வேலையின்மை தீவிரவாதத்தை, சாதி, மத, இன உணர்வின் பெயரிலான வன்முறையை, அதிகரிக்க உதவுகிறது என்பதை, ஏற்கனவே விவாதித்திருக்கிறோம். சமீபத்தில் மும்பையில் கூட நவ நிர்மான் சேனா என்ற பெயரில், மராத்தி அல்லாதோரை எதிர்க்கும் போராட்டம் நடைபெற்றது. ஆள்வோர் இப் பிரச்சனையில், தீவிர முயற்சியெடுத்து தடுக்கும் நடவடிக்கைக்குப் பதிலாக, மிக மென்மையான அணுகுமுறையை கையாண்டனர். டாக்ஸி ஓட்டுனர்களும் மராத்தி தெரிந்திருக்காவிட்டால், மும்பையில் டாக்ஸி ஓட்டும் தொழிலில் ஈடுபடலாகாது என எதிர்ப்புத் தெரிவித்தனர். இவை அனைத்தும் மொழி மீதான தீராக்காதல் காரணமாக முன்னெழவில்லை. மாறாக வேலையின்மையின் தாக்கம் இளைஞர்களிடம் அதிகரிக்கிற போது, அடையாளங்களின் பெயரிலான திரட்டுதல்களும் தீவிரம் பெறுகிறது. குறுகிய அரசியல் சிந்தனை கொண்டோருக்கு, வேலையின்மையும், அடையாளங் களும் தீனியாகிறது.

இந்த அடையாளத்திற்குள் பெரும் முதலாளிகளும், அன்றாடம் உழைத்து பிழைக்கும் ஏழைகளும் உள்ளடங்குவர். எழுத்தாளர் தமிழ் செல்வன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் அனுபவத்தை குறிப்பிடுகிற போது, தபால் அலுவலகத்தில் வைக்கப் பட்டிருந்த, இந்தி எழுத்துக்களை அழிக்கும் எண்ணத்தில், இந்தி எதிர்ப்பு போராட்டக்காரர்கள், வந்ததாகவும், அவர்கள் சுவர்மேல் ஏறிய பின் , தலைவரே, இதில் எது இந்தி எழுத்து என கேட்டதாகவும் குறிப்பிட்டார். அப்படியானால் எது இந்தி எழுத்து என தெரியாத ஏழை உழைப்பாளியும், எல்லாம் தெரிந்த பெரும் பணக்காரரும் சேர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதை அறிய முடிகிறது. அடையாளம் இதற்கு துணைசெய்கிறது.

மொழிப்பற்று அவசியம், ஒரு மொழி ஒடுக்குமுறைக்கு ஆளாகிற போது, அந்த மொழியின் உரிமைக்காக போராட வேண்டிய தேவை தவிர்க்க முடியாது. ஆனால் ஏழை பணக்காரன் வித்தியாசத்தை முற்றாக மறந்து, வர்க்க உணர்வை முழுதாக மறந்து, மொழி உள்ளிட்ட அடையாளங்களின் அடைப்படையில் போராடினால், லாபமீட்டும் அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?. வர்க்க உணர்வு மறைந்த அடையாளங்கள் உருவானால், அது மற்றொருவரை அடக்க முயற்சிக்காத வரை அங்கீகரிக்கலாம். ஆனால் அடையாளங்களை மையப் படுத்தி நடைபெறும் அரசியல், சுரண்டப்படும் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் உணர்வை மழுங்கடிப்பதற்காகவும், சுரண்டுதலை நியாயப் படுத்தவும், என்றால் எப்படி ஏற்பது?.      

தற்போது தமிழ் நாட்டில் மாநில அரசு தமிழில் படிப்பவருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. மேற்படிப் பின்னனியில் இருந்தே இந்த அறிவிப்பையும் பார்க்க வேண்டியுள்ளது. உண்மையில் தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா? என வினவினால் இல்லை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். இன்னும் கூடுதலாக தமிழ்மொழி வளர்ச்சி பெற வாய்ப்பு இருக்கிறது என்கிற ஆதங்கம் தனியானது. இப்போது இத்தகைய விவாதத்திற்கான காரணம், மாநில அரசு செம்மொழி மாநாட்டினை தாரள செலவினங்களுடன் நடத்தியதால் ஏற்பட்ட விமர்சனங்கள் ஆகும். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்த பின்னர், மாநில அரசு, சுமார் 4 ஆண்டு காலம் சிறு துரும்பையும் அசைக்காது இருந்துவிட்டு, தேர்தல் அரசியல் காரணமாக செம்மொழிக்கு மாநாடு, என ஆலோசிக்கப் பட்டதாக விமர்சிக்கப் படுகிறது. செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்ட ஒருவர், முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை குறித்த ஆய்வு அரங்கத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை விடவும், மு.க. கனிமொழி எழுதிய கவிதைகள் குறித்த ஆய்வரங்கத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டது என்றார். அரசு கொண்டிருக்கும் மொழிப்பற்றைப் புரிந்து கொள்ள, இத்தகைய தகவல்கள் போதுமானது. பேராசிரியர் பிரபாத் பட்நாயக் தன்னுடைய கட்டுரையில், நவீன காலனியாதிக்கமானது ஒரு நாட்டில் இனக்குழு மேன்மை வாதம், பிராந்திய மேன்மைவாதம், சமய மேன்மைவாதம், ஆகியவை தலைத்தோங்குவதற்கான சூழலை உருவாக்குகிறது. இப்படிப்பட்ட சூழலினால் உருவான பிரிவினைவாத சக்திகளை மோசமானவை என வருணித்துக் கொண்டே, அவைகளைத் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளப் பயன் படுத்துகின்றனர் என்று குறிப்பிடுகின்றார். தமிழக அரசு, தற்போது பின்பற்றுகிற பொருளாதாரக் கொள்கை காரணமாக அமலாக்க இயலாது என்பதை தெரிந்திருந்தும், தமிழில் படித்தால் வேலை என முழக்கமிடுகிறது. இதன் மூலம் மாநில அரசு, மொழிக்கும், வேலையற்ற இளைஞர்களுக்கும் துரோகம் செய்கிறது.

உலகமயமாக்கல், புதிய தாராளமயமாக்கல் கொள்கைகள் குறித்து, விமர்சிக்கும் யாவரும், அதன் அனைத்து அம்சங்களையும் இணைத்தே விமர்சிக்கின்றனர். பொதுத் துறைகளை தனியாருக்குத் தாரைவார்த்தல், பொதுத் துறை நிறுவனங்களில், அரசுத் துறைகளில் ஆட்குறைப்பு செய்தல், சில்லரை வர்த்தகத்திற்குள் பெரும் பணக்காரர்களை அனுமதித்தல், இறக்கு மதியை அதிகரித்து, ஏற்றுமதியைக் குறைத்தல், கல்வி, சுகாதாரத்திற்கான நிதியாதாரத்தை வெட்டிச் சுருக்குதல் போன்றவை முதல் கட்ட சீர்திருத்தம் என்ற பெயரில் அமலானது. கல்வி தனியாரிடம் விடப்பட்டது இந்தியாவைப் பொருத்த அளவில், 80களிலேயே தீவிரமாகி விட்டது. தமிழகம் அதில் முன்னோடி என்றால் மிகை அல்ல.

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், மாநில கல்வி வாரியம், மெட்ரிகுலேசன் கல்வி வாரியம், ஆங்கிலோ இந்தியன் கல்வி வாரியம், ஓரியண்டல் கல்வி வாரியம் என 4 வாரியங்களுடன், ஆங்கில மோகத்தினை ஊட்டி வளர்க்கும் ஏற்பாட்டிற்கு விதையிட்டு, உரம் போட்டு வளர்த்ததும் தமிழகம் தான். இதில் திமுக கட்சிக்கும் பிரதான பங்கு உண்டு என்பதை அக் கட்சியினரே மறுக்க முடியாது. இன்றைக்கும் சமச்சீர் கல்வி அமலாகும் என அறிவித்தாலும், 4 வாரியங்களை ஒரு வாரியம் என அறிவிக்கும் தைரியம் கொண்டதாக மாநில அரசு இல்லை. மாநிலத்தில் உள்ள இத்தகைய கல்வி முதலாளிகளையே, எதிர் கொள்ள தயங்கும் மாநில அரசு, அந்நிய பல்கலைக் கழகங்களை ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்த மாநில ஆளும் கட்சியான திமுக எந்த வகையில், தமிழில் படிக்கும் வசதியை உறுதி செய்யும்? என்று ஒரு போதும் கேள்வி எழுப்பிப் பார்த்ததில்லை. மற்றவர்களையும் கேள்வி எழுப்ப அனுமதித்த தில்லை.

இந்த நிலையில் நவீன தாராளமயமாக்கல் கொள்கையின் இரண்டாம் கட்டம் அமலாகிறது என ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதை மிக நாகரீக வார்த்தைகளில் இரண்டாம் கட்ட சீர்திருத்தம் எனச் சொல்கிறார்களோ, என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழ் நாட்டில் அரசாணை எண் 170ஐ பிரகடணம் செய்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் காத்திருக்கும் இளைஞர்களின் கனவுகளை சிதைக்கத் துணிந்தது. டி.ஒய்.எஃப்.ஐ. நடத்திய நெடிய போராட்டம் காரணமாகவே, மேற்படி ஆணை விலக்கிக் கொள்ளப் பட்டது. தமிழ் நாட்டில் சுமார் 68 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இவர்களில் 90 சதமானோர் தமிழில் படித்தவர்கள், என்பதை ஆட்சியாளர்கள் மறுக்க முடியாது. அத்தகைய சூழலில் மாநில அரசு மிகத் துணிச்சலுடன் ஓய்வு பெற்றவருக்கு வேலை அறிவிப்பை வெளியிட்டு, அதன் தொடச்சியாக தமிழில் படித்தால் வேலை, என அவசரச் சட்டம் வெளியிடுவதை எப்படி நம்புவது என்பதை, முதல்வர் தான் விளக்க வேண்டும்.மாநில அரசின் தமிழ்ப் பற்று தற்போது அம்பலப்பட்டு நிற்பதை பொது மக்கள் பார்க்கத்தான் செய்கிறார்கள். உதாரணம் பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டத்தில் சம்பள உயர்வை, தொழிலாளர் உரிமையை மறுத்த அந்நியரைப் பாதுகாக்கும் வேலையையும், தமிழ் பேசுகிற, படித்த தொழிலாளிகளை கைது செய்து சிறையில் அடைப்பதும் நடைபெறுகிறது . ஆளும் வர்க்கத்தின் இந்த குணம் எந்த மொழி பேசினாலும் முதலாளிகளைப் பாதுகாப்பது என்பதே ஆகும். எந்த மொழியில் படித்தாலும் உரிமைகளுடன் கூடிய வேலை தான் மனித உரிமையையும் பாதுகாக்கும். மாறாக மொழி உணர்வை மட்டும் துண்டுவது பிற்போக்கு அரசியல் தவிர வேறில்லை.

இன்றைய மத்திய மாநில அரசுகளின் கொள்கைகள், இருக்கிற பணியிடங்களைக் குறைத்து, ஏற்கனவே நடைபெற்ற வேலைகளை விடவும் கூடுதலாக நடத்திட முயற்சிக்கிறது. இது தனியார் முதலாளிகளின் லாபமீட்டும் கணக்கை போன்று இருப்பதை உணர முடியும். அரசு என்பது வரவு செலவு கணக்கு பார்க்கும், தனி நபர் சார்ந்ததல்ல. அதன் ஆட்சியில், வேலையின்மை விகிதாச்சாரம் குறைவதும், ஏழை, பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் போவதும் உருவாக வேண்டும். அரசின் இந்த அணுகுமுறை காரணமாகவே, தமிழ் நாட்டில் 1980களில் இருந்த மக்கள் தொகை நிலைக்கு ஏற்ற அரசு அலுவலர்கள் உள்ளனர். 1985களில், 12 லட்சம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் இருந்தனர். இன்று 10 லட்சத்திற்குள் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

1985ல் தமிழ்நாட்டு மக்கள் தொகை எண்ணிக்கை, நாலரைக் கோடி, இன்று ஆறரைக்கோடி, ஊழியர் எண்ணிக்கை உயராமல், இருந்ததில் 25 சதமானம் அழிக்கப் பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழில் படித்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற அறிவிப்பு, சர்க்கரை என நழுதி நக்கிப் பார்க்கச் சொன்ன கதைதான். எனவே தான் டிஒய்.எஃப்.ஐ அரசு தனது வேலை வழங்கும் கடமையை திறம்படச் செய்யும் போதே, தனியாரைக் கட்டுப்படுத்த முடியும், என வலியுறுத்துகிறது. இக்கேள்விகளை எதிர் கொள்ளும் நேர்மை இல்லாத காரணத்தாலேயே, அரசுகள், வேலை இருக்கிறது ஆனால் வேலைக்கான திறன் கொண்டோர் இல்லை என, நமது திறமை மீது குறை சொல்லத் துவங்கியுள்ளனர் அரசும், தனியாரும்.

Pin It