற்றப்பட்டுள்ளன. தமிழ்-தமிழன் –தமிழினம் என்று சில வசன பிட்டுகளைப்போட்டால் போதும் தமிழ்ச்சனம் ஏமாந்துவிடும் –காசை அள்ளிக்கொட்டிவிடும் என்பதுதான் இப்படத்தில் முருகதாசின் பார்முலா. அதை எப்படி மன்னிப்பது?வசன எலும்புத்துண்டுகளுக்கு வாலை ஆட்டுபவனா தமிழன்?(இதில் உடம்பு புல்லரித்து இயக்குநர் தங்கர் பச்சான் தமிழா இது உன் படம் என்று ஒரு கடுதாசி எழுத இணையத்தில் அவரைக் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். வாயைக்கொடுத்து வம்பை வாங்கும் தங்கர் மீது நமக்குப் பச்சாதபம்தான் வருகிறது)

போதி தர்மர் சீனாவுக்குப் போகும்போது தன் மருத்துவ அறிவையெல்லாம் ஒரு நூலில் எழுதி பாதுகாக்கச்சொல்லிக் கொடுத்துவிட்டுப் போகிறார். தமிழனின் அறிவுப் பொக்கிஷம் அப்புத்தகம் என்று படம் கூறுகிறது. விவரம் தெரிந்தவர்களிடம் விசாரித்தபோது அதிர்ச்சியாக இருந்தது.

சீனா என்பது நம் அண்டைநாடு. அது கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் நாடு என்பதெல்லாம் கூட இருக்கட்டும். பகைமை மறைந்து இரு நாடுகளுக்கிடையே நட்புறவு மலர்கின்ற ஒரு காலம் இது. இப்போது இப்படி மக்கள் சீனம் பற்றி வெறுப்புடன் ஒரு படம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அமெரிக்காக்காரன்தான் அவனுடைய அரசியல் தேவை காரணமாக கம்யூனிச எதிர்ப்புப் படங்களை எடுப்பான். முருகதாசுக்கு என்ன வந்தது?அமெரிக்க ஃபாக்ஸ் கம்பெனியோடு கூட்டணி வைத்து படம் எடுப்பதாலா?

அதுகூடப் போகட்டும். படம் முழுக்க இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வசனம், மதமாற்றத்துக்கு எதிரான வசனம், நம்முடைய பழைய காலப்பண்பாட்டில் எல்லாமே இருந்தது- நமக்குத்தான் அறிவில்லை -என்கிற வார்த்தைகள் என எல்லாமே இந்துத்வாவாதிகளின் பொதுக்கூட்டம் கேட்ட உணர்வை ஏற்படுத்துகின்றன. கதாநாயகி ஒரு விஞ்ஞானி. ஆனாலும் அவர் கதாநாயகி அல்லவா?ஆகவே ஒரு கால் டவுசரை மாட்டி தண்ணீரில் முக்கி எடுத்து டான்ஸ் ஆட வைத்திருக்கிறார்கள். சைண்டிஸ்ட் யாரும் கோபப்படவில்லை இதுவரை.

இந்தக்காமெடியெல்லாம் தூக்கிச் சாப்பிடும் காமெடி- இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப்பேசும் இப்படத்தைத் தயாரித்தவர் இட ஒதுக்கீட்டுப் போராட்டப்பாரம்பரியம் கொண்ட திராவிட இயக்கத்தலைவர் கருணாநிதி அவர்களின் சொந்தப்பேரன் –துணை முதல்வரின் மகன். (எல்லா அழிவையும் கண்ணால் பார்த்துவிட்டுத்தான் பெரியவர் கடைசிக்காலத்தைக் கழிக்க வேண்டும் என்று குடும்பத்தாரே முடிவு செய்துவிட்டார்கள் போலும். )

ஒரே ஆறுதல்

படத்தில் ஒரே ஆறுதல் இடைவேளை வரைக்கும் கொஞ்ச நேரம் கதாநாயகியை அறிவுள்ள பெண்ணாக கம்பீரத்துடன் காட்டியிருப்பது மட்டும்தான். உன் காதலைத் தூக்கிக் குப்பையிலே போடு. ஆராய்ச்சிதான் முக்கியம் என்று பேசுகிறவளாக காட்டியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் பெண்ணை அறிவும் சொந்த ருசியும் கொண்டவளாகக் காட்டுவது அபூர்வம். சிந்து பைரவி படத்தில் சுகாசினி அப்படி ஒரு ஆளுமையாக வருவார். அதில் சிவக்குமார் பேக்கு மாதிரி தண்ணி அடித்துக்கொண்டு வருவதாக வரும். நீண்ட காலத்துக்குப் பிறகு அதே சுகாசினி குடும்பத்திலிருந்து சுருதிஹாசன் அறிவுள்ள பெண்ணாக மீண்டும் தமிழ் சினிமாவில் வருகிறார். அதே சிவக்குமார் குடும்பத்திலிருந்து சூர்யா காதல் காதல் என்று சொல்லிக்கொண்டு பேக்கு மாதிரி வருகிறார். இதைத்தான் வரலாற்றின் நகைச்சுவை என்பார்களோ?

2. வித்தகன்

கவிதை எழுதிக்கொண்டு கொஞ்சம் சமூக ஞானத்தோடு பேசுகிற ஆளாச்சே என்று நம்பி பார்த்திபன் இயக்கிய வித்தகன் (With the Gun) படத்துக்குப் போய் விட்டோம். பேசும் நேரத்தைவிட இப்படத்தில் வரும் அத்தனை பேரும் துப்பாக்கிகளால் சுட்டுக்கொண்டே இருக்கும் நேரம்தான் அதிகம். ஆங்கிலத்தில் With the Gun என்று சும்மா ஒரு சிலேடைக்காகப் போட்டிருப்பார்கள் என்று தப்பாக நினைத்துவிட்டோம். உண்மையிலே இது துப்பாக்கிப் படம். பொறுப்புள்ள போலீஸ் அதிகாரி தாதாக்களை அழிக்கப்புறப்படும்(கொட்டாவி வருகிறது) கதைதான். வசனம் மட்டும் கொஞ்சம் புதுசாக முயற்சி பண்ணிப்பார்த்திருக்கிறார்கள். அவ்வளவுதான். பார்த்திபனுக்கு வயசாகிவிட்டது.

தயாரிப்பு- செவன் த் சேனல்-மாணிக்கம் நாராயணன்

நடிப்பு – பார்த்திபன், பூர்ணா மற்றும் பலர்

எழுத்து, இயக்கம் – ரா. பார்த்திபன்

இசை – ஜோசுவா ஸ்ரீதர்

3. தம்பி வெட்டோத்தி சுந்தரம்

பார்த்த 3 படங்களில் ஏதோ ஒரு சமூகப்பிரச்னையைச் சொல்ல நினைத்த படம் என்று தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தைக் கூறலாம். ஆனால் அப்படிச் சொல்லி வாயை மூடுமுன் படத்தில் ஆறு கொலை விழுகிறது. இல்லை ஏழு கொலை. இல்லை எட்டு என்று போகிறது படம். கன்னியாகுமரி மாவட்ட-கேரள எல்லையில் நடந்த ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக்கொண்ட கதை என்று கூறப்பட்டது. அதை நம்பித்தான் படம் பார்க்கப்போனோம்.

நல்ல மாணவனாக அதிக மார்க் எடுத்துப் படிப்பை முடிக்கும் கரன் அரசு வேலைக்க்கவும் காவல்துறை வேலைக்காகவும் காத்திருந்து காத்திருந்து லஞ்ச ஆட்சியில் ஏமாற்றத்தையே சந்திக்கிறார். சுற்றிலும் கேரளாவுக்குச் சாராயம் கடத்திப் பிழைப்பவர் மத்தியில் படிச்சவன் அப்படிச் செய்யக்கூடாது என்று உறுதியாக வாழ்கிறார். ஆனால் வாழ்க்கை அப்படியாகப்பட்டவரையே கட்த்தில் மன்னனாக மாற்றுகிறது. ஏற்கனவே பலப்பல படங்களில் பார்த்த கதையாக இருக்கிறது என்று நாம் முகம் சுழித்துவிடக்கூடாது என்பதற்காகப் பல தினுசுகளில் கொடூரமாகக் கொலைகள் செய்து நம் கவனத்தைத் திருப்ப முயற்சிக்கிறார்கள். கடைசியில் கதாநாயகன் செத்தப் பிறகு கவர்மெண்ட் வேலைக்கு ஆர்டர் வருகிறது. கதாநாயகி கதறி அழுக படம் முடிகிறது. எத்தனை கொலைகளடா சாமி.

கரன், அஞ்சலி துவங்கி அத்தனை பேரும் உழைத்து நடித்திருக்கிறார்கள். பருத்தி வீரனுக்குப் பிறகு சரவணனுக்கு நல்ல வாய்ப்பு. அதை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். என்றாலும் அழுகையும் கண்ணீரும் கொலையும் ரத்தமுமாக எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பது. கஞ்சா கருப்பும் கொல்லத்தான் செய்கிறார். மனம் லேசாகிற காட்சிகள் ஒரு அரை மணி நேரத்துக்கு மேல் இல்லை. படிப்பு, வேலை, அரசாங்கம் பற்றிப் பல இடங்களில் அர்த்தமுள்ள விமர்சனப்பூர்வமான வசனங்கள் பாராட்டும்படி வருகின்றன. அதைப் பாராட்டலாம். அவ்வளவுதான் படம்.

இயக்கம்-வடிவுடையான்

தயாரிப்பு-செந்தில்குமார்

இசை-வித்யாசாகர்

Pin It