1930 ஆம் ஆண்டில் துவங்கி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பைக் கால்பந்தாட்டப் போட்டிகளின் 19வது பதிப்பு,  தங்கச் சுரங்கங்களின் நாடான தென்னாப் பிரிக்காவில் ஜூன் மாதம் 11 ஆம் தேதி துவங்கி ஜூலை மாதம் 11 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் உலகின் பல்வேறு கண்டங்களிலிருந்து 32 நாடுகள் அணி வகுக்கின்றன. முதல் கோப்பையை வென்ற உருகுவே முதல் கடந்த முறை ஜெர்மனியில் நடைபெற்ற போட்டியில் உலகச் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி உள்பட இதுவரை நடந்துள்ள 18 உலகக் கோப்பைப் போட்டிகளில் 7 நாடுகள் மட்டுமே கோப்பையை வென்றுள்ளன. இதில் அதிகபட்சமாக பிரேசில் 5 முறை கோப்பையை முத்தமிட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இத்தாலி 4 முறை கோப்பையை உயர்த்திப் பிடித்துள்ளது.

கால்பந்தாட்ட உலகக் கோப்பை போட்டிகள் என்பது ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக புகழ் பெற்றதாகும். நம்மைப் பொறுத்தவரையில் நமது நாடு உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடி யுள்ளது என்பது படித்தறிந்தது மட்டுமே. உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகளில் இந்தியா விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியனின் நெடிய கனவாகும். கனவு பலிக்கும் தூரம் கண்ணுக்கு எட்டியவரையில் தென்படவில்லை என்பதுதான் சோகம். இந்தக் கனவு, தேசத்தையும், மக்களையும் உண்மையிலே நேசிப்பவர்கள் கையில் அதிகாரம் வரும்போது ஒருவேளை நிறைவேறலாம். இம்முறை களத்தில் உள்ள நாடுகளில் தென்னாப்பிரிக்கா போட்டிகளை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் போட்டிகளுக்கு நேரடியாகத் தகுதி பெற்றது. மற்ற 31 நாடுகளும் பல்வேறு தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வென்று, இறுதிச் சுற்றுக்கான களத்தில் கச்சை கட்டுகின்றன.

4 அணிகள் வீதம் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள அணிகளில் பிரேசில், போர்ச்சுக்கல், ஐவரி கோஸ்ட், வடகொரியா ஆகிய நாடுகள் அடங்கிய ‘ஜி’ பிரிவு போட்டிகள் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. முதல் கோப்பையை முத்தமிட்ட உருகுவே, போட்டிகளை நடத்தும் தென்னாப்பிரிக்கா, பிரான்சு, மெக்சிகோ ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவிலும்,  இரண்டு முறை கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டினா, தென்கொரியா, நைஜீரியா, முன்னாள் ஐரோப்பிய சாம்பியன் கிரீஸ் ஆகிய நாடுகள் ‘பி’ பிரிவிலும்,  ஒரு முறை பட்டம் வென்றுள்ள இங்கிலாந்து, அமெரிக்கா, ஸ்லோவேனியா, அல்ஜீரியா ஆகிய நாடுகள் ‘சி’ பிரிவிலும், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஹானா, செர்பியா ஆகிய நாடுகள் ‘டி’ பிரிவிலும்,  ஹாலந்து, டென்மார்க், காமரூன், ஜப்பான் ஆகிய நாடுகள் ‘இ’ பிரிவிலும், நடப்புச் சாம்பியன் இத்தாலி, பராகுவே, ஸ்லோவாகியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் ‘எப்’ பிரிவிலும், தற்போதைய ஐரோப்பியச் சாம்பியன் ஸ்பெயின், சிலி, சுவிட்சர்லாந்து, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகள் ‘ஹெச்’ பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.

அர்ஜென்டினா தகுதிச் சுற்றுப் போட்டிகளில் தடுமாறி ஒரு கட்டத்தில் போட்டியை விட்டு வெளியேறிவிடும் என்ற நிலையிலிருந்து மீண்டு இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது என்ற போதிலும் இரண்டு முறை கோப்பையை வென்ற அந்த அணி இம்முறையும் கோப்பையை வெல்லும் அணிகளின் பட்டியலில் உள்ளது. அனைத்து உலகக் கோப்பை போட்டிகளிலும் கலந்து கொண்ட ஒரே அணி என்ற பெருமையைப் பெற்ற பிரேசில் இந்த முறை முழு எதிர்பார்ப்புடன் வலம் வருகிறது. ஆனால் அதிக எதிர்பார்ப்புகளுடன் வந்தபோதெல்லாம் அந்த அணி கண்ணீர் வடித்துள்ளதே வரலாறு.

கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப் படும் அணிகளில் ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய அணிகள் முக்கிய இடத்தில் உள்ளன. இந்த இரு அணிகளுமே அனைத்துத் துறைகளிலும் முழு பலத்துடன் களமிறங்குவது சிறப்பம்சமாகும். கோப்பையைத் தக்க வைத்துக் கொள்ள இத்தாலியும், கடந்த முறை சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல முடியாமல் போனதன் வேதனையைத் தீர்ப்பதற்கு ஜெர்மனியும் மற்ற அணிகளுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. கலந்து கொள்ளும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் மனதைக் கவரும் ஹாலந்து, போர்ச்சுக்கல் போன்ற அணிகள் போட்டியின் போக்கை மாற்றும் திறன் கொண்டவைகளாகும்.

உருகுவே பழைய உருகுவே அல்ல என்பது ரசிகர்கள் அறிந்த விசயம். இருந்தாலும் குறைத்து மதிப்பிடத் தேவையில்லை. மெக்சிகோ, பராகுவே, ஐவரி கோஸ்ட் ஆகிய அணிகள் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தினால் போட்டியின் திசை மாறிச் செல்லும். 2002ல் சொந்த நாட்டில் நடைபெற்ற போட்டியில் அரையிறுதி வரை முன்னேறிய தென் கொரியா, போட்டிகளை இணைந்து நடத்திய ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளும் எதிராளிகளுக்குச் சவாலாக விளங்கக் கூடியவைகளே.

1966ல் நடைபெற்ற போட்டியில் இத்தாலியைத் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறிய வடகொரியா, இந்த முறை கடினமான பிரிவில் இடம் பிடித்துள்ளது. அந்த அணியைப் பொறுத்தவரையில் பிரேசில், போர்ச்சுக்கல் போன்ற அணிகளுடன் விளையாடுவதே சாதனையாக அமையும். இதில் ஏதாவது ஒரு அணியை வீழ்த்தினாலே அல்லது சமநிலையில் முடிந்தாலோ அது வடகொரியாவின் பெரிய வெற்றியாக அமையும்.

கால்பந்தாட்டத்தில் கணிப்புகளுக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் ஒவ்வொரு போட்டியின் போதும் விளையாட்டுத் துறை வல்லுனர்கள் அணிகளின் திறமைகளை மதிப்பீடு செய்து போட்டிகளின் போக்கை மதிப்பீடு செய்ய மறப்பதில்லை. எது எவ்வாறாக இருந்தாலும் 32 நாடுகளில் எதாவது ஒரு நாட்டின் கனவு நனவாவதற்கான பயணம் ஜூன் மாதம் 11ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் பந்து உருளும் நிமிடத்தில் துவங்கிவிடும். ஒரு மாத கால கால்பந்தாட்டப் போட்டிகளைக் கண்டு களிக்க தூக்கத்தை தியாகம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

Pin It