தமிழக கேரள பகுதிகளை உள்ளடக்கிய இடுக்கி தேனி மாவட்டத்தில் இந்திய நியூட்ரினோ ஆய்வகத்தை (இ.நி.ஆ) அமைப்பதற்கு கடந்த மாதம் இந்திய அரசு நூறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. புவியின் ஆழத்தில் அமைக்கப்பட்ட ஆய்வகங்களில் இந்திய நியூட்ரினோ ஆய்வகமே உலகின் மிகப் பெரிய பௌதிக ஆய்வகமாகும். (கட்டி முடிக்கப் பட்ட நிலையில்) அதிக ஆற்றல் மிக்க நியூட்ரான் கதிர்களைக் கையாளும் வகையிலான கருவிகளைக் கொண்டு மேற்கொள்ளப்படுகிற இவ்வாய்வகக் கருவிகள் கலிபோர்னியாவில் உள்ள பெர்மிலாப்பில் தயாரிக்கப் பட்டவையாகும். (பெர்மிலாப் (FERMILAB)அதிக ஆற்றல் மிக்க துகள்கள் குறித்து ஆய்வு செய்யும் பௌதிக ஆய்வகமாகும். இவ்வாய்வகம் அமெரிக்காவின் தேசிய ஆற்றல் ஆய்வகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.மொர்).

நியூட்ரினோ திட்டம் என்ற பேரில் அணுக் கழிவுகளைப் பூமிக்கடியில் பாதுகாப்பாக வைக்கும் வகையிலான ஆழ் புவிசார் அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கை (DGRRW) இந்திய அரசு கட்டவிருப்பது குறித்து இக்கட்டுரை விளக்க முற்படுகிறது. இ.நி.ஆ தொடர்பான அனைத்து ஆய்வுகளையும் சென்னையில் உள்ள இந்தியக் கணித அறிவியல் மையம் (IMSc)) மேற்கொண்டது.

map idduki project 600

இதை வைத்து அரசின் ஒப்புதல் பெற்ற பிற்பாடு இ.நி.ஆ.தத்தின் குவிமையம் மும்பையிலுள்ள டாட்டா ஆய்வு (அடிப்படை fundamental) நிறுவனத்திற்கு மாறியது. அதே நேரத்தில் தேனி மாவட்டம், பொட்டிபுரம் கிராமத்திலுள்ள இருபத்தேழு ஹெக்டேர் பரப்பளவிலுள்ள பசுமை நிலத்தை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்திடம் தமிழக அரசு கையளித்துள்ளது கவனிக்கப்படவேண்டிய செய்தியாகும். இது நிச்சயம் இ.நி.ஆ திட்டம் தொடர்பான கட்டுமானப்பணிக்கு ஒதுக்கப் பட்டுள்ள தாகவேத் தெரிகிறது.

2010ஆம் ஆண்டில் இ.நி.ஆ திட்டத்திற்காக பொட்டிபுரம் பகுதி தேர்வு செய்யப்பட்டது. அதேநேரம், சுற்றுச்சூழல் அமைச்சகமிடமிருந்தும் (அதிகாரப் பூர்வமற்ற வகையில்) இத்திட்டத்திற்கு பச்சைக் கொடி காட்டப்பட்டிருந்தது. இச்சூழலில் இந்திய கணித அறிவியல் மையமானது இ.நி.ஆ தொடர்பான சுற்றுச்சூழல் அனுமதி கோரும் விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் இத்திட்டம் தொடர்பான ஒரு தகவல் மட்டுமே விளக்கப்பிட்டிருந்தன. அவ்விளக்கம்:

கோப்பு எண்: 0336/2010

விண்ணப்பம் செய்த நாள்: 22.04.2010

விண்ணப்பதாரரின் பெயர்: இந்திய கணித அறிவியல் மையம்

இட முகவரி: பொட்டிபுரம் கிராமம், உத்தமபாளையம் தாலுக்கா

தொடர்பு முகவரி: சி.ஐ.டி வளாகம், தரமணி, சென்னை60013

மாவட்டம்: தேனி

வகை: அணுமின் நிலையம், அணுசக்தி நிகழ்முறை (மறுசுழற்சி) நிலையம், அணுக்கழிவு மேலாண்மை நிலையம்

அணுமின் நிலையம் அமைக்கவோ அல்லது அணு சக்தி நிகழ்முறை நிலையம் அமைக்கவோ அதிகளவிலான நீர் தேவைப்படும். ஆனால் பொட்டிபுரம் கிராமமோ வளமான நீர் ஆதாரப் பிடிப்பு அற்ற பகுதியாகும். ஆகவே மூன்றாம் வகையான அணுக்கழிவு மேலாண்மை நிலையம் அமைக்கவே இவ்விடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியுள்ளது. அணு உலைக் கலங்களிலிருந்து வெளியேற்றப் படும் வீரியமுள்ள கதிரியக்கக் கழிவுகளை சேமித்து வைப்பதற்கான ஆழ் புவிசார் கிடங்காகவே இந்நிலையத்தை அமைப்பதாக யூகிக்கலாமா என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்துத்தான் (அணுக்கழிவுகளை சேமித்து வைக்கும் வகையிலான ஆழ் புவிசார் கிடங்கு மொர்) கடந்த இரு ஆண்டுகளாக அணுசக்தித்துறை அதிகாரிகளுக்குள் தீவிரமான விவாதங்கள் நடந்து வருகின்றன.

இந்திய அணுசக்தித்துறையின் கனவான ஆண்டுக்கு நாற்பதாயிரம் மெ.வாட் மின் உற்பத்தி என்ற இலக்கு எட்டப்படுமேயானால், ஆண்டுக்கு ஆயிரத்து இருநூறு டன் அணுக்கழிவுகளை கையாள இரண்டாயிரத்து நானூறு கனசதுரடி கொள்ள உள்ள நிலப்பரப்பும் இந்திய அரசுக்குத் தேவைப்படும். அப்படிச் செய்யும் பட்சத்தில், ஐம்பது ஆண்டுகள் கழித்து பார்த்தோமானால் அணு மின் நிலையங்கள் வெளித்தள்ளுகிற அணுக்கழிவுகள் அறுபதாயிரம் டன்னாக இருக்கும்.ஒரு கன அடி அணுக்கழிவைச் சேமித்து வைக்க ஐந்து கன அடிப் பரப்பிலான இடம் தேவைப்படும் என்று எடுத்துக்கொண்டால் ஒட்டுமொத்தக் கழிவுகளையும் சேமிக்க ஆறு லட்சம் கன அடியென பனிரெண்டு முதல் பதினைந்து சதுர கி.மீ பரப்பளவு தேவைப்படும்.

இ.நி.ஆ அமைப்பதற்கு கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் கன அடியுள்ள பரப்பளவு தேவைப்படும்.எனவே இக்கட்டுமானத்தை மேற்கொள்ள எட்டு லட்சம் கனஅடி பரப்பளவுள்ள மிகப்பெரிய இடத்தை பூமிக்கு அடியில் அகழ்ந்தெடுக்கவேண்டும். இதற்காக கிட்டத்தட்ட இருபத்தைந்து லட்சம் டன் பாறைகள் வெடிவைத்துத் தகர்த்தாக வேண்டும். இதற்கு கிட்டத்தட்ட மூவாயிரம் டன் ஜெலட்டின் குச்சிகள் தேவைப் படும். இவையனைத்தும் யுனசுகோவால் பாதுகாக்க வேண்டிய உயிர்ச்சூழல் மண்டலம் என அறிவைக்கப் பட்டதும், நுண்மையான புவிசார் பிரதேசமுமான மேற்குத் தொடர்ச்சி மலையின் மையத்தில்தான் நிகழப்போகிறது!

நிலநடுக்க சாத்தியப்பாடும் நீர்த்தாங்கிகளும்:

பாபா அணுசக்தித் துறையைச் சேர்ந்த புவிசார் வல்லுநரும் நிலத்தடி கழிவு மேலாண்மை அறிவியலாளருமான பாஜ்பாய் கூறுகிறார்: “ஆழ் அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கை ஒரு புவிப்பிரதேசத்தில் அமைக்க வேண்டுமென்றால் அப்பகுதியானது, குறைவான நிலநடுக்க வாய்ப்புள்ள பகுதியாக இருக்கவேண்டும். மேலும் குறைவான நிலத்தடி நீர்ப்பிடிப்பு பகுதியாகவும், வனப்பகுதியற்றதாகவும், பாசன நிலங்களாக இல்லாமலும் கனிம வளங்கள் கிடைக்காத நிலப் பிளவுகள் இல்லாத இடமாகவும் இருக்கவேண்டும்.”

ஆனால் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடுக்கி&தேனி பகுதியோ கனிம வளங்களைத் தவிர அனைத்தும் பெற்றுள்ளது.

இவ்வனைத்து கட்டுமானமும் அதிக நிலநடுக்க வாய்ப்புள்ள சுருளி நிலத்தட்டின் மையத்தில் சரியாக அமையப்போகிறது. இந்தியத் தர அமைப்பின் (BIS) ஆவணப்படி இடுக்கி மாவட்டமும் தேனி மாவட்டமும் நிலநடுக்க வாய்ப்புள்ள மண்டலத்தில் எண் மூன்றில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில்,இ.நி.ஆ திட்டம் தொடர்பான சூழல் விளைவு மதீப்பீட்டு அறிக்கை (Environment Impact Assessment)) தயாரிக்கும் பணியை கோவையில் உள்ள சாலிம் அலி பறவையியல் ஆராய்ச்சி மற்றும் இயற்கை வரலாற்று மையம் ((SACON) மேற்கொண்டது. இவர்களோ இடுக்கிதேனி பகுதியை நிலநடுக்க வாய்ப்புள்ள மண்டலம் இரண்டில் குறைத்து வகைப்படுத்தியுள்ளனர்! இந்தியத் தர அமைப்பினரின் வேலையை பறவை நோக்கும் குழு செய்கிறது!

உலகளவில், நீர்த்தேக்கங்களால் ஏற்படுகிற நில நடுக்கங்கள் குறித்த பட்டியிலில் இதுவரை ஐம்பந்தைந்து நீர்த்தேக்கங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.இதில் இந்தியாவிலிருந்து இடுக்கி நீர்தேக்கமும் இப்பட்டியலில் உள்ளதாக குஷாலா ராசேந்திரன் கூறுகிறார். கடந்த சூலை 2011 ஆம் ஆண்டு முதல் அதே ஆண்டின் நவம்பர் மாதம் வரை, மூன்று ரிக்டர் அளவுடைய மிதமான மூன்று நிலநடுக்கங்களும் இருபது நில அதிர்வுகளும் இப்பகுதியில் ஏற்பட்டுள்ளதாக நிலநடுக் கருவிகளில் பதிவாகியுள்ளது.

இது ஓர் அசாதாரண நிலைமை என்று சொல்லி முடிக்கிறார் ராசேந்திரன். மேலும் இதையே சி.பி ராசேந்திரனின் மற்றுமொரு ஆய்வுக்கட்டுரையும் உறுதிசெய்கிறது.அவர் கூறுகிறார் ”கேரளாவின் மையப்பகுதியில் இதற்கும் முன்பாக பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம்.சமீப காலங்களில் கேரளாவின் இதர பகுதிகளைக் காட்டிலும் இங்கு அதிகமான நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் இவையெல்லாம் மனித நடவடிக்கைகளால் ஏற்படுகிற விளைவுகளே” என்கிறார். இதோடு, இப்பகுதியில் ஒவ்வொரு கால் நூற்றாண்டுக்கு ஒருமுறையும் 4.5 முதல் 5.5 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

பாதாள சுரங்கவழித் திட்டங்களை மேற்கொள்வதற்கு முன்பாக அப்பகுதியில் உள்ள நீர்த்தாங்கிகளுக்கும் பிற இயற்கை வளங்களுக்கும் மனிதர்களால் கட்டப்படுகிற கட்டுமானங்களால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதை அங்கு மேற்கொள்ளப்படுகிற புவிசார் தொழிநுட்ப ஆய்வறிக்கை உறுதியளிக்க வேண்டும். மாறாக இடுக்கி&தேனி பகுதியில் அமைய விருக்கிற “ஆழ் புவிசார் கிடங்கு” திட்டத்திற்கு இவ்வகையான ஆய்வுகள் இதுவரை நடைபெற்றதாகத் தெரியவில்லை.

ஒருவேளை அப்படி ஒரு ஆய்வறிக்கையை இத்திட்டம் தொடர்பாக தயாரித்து இருந்தாலும் பொதுமக்களிடம் அதை ஒருபோதும் அவர்கள் பகிர்ந்துகொள்ளப்போவதில்லை. ஏனெனில் இவ்வாய்வறிக்கை அனைத்தும் ரகசியமாக பாதுகாக்கப்படும் ஆவணம் ஆயிற்றே!

எங்களிடம் இ.நி.ஆ திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புவிசார் தொழிநுட்ப ஆய்வறிக்கை யன்று கைவசம் உள்ளது. ஆறு வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளை மாதிரி ஆய்வின் மூலம் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இ.நி.ஆ சார்பாக ஆய்வை மேற்கொண்ட புவியியில் அறிவியலாளரோ இவ்வகையான மாதிரி களைச் சேகரிக்க ஆய்வகத்தை விட்டு வெளியே கூட வரவில்லை. மேலும், இ.நி.ஆ சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் நீர்த்தாங்கிகள் குறித்தோ அணைகள் குறித்தோ மறந்தும் ஓர் வார்த்தை கூட குறிப்பிடவில்லை! புவிசார் தொழிநுட்ப அறிக்கை குறித்த விமர்சனம் தனியாக எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில் கீழ்வரும் பார்க்கின் அறிக்கையும் ஒரு விதத்தில் கவனிக்கும் படியாக உள்ளது:

“வடமேற்கு இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள பாறைகளை ஆய்வு செய்ததில் நம்பிக்கையளிக்கும் விதமாக பல தகவல்கள் கிடைத்தன. மேலும், முப்பரிமாண வடிவிலான பாறையியல் மாதிரிகளை உருவாக்கும் நோக்குடன் செயற்கைக்கோள் தகவல்கள், பல்வேறு அலகுகளில் உள்ள நிலப்பட வரைவுத் தகவல்கள், புவிசார் தகவல்கள், மின்காந்தத் தகவல்கள் மற்றும் தாங்குதிறன் தகவல்கள் போன்ற பல தகவல்கள் அப்பகுதிகளில் சேகரிக்கப்பட்டன.

மேலும் அப்பகுதிகளில் ஐயாயிரம் மீட்டர் ஆழம் வரையிலான இருபத்தைந்து ஆழ் துழாய்கள் அமைக்கப்பட்டு பெறப்பெறும் தகவல்களைக் கொண்டு இம்முப்பரிமாண மாதிரிகள் செழுமைப்படுத்தப்படும். அடுத்ததாக இவ்வாய்வுகளில் கிடைக்கபெற்றப் பாறைகளின் புவிவேதியியல் பண்புகள், நீரியியல் பண்புககளை அடிப்படையாகக் கொண்டு நூறு சதுர கி.மீ பரப்பளவிலுள்ள இருபத்தி இரண்டு மண்டலங்களில் தீவிரமான ஆய்வுகள் மேற் கொள்ளப்படும். இறுதியாக நான்கு சதுர கி.மீ பரப்பளவிலுள்ள ஒரு மண்டலம் மட்டும் தேர்வு செய்யப்பட்டு அதில் கூடுதலாக வேறு சில ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு திட்டத்திற்கு உகந்த பகுதியாக அடையாளங்காணப்படும்.”

உச்சநீதிமன்றத்தில் வாதிக்கப்பட்ட கழிவு மேலாண்மைச் சிக்கல்:

கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தீவிரமான வாதப்பிரதி வாதங்கள் நடந்து கொண்டிருந்தது. அப்போது கழிவு மேலாண்மையின் பேரில் நிகழ்ந்த விவாதத்தில், கர்நாடகாவின் கோலார் தங்க வயல்களின் கைவிடப்பட்ட சுரங்கப்பகுதியில் அடிஆழத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கழிவுகள் சேமிக்கப்படும் என்று அரசு வழக்குரைஞர் கூறினார். மேலும் கர்நாடகா வின் கோலார் தங்க வயல் பகுதிகளில் ஒன்றை ஆழ் புவிசார் கிடங்கிற்கு ஏற்றவாறு மாற்றப்படும் என தேசிய அணுசக்தி நிறுவனத்தின் உறுதிமொழித்தாள் தெரிவிக்கிறது.

தமிழககேரள மாநிலங்களின் தேனி&இடுக்கி பகுதியில் அணுக்கழிவு மையம் அமைப்பதாக மேலே நடந்த விவாதத்தில் எந்த அறிவிப்பும் இல்லை. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 2010இல் இ.நி.ஆ திட்டத்திற்கான விண்ணப்பத்தை வழங்கியது தொட்டு, உச்ச நீதிமன்றத்தில் உறுதிமொழித்தாள் தாக்கல் செய்தது, பாரளுமன்றத்தில் அமைச்சர்களின் பேச்சுக்கள், அணு சக்தி மையத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு என அடுத்தடுத்து நடந்த அனைத்து விடயங்களும் தமிழக அரசுக்கு இந்தியக் கணித அறிவியல் மையம் அளித்த விண்ணப்பத்திற்குப் பிறகே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாம் அவர்களை நம்பலாமா?

உலகம் முழுவதும் அணுசக்தித் துறையானது கடந்த சில மாத காலமாக மோசமான சிக்கல்களை எதிர் கொண்டு வருகிறது. அமெரிக்காவின் அணு ஆயுதக் கழிவுகளை சேமித்து வைப்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கதிர்வீச்சுடைய அணுக்கழிவு சேமிப்பு கிடங்கொன்று நியூ மெக்சிகோவின் கார்ல்ச் பாத்தில் உள்ளது. அக்கிடங்கில் கடந்த பிப்ரவரி மாத மத்தியில் இருந்து கதிர்வீச்சு கசிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு கசிவு ஒரு செய்தியல்ல, மாறாக ஒரு லட்சம் வருடத்திற்கு கசிவு ஏற்படாத வகையிலான பாதுகாப்பு அம்சங்களை கவனத்தில் கொண்டு வடிவைமைக்கப்பட்ட கிடங்கிலிருந்து கசிவு ஏற்படுவதுதான் அச்சம் தருவிக்கும் செய்தியாக உள்ளது.

தரைமட்டத்திலிருந்து நானூறு மீட்டர் ஆழத்தில் உப்புப் படிவத்திற்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள இக்கிடங்கானது 1999ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இக்கிடங்கை அமைப்பதற்கு முன்பாக இருபது ஆண்டுகால ஆராய்ச்சிகளும் திட்டமிடலும் நடைபெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.!

ஆழ் அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கிற்கான பாதுகாப்பான இடத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தற்போது நாற்பது நாடுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.அமெரிக்காவின் (பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில்) யூக்கா மலைப்பகுதியில் மேற்கொள்ளப் படவிருந்த அணுக்கழிவு சேமிப்பகத் திட்டம் இறுதியில் கைவிடப்பட்டது. இத்திட்டத்தின் ஆராய்சிக்காக மட்டும் கடந்த இருபது ஆண்டுகளாக செலவிடப்பட்ட தொகை எட்டு பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

சமீபத்தில் கம்பரிய உள்ளாட்சி அமைச்சகம் இங்கி லாந்து மத்திய அரசு முன்மொழிந்த ஆழ் அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கு திட்டத்திற்கு ஒப்புதல் தர மறுத்து விட்டது. அமெரிக்காவின் லிவர்பூல் தேசிய ஆய்வகத் தின் ஆராய்ச்சியாளர் தாமஸ் புஷ்செக் கூறுவதாவது, வரலாற்றில், 10,000 வருடங்களுக்கு ஒரு பொருளை பாதுகாப்பாக வைப்பது நிகழாத விசயம். 10,000 வருடங்கள் என்பது பனியுகம் முடிந்து இன்றைக்கு வரை உள்ள கால அளவில் சரிபாதியாகும், எகிப்தின் பிரமிட்கள் கட்டி அதில் பாதி வருடங்கள் தான் ஆகி இருக்கும்.

இந்தியாவில் அணுமின் நிலையம் அமைப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அமைதியான அறவழியில் எதிர்த்து வருகின்றனர். மத்திய இந்தியாவில் அமைப்பதாக இருந்த ஆழ் அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கு திட்டமும் நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக வெற்றிபெறவில்லை. அணுசக்தித்துறை வல்லுநர்கள் ஆண்டுக்கு பல மில்லியன் யூனிட் அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்கிறார்கள்.

அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சார உற்பத்தியில் மூன்று விழுக்காடு என்ற அளவில்!.. இன்னும் சொல்லப்போனால் தேசத்தின் மூன்று விழுக்காட்டு மகிழ்ச்சிக்காக! ஆனால் நியாமாக இதனால் பயனடைவோர் அதன் கழிவுகளிலும் பங்கிட்டுக்கொண்டாக வேண்டும்! அணுசக்தித்துறை விஞ்ஞானிகள் அறிவுக்குகந்த வழிக்கு மாறான வகையில், நச்சு ஆபத்துமிக்க செயலை மறைத்து மறைத்து செய்வதற்கு பலவந்தப்படுப்படுகிறார்கள். இதுவே நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்திற்கு பின்னாலிருக்கும் ஆபத்தாகும்.!

1950 ஆம் ஆண்டுமுதல் செயல்பட்டுவரும் தேசிய அணுசக்தி மையமானது விரைவில் காணாமல் போகலாம்.... பல நூறு ஆண்டுகளாக ஓடும் பெரியாறு, வைகை மற்றும் வைப்பாறு போன்ற ஆறுகளும் மலைகளுக்கு அடியிலான நீர்ஓட்டங்களும் சிறப்பான பல்லுயிரியப் பெருக்கத்திற்குக் காரணமாக இருக்கிறது. தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள், மக்கள் சமூகம் என அனைத்து உயிரினங்களும் சிறப்பாக வாழும் வகையில் சிறந்த சூழல் அமைவாக இப்பகுதி திகழ்கிறது.

நமது பூவுலகானது அக்குபஞ்சர் புள்ளியுடன் கூடிய “வாழும் கோளாகும்”. அதில் இடுக்கியும் ஒன்று. இந்நிலையில் இப்பெரு மலைப்பகுதியை அதில் வசிக்கும் மக்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லாமல் தோண்டுவது என்பது சனநாயகத்திற்கு விரோதமான செயலாகும். இந்தியாவின் அறிவியல் தலைமையானது விவேகமான முறையில் சிந்தித்து இத்திட்டத்தை கைவிடும் என்றும் நம்புகிறோம். தோல்வி அடையும் இந்திய அணுசக்தித் துறையின் சிற்பிகளான ஜவஹர் லால் நேருவிற்கும் ஹோமி பாபாவிற்கும் வரலாற்றில் நிச்சயமாக அன்பு நிறைந்த நினைவகங்கள் மட்டுமே போதுமானவை.

நன்றி:

India’s Deep Geological Repository For Radioactive Wastes (DGRRW)

Coming up In Idukki Theni portion Of the Western GhatsCounter Currents.

கட்டுரையாளர்கள்:

V.T. பத்மநாபன் - அணுசக்திதுறைக்கு எதிரான மக்கள் போராட்ட அமைப்பின், முக்கிய ஆலோசகர் குழுவின் உறுப்பினராவார். அணுசக்திப் பாதுகாப்பு, கதிர்வீச்சு, உடல்நலம் மற்றும் பிற சூழல் சார்ந்த சிக்கல்களை தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.

லெஸ்லி அகஸ்டின் - உயிரிதொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அதோடு பத்திரிகைத் துறையில் பட்டம் பெற்று அறிவியல் செய்தியாளராக நான்கு ஆண்டுகள் பணிசெய்தவர். இவ்வம்மையார் சூழலியல் குறித்தும் தொழில்நுட்பம் குறித்தும் ஆராய்ச்சி செய்தும் எழுதியும் வருகிறார்.

மருத்துவர். ஜோசப் மக்கோலில் - நுண்ணறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். கொச்சின் பல்கலைக் கழகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் பணிசெய்துவருகிறார்.

கலைச்சொற்கள்

Deep Geological Repository Radio active Wastes ஆழ் புவிசார் அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கு

Environment Impact Assessment(EIA) Report சூழல் விளைவு மதீப்பீட்டு அறிக்கை

Deep Geological Repository ஆழ் புவிசார் கிடங்கு

Geotechnical’ study report புவிசார் தொழிநுட்ப அறிக்கை

Pin It