தில்சன் கொலை

ராணுவக் குடியிருப்பில் வாதாங்கொட்டை எடுக்கப்போன தில்சன் என்ற 13 வயதுச் சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான். சென்னை தீவுத் திடலின் எதிரே உள்ள பிரதான சாலையை ஒட்டி அமைந்துள்ளது ராணுவக் குடியிருப்பு. அதன் உள்ளே நுழைந்து கீழே கிடந்த வாதாங் காய்களை எடுத்து, வெளியே நின்ற சிறுவர்களிடம் கொடுத்திருக்கிறான் தில்சன். திடீரென அவன் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு வீழ்ந்தான். இந்த அக்கிரமத்தை எதிர்த்து மக்கள் திரண்டனர்.

துப்பாக்கியால் சுட்டவனை ராணுவம் காட்டிக் கொடுக்க மறுத்தது. ஆனால் மாநில போலீஸ் புலன் விசாரணை செய்து திறமையாக உண்மைக் குற்றவாளியைக் கைது செய்து சிறையிலடைத்து விட்டது. இது பாராட்டத்தக்க செயலாகும். ஓய்வு பெற்ற ராணுவ லெப்டினன்ட் கர்னல் ராமராஜ் என்பவர்தான் அந்தக் கொலைக் குற்றவாளி. தில்சன் குடும்பத் திற்கு ரூ.5 லட்சம் வழங்கி தமிழக அரசு உதவியுள்ளது. மனித உயிரின் மதிப்பு, அதன் முக்கியத்துவம் எதுவுமே அந்த லெப்டினன்ட் கர்னலுக்குத் தெரியாது போலும். ஏதோ எதிரி நாட்டு ராணுவத்தைத் தாக்குவது போல குடிசைப் பகுதியில் வாழும் ஒரு ஏழைச் சிறுவனை மமதையோடு சுட்டுக் கொன்ற அந்த ராணுவ அதிகாரி சட்டப்பூர்வமாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

பெரும் புதையல்

உலகின் மாபெரும் புதையல் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இருந்து உச்சநீதிமன்ற உத்தரவால் வெளிப்பட்டுள்ளது. கோவில் நிலவறைப் பொக்கிசங்கள் திறக்கப்பட்டதும் உள்ளே இருக்கும் புதையல் உலகையே வாயைப்பிளக்க வைத்திருக்கிறது. குடங்குடமாய் தங்க நாணயங்கள், வைர, வைடூரியம் பதித்த கிரீடங்கள் என்று வகை வகையாய் நகைகள் கொட்டிக் கிடக்கின்றன.

இவற்றை ஆரம்ப மதிப்பீடு செய்தவர்கள் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்கள் பெறும் என்று கூறியுள்ளனர். வெளி மார்க்கெட்டில் இவற்றின் மதிப்பு பத்து மடங்கு அதிகம் கிடைக்கும் என்றும், பழம் பொருள் தேடும் வெளிநாட்டுச் சந்தைகளில் ஏலம் விட்டால் 60, 70 லட்சம் கோடிகள் கிடைக்கும் என்றும் செய்திகள் வந்துள்ளன. இது அரச குடும்பத்தின் சொத்தா, கோவில் சொத்தா, மக்களின் சொத்தா என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.

மன்னர்கள் மக்களிடமிருந்து வசூலித்தவையும், நன்கொடையாக வந்தவையும்தான் இந்த சொத்துக்கள். மன்னர்கள் வானத்திலிருந்து எதையும் கொண்டு வந்ததில்லை. எனவே இந்தப் பணம் முழுவதும் கேரளத்தின் ஏழை-எளிய மக்களின் வறுமையைப் போக்கி வாழ்வளிக்கவும், மக்க ளுக்கு வசதிகள் கிடைக்கவும் பயன்படுத்தப் பட வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. இப் போதைக்கு இந்தச் சொத்துக்களை கோவில் சொத்தாக அரசே நிர்வகிக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

இப்பெரும் புதையலைப் படமாக்கி மக்களுக்கு ஊடகங்கள் மூலம் காட்ட வேண்டும். ரகசியமாய் மூடி வைத்துக் கொள்ளை போய்விடக்கூடாது என்றும் கருத்து நிலவுகிறது. பதுக்கி வைக்கப் பட்டவையே புதையலாய் வெளிப்படுகிறது. அதுவும்கூட பொதுநல வழக்கு ஒன்றின் அடிப் படையில் உச்சநீதிமன்றம் தலையிட்டதால் வெளி வந்துள்ளது. பத்மநாபசாமி கோவில் நிலவறை களைத் தோண்டி எடுத்த மாதிரி, நம்நாட்டின் பெரிய ஆசாமிகளின் நிலவறைகளை மத்திய அரசு தோண்டி எடுக்க வேண்டும். அம்பானிகள், டாட்டா, பிர்லாக்கள், ரெட்டி சகோதரர்கள், வேதாந்தாக்கள், ஜிண்டால்களின் பதுக்கலை அரசு நினைத்தால் கொண்டு வர முடியும். ஆனால் சோனியா தலைமையில் இயங்கும் அரசு செய்யாது.

பத்மநாபசாமி கோவில் நல்ல வேளையாகத் தமிழ்நாட்டில் இல்லை. அதனால் தப்பியது. இங்கிருந்தால் நிலவறைகள் எப்போதோ சூறையாடப்பட்டிருக்கும் என்பதையும் இங்கு சொல்லி யாக வேண்டும்.

மீண்டும் குண்டுவெடிப்புகள்

மும்பையில் மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்து 25 அப்பாவிப் பொது மக்கள் மரண மடைந்துள்ளனர். 140 பேர் படுகாயமடைந்துள்ள னர். இப்படி ஒரு துயரச் சம்பவம் நிகழப் போவதாக முன்கூட்டியே தெரிந்திருந்தும் மத்திய, மாநில அரசுகளும் உளவுத் துறையும் அக்கறை யின்றி இருந்துள்ளனர்.

1993ம் ஆண்டு முதல் மும்பை நகரத்தில் வெடி குண்டுகள் வெடித்து நூற்றுக்கணக்கான பொது மக்கள் மடிந்துள்ளனர். மும்பையிலுள்ள நிழலுலக தாதாக்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கைக் கூலி களாக உலா வருகின்றனர். அவர்களுக்குத் தேவை யான பணமும், ஆயுதங்களும் வழங்கப்படுவதால் உற்சாகத்தோடு களமிறங்குகிறார்கள். மும்பை தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றுள்ள காசப்பின் பிறந்த நாள் பரிசாக இந்தக் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக பி.பி.சி. செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவின் அதிமுக்கியப் பொருளாதார நகரமான மும்பைக்கு பாகிஸ்தானிலிருந்து படகு வழியாக பயங்கரவாதிகள் மிகச் சாதாரணமாக வந்து செல்கின்றனர். இதனால் எளிதில் அவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட முடிகிறது. காங்கிரசாட்சி அங்கு இதை வேடிக்கை பார்க் கிறது. நிழல் உலக தாதாக்களுக்கு ஆட்சியாளர் களும் காவல் துறையும் அஞ்சுகின்றனர். சிதம்பரம் நிர்வகிக்கும் உள்துறையும் வசனம் பேசிக் கொண் டிருக்கிறது. நேரில் வந்திருந்த சோனியாவும், மன் மோகன் சிங்கும் இனிமேல் இது போல நடக்கவிட மாட்டோம் என்று கொக்கரித்துள்ளனர். இது எட்டாவது முறையாகப் பேசப்படும் வீரவசனம் தான்.

பொது மக்களின் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாத அரசுகள் இருந்தென்ன, வீழ்ந் தென்ன! 

விலைஉயர்வு அபாயம்

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைத் தொடர்ந்து புதிய அபாய அறிவிப்புகள் வரத் துவங்கிவிட்டன. கேஸ் சிலிண்டரின் விலையை ரூ.710 முதல் 850 ஆக உயர்த்தப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பெரு நஷ்டம் என்று அரசும், எண்ணெய் நிறுவனங்களும் பிரச்சாரம் செய்து கொண்டே நாட்டு மக்களைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறார்கள். காரணம் இப்பொருட்களின் விற்பனை 60 சதவீதம் அம்பானிகள் கையில் இருப்பதுதான் . அவர்கள் கையில் மத்திய அரசும் இருக்கிறது.

மத்திய திட்டக்குழுவின் துணைத் தலைவரான மான்டெக்சிங் அலுவாலியா விலை உயர்த்த வேண்டியது நியாயம் என்கிறார். பணவீக்கத்தைப் பணவீக்கம் மூலமே கட்டுப்படுத்த முடியும் என்றும், எல்லாப் பொருட்களின் விலையும் உயர்ந்தால் பணப்புழக்கம் குறையும், பணவீக்கம் மட்டுப்படும் என்றும் அலுவாலியா கூறியுள்ளார். இத்தகைய நாசகாலர்களின் ஆட்சி உள்ளவரை நாட்டில் விலை குறையாது. ஏழைகள் வாழ முடியாது.

காலச்சுவடின் கண்ணியமற்ற எழுத்து

அமரர் தோழர் சுந்தர ராமசாமி அவர்களுக்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் மிகுந்த மதிப்பையும் மரியாதையையும் அளித்து வருகிறது. ஆனால், அவரது வாரிசு ஏனோ தெரியவில்லை, தொடர்ந்து எரிச்சலைக் கொட்டி வருகிறார். இடதுசாரி எதிர்ப்பையும், தமுஎகச எதிர்ப்பையும் அவ்வப்போது காலச்சுவடு இதழில் எதிர் கொள்கிறோம்.

அண்மையில் வெளிவந்த காலச்சுவடு இதழ்களில் தமுஎகசவின் முன்னணி எழுத்தாளரான மேலாண்மை பொன்னுச்சாமி மீது அவதூறுகளை அள்ளிவீசி, தோழர் செந்தில்நாதன் மீது விமர்சனம் செய்யப்பட்டதாகவும் சொல்லி இத்துடன் விவாதத்தை முடித்திருப்பதாக அறிவித்திருக்கிறார் காலச்சுவடு கண்ணன். இதிலெல்லாம் அவருக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கிறது என்று நமக்குப் புரியவில்லை.

ஆதித்தனார் பரிசு பெறுவதற்கு முன்பாகவே எழுத்தாளர்கள் சு.சமுத்திரம், மேலாண்மை ஆகிய இருவரையும் நாடார் அமைப்புகள் பாராட்டு விழாக்களுக்கு அழைத்தும் இவர்கள் செல்ல மறுத்துள்ளனர். இது தமுஎகச தோழர்கள் அனைவரும் அறிந்த ஒரு விசயம். அதேபோல் ஆதித்தனார் பரிசு நாடார் எழுத்தாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுவது அல்ல. நாடார் அல்லாத எழுத்தாளர்கள் யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலை மேலாண்மை கூறி விளக்கமளித்தும் மீண்டும் மீண்டும் கண்ணன் விஷம் கக்கினால் அது எதில் சேர்த்தி? மேலும், ஆதித்தனார் பரிசை இப்படிக் கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தலாமா?

ஆதித்தனார் விருது ஒன்றும் சுயசாதி விருது அல்ல. அதை வாங்கினால் அது சுய சாதி மேடையுமல்ல. மேலும், மேலாண்மை தலைவரானது பற்றியும், விடுவிக்கப்பட்டது பற்றியும் கண்ணன் ஏன் வயிற்றிலடித்துக் கொள்கிறார் என்பது புரியவில்லை. விருதுபெற்ற பிறசாதியினர் பட்டியலைத் தந்தபின்பும் முழுப்பட்டியல் கேட்பது எதற்காக? குதர்க்கமான சர்ச்சையை எழுப்பவா?

மேலாண்மை பற்றி தமுஎகச தோழர்கள் சொன்னதாகக் கூறுவதும், செந்தில்நாதன் பற்றி மேலாண்மை கூறியதாய்க் கூறுவதும் வெறும் சிண்டுமுடிகிற வேலைதானே தவிர, சரியல்ல. தமுஎகச என்பது ஒரு ஜனநாயக அமைப்பு. அது முழுமையான ஜனநாயக முறைப்படியே நடக்கிறது. இதில் வம்புக்காக மூக்கை நீட்டலும், முகர்ந்து பார்த்தலும் தேவையற்றதாகும்.

‘காலச்சுவடு’ நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு விளம்பரம் தருவோரின் சாதி விபரங்களைத் தருவாரா கண்ணன்? 

பிரதமரும் கருப்புப் பணமும்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மன்மோகன் ஒரு முக்கிய வாக்குறுதியளித்தார். காங்கிரஸ் வெற்றி பெற்று தனது ஆட்சி வந்ததும் “வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் முழுமையும் இந்தியாவிற்குத் திரும்பக் கொண்டு வரப்படும். அயல் நாட்டு வங்கி களில் உள்ள கணக்குகள் பற்றிய விபரங்கள் பெறப்பட்டு உட னடியாக கருப்புப் பணம் முழுவதும் கைப்பற்றப்படும்” என்பதுதான் அவரது வாக்குறுதி.

அவர் மீண்டும் பிரதமராகி இப்போது மூன்றாம் ஆண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. ஊழலை யும் கருப்புப் பணத் தையும் ஒழிக்க லோக்பால் சட்டம் கொண்டு வரவேண்டுமென்று இடதுசாரிக் கட்சிகள் நீண்ட காலமாய் போராடி வருகின்றன. இப் போது அன்னா ஹசாரே போன்றவர்களும் குரல் கொடுக்கிறார்கள். அன்னா ஹசாரேக்கு கடந்த காலத்தில் மத்திய அரசு பத்ம ஸ்ரீ, பத்மபூஷண் போன்ற பட்டங்களை வழங்கியுள்ளது. போதாக் குறைக்கு கடந்த 2008ம் ஆண்டு உலக வங்கி “சிறந்த சமூக சேவகர்” என்ற விருதினை வழங்கி அன்னா ஹசாரேயை கௌரவித்துள்ளது.

அரபு நாடுகளில் மல்லிகைப் புரட்சி பரவியதை யடுத்து இந்தியாவில் மாபெரும் ஊழல்களால் இங்கும் மக்கள் பொங்கி எழுந்து விடக்கூடாது என்பதற்காகவே அன்னா ஹசாரேயை உள்நாட்டு, பன்னாட்டு முதலாளித்துவ சக்திகள் உசுப்பி விட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. மத்திய அரசு லோக்பால் மசோதாவைக் கொண்டு வரப் போவதாய் அறிவித்துள்ளது. இடதுசாரிக் கட்சி களும் இந்தியா முழுவதும் ஒரு வாரகாலம் ஊழல் களுக்கும், கருப்புப் பணத்திற்கும் எதிராகப் பிரச் சாரம் செய்துள்ளன.

இந்தப் பின்னணியில் பிரதமர் மீண்டும் அயல்நாடுகளில் பதுக்கப்பட்டுள்ள விபரங்கள் சேகரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசியுள்ளார். இது கருப்புப் பணப் பேர்வழிகளை உஷார்படுத்துவதற்கே பயன்படும். அவர்கள் தங்களுடைய பதுக்கல் பணத்தை அயல்நாட்டு வங்கிகளிலிருந்து எடுத்து வெளிநாடுகளிலேயே வீடுகள், ஹோட்டல்கள், பங்குகள், எஸ்டேட்டுகள் என்று முதலீடு செய்துவிடும் வாய்ப்பு உள்ளது. அதற்கான அவகாசத்தை மத்திய அரசு தருகிறது. அவர்கள் எல்லாவற்றையும் முடித்த பின்பு பிரதமர் நடவடிக்கையைத் தொடங்குவார். கருப்புப் பணம் எதுவும் கிடைக்காது. நேர்மையான பிரதமரல்லவா-அதனால் தான்.

Pin It