என் தாத்தாவின் வீடு. குங்குமத்தை குவித்து வைத்தது போல் செம்மண் - தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். இளம் பச்சைநிற சேலையில் அங்கங்கே வெள்ளைநிறத்தில் வேலைப்பாடுகள் செய்தது போல், நெல் வயலின் நடுவே கொக்குகள் அமர்ந்திருக்கின்றன. வீட்டைச் சுற்றி விரைத்து நிற்கும் காவல்காரனாய் தென்னைமரங்கள். திரும்பிய இடமெல்லாம் பூத்துக் குலுங்கும் பூச்செடிகள். மனோரஞ்சிதம், மல்லிகை, செண்பகம் என சுற்றுப்புறமே கமகமக்கும். ஒவ்வொரு விடுமுறையிலும் என்னை பாசத்தோடு கை நீட்டி வரவேற்கும் இந்த சுற்றுலாத்தலம், இரண்டு நகரங்களக்கு நடுவில் இருக்கும் அந்த சிறு கிராமம்தான்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல தன் அடர்ந்த கூந்தல் காற்றில் படபடவென்று பறக்க, அமுதத்தை சிறு பையில் கட்டி, மஞ்சள் நிறம் பூசி மாம்பழம் என்ற பெயரில் அழகிய மணிகளை கோர்த்தது போல் தொங்கவிடப் பட்ட மாமரம் ஒய்யாரமாக நின்று கொண்டிருக்கும். என் தாத்தா அலுவலகம் செல்லும் வரை காத்திருந்து, நாங்கள் அதில் ஏறி விளையாடிய  நாட்கள் பலப்பல. பாட்டியிடம் எண்ணெய் தேய்த்துக் கொள்வதில் இருந்து தப்பித்து, அதில் ஏறி ஒளிந்துகொண்ட ஞாபங்கங்களும் பலப்பல. நம் நாட்டின் வளர்ச்சிகளில் ஒரு பகுதியாக பக்கத்தில் உள்ள இரண்டு நகரங்களையும்  இணைத்து ரயில் பாதை அமைக்க போவதாக அரசு ஓர் அறிக்கை வெளியிட்டது.

விளைவு வீட்டை இடித்தாக வேண்டும், பூச்செடிகளைப் பிடுங்க வேண்டும், தென்னை மரங்களை அகற்ற வேண்டும். இது எல்லாவற்றையும்விட முக்கியமாக மாமரத்தையும், அதோடு பின்னிப் பிணைந்த என் ஞாபகங்களையும் அடியோடு வெட்டிச்சாய்க்க வேண்டும். நாட்டுக்காக ரயில்பாதை. குறை கூற முடியவில்லையே, கண்ணீர் மட்டும்தான் விட முடிகிறது.இடித்த வீட்டுக்கு நஷ்டஈடும், வெட்டிய மரத்திற்கு வேறு கன்றும் நடப்படும் என்று வாக்குறுதியும் கொடுத்தார்கள். அதன்பிறகு அவர்கள் வெட்டியது ஐம்பது வயது வளர்ந்தோங்கிய ஒரு முதியமனிதனை, 50 வயது வளர்ந்த மனிதனை கொன்றுவிட்டு, மீண்டும் பெற்று வளர்த்துக் கொள்ளலாம் என்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

அதுவரை ரயில் பயணம் என்றால், "சிக்  புக்  சிக்  புக்" என்ற சத்தத்துடன் தாலாட்டுவதாகவும், முகத்தை வருடும் ஜன்னல் காற்றாகவும் மனதை உற்சாகப்படுத்திக் கொண்டு இருந்தது. இனிமேல் ரயில் பயணம் என்றாலே எத்தனை விவசாயிகளின் கண்ணீரோ என்ற பரிதாபமும் எத்தனை ஞாபகங்களை வெட்டி குடைசாய்த்துவிட்டு இந்த ரயில் பூதாகரமாக ஓடிக் கொண்டிருக்கிறதோ என்ற கவலையும், ஏக்கமும்தான் என்னை பிடித்து ஆட்டுகின்றன.

-பிரீத்தா தேன்மொழி

(ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி மாணவி, பூவுலகின் நண்பர்கள் தன்னார்வலர்)

Pin It