ஆளாளுக்கு சொல்றதைக் கேட்டு அய்யாவுக்கு அய்யாவுமேலேயே கோபமும் எரிச்சலாவும் வந்தது. யார்கிட்டெயும் எந்த வரவு செலவும் கொடுக்கல் வாங்கலும் கைமாத்தோ கால்மாத்தோ கொடுக்காமல் இதுநாள் வரைக்கும் கோளாறாத்தான் இருந்தான் அய்யாவு. இந்த மதக்கன் பயல் வந்து நைஸா பேச்சுக்கொடுத்து சுளூவா ஏமாத்திப்புட்டானே.

இந்தா கொடுத்தீர்றேன்னு கைமாத்தா வாங்கிட்டுப் போனவன்தான். இதுநாள் வரைக்கும் என்ன எவடம்ன்னு பதில் கிடையாது. இந்தாங்க வட்டியா வச்சுக்கோங்கன்னு ஒரு முக்காத்துட்டு தந்திருப்பானா? அட இந்த திசைக்கே ஆளை காண்கலை. மொதுலுக்கே மோசமா யிருக்குங்கிறேன் இதிலே வட்டியுங்குட்டியும்.

யார்கிட்டெ கேட்டாலும் அவனப்பத்தி ஒரு நல்ல சேதி சொல்லலியே. அவசரமோ அவசரம்ன்னு கால்ல வெந்நிய ஊத்திக்கிட்டு நின்னான். ‘சொன்னா சொன்ன மட்டுல ஒத்த வரியில கொண்டு வந்து திருப்பி தந்திருவேன் அதென்ன சோறு திங்கிற வாயா இல்லே வேறென்னத்தையும் திங்கிறதா?’ - இது மட்டுமா சொன்னான் இன்னும் என்னென்ன வெல்லாமோ சொன்னான்யா அன்னைக்கி துட்டெ வாங்க அவன் குழைஞ்ச குழைவைப் பார்க்கணும். அடேயப்பா வயித்துலயிருக்கிற பிள்ளை நழுவி விழுந்துரும் அப்படி இழைச்சானய்யா!

கையில வாங்குனவன்தான் , போனவன் போனான்டீன்னு நாள்க்கணக்கு வாரக்கணக்காச்சு வாரக்கணக்கு மாத்தக் கணக்காச்சு. மாத்த தவணை போகுற போக்கைப் பாத்து வருசங்கள்லாம் பிடுங்கி ஓடுதாம் காதவழி.

அவன் சொந்த மச்சான். கூடப்பிறந்த அக்கா புருசன்கிட்டெப் போயி நம்ம சேதிய சொன்னா அவன் சொல்றான் ஒரு கதைய ‘யாரு மதக்கன் பயலுக்கா கடங்கொடுத்தீக. சரித்தான். வேறே ஆளே கிடைக்கலையாக்கும். கொட வாங்கல் பண்றதுக்கு அவ்வளதான். அந்தத் துட்டு சுடுகாட்டுக்கு போன பொணம் மாதிரிதான் இனி என்னத்த திரும்பும். என்னய அக்கா புருசன்னு கூட பாக்காம எனக்கு வச்சானய்யா ஆப்பு நடுக்காட்டுல வச்சி.

எல்லா விபரமும் தெரிஞ்சிருந்தும் அவன் கொட வாங்கல் லட்சணம் எப்படியிருக்கும்ன்னு அறிஞ்சிருந்தும் எம்புத்தியை பறிகொடுத்துட்டேன் மந்தைவழியே போற ஆசாரி மறக்காம வந்து எனக்கு ரெண்டு ஆப்பு வச்சுட்டுப் போங்கிற கதையில அவன் கேட்டான்னு பொசுக்குன்னு தூக்கி கொடுத்துட்டேன். அதிலிருந்து நானும் கேட்டு கேட்டு கேட்டுப்பாத்து நாலுசோடி செருப்புத் தேஞ்சதுதான் மிச்சம்.

ஒரு நா நாங்க ரெண்டு பேரும் பக்கத்து ஊர்ல ஒரு துஷ்டிக்குப் போனோம்.பாதை வழி நடந்து போகும் போது அவனை நாற வசவு வைதுகிட்டெ வந்தேன். நடுக்காட்டுல வச்சி இன்னமட்டுன்னு இல்லே கொடமானம் கொடுத்துட்டு வந்தேன். அவன் கழுத செனாரிக்காம வர்றான். பையில அணா பைசா கிடையாது. புண்ணியத்துக்கு அஞ்சும் பத்துமா கொடுத்தாவது கழிடாண்ணேன். எங்கிட்டெ முக்காத்துட்டு கிடையாதுன்னுட்டான்.

திடீர்ன்னு பின்னாடியிருந்து “நில்லுங்கடா வக்காள வாத்தாளிகா ஒரு அடி எடுத்து வச்சு நகண்டா ரெண்டு பேரையும் துண்டா வெட்டிப் போடுவேன் படவா மருவாதியா இருக்கிறதை எடுங்கடான்னு” சத்தங்கேட்டது.

ஆகா உருளிப்பய. வாரண்டு தப்பி, போலீ சுக்கு டிமிக்கி கொடுத்து இந்தப்பக்கத்து காடுகள்ல ஒளிஞ்சிருந்து வழிப்பறி பண்ணிக்கிட்டுத் திரியுற வன். சத்தங்கேட்டதும் எங்க ரெண்டு பேருக்கும் அவன்தான்னு யூகமாயிருச்சி. திடீர்ன்னு மதக்கன் பய “எங்கிட்டெ ஒண்ணுமில்லே சாமி. எங்கிட்டெ ஒண்ணுமில்லேசாமி” ன்னு வேட்டியை உதறுனவன் எம்பக்கத்துல வந்து மடியிலிருந்த ரூபாயை எடுத்து இந்தாரும் மச்சான் பிடியும் பிடியும் உமக்குத் தர வேண்டிய ருபாய வரவு வையும்ன்னு எம்மடியில அவசரமாப் போட்டுத் திணிக்கிறான்.

இந்த ருபாயக்கேட்டு வருசக்கணக்குல தன்னால நான் நடையா நடந்து மல்லாடுனது என்ன! இப்பொ வாங்குன ரூபாய வரவு வக்கிற நேரம் பாத்திகளா? பின்னாடி வர்றவனோ கட்டி யிருக்கிற கோவணம் மொதக்கொண்டு உருவிக் கிட்டு விடுறபயல். போனவாரந்தான் ஒருத்தன் கிட்டெ விரல்ல போட்டிருக்கிற மோதிரம் டைட்டாயிருக்குன்னு விரலோடு நறுக்கிட்டுப் போனவன். ஒண்ணாம் நம்பர் போக்கிரி . அந்த இடத்துல கடனை அடைக்கான்.

பிறகு கதை என்னாகும்ன்னு உங்களுக்குத் தெரியாதா? உருளிப்பயல் வந்து ரூபாய படக்குன்னு பிடுங்குனவன் “ஏண்டா அவன்தான் அப்புராணி துட்டுயில்லேன்னு வேட்டியை உதறி காட்டீட்டான். நீ ருபாய வச்சிக்கிட்டு பெரிய்ய வெண்ணெ மாதிரி சென்டிப்புக் கொடுத்து நிக்கிறே. “போடா திரும்பிப் பாக்கமன்னு” அருவாப் பெடாங்குனால எனக்கு ரெண்டு அடியும் வாங்கிக் கிட்டு சூசுவான்னு வீடு வந்து சேர்ந்தேன். இதுக்கு மேல அவனப்பத்தி என்ன சொல்ல.

அய்யாவுக்கு பெரிய்ய மலைப்பாப் போச்சி. இனி எந்த வகையிலெ போயி வசூல் பண்றதுன்னு திகைப்பா இருந்தது. கடனை கேட்டு வாசப்படியில போயி நின்னா வசவு இன்ன மட்டும்ன்னு இல்லே. என்னமோ நாம அவன்கிட்டெ கடன் வாங்குன மாதிரி வையுறான்.

வந்துர்றாங்க, லொங்காம எப்படா விடியும்ன்னு கடங்காரப் பயலுக. இப்படிப்பயக மூஞ்சியிலதான் கருக்கல்ல முழிக்கணும் செத்த பயலுக. என்ன வையி எருமை கணக்கா விசாரணை யில்லாம நிப்பாம். துப்புரவா உதுத்துட்டான். இனிம்மே என்ன செய்யணும்ன்னா இந்தப்பக்கம் வருவியா வருவியான்னு ஓடவிட்டு குதிங்கால் லயே வெட்டணும். ஒரு நல்ல சோலிக்கு கிளம்பும் போது லொடுக்குன்னு வந்து தரித்திரம் பிடிச்ச மாதிரி வந்து எதுக்கெ நிக்கிறான். விளங்குமா போற யாவாரம்?

“அடியே சிங்கம்மா... ஏய் அந்தக் கவைக் கம்பை எடுத்து இப்படி முன்னடியிலெ போட்டு வையி முதுகில அப்புற அப்புல அடி ஒண்ணுக்கு தடிப்பு ரெண்டு விழுகணும். அப்பொதான் சரிக்கு வருவான் இந்தப்பக்கம் தல காட்ட மாட்டான்... வா வா ஒரு நாள் ஒரு பொழுதாவது அந்த சொட்டையை இறக்கலையாக்கும்...”

அய்யாவுக்கு தன்னால வேர்த்துக் கொட்டு னது. யாரும் பாத்தா என்ன நெனப்பாங்க. . என்னம்மோ இவன்தான் அவன் கிட்டெ கடன் வாங்குன மாதிரி... என்ன ம...த.க்..கா. .. வாய் குளறுனது.

“ஹே! வாண்ணே வா.. வா. உன்னக் கவனிக்கல. பிறகென்னண்ணே வயித்தெரிச்ச! இத்தனைக்கும் சொல்லித்தான் கொடுத்தேன் அடேய் கைமாத்து வாங்கிட்டு போறது சரி.. நான் ஏற்கனவே வாங்குன இடத்துல எம் பேரு கெட்டுப் போயிறக் கூடாது. வாங்குனா சொன்ன சொன்ன மட்டுல கொண்டு வந்து தந்துரணுமப்பான்னு படிச்சி படிச்சி சொன்னேன். ரெண்டு நாளைக்குள்ள கொண்டு வந்து படியேறி கொடுத்துட்டுத்தான் மறுவேலைன்னு போனவன் ஆளக் காணோம். இப்பொ பாரு நீ வெட்டியா கிடந்து அலஞ்சி .. நீ என்னப்பத்தி என்ன நெனப்பே... ஆனா ஒந்துட் டெப்பத்தி கவலைப்படாதேண்ணே. கொஞ்சம் முன்னப்பின்னே ஆனாலும் மொத்தம்மா செட்டில் பண்றதுக்கு ஆதாரங்கூட வச்சிருக்கேண்ணே.”

இப்படி வரும் போதெல்லாம் ஒரு மூச்சு வைது முடிச்ச பிறகு எதாச்சும் ஆதாரம் இருக்கு அது இருக்கு இது இருக்குன்னு சொல்லி அனுப்பிரு வான்.

வில்லாதி வில்லன்களே அவங்கிட்டெ கொடுத்திட்டு வாங்க முடியாதே. அய்யாவு எம்மாத்திரம்? அம்மாபட்டி ரெட்டியாரம்மா எப்பேர்பட்ட கொடவாங்கல் புள்ளி அந்தம்மா பத்து ருபா கடன் கொடுத்தா மாதவட்டி ஒரு ருபாயை கையில வாங்கிக்கிட்டுத்தான் பத்து ருபாயக் கையில கொடுக்கும் மாதம் மாதாம் ஒத்த ருபா வட்டிய சரியா கொண்டு வந்து அடைக்கிற ஆளாப்பாத்துதான் கடன் கொடுக்கும் . மதக்கனும் போயி கடன் வாங்குனான்.

வாங்கிட்டு வரும் போது பெரிய ரெட்டியார் வெளியே நின்னுக்கிட்டிருந்தார். அவர் கிட்டெப் போய் தெலுங்கில “நஃகு ஒகட்டி நட்டி அம்ம வாரிகி தொம்மிதி நட்டி” (எனக்கு ஒரு ருபா நட்டம் அம்மாவுகளுக்கு ஒன்பது ருபா நட்டம்) அந்த அம்மா அவங்கிட்டெயிருந்து மொதுல வாங்க பொறந்தாம் பொறப்புல அந்த அலைச்சல் அலையல. கையில வாங்குனதும் கிளி போகுதுன்னு போனவன்தான் ஒரே வார்த்தையில சொல்லிப் போட்டான். “இந்தா பாருங்க தாயி வைதா வட்டி போச்சி அடிச்சா அசல் போச்சி.”

மதக்கனப்பத்தி ஆளாளுக்கு ஒரு கதையச் சொல்ல அய்யாவுக்கு கர்ப்பங்கலங்குனது. வீடு தேடிப் போயும் கேட்க முடியல. நாற வசவு வையுறான். அக்கம்பக்கம் தன்னை கேலியாப் பாக்காக. தலையில முக்காடு போட்டுத்தான் திரும்ப வேண்டியிருக்கு.

இப்பொவெல்லாம் மதக்கன் எதிருல வந்தா அய்யாவு தன்னால பதர்றான். அவனோ என்ன பண்ணிடுவானாம்ங்கிற மாதிரி அவம்பாட்டுல வர்றான். கிட்ட நெருங்க நெருங்க அய்யாவு பக்க வாட்டுல திரும்பி புருவமட்டத்துல கையவச்சி யாரையோ தேடுற சாடையில கடந்துருவான்.

பாத்து என்ன செய்ய? கேட்டோம்ன்னு வச்சுக்கோ உடனே வசவுல பிடிச்சிருவான். “பிஞ்ச செருப்புக் கொண்டே அடிக்கணும்டா.. மான ஈனங் கெட்ட மடப் பயலே ஒரு தடவை பட்டா போதாது. சோறு தானே திங்கெ இல்லே சோத்தைவிட்டு..”

என்னப்பா மதக்கா இப்பொ யாரை வையுறேன்னு கேட்டா.. அவந்தாம்ண்ணே கைமாத்துண்ணு வாங்கிட்டு போன பயலைத் தாங்.. நானில்ல ஒங்கிட்டெ பொல்லாதவன் ஆக வேண்டியிருக்கு. இன்னிம்மே எதுக்கெ தட்டுப் பட்டியோ... படவா... பழையபடி ஆரம்பிச் சிருவான். நாம் நகரைலைன்னா அவனால எவ்வளவு முடியுமோ அவ்வளவு வையுவான் எதுக்கு வம்பு?

வெயிலு வெள்ளை வெயில் அடிச்சு பூமி அனல் பறந்து போய்க் கிடந்தது. எங்கேயும் வேலை வெட்டியில்லை. அய்யாவு குடும்பத்துல செலவுக் கில்லாம வீடே அலமந்து போய்க் கிடந்தது. மதக்கன் எப்பவும்போல ரொம்ப கித்தாய்ப் பாத்தான் இருந்தான். தேறா தேறத்துக்கு சாப்புட வாயில வெத்தல செல்லம் ஒதுக்க அவனுக்கு எப்படிக் கூடியும் பொழுது ஓடி அடைஞ்சிரும். நாட்டுல இளிச்ச வாயனுக்கா பஞ்சம்?

அவன் கெம்பிரியத்தைப் பாக்க பாக்க அய்யா வுக்கு அனல் மூச்சுக் கிளம்புனது. ஒரு கட்டத்துல ஆத்திரந்தாளாமா வேட்டியை வரிஞ்சு கட்டுன மட்டுல மதக்கன் வீட்டுக்கு விறுவிறுன்னு போனான். இன்னக்கி ரெண்டுல ஒண்ணுதான்.

“வாண்ணே... வா. வா”

“அந்த மயிரெல்லாம் இருக்கட்டும் வாங்கு னதுட்டே கொடுடா வெறுவாக்கட்ட பயலே!”

“அண்ணே... இப்படி திடீர்ன்னு வந்து மலடியை பிள்ளைப் பெறுங்கிற மாதிரி நின்னா தம்பி எங்கேண்ணே போவேன்?”

“அப்பொ ஆதாரம் எதாவது தர்ரேன்னியே அதாவது கொடுரா!”

“ இவ்வளதானே வாங்கிட்டுப் போ”

அய்யாவு கையைப் பிடிச்சு தரதரன்னு வீட்டுக் குள்ளே கூடி கொல்லைப்புரத்துக்கு கூட்டி வந்தான். ஒரு குச்சியை எடுத்து சின்னக்குழி ஒண்ணு பறிச்சான்.

 “இந்தா பாருப்பா இப்பவாச்சும் நம்பு ஒங் கண்ணுக்கு முன்னாலதான் போடுதேன்”

ஒரு புளிய முத்தையெடுத்து அந்த குழியில போட்டு மண்ணை மூடூனான். பக்கத்திலிருந்த பானையில ஒரு செம்பு தண்ணி மோந்து அதுல ஊத்துனான்.

“பாத்துக்கிட்டயாப்பா. இன்னும் நிம்மதியா போ... இதுல மொதப்பறி உனக்குத்தான்”

அய்யாவு அதிந்து போயி நின்னான்.

“ எப்படி எப்படி இந்த புளிய முத்து முளைச்சி அது மரமாகி அதுல காய்க்கிற புளியம்பழத்தைக் கொண்டு அப்பொ என் கடனை அடைக்கவா”

“ ஆமண்ணே சொன்னா சொன்னபடி இருப்பேம். இதென்ன சோறு திங்கிற. வாயா இல்லே சோத்தை விட்டு வேறென்னத்தையும் திங்கிறதா. இதுல தலப்பறி உலுப்பி உன் கடனை அடைக்காம வேறு செலவு பண்ணுனனாக்கும் என்னை தெருவுல விட்டு செருப்பால அடி”

அய்யாவு அவனை மேலுங்கீழும் பாத்தான். இவன் நம்மள கிறுக்குப் பயன்னு நெனச்சுக் கிட்டிருக்கானா... இல்லே நாமதான் ஒரு கிறுக்குப் பயலுக்கு கடனைக் கொடுத்திட்டமான்னு அவனப் பாத்து தலையை ஆட்டி கோபமா ஒரு சிரிப்புச் சிரிச்சான்.

மதக்கனும் தலையை ஆட்டுன மட்டுல “சிரிப்பப்பா சிரிப்பெ ஏஞ்சிரிக்க மாட்டெ துட்டு கை சேர்ந்திருச்சின்னு சிரிக்கே...”

Pin It