யானைகள் மனிதர்களை ஒத்த வாழ்க்கையைக் கொண்டவை. மனிதன் கருவறைக்குள் 10 மாதம் இருக்கிறான், யானை 20 மாதம் இருக்கிறது. மனித ஆயுள், யானை ஆயுள் கிட்டத்தட்ட ஒன்றுதான். மேலும் யானைகள் தாய் வழி சமூகத்தை பின்பற்றக் கூடியவை. மூத்த பெண் யானைதான் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும். ஆண் யானைகள் தனியாகவே இருக்கும். தாய் யானை குட்டியை வளர்க்கும் நேரத்தில் அத்தை யானை என்ற மற்றொரு பெண் யானை கூடவே உதவும். இந்த இயல்பான சூழ்நிலை மாறி, ஒரு யானைக் குட்டி தனித்துவிடப்பட்டால் என்ன நடக்கும் என்பது வித்தியாசமான ஒரு அனுபவம். அதை நேரில் பார்த்த அனுபவத்தைப் பதிவு செய்துள்ளார்.

சிறிவில்லிப்புத்தூர் வன உயிரின காப்பகத்தின் அடிவாரப் பகுதியில் உள்ளது செண்பகத் தோப்பு என்ற மாந்தோப்பு. ஆண்டு முழுவதும் இப்பகுதிக்கு யானைக்கூட்டம் வந்து செல்லும். இப்பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு யானைக் கூட்டமும் இருக்கிறது. இப்பகுதிக்கு கூட்டத்திலிருந்து விலகிய பெண் யானையும் அதன் குட்டிகள் இரண்டும் மே மாதம் ஒதுங்கின. ஒரு பெரிய ஆண் குட்டி, இரண்டாவது பாலினம் தெரியாத 5 மாதக் குட்டி. காட்டில் ஏற்பட்ட தண்ணீர், உணவுப் பற்றாக்குறை காரணமாக தோப்பில் உள்ள மாம்பழங்களையும் அருகில் உள்ள வயல்களின் வாய்க்கால் தண்ணீரையும் அருந்தி இவை உயிர் வாழ்ந்தன. இவை மூன்றும் இந்தப் பகுதியைவிட்டு 5 மாதங்களுக்கு செல்லவில்லை. பகல் நேரத்தில் அப்பகுதியில் உள்ள கோவிலைச் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்கும்.

இதைத் தெரிந்து கொண்டு சுற்றுலா பயணிகள், உள்ளூர் கேபிள் டி.விக்காரர்கள், பத்திரிகையாளர்கள் அடிக்கர இப்பகுதிக்கு வரத் தொடங்கினர். இதனால் மக்கள் தொந்தரவு அதிகரித்து வந்தது. சிலர் யானையை நெருங்கிச் சென்று படமெடுக்க முயற்சித்தனர். யானை வெருண்டு விரட்ட ஆரம்பித்தது. அந்தநேரத்தில் கண் சரியாகத் தெரியாத, காது கேட்காத மலைவாழ் முதியவர் ஒருவரை தும்பிக்கையால் தூக்கி வீசியது. அதில் அவர் மரணமடைந்தார். இது மிகவும் பரபரப்பு செய்தியானது. அதற்குப் பிறகு யானை அருகில் மக்கள் செல்வதற்கு வனத்துறை தடை விதித்தது. அதற்கு சில நாட்களுக்குப் பின், ஆகஸ்ட் 2ந் தேதிக்குப் பிறகு தாய் யானையைக் காணவில்லை. அப்பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் அதைத் தேடியபோது, அருகிலுள்ள காட்டில் யானை இறந்து கிடப்பதை ஆகஸ்ட் 4ந் தேதி பார்த்தனர். அருகில் இரண்டு குட்டிகளும் நின்று கொண்டிருந்தன. வனத்துறை கால்நடை மருத்துவரை அழைத்து வந்து வனத்துறை பிரேதப் பரிசோதனை நடத்தியது.

யானையின் முன்கால் சுற்றளவு 114 செ.மீ., உயரம் சுமார் 7.6 அடி என்று கணிக்கப்பட்டது. அதிலிருந்து யானையின் வயது 20 ஆக இருக்கலாம் என்று தெரிந்தது. 12 வயதில் பருவமடைந்து ஈன்ற முதல் குட்டி 5 வயதுடைய ஆண், அதன் பிறகு ஈன்ற 5 மாதக் குட்டியின் பாலினம் தெரியவில்லை என்று தீர்மானிக்கப்பட்டது. அதே இடத்தில் அந்த யானை புதைக்கப்பட்டது.

அதன் பிறகுதான் மிகப் பெரிய கேள்வி எழுந்தது. தாய் இறந்துவிட்ட பிறகு குட்டிகள் எப்படி தனியாக உயிர் வாழும்? அதிலும் அந்த 5 மாதக் குட்டியின் நிலை என்னவாகும்? அதன்பிறகு வனத்துறை உயர் அதிகாரிகள் நேரடியாக காட்டுக்கு வந்து செயல்படத் தொடங்கினர். விருதுநகர் மண்டல வனப் பாதுகாவலர், மாவட்ட வன அலுவலர், வனச் சரக அலுவலரும் ஆலோசித்தனர். கோவையில் உள்ள டாக்டர் என்.எஸ். மனோகரன் என்ற கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டார். தாயில்லாமல் குட்டி உயிர் வாழ முடியுமா? அல்லது அந்தக் குட்டியைப் பிடித்து விலங்கு காட்சியகம், வனச் சரணாலயம், யானை காப்பகத்துக்கு அனுப்பலாமா என்ற கேள்வி எழுந்தது. "அவை இயல்பாகவே காட்டுப் பக்கம் நகர்ந்துவிட வாய்ப்புண்டு. தொடர்ந்து கண்காணித்த பின் முடிவு செய்து கொள்ளலாம். வேறு நடவடிக்கை எடுத்தால் அந்தக் குட்டியை இழக்க வேண்டி வரலாம்" என்று வனத்துறையிடம் காட்டுயிர் ஆர்வலர்கள் தெரிவித்தோம். யானை குட்டிகளைக் கண்காணிக்க மலை வாழ் மக்கள் கொண்ட ஒரு கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டது. அவர்கள் கண்காணிக்க ஆரம்பித்த போது, குட்டி யானைகள் தாய் யானை இறந்த இடத்தை சுற்றி வந்து கொண்டிருந்தன. அந்த நேரம் அருகில் உள்ள பகுதிக்கு தந்தமில்லா மக்னா யானை ஒன்று சென்றது. இதைப் பார்த்து உற்சாகமடைந்த இளம் குட்டி, பிளிறலுடன் அந்த யானையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. ஆனால் மக்னா யானையோ எந்த பரிவும் இன்றி விலகிச் சென்றது. மக்னாக்கள் இயல்பிலேயே சற்று ஆக்ரோஷமானவை. ஆனால் சற்று தொலைவில் நின்றவாறே அந்த மக்னா யானை இரண்டு இளம் யானைகளையும் பார்த்துக் கொண்டது.

அதேநேரம் யானை இறந்த நாள் முதல் 4 நாட்களுக்கு எந்த இரைகொல்லிகள், மனிதர்கள் தொந்தரவும் அண்டாமல் 5 வயது ஆண் குட்டி தன் இளம் உடன்பிறப்பை, பெரிய யானைகளைப் போலவே பாதுகாத்து வந்தது. விலங்குகளிடம் இயல்பாக உள்ள பாதுகாக்கும் குணம் இது. முதல் இரண்டு நாட்களுக்கு தன் சகோதரன் உடைத்துத் தந்த கிளைகளில் இருந்து குட்டி யானை இலைகளைச் சாப்பிட்டது. பிறகு புல்லைச் சாப்பிட்டது. அங்கு கிடந்த யானை லத்தியில் மாம்பழம் சாப்பிட்ட கொட்டை காணப்பட்டது. முன்னர் தாய் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், குட்டிக்கு பால் கொடுக்க முடியவில்லை. அப்போது குட்டிக்கு மாம்பழத்தை உணவாகக் தந்ததைப் பார்த்ததாக அருகில் இருந்த மலை வாழ் மக்கள் கூறினர்.

அந்த யானை குட்டிகளை 5 நாட்கள் கண்காணிக்கப்பட்ட பிறகு, கண்காணிப்புக் குழுவுடன் வனப் பாதுகாவலர், மாவட்ட வன அலுவலர், மருத்துவர் ஆகியோர் சென்று பார்த்தனர். மருத்துவர் என்.எஸ். மனோகரன் இந்த யானைகளை நான்கு நாட்களுக்குக் கண்காணித்தார். ஒரு வாரத்துக்குப் பின் சென்று பார்த்தபோது யானை குட்டிகளுடன் புதிதாக இரண்டு பெரிய பெண் யானைகள் இருந்தன. அந்த பெண் யானைகள் அவற்றை தத்து எடுத்துக் கொண்டு தாயைப் போன்றே குட்டியை பராமரித்தன. அந்த பெண் யானைகளின் லத்தியை இளம் குட்டி யானை சாப்பிட்டது. இது குறித்து ஆராய்ச்சியாளர்களிடம் விசாரித்தபோது, சிறிய குட்டிகள் 4-5 மாதம் இருக்கும்போது தாயின் லத்தியை உண்பது இயல்பான பழக்கம் என்று தெரிய வந்தது. யானைகள் புல்லை உணவாக உட்கொள்ளும்போது, அதிலுள்ள செல்லுலோஸை செரிக்க யானைகளுக்கு ஒரு வகை பாக்டீரியா உதவுகிறது. சிறிய யானைகளுக்கு இந்த பாக்டீரியா அதிகம் இருக்காது. அதனால் புல் சாப்பிடும்போது செரிமானத்துக்காக, பெரிய யானையின் லத்தியில் உள்ள பாக்டீரியாவைச் சாப்பிட்டு குட்டிகள் கிரகித்துக் கொள்கின்றன என்று தெரிய வந்தது.

அதன் பிறகு மலை அடிவாரப் பகுதியில் இருந்த நீர்நிலைக்கு அருகே 10 அடி ஆழமுள்ள செயற்கை குட்டைகளை உருவாக்க சிறீவில்லிப்புத்தூர் சரணாலய வார்டன் எஸ்.ஏ. ராஜீ நடவடிக்கை எடுத்தார். யானைகள் தினமும் 5-6 கி.மீ. சுற்றளவுக்கு வனப்பகுதியில் மேய்ந்துவிட்டு, மீண்டும் தண்ணீர் தேடி இங்கு வந்து குடித்துச் சென்றது பதிவு செய்யப்பட்டது. 7-8 நாட்களில் அந்த யானைக் கூட்டத்தில் மேலும் 3 பெரிய யானைகள், ஒரு குட்டி யானை காணப்பட்டன. மொத்தமாக 8 யானைகள். புதிய பெண் யானைகள், குட்டி வந்தவுடன் குட்டி யானை மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. அதன் பிறகு அந்த யானை பதற்றத்தைத் துறந்து இயல்பானதாகவும், புதிய கூட்டத்தில் சகஜமாக கலந்து உறவாட ஆரம்பித்தது. அக்கம்பக்கம் சுற்றி வரவும் ஆரம்பித்தது.

சில நாட்களுக்குப் பிறகு காட்டில் மழை பெய்யத் தொடங்கியது. அதில் காட்டுப்பகுதி தடுப்பு அணைகளில் தண்ணீர் தேங்கியது. அதன்பின் அந்தக் கூட்டத்தில் மக்னா யானையும் சேர்ந்து கொண்டிருந்தது. அதன் பிறகு அந்த யானைக் கூட்டம் காட்டின் எல்லைப் பகுதியை விட்டுவிட்டு உள்ளே சென்றுவிட்டன.

ஒரு இளம் யானை தன்னைவிட வயதில் குறைந்த குட்டியை பாதுகாப்பது, தாயில்லாத அந்த யானைக் குட்டிகள் இரண்டையும் மற்ற யானைகள் தங்கள் கூட்டத்தில் சேர்த்து பாதுகாப்பது குறித்து அருகில் இருந்து கவனித்தது வித்தியாசமான ஒரு அனுபவம். யானைகளின் சமூக வாழ்க்கையில் இப்படி பல அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றன.

- டி.எஸ். சுப்ரமணிய ராஜா, ராஜபாளையம் காட்டுயிர் சங்கத் தலைவர்

Pin It