மலையடிவாரம், காற்று சிலுசிலுவென வீசுகிறது. மாலை வெயில் சுடவில்லை. இரு பக்கமும் கற்றாழை செடிகள் வேலிகளாக, மத்தியில் ஒற்றையடிப்பாதை, மனிதர்கள் நடந்தஅடையாளத்தைக் காட்டிய, புல் பூண்டு தேய்ந்துபோன பாதை, வேலிக்கொடிகள் இருபக்கமும் படர்ந்திருக்க, வெயில் கண்களை கூசாமலிருக்க கையை நெற்றியில் வைத்து சூரியனை கூர்ந்து பார்க்கிறான் முத்து என்கிற ஏழுமுத்து.

அவனது கடிகாரம், சூரிய உதயம், மதியம், அஸ்தமனம், மடித்துக்கட்டிய அழுக்கு வேட்டி, கையில் கம்பு. அவன் கை பிடித்து பிடித்து, வழவழப்பான கம்பு அந்த மாலை வெயிலில் மின்னியது. தலைக்கு வட்டக்கட்டாக கட்டிய சீசன் துண்டு, வெயிலில் கறுத்த மெலிந்த தேகம், கழுத்தெழும்புகள் துருத்தியபடி செம்பட்டை தலை, படிப்பு வராததினால் மாடுமேய்க்க வந்தவன். கையில் மதிய சோறு வைத்திருந்த அலுமினியத் தூக்குச் சட்டி, காலில் டயர் வைத்து தைத்த தோல் செருப்பு. சரக், சரக் என்ற சத்தத்துடன் "ஊய்க், ஹாய், ஹாய், இந்தா தா, த்தா" என்று மாடுகளுக்கு மட்டும் புரியும் பாஷையுடன் மேய்ந்தக் கொண்டிருக்கும் மாடுகளை ஒன்றாக சேர்த்து பத்திக் கொண்டு வீடு திரும்புகிறான். "ம்மா... மேம்மாய்க்....என்று விதவிதமாக கத்தியபடி மாடுகள் முன்செல்ல ஏழுமுத்து கம்புடன் பின்னால் செல்கிறான்.

காலையில் கம்பு, தூக்குச்சட்டியுடன் மாடு மேய்க்க கிளம்புகிறான்.

"எம்மாவ்வோ......... " என்று அம்மாவை கூப்பிடுகிறான்.

"ஏன்டா கனைக்கிற என்னன்னு சொல்லு" அம்மா.

"இன்னைக்கி புதன்கிழமைதானே" ஏழுமுத்து

"ஆமா. அதுக்கென்ன இப்ப" அம்மா.

"என்ன ஒனக்கு மறந்துருச்சா, இன்னக்கி சந்தை உண்டு தெரியும்லா" ஏழுமுத்து.

"மறக்கலடா ஐயா, ஞாயவகமிருக்கு, துட்டு குடுத்துட்டு போ" அம்மா.

"அந்த மாடாக்குழில வைச்சிருக்கேன். எடுத்துக்கோ. நல்ல துண்டங்கருவாடா வாங்கு. அன்னிக்கி மாதிரி எல்லாம் குழம்புல கரைஞ்சிராம நல்லதா வாங்கும்மா" சொல்லிக்கொண்டே அவனது பசு இரண்டையும் அவிழ்த்து கன்னுக்குட்டிகளையும் கையில் பிடித்துக்கொண்டு மேய்க்க கிளம்புகிறான்.

"இந்த பயலுக்கு நாவைக்கிற கருவாட்டு குழம்புன்னா உசுரு. அந்த மவராசனும் இப்பிடிதான் என்னை கருவாட்டுக்கொழம்பு வைக்கச்சொல்லிட்டு, என்ன சோலியா இருந்தாலும், கொழம்பு வச்ச வாசனை எப்பிடிதான் தெரியுமோ, மோப்பம் பிடிச்சுகிட்டே வீட்டை சுத்தி சுத்தி வருவாவோ, ம்ம்...." என்று ஏழுமுத்துவின் அப்பாவை நினைத்தபடி ரூபாயை எடுத்துக்கொண்டு சேலையை இழுத்து பின் கொசுவத்தில் சொருகியபடி சந்தைக்கு கிளம்புறாள்.

மாடுகளை மேய்ச்சல் முடித்து திரும்பும் ஏழுமுத்துக்கு கருவாட்டுக்கொழம்பு நினைப்பாகவே இருந்தது. "ஹாய், ஹாய், ட்ர்ரா, டுர்ரா" இந்நேரம் அம்மா சந்தைக்குப் போயிருக்கும். பனை ஓலை மடித்து கருவாடு வாங்கி அதை வீட்டிற்கு கொண்டுவந்து பிரித்தாலே வாசனை வீடு பூராவும் கும்முன்னு இருக்கும். ஏழு முத்து வீட்டிற்குள் வருகிறான். பசுவையும், கன்றையும் தொழுவத்தில் கட்டிப்போட்டு கம்பை எடுத்து கூரையில் சொருகிவிட்டு, "இந்தாம்மா", என்றபடி கையில் கொண்டு வந்த தூக்குச் சட்டியையும், அகத்திக் கீரைக்கட்டையும் அம்மாவிடம் கொடுக்கிறான்.

தலையில் உள்ள துண்டையும் வேட்டியையும் அவிழ்த்து வெறும் டவுசருடன் தொட்டியிலுள்ள தண்ணீரை குவளையால் மொண்டு வியர்த்திருந்த உடம்பில் ஊற்றுகிறான். சிலுவிலுவென தண்ணீர் குளியலின் இதம் அவனுக்குள் சுகமாயிருந்தது.

அம்மா வீட்டிற்குள் இருந்து ஒரு பானையில் கழனித் தண்ணீரைக் கொண்டுவந்து மாட்டுக்கு ஊற்றுகிறாள். தலையில் தண்ணீரை ஊற்றியபடி "சோறு பொங்கீட்டியாம்மா" என்று கேட்க

"பொங்கியாச்சி, குழம்பும் சோறும் எங்கியாவது ஓடியா போகப்போவுது, குளிச்சிட்டு வாடா, கோட்டிக்காரப் பயலே" அம்மா.

"ஏ முத்து... " வாசலில் தெற்கு வளவு செல்லாயியின் குரல்.

"என்னக்கா" முத்து.

"ஏங் மாடு இன்னும் தொழுவத்துக்கு வரலியேடா"

குளித்து முடித்து அவசரமாக தலையைத் துண்டால் துவட்டியபடி "அக்கா, எல்லா மாட்டையும் கரெட்டா ஓட்டிட்டு வந்துட்டேன்க்கா, ஒம்மாடும் வந்துச்சேக்கா"

"ஊருக்குள் வந்த மாட்டை எந்த காக்கா வந்து தூக்கிட்டு போச்சிது. இங்க பாருல விடியறதுக்குள்ள ஏம்மாடு வந்து சேரல நா மனுசியா இருக்கமாட்டேன் ஆமா" என்று அவிழ்ந்த கொண்டையை சுருட்டி முடிந்தவாறு கிளம்பினாள்.

தலையைத் துவட்டியவன், லுங்கியை எடுத்துக் கட்டினான். "அவ சும்மாவே தாளிக்கிறவ, இப்ப மாடு வேற வரலன்னா திட்டி பொட்டில அள்ளி, சந்தில நின்னு சதுராட்டம் ஆடிருவாளே, சாமீ. ஏய்யா, சொடலை எப்படியாவது மாடு கிடைச்சிறனும்" என்றபடி துண்டை தோளில் போட்டுக்கொண்டு கிளம்புகிறான். வீட்டுக்குள்ளிருந்து கருவாட்டு வாசனை இழுக்கிறது. மாடு காணோம்கிறது, அடிவயிறு கலக்குகிறது, சாப்பிடத் தோன்றவில்லை.

"கருவாட்டுக் குழம்பு சூடா இருக்கு, ஒரு வாய் தின்னுட்டு போயேன். கால்ல சக்கரத்தைக் கெட்டிட்டு எங்கல கௌம்பிட்டே" அம்மா.

"பசிக்கும்மா, ஆனா செல்லாயி அக்காவோட மாடு தொழுவத்துக்கு வந்து சேரலயாம்மா, எனக்கு மனசு இருப்பே கொள்ளலம்மா" வருத்தத்துடன் ஏழுமுத்து.

"அடப்பாவி மவனே. அவமாட்டையா காணும், அவ வாயில நல்ல வார்த்தையே வராதே, நாற பேச்சு, தெருவே நாறுமே. என்ன செய்றது. ஒரு வாய் சோத்தை திங்க வழியில்லபாரு. போய்யா, மாட்டை தேடு, நானும்போய் கீழ்க்காட்டுல போய் பார்க்கிறேன்" என்றபடி, "சீக்கிரம் மாட்டை தேடிட்டா, மவன் கருவாட்டு கொழும்பை எப்பிடியாவது சாப்பிடுவானே. ஆசை ஆசையா கேட்டானே" என்று புலம்பிக்கொண்டே மாட்டைத்தேடி அம்மாவும் புறப்படுகிறாள்.

நேராக ஊர்க்கோயிலுக்கு சென்று பார்க்கிறான். "இந்த மூதி வயிறு ரொம்பிருச்சின்னா எங்கியாவது உக்காந்து அசைபோட ஆரம்பிச்சுருக்கும், " மண்டபத்தில் தேடினான். வயக்காடு, தென்னந்தோப்பு எல்லாப்பக்கமும் தேடிவிட்டு தெருவுக்குள் நுழைகிறான். தெருவில் 3வது வீடு பொதியமன்னார் ஐயா வீடு. ஊரிலேயே பெரிய காரைக்கட்டு வீடு அது. ரைஸ்மில் வைச்சிருக்காரு. வீட்டின் பின்புறமாக கடக்கும்போது "ம்ம்மா...." பசுவின் கத்தல். "இது அந்தமாடுதான்" என்று மனதுக்குள் கூறியபடி கழுத்துவரை இருந்த மண்சுவரை எக்கி எட்டிப்பார்க்கிறான். அங்கு பண்ணையார் வீட்டு மாடுகள் ஒருபுறமும், இவன் தேடிவந்த செல்லாயி அக்காவின் பசுமாடு தனியாக ஒரு தூணிலும் கட்டிவைக்கப்பட்டிருந்தது. அது தலையை சிலுப்பி, சிலுப்பி கட்டியிருந்த கயிற்றை இழுத்தபடி பெரிய கண்களை வளைத்து, எட்டிப்பார்க்கும் இவன் தலையைப் பார்த்து "ம்மா... ம்மா... " என்று கத்தியது. "இங்கே வா இங்கே வா" என்று இவனைப்பார்த்து கூப்பிடுவது போலிருந்தது. அவன் கண்களில் பகீரென்றது. பசுவின் தொடையில் பிரம்படிபட்ட தடங்கள், கோடு கோடுகளாக, "அடப்பாவிகளா, நானே எந்த மாட்டையும் அடிச்சதில்லையே. இந்தா வாயில்லா சீவன போயி இப்பிடி அடிச்சிருக்காகளே, இரும்மா இந்த வந்துட்டேன்" என்றபடி முன்வாசலுக்கு விரைகிறான்.

ஏழுமுத்து முன்வாசலில் நின்று "ஐயா, பண்ணையாரய்யா, என்றபடி துண்டை எடுத்து வாயில் பிடித்தபடி நடையை தாண்டுகிறான். வாசல் திண்ணையில் வெற்றிலையை இடித்தபடி காதில் தொங்கிய பாம்படங்கள் ஆட, பண்ணையாரின் அம்மா கிழவியாக உட்கார்ந்திருக்கிறாள்.

"ஏலே ஏ செத்த பயலே, மொள்ளமா வாடா, கீழே உழுந்து தொலைச்சிராதே என்னலே பதட்டமா இருக்கே. என்ன சேதி, " கிழவி.

"ஆத்தா, எம்மாட்டை புடிச்சி ஆரோ அடிச்சி நம்ம தொழுவுக்குள்ள கட்டிருக்காவோ, பாவம் வாயில்லா சீவனபோயி ரப்பு, ரப்புன்னு தடந்தடமா அடிச்சிருக்காவோ. அதான் ஐயாட்ட என்ன விகரமுன்னு கேட்டுட்டு மாட்ட கூட்டிட்டு போவலாம்னு வந்தேன் ஆத்தா" ஏழுமுத்து.

அதற்குள் உள்ளிருந்து பண்ணையார் வெளியே வருகிறார். வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா, வழுக்கத்தலை, முறுக்கு மீசை, கழுத்தில் புலி பல் செயின், கையில் வாட்சை கட்டியபடி, 'ஏண்டா ஏழு, இப்பதான்வழி தெரிதா. போனவாரம் வேலி போட ஆள் அனுப்பினா பெரிய இவனாட்டம் வரமாட்டேன்னே, "என்றார்.

"ஐயா, நான் அன்னிக்கு பொதிராம் பொத்தைக்கு மாட்டை ஓட்டிட்டு போயிருந்தேன்யா, வர மணியாகும். இங்கனக்குள்ளே புஞ்சை காட்டுக்குள்ளன்னா வந்திருப்பேம்யா, அதான், ஐயா தப்பா நினைச்சுபுட்டீயளா" ஏழுமுத்து.

"இப்ப என்ன சோலியா வந்திருக்கே, " பண்ணையார்

"ஐயா அம்ம தொழுவத்தில நா மேய்க்க அழைச்சிட்டு போனதில ஒரு மாடு கட்டியிருக்குதுங்க" ஏழுமுத்து.

பண்ணையார் இடைமறித்து, "அது ஒம்மாடுதானா, ஏம்ல மாட்டை மேய்ச்சா அதை பத்திரமா கொண்டு போவணும். அந்த கொழுப்பெடுத்த மாடு திண்ணைல வச்சிருந்த அகத்திக்கீரையெல்லாம் தின்னுட்டு அங்கிட்டே சாணிய போட்டுருக்கு, என்ன திமிரு அதுக்கு" என்றார்.

"ஐயா, பச்சையைப் பார்த்ததும் மாடு நாக்கை நீட்டிரச்சி. அதுக்கு போயி ஐயா கோபப்பட்டா எப்படியா, பாவம் வாயில்லா சீவனுங்க. "ஏழுமுத்து.

"வாயில்லா சீவன்னா எங்வூட்டு அகத்திக்கீரையை தின்னுட்டு வூட்டுக்குள்ள சாணி போடுமா? அதான் சாட்டைக் கம்பால நாலு இழுப்பு இழுத்து கட்டிப்போட்டிருக்கேன் சனியன" பண்ணையார்.

"ஐயா, பெரிய வார்த்தையெல்லாஞ் சொல்லாதீய" "ஐயா வூடு இது, மருவாதியா இருக்கணும்னு எனக்கு தெரியும்யா. அது மாட்டுக்கு எப்படியா தெரியும்" ஏழுமுத்து.

"ஏம்லே, நாயே, கீரையை தின்னுட்டு, வூட்டுக்குள்ளே சாணிய போட்ருக்கு, அதுக்கு என்ன, ஏங்கிட்டயே விளக்கம் பேசுதீயா, ராஸூபோல்" என்று கோபமாக கத்தியபடி ஏழு முத்துவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டார்.

அறைந்ததில் ஒரு நொடி ஆடிப்போனான் ஏழுமுத்து. கன்னம் வீங்கி, கண்கள் சிவந்து கண்ணீர் முட்டியபடி ஒருகையால் அடி விழுந்த கன்னத்தை பிடித்தபடி, "ஐயா மன்னிச்சுக்கோங்கய்யா, அது செல்லாயி அக்காவோட மாடுய்யா. அத உட்ருங்கய்யா, வேணா இன்னொரு அடி அடிச்சிருங்கய்யா, அவுக மாட்டை அவுககிட்ட ஒப்படைக்கணும்யா" என்று அழுதபடியே கூறினான்.

"மாட்டை அவுத்துட்டு சீக்கிரமா போடா அங்குட்டு, " என்று கூறிவிட்டு வெளியில் கிளம்பிவிட்டார் பண்ணையார். மாட்டை அவிழ்த்து கயிற்றை பிடித்தபடி வீட்டுக்கு இழுத்து வந்தான். வீட்டின் முன்புறத் திண்ணையில் அம்மாவும், செல்லாயியும் உட்கார்ந்திருந்தனர். எப்படியும் மாட்டை கண்டுபுடிச்சி கூட்டியாந்திருவான்னு சொன்னேனே கேட்டியா, இப்ப மாட்டோட வந்துட்டான்பாரு" அம்மா, செல்லாயியிடம்.

"அக்கா, இந்தாக்கா ஒம் மாடு" ஏழு முத்து.

"நீ பத்திரமாதான் ஓட்டிட்டு வருவே. இருந்தாலும் மாட்டை காணும்னா யாருக்கும் வயித்தெரிச்சலாதான் இருக்கும். அந்த கடுப்புல நாலு வார்த்தை பேசிபுட்டேன். ஏதும் மனசில வைச்சிக்காதே. வரவா முத்து. வரேன் ஆத்தா" செல்லாயி புறப்பட்டாள்.

"சாப்பிடுய்யா" அம்மா.

"வேணாம்மா" முத்து.

"ஏங்ராசா, என்னலே ஐயா, ஒம் மூஞ்சியே சரியில்லயே, என்னய்யா ஆச்சிது" அம்மா.

புள்ளையின் முகவாட்டம் கண்டுபுடிக்காத தாய் யாருண்டு. நடந்ததை ஒன்றுவிடாமல் கூறிமுடித்தான்.

அந்த கிழவியின் கண்ணீர் மூக்கு வழியாக சொட்டடித்தது. தன் ரத்தம் வாங்கிய அடி, அவளுக்கு வலித்தது. வீங்கியிருந்த கன்னத்தைத் தடவினாள். "ஏழை கூலிக்காரங்களா பொறந்து தொலைச்சிட்டோமே. அவன் கை விளங்காம போவ, எஞ்சாமீ ஊய்க்காட்டான் ஐயா, உழைக்கிற சனங்களைக் காப்பாத்து சாமி" என்று சுடலைமாடசாமியை வேண்டி புலம்பினாள். தாய் ஒரு பக்கம், மகன் ஒரு பக்கம், அழுதபடி ஆளுக்கொரு பக்கம் வெறுந்தரையில் முடங்கி படுத்தபடி உறங்கிவிட்டனர். வைத்திருந்த கருவாட்டுக்குழும்பு யாருமே தொடாமல் சட்டியில் அப்படியே ஆறிப்போயிருந்தது.

சில மாதங்கள் கழித்து, ஒரு நாள் மாலை ஏழுமுத்து மேய்ச்சல் முடிந்து வீட்டில் உட்கார்ந்திருக்கிறான். "குபுடுபு" வென பைக் சத்தம். எட்டிப்பார்க்கிறான். இது பண்ணையாரோட மோட்டார் சைக்கிள் சத்தமாச்சே. அந்த சத்தம் இந்த பக்கம் ஏன் கேக்கணும். பண்ணையாரின் வண்டி ஏழுமுத்துவின் வீட்டை நோக்கியே வருகிறது. எட்டிப்பார்த்த ஏழுமுத்துவின் தலை நட்டுக்கொண்டது. மயிர் சிலிர்த்தது. கன்னத்தைத் தடவிப்பார்த்தான். இன்னைக்கு எந்த மாடு சாணி போட்டுச்சோ அவருவூட்டுல. அன்னைக்கு வாங்கின அடியே இன்னும் வலி போகல, மறுபடியும் இங்க வீடு தேடி வந்தா, என்ன விஷயமோ தெரியலயே. பின்னாடி வேற ஆள் உக்காத்தி கூடவச்சி கூட்டிட்டு வாராகளே. எதுக்கோ" என்ற மனதுக்குள் எழுந்த கேள்வி அம்புகள் அவன் உடம்பைத் துளைத்து பயவேர்வைகளாக முத்து முத்தாக வெளியேறி வெளிறிப்போய் நின்றான். பைக்கில் பண்ணையார் ஏழுமுத்துவின் வீட்டு வாசலில் நிறுத்தி ஸ்டாண்டு போடுகிறார். கூடவே அவரின் ஒண்ணுவிட்ட தங்கச்சி மகனும்.

"ஐயா, என்ன அம்ம வீட்டுபக்கம் வந்திருக்கீகளே, என்ன சேதி வாங்கய்யா" என்றபடி சாய்த்து வைத்திருந்த கயிற்றுக் கட்டிலை போடுகிறான்.

அதெல்லாம் இருக்கட்டும்ல, புது வீட்டு வேலை நடக்கிறதுதான் ஒனக்கு தெரியுமே. ஏறக்குறைய எல்லா வேலையும் நடந்துட்டுதான் இருக்கு. வர்ற வெள்ளிக்கிழமை பால்காய்ச்சு வச்சிருக்கேன்.

"ஐயா எந்த வேலைன்னாலும் சொல்லுங்கய்யா, வந்து செய்ஞ்சு குடுக்கேன். இதுக்குபோயி ஐயா அவுக நேரில வரணுமா, சொல்லி அனுப்பினீயன்னா நா வரமாட்டேன்னா" ஏழுமுத்து.

"அது வேலை இன்னும் இருக்கு, ஒன்கிட்ட நாஞ் சொல்ல வந்தது அதில்ல. ஐயர் சாமி ஓமம் வைத்து பூசையை முடிச்சதும். பசுமாடும், கன்னும் புதுவூட்டுக்குள்ள அழைச்சிக்கிட்டு வரனும்னு சம்பிரதாயமாம். நீ ஒம்மாட்டையும், கன்னையும் கூட்டிட்டு வந்திருதே சரியா" பண்ணையார்.

"ஆட்டுங்கய்யா" தலையாட்டுகிறான் ஏழுமுத்து.

அப்புறம் மாடு கன்னு கொஞ்சம் குளிப்பாட்டி, நீயும் குளிச்சி ஒரு நல்ல துவைச்ச துணிய போட்டுகிட்டு விடிய காலை 5 மணிக்குள்ள வந்திரணும். நீ சும்மா ஒண்ணும் வரல, ஒனக்கு 100 ரூபாய் பணம் உண்டு. கையோட வாங்கிக்கலாம்" பண்ணையார்.

"100 ரூபாயா, ஐயா, நீங்க போங்கய்யா, நா வந்திருதேம்யா" என்றபடி சந்தோஷமாக வழியனுப்பி வைக்கிறான்.

ஸ்பீக்கரில் பாட்டு, தோரணம் பந்தல், பால்காய்ச்சு வீட்டு முன் பட்டுப்புடவை பெண்கள் வியர்வை வழிந்தபடி அங்குமிங்கும் ஓட, அந்த தெருவே டியூப் லைட் வெளிச்சத்தில் இரவு முழுவதும் மிதக்க, பண்ணையார் பட்டு ஜிப்பா, வேஷ்டி துண்டு சரசரக்க, "ஏலேய் நல்லா சுத்தமா கூட்டுல, செங்கல்லெல்லாம் எடுத்து நவத்தி வை, ஐயர் சாமி வேற எதுவும் வேணுங்களா" என்று அனைவரையும் விரட்டி வேலை வாங்கிக்கொண்டு ஓமகுண்ட ஏற்பாடுகளுக்கு தேவையானவற்றை கேட்டு செய்து கொண்டிருந்தார்.

"போதும்ஓய், பூஜை சாமான்களைக் கொண்டு வரச்சொல்லும், ஒம்ம சம்சாரத்தை அழைச்சிகிட்டு வந்து இப்படி உக்காருங்கோ" ஐயர்.

பண்ணையாரும், மனைவியும் கழுத்தில் மாலையுடன் உட்கார்ந்திருக்க, வீடே கணபதி ஓம குண்ட புகை மண்டலம். ஒருவர் முகம் ஒருவருக்கு சரியாக தெரியவில்லை. மந்திரம் சொல்வது மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

ஏழுமுத்து வெளுத்த வெள்ளை வேட்டி, கட்டம்போட்ட ஊதா சட்டையுடன் கையில் மாட்டையும், கன்றையும் பிடித்துக்கொண்டு வருகிறான். வீட்டை சென்றடைகிறான்.

"ஏழுமுத்து, பசுமாட்டை அழைச்சிட்டுவா, சீச்கிரம், சீக்கிரம், "கூட்டத்திலிருந்து பண்ணையார், ஐயர் இருவரின் குரல்.

"இந்தா வந்துட்டேன்யா, " முத்து.

மாட்டை இழுத்துக்கொண்டு உள்ளே செல்கிறான். ஓமகுண்டத்தைச் சுற்றி வருகிறது மாடு. ஒவ்வொரு அறைக்கும் அழைத்துச் சென்றுவிட்டு மாடு, கன்று இரண்டையும் நடுவீட்டில் நிற்கவைத்து தட்டில் கற்பூரம் ஏற்றி பசுவிற்கு காட்டி முகத்தில் குங்குமம், சந்தனபொட்டு, கொம்புக்கு நடுவில், சிறு பூத்துண்டு அதன் கொம்பில் சுற்றிவிடப்படுகிறது.

அந்த மாடு கருப்புநிற பெரிய கண்களை உருட்டி உருட்டி பார்த்தது. தலையைத் தூக்கி கண்களை கீழே பார்த்தது. புள்ளை முழிக்கிற முழி பெத்தவளுக்கு மட்டும்தான் தெரியும். அது போலவே அந்த மாடு ஒருவாறு வாலை உயர்த்தி பின் இறக்கி மறுபடியும் தூக்கியது. ஆசனவாய் சுருங்கி விரிவதை கவனித்த ஏழுமுத்துவிற்கு அடிவயிற்றைக் கலக்கியது. "அட சனியம்புடிச்ச மாடே இங்க ஏதாச்சும் பண்ணித்தொலைச்சிராதே" பதறுகிறான்.

"கொஞ்சநேரம் பொறுத்துக்கோ, " மனசுக்குள் பேசிக்கொண்டே கண்களில் பயம் "ய்யய்யோ சீக்கிரம் பூஜையை முடிங்கய்யா, " மனதுக்குள்.

"ஐயா ஆச்சதாங்களாயா" ஏழுமுத்து.

"ஏம்லே பறக்கே. ரொம்ப அவசரவேலையா ஐயாவுக்கு. எந்த ஜில்லாவுக்கு போகப்போறலே. செத்த நேரம் பொறுக்கமாட்டியோ" பண்ணையார்.

"எனக்கு அவசரமில்லையா, ஆனா மாட்டுக்கு அவசரம், எப்பிடி இதை ஒங்கிட்ட சொல்றது" என மனதுக்குள் கேட்டுக்கொண்டு

"அதிலிங்கய்யா, புகையை காட்டினதுல மிரளுது, அதான்" என்றான் ஏழுமுத்து.

மாட்டைப் பார்த்து, அதன் கயிற்றைப் பிடித்தபடியே, "போட்டுராதே, போட்டுராதே" என்று கூறியபடியே நிற்கிறான்.

"ஏலே முத்து, மாட்டைக் கொண்டுபோய் வெளிய கட்டிப்புட்டு வாடா" பண்ணையார்.

"அப்பாடா" நிம்மதி பெருமூச்சு விட்டபடி மாட்டையும், கன்னுக்குட்டியையும் இழுத்துச்செல்கிறான். வாசலை நெருங்கிய நேரத்தில் கன்னுக்குட்டி அங்குமிங்கும் குதித்துக்கொண்டு வந்தது. வீட்டினுள்ளே மாங்கொழைகளை பார்த்து கயிற்றை உருவிக்கொண்டு உள்ளே ஓமகுண்டத்தின் அருகில் பயன்படுத்தியது போக மீதி கிடந்த இலைகளை தின்ன பாய்ந்தது. அதுவரை அமைதியாக இருந்த தாய்பசு, குட்டி ஓடியதும் பின்னாலேயே அதுவும் கயிற்றை பிடித்த ஏழுமுத்துவையும் இழுத்தபடியே உள்ளே செல்ல, "நில்லு, நில்லு" எங்க போறே" என்றபடி கயிற்றை பிடித்து இவன் இழுத்தபடியே மாட்டின் பலத்துடன் தோற்றுபோக உள்ளே சென்று குட்டியின் அருகில்போய் நின்று நாவால் நக்கியது குட்டியை. யாருமே எதிர்பாராத அந்த நேரத்தில் "சத்தென" வட்டமாக சாணி உருண்டைகள் நடுவீட்டில் விழுந்தன. "அட மூதேவி" அன்னைக்கு திண்ணைல சாணி போட்டதுக்கே, அந்த குதி குதிச்சானே, அடிச்ச அடி கன்னம் பணியாரமாயிட்டதும், வலியும் இன்னும் சூடும் குறையாம இருக்கே. இப்ப நடுவீட்டுலேயே போட்டுட்டியே, இன்னைக்கும் ரெண்டு பேரும் சாணிதான்போ" என்று மனசுக்குள் புலம்பிக்கொண்டே பயந்துபோய் கன்னத்தை கையால் பிடித்தபடி "ஐயா, என்னை மன்னிச்சிருங்கய்யா" என்று சொல்ல வாய் திறக்கவும்.

"ஏ பொதியமன்னாரு, நீ ராசிக்காரன்டா, பசுமாடு பால்காய்ச்சின புது வீட்டுக்குள்ள வந்து ஓமகுண்டத்தை சுத்தி வர்றதே பெரிய குடுப்பினை வேணும், அதுலயும், அது நடுவீட்டுல சாணி போடும்னா நீ குடுத்து வச்சவண்டா, இனி லட்சுமி ஒன் வீட்டுல தாண்டவமாடப் போறாடா" என்று பல்போன கிழட்டு லகடு பண்ணையாரின் பெரியப்பா கம்பு ஊனியபடி நடுக்கத்துடன் சத்தமாக.

பண்ணையாருக்கு பெருமை தாங்கல. "ஏழுமுத்து இரு போயிராதே. நீயும் ராசிக்காரன், ஒம்மாடும் ராசிக்கார மாடுடா. இந்தா முல்லையம்மா, " என்று மனைவியை அழைக்க அவர் ஒரு தாம்பாளத்தில் ஒரு சீப்பு வாழைப்பழம், ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை என்று பழக்கூடையாக்கியதை நீட்ட பண்ணையார் தன் ஜிப்பாவின் பைக்குள் கையைவிட்டு முழு 500 ரூபாய் நோட்டு ஒன்றை வைத்து "இந்தாப்பா இதை கைல வாங்கிக்கோ, ஒரு கையால் கன்னத்தை பிடித்தபடி, மறுகையால் தாம்பாளத்தை பிடித்தான்.

"அன்று போட்ட சாணிக்கு மாட்டுக்கும் அடி, எனக்கும் அடி, இன்று போட்ட சாணிக்கு மரியாதை. என்ன மனுசங்க. இவங்கல்லாம் கோமாதா புதுவீட்டில் நுழைஞ்சா குலம் வளரும். அது இதுன்னு ஏதோ நம்பவச்சிருக்காங்க. ஆனா அது நடுவீட்டில சாணி போட்டா ராசின்னு எவம்ல சொன்னது. சரீயீ யாரு சொன்னா என்ன, நமக்கு அடி இல்ல, காசு வேற கை நிறைய, விடு மாடு எதை போட்டா என்ன", என்று யாரிடமோ கேள்வி கேட்டுக்கொண்டு பழங்களை கவரில் வாங்கி கையில் ஆட்டியபடி 500 ரூபாயை வேட்டியில் மடித்து வைத்துக்கொண்டு மாட்டையும், கன்னுக்குட்டியையும் ஓட்டிச் செல்கிறான் ஏழுமுத்து.

Pin It