கூடங்குளம் போராட்டத்தில் தொடக்க காலகட்டத்திலிருந்து பங்கேற்று மக்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி தைரியமாக களப்பணியாற்றி சிறைசென்றது உள்ளிட்ட பல்வேறு விதமான இடர்களை சந்தித்த சுந்தரி அவர்களுடன் ஒரு சிறப்பு பேட்டி

உங்களை இப்போராட்டத்தில் ஈடுபடத் தூண்டியது எது?

எனது சொந்த ஊர் பெரும்புணல். கல்யாணம் ஆனது இடிந்தகரை. கல்யாணம் ஆன ஒரு வருடம் கழித்துக் கல்லூரிப் பெண்கள் தெருமுனையில் கொட்டம் அடிச்சி கூடங்குளம் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வந்தார்கள். எனக்கு அதைப் பற்றி ஒன்னும் தெரியல. கூடங்குளம் அணுஉலை தொடங்கினா மின்சாரம் வருமென்றும் சொன்னாங்க. பாம்பே, மெட்ராஸ் போல டவுனாகிடும் என்றும் சொன்னார்கள். அப்ப அனலுக்கும் அணுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாது. 8ம் வகுப்பு வரை படிச்சிருக்கேன். எனக்கு இதுசம்பந்தமாக விவரம் தெரியலை. சில சில நாட்களில் அணு உலைக்கு எதிராக மக்கள் போராட்டம் செய்ய ஆரம்பிச்சாங்க. நானும் மக்களோட மக்களா அந்த போராட்டத்தில கலந்துக்கிட்டேன்.

அப்போ அண்ணன் உதயகுமார் நோட்டீஸ் விநியோகித்து அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்தினார். இதனால் 1989ல் இடிந்தகரையில் மக்கள் போராடினார்கள். அதன் பிறகிலிருந்து எல்லாப் போராட்டங்களிலும் கலந்துகொண் டேன். பஞ்சாயத்துத் தலைவர் வழியாக கூடங்குளம் உள்ளே போனால் முகத்தில் துணியைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்றும் மாத்திரை போட்டுக் கொள்ள வேண்டும் என்று அறிந்தேன். அப்பத்தான் யோசிச்சேன்.

நான் பல நகரங்களுக்கு போயிருக்கிறேன். அங்கெல்லாம் வீட்டின் முன் சாக்கடைகள் இருக்கும். காற்றோட்டமற்ற சிறிய அறையாக வீடு இருக்கும். வீட்டில் பெண் பிள்ளைகளுக்கு ஏதாவது பிரச்சனைன்னாகூட அக்கம் பக்கத்

தினர் எட்டிக்கூட பார்க்கமாட்டார்கள். சின்னப் பசங்க விளையாட கூட இடம் கிடையாது. சுகாதாரமற்ற சூழலே அங்கு இருக்கும். ஆனால் நாங்கள் வசிக்கும் இந்த இடம் அப்படியில்லை. சுகாதாரமான சூழல், காற்றோட்டம், மக்களோட ஒற்றுமை, சுதந்திரம், பாதுகாப்பு இங்கபோல வேறு இடங்களில் கிடைக்காது.

இப்படிப்பட்ட இந்த மண்ணை விட்டு வேறெங்கும் வாழ முடியாது என்பதோடு வேறு எங்கேயும் இந்த உரிமையை எதிர்பார்க்க முடியாது என்ற அச்ச உணர்வும் தோன்றியது.

அப்போதான் ஜப்பான் விபத்தை டிவியில் பார்த்தேன். அவ்வளவு பெரிய வசதியான நாட்டிலேயே அணு உலையைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியவில்லையே?

நம்ம நாட்டில இதுபோல ஆபத்து வந்தால் ஒன்றுமே இல்லாத இந்த மக்களுக்கு இது நேர்ந்தா என்ன ஆகும்னு நினைச்சேன். இந்த விபத்து நடந்தால் நம்ம மண்ணை விட்டுப் போகவேண்டியிருக்கும். அப்பதான் நான் யோசித்தேன். நாம மட்டும் வாழ்ந்து என்ன பயன்? நமக்குப் பிறகு நம் சந்ததி யினர் வாழ வேண்டும் என்றால் நாம் வீட்டிற்குள் இருந்தால் வேலைக்கு ஆகாது என்று போராட் டத்தில் இறங்க ஆரம்பித்தேன். உறவினர்களின் எதிர்பை மீறி நான் வைத்திருந்த பலசரக்குக் கடையை மூடிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டேன்.

இதுசம்பந்தமாக நான் ஃபாதரிடம் கூறியபோது 100 பேரைக் கொண்ட குழுவை அமைக்க முடிவு செய்தோம். அதை வழிநடத்த 10 பேர் கொண்ட குழுவில் நானும் ஒருவராக தேர்ந்தெடுக்கப் பட்டேன்.

பலசரக்குக் கடையை மூடிவிட்டேன். கணவரும் கூலி வேலைதான். வருமானத்துக்காக சில நாட்கள் நூறு நாள் வேலைக்கு போய்க் கொண்டிருந்தேன். அப்பொழுது கூடங்குளத்தில் அண்ணன் உதயகுமார் தலைமையில் ஐந்து நாள் தொடர் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அங்கேயே தங்கி போராட வேண்டியிருந்ததால ‘நூறு நாள் வேலை திட்டம்’ வேலையை தூக்கிப் போட்டுட்டு போராட்டத்தில் கலந்து கொண்டேன்.

அப்ப போராட்டம் தீவிரமானது. போலீஸ் நெருக்கடி வந்தது. ஊரைவிட்டு வெளியே போகமுடியாத நிலை வந்தது. ஊருக்குள்ள குடிக்க தண்ணீர் வர்றதை நிப்பாட்டிடாங்க. பால் முதல் எதையும் வாங்க முடியல. நாங்க குழந்தைகளுக்கு சீனியை கரைத்துக் கொடுத்தோம். உதயகுமார் அண்ணன் உள்ளிட்ட அனைவருமே சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டி ருந்தாங்க. நான்தான் எல்லா சேனலுக்கும் பேட்டி கொடுப்பேன். தைரியமாக என் பெயர், ஊரைப் போடுங்கன்னு சொன்னேன். இது சம்பந்தமாக என் மேல 20 வழக்கு இருக்குது.

நான் கூடங்குளம் சம்பந்தமாக பல மேடை களிலும் பேசியிருக்கிறேன். ஒருமுறை கோயம் புத்தூரில் ஆறு நாட்கள் தங்கி மில் தொழில திபர்களை சந்தித்து கூடங்குள ஆபத்து பற்றி விளக்கினோம்.

அப்பொழுது அவர்களில் ஒருவர் “சிலிண்டரும் ஆபத்து என்று முதலில் சொன்னார்கள் அதை நாம் பயன்படுத்தவில்லையா” என்றார்.

அதற்கு நான் சொன்னேன், “கேஸ் வெடிச்சா ஒரு உயிர்தான் போகும் ஆனால், அணு உலை வெடிச்சா மொத்த ஊரே அழிந்து போயிடும்” என்றேன்.

“விஞ்ஞானி அப்துல்கலாம் விமானம் மோதி னாலும் ஆபத்தில்லை என்று சொல்லியிருக் கிறாரே” என்றார் மற்றொருவர்.

“அப்படி என்றால் அணு உலையை மோதி நிரூபிக்க சொல்லுங்கன்னு” நான் சொன்னேன்.

“ஆட்டோவுல போனா விபத்து நடக்குது. அதுக்காக ஆட்டோவுல போகாம இருக்கோமா” என்றார் இன்னொருத்தர்.

“ஆட்டோவுல போயி அடிபட்டா சுத்தி உள்ளவங்க வந்து காப்பாத்துவாங்க. ஆனால் அணு உலை வெடிச்சா யாரும் யாரையும் காப்பாத்த முடியாது” என்று விளக்கினேன்.

இப்படி நிறைய கேள்விகளுக்கு பதிலளித்து அவர்களுக்கு விளக்கினேன்.

2004ல் சுனாமி வந்தது. என் பையன் பிறந்து 2 மாதம் ஆகியிருந்தது. முதல் நாள் கிறிஸ்துமஸ். அடுத்த நாள் கடல் தினம். அதனால யாரும் தொழிலுக்காக கடலுக்கு போகல. அப்போ கடலுக்கு மீன் பிடிக்கப் போயிருந்தாங்கன்னா எல்லோரும் செத்திருப்பாங்க. அப்போ வந்த சுனாமியில 450 வீடுகள் இங்கே நாசமானது. 3 பேர் செத்தாங்க. வேளாங்கன்னி உள்ளிட்ட கடலோர கிராமங்களில் இறந்தவர்களை குழிதோண்டி கொத்து கொத்தா புதைச்சாங்க. அப்போ எங்க போனாங்க இந்த விஞ்ஞானிங்க? இந்தோனிஷியாவுல வந்து 6 மணி நேரம் கழித்து இங்க வந்த சுனாமியையே கண்டறிய முடியாத நாம எப்படி அணு உலை விபத்தை மட்டும் தடுக்கப்போறோம்? சுனாமி வந்தா தண்ணீர் உள்வாங்கும். அப்போ கூடங்குளத்துல குளீருட்ட தண்ணீர் தேவைக்கு என்ன செய்வாங்க?

கோயம்புத்தூரில் நடந்த பிரஸ் மீட்டில் எங்க கூட இருந்த அக்கா ஒருத்தங்க கோபத்துல மன்மோகன் சிங் பணம் வாங்கிட்டாருன்னு சொன்னாங்க. உடனே பிரஸ்காரங்க அதை நீங்க பார்த்தீங்களா, சாட்சி இருக்கான்னு திரும்பத் திரும்ப கேட்டாங்க. அப்ப மைக்கை வாங்கி நான் சொன்னேன்.

நாங்க அணுஉலையே வேண்டாமுன்னு தொடர்ந்து போராடிக்கிட்டு இருக்கோம். எங்களையே அமெரிக்காவிடம் பணம் வாங்கிட் டதா சொல்றாங்களே. அது எப்படி மத்திய அமைச்சகத்துக்கு தெரியாம வாங்க முடியுமா? அப்படியென்றால் லஞ்சம் கொடுத்திருப் போமுல்ல. அதை அந்த சிதம்பரம் காட்டட்டும். இந்த 2 அணு உலை வேண்டாமுன்னு பேராடிக்கிட்டு இருக்கிறப்போ இன்னும் 2 அணு உலை திறப்போமுன்னு சொல்றாரே மன்மோகன் சிங். அப்ப அவர்தானே பணம் வாங்கிட்டி ருப்பாருன்னு அர்த்தம். நான் சொல்றேன். இந்த சுந்தரி சொல்றேன். மன்மோகன் சிங் பணம் வாங்கியிருக்கிறாரு என்று பத்திரிக்கைகாரங்க கிட்டே சொன்னேன்.

ஏன்னா நாம இன்னும் 25 வருஷம் வாழ்ந் துட்டு போயிடுவோம். அதுக்குப்பிறகு நம்ம சந்ததியினர் வாழ வேண்டும் என்று ஆசை இருக்காதா! வள்ளியூர் நீதிமன்ற நீதிபதி சொன்னாங்க “அரசாங்கம் ஏற்படுத்தின திட்டத்தை எதிர்க்கிறது தேசிய குற்றமுன்னு”

உயிருக்கு ஆபத்துன்னு மக்கள் இத்தனை வருஷமா போராடிக்கிட்டு இருக்கோம். அதை மதிக்காம இந்த அரசாங்கம் இருக்கும். மக்களுக்குத்தான் அரசாங்கமே தவிர அரசாங் கத்துக்காக மக்கள் கிடையாது. அரசாங்கம் மக்களுக்காகத்தான் வேலை செய்யணும்னு

அவங்களுக்கு பதில் சொன்னேன்.

இந்தத் திட்டம் ஆரம்பிச்சப்ப ஏன் நீங்க எதிர்க்கலைன்னு வேற கேள்வி கேட்டாங்க. நான் அதை மறுத்து அவங்களுக்கு புரிய வைச்சேன். 1989லேயே போராட்டம் நடந்தது. ஆனால் இப்பப் போல தொடர்ச்சியா போராடல. 20 வருஷத்துக்கு முன்னால எங்க அப்பா, அப்பா படிக்கலை. அதைப் பத்தி அவங்களுக்கு ஒண்ணும் தெரியல. ஆனால் இப்ப என் பிள்ளைங்க படிக்க ஆரம்பிச்சிட்டாங்க. இப்ப அவங்களுக்கு இதுபற்றி நல்லா தெரியுது. உங்க அம்மா அப்பா போராடல. நீ ஏன் போராடறேன்னு எப்படி கேள்வி கேட்க முடியும்.

ஒரு முறை மதுரை கல்லூரியில் பெண்கள் தினத்தை ஒட்டி பேசப்போனேன். கூடங்குள விவகாரம் குறித்து நிறைய விஷயங்களை சொல்லிக்கொண்டிருந்தேன். அது முடிந்த உடன் ஏதாவது சந்தேகம் அல்லது கேள்வி இருந்தா கேளுங்க என்று முதல்வர் கூறினார். அப்போ ஒரு கல்லூரி மாணவி அணு உலை வந்தா அறிவியல் வளரும். அமெரிக்காதான் வல்லரசு ஆகணுமா, நாம ஆகக்கூடாதா என்றார். ஏன் நீங்க அதைத் தடுக்கிறீங்க, கூடங்குளத்தால மின்சாரம் தமிழகத்துக்குக் கிடைக்குமே என்று கேள்வி எழுப்பினார்.

நான் அவளுக்குச் சொன்னேன், உன்னைய பல லட்சம் கொடுத்து உன் பெற்றோர், நல்லா இருக்க வேண்டும் என்பதோடு நாலு பேருக்கு துணையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே படிக்க வைக்கிறாங்க. யாராவது வீணாப் போக வேண்டும் என்பதற்காக படிக்க வைப்பார்களா? ஆனால் மக்களை அழிக்கக் கூடிய இந்த திட்டத்திற்கு ஏன் இவ்வளவு செலவு செய்யணும்.? அப்புறம் அணு உலை மட்டுமே நாட்டின் முன்னேற்றம் கிடையாது. மக்களை வாழ வைப்பதில்தான் அறிவியல் இருக்க வேண்டும். முதலில் எல்லோ ருக்கும் வீடு, அடிப்படை வசதிகளை செய்து தந்து நல்லாட்சி புரியட்டும். பாத்ரூம், கழிப்பிடம் வசதி தரட்டும். பிறகு வல்லரசாகலாம். வேண்டுமானால் அணு உலையை கூடங்குளத்திலிருந்து மதுரைக்குக் கொண்டு வந்து வைத்துக் கொள்ளுங்கள். மின்சாரத்தை எடுங்கள், அறிவியலை வளர்த்துக் கொள்ளுங்கள் என்றேன்.

உடனே எல்லோரும் அந்த மாணவியை திட்ட ஆரம்பித்தார்கள். நானே இப்படி நிறைய கேள்விகளை கேட்டுக் கேட்டுத்தான் தெளிவு பெற்றேன் என்று எல்லோரையும் சமாதானப்படுத்தினேன். அங்கிருந்த ஒரு ஆசிரியர் கூடங்குள அணு உலைக்காக செலவு செய்யப்பட்ட பதினாலாயிரம் கோடி வீணாகிவிடுமே என்று கேள்வி எழுப்பினார்.

14ஆயிரம் கோடி ரூபாய் பணம் மக்கள் பணம்தானே. மக்களை காக்க வேண்டும் என்றால் அந்த பணத்தைப் பற்றி கவலைப்படக்கூடாது.

அது என்ன ஜெயலலிதாவோ, மன்மோகன் சிங்கோ வீட்டிலிருந்து கொண்டு வந்த பணமா என்ன? ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல் செய்தார்களே? அது யாருடைய பணம்? சேது சமுத்திர திட்டத்தில் இல்லாத பாலம் இருக்கு என்று சொல்லி பல்லாயிரம் கோடியை வீணாக்கி னார்கள். அது பற்றி யாரும் கேட்க வில்லையே? அது எல்லாம் யாருடைய பணம் மக்களுடையது தானே?. பதினாலாயிரம் கோடி பெரிதா? மக்கள் உயிர் பெரிதா?

மருந்துக் கடையில் போய் நூறு ரூபாய்க்கு மருந்து வாங்குகிறீர்கள் என்றால் அது விஷம் என்று தெரிந்த பிறகு தூக்கிப் போடுவீர்களா இல்லை நூறு ரூபாய் வீணாகிவிடும் என்று அதை குடிப்பீர்களா? என்றேன்.

கூடங்குளம் செயல்பட ஆரம்பிச்சாலே கதிரி யக்கம் பரவும். வெடிச்சா மட்டும் கதிரியக்கம் பரவும் என்றில்லை. இது எல்லோருக்கும் தெரிஞ்சிருந்தும் செயல்படுத்தத் துடிக்கிறாங்க.

பல வேலைகளில் ஈடுபட்டிருந்த மக்களை எப்படி ஒருங்கிணைத்தீர்கள்?

கடல் தொழிலைப் பொறுத்தவரை எல்லோரும் முதலாளிதான். அவரவர் தொழிலை அவரவர் களே பார்த்துக்கொள்வார்கள்.அவர்களே முதலாளி. அவர்களே தொழிலாளி. இப்பொழுது போராடவில்லை என்றால் எங்கள் தொழில், வீடு என எல்லாவற்றையும் நாங்கள் இழப்போம். கடல்ல வேலை பார்த்தவர்கள் சுதந்திரமாக இருந் தவர்கள். அவர்களால் வேறு எங்கும் போக முடியாது. வேறு யாரிடமும் போய் வேலை பார்க்க முடியாது. இந்த வாழ்க்கையை அவர்களால் விட்டுத்தர முடியாது. அதனால் போராட்டத் திற்குத் தள்ளப்பட்டார்கள். நான் கல்பாக்கத்தில் பல குழந்தைகள் கை, கால் ஊனமாக இருப்பதை பார்த்திருக்கிறேன். நம் குழந்தைகளும் வருங் காலங்களில் இப்படித்தான் இருக்கும் என்பதை எங்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்வேன்.

அங்குள்ள பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை இருக்கு. நிறைய பெண்களுக்கு கர்ப்பப்பைக் கோளாறு ஏற்பட்டிருப்பதை அறிய முடிந்தது. அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும்? இப்போதே அங்க நிறைய குழந்தை புத்தி சுவாதீனமற்று இருக்கின்றன.

கல்பாக்கத்தில் 290 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படுது. ஆனால் கூடங்குளத்தில் 2000 மெகா வாட்டிற்கு மேலே மின்சாரம் தயாரிக்கப் படுது. அப்போ இங்கே இதன் பாதிப்பு எப்படி இருக்கும். இதையெல்லாம் அவர்களிடம் விளக்கினேன். வீடு, குழந்தை மற்றும் கணவரை கவனித்தவாறே போராட்டத்தில் ஈடுபட்டது ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் என்ன செய்வது வேற வழியில்லையே. போராட் டத்தில் இறங்கினால்தான் தமது பிள்ளைகளைக் காப்பாற்ற முடியும்.

கூடங்குளம் மற்றும் இடிந்தகரையிலுள்ள உள்ள பெண்களின் மனநிலையை மாற்றி விட்டீர்கள், அதிகாரத்தில் உள்ள இரண்டு பெண்களின் மனதை எப்படி மாற்ற போகிறீர்கள்?

சாதாரணமான பெண்கள் மக்களுடைய துன்பத்தை அறிந்திருப்பார்கள். அதிகாரத்தில் இருக்கும் இரண்டு பெண்களுக்கு இது ஆபத்து என தெரியும். ஆனால் அவர்களின் சுயநலம் அவர்களின் மனதை மாற்ற இடம் கொடுக்காது. அதுமட்டுமின்றி அவர்களால் தைரியமாக வேண்டாம் என்று சொல்லவும் முடியவில்லை. இத்தனை நீண்ட போராட்டத்திற்கு பின்பு அவர்கள் பிடிவாதம் பிடிப்பது மக்கள் மீது அவர்களுக்கு அக்கறையில்லை என்பதைத்தான் காட்டுகிறது. இருந்தும் அய்யா குடும்பத்தை மட்டும் வளர்க்கிறார் என்று அம்மாவுக்கு வாக்களித்தால் அவர்கள் நம்ப வைத்து எங்களை ஏமாற்றி விட் டார். அவரும் ஒரு பெண்தானே. நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம், அவர் மனம் மாறுவார் என்று. அதுவரை நாங்க போராட்டத்தைக் கைவிட மாட்டோம்.   

பெண்களைப் போராட்டத்தில் முன்னிலைப் படுத்துவதாக குற்றஞ்சாட்டுகிறார்களே?

பெண்கள் நாட்டின் கண்கள்னு சொல்கிறார் கள். ஏன் கண்கள் எனச் சொல்கிறார்கள்? பெண் களைச் சக்தி என்றும் சக்தியில்லையேல் சிவன் இல்லை என்று சொல்கிறார்களே. அது வெறும் வார்த்தைதானா? பெண்களைப் போராட்டத்தில் முன்னிலைப்படுத்தக் கூடாது என்றால் பெண்கள் என்ன அவ்வளவு கேவலமானவர்களா? நாட்டை பெண்கள் ஆளலாம், ஆனால் பெண்கள் போராடக் கூடாதா? ஆணும், பெண்ணும் சமம் தான். பைபிளிலோ, வேதத்திலோ எங்குமே பெண் கள் இழிவானவர்கள் என்று சொல்லவில்லையே.

உங்கள் சிறை அனுபவம் எப்படி இருந்தது?

எனக்கு முப்பத்து ஏழு வயது ஆகிறது, ஆனால் என் வாழ்விலே மறக்க முடியாதது சிறை அனுபவம்தான். செப்டம்பர் ஐந்தாம் தேதி கைதானேன். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது குண்டு விழுந்த புகை கிளப்பியதால மயங்கிட்டேன். சிறிது நேரம் கழித்து தான் நினைவு திரும்பியது. மாலை ஐந்து மணிவரை ஐஸ் பிளாண்ட்ல சிறை வைத்திருந் தார்கள். அடுத்து ராதாபுரம் ஸ்டேசனுக்கு கொண்டு போனாங்க, அங்கே பாத்ரூம் போகிற வழியில சின்ன இடுக்கான இடத்தில் எங்களை வைத்திருந்தார்கள். காலை மாற்றிக் கூட வைத்துக் கொள்ள முடியாது. காலை ஒன்பது மணி யிலிருந்து இரவு பதி னொரு மணிவரை கேஸ் எழுதினார்கள். அடுத்த நாள் இரவு பதினோரு மணிக்குத்தான் வள்ளியூர் கோர்ட்டுக்கு அழைத் துப் போனார்கள். அடுத்த நாள் மதியம் 12மணிக்குத் தான் சிறையில் ஒப்படைத் தார்கள். ஒவ்வொரு இட மாக நிறுத்தி சும்மாவே வைத்திருந்தார்கள். மூன்று நாளாக உடுத்த ஆடையில் லாமல் அதே உடையில் இருப்பது மன உளைச் சலைத் தந்தது.

அடுத்த நாள் திருச்சி சிறையில் அடைத் தார்கள். இவ்வளவு பெரிய சிறையை இது வரை டிவியிலதான் பார்த்திருக்கிறேன், இவ் வளவு பெரிய குற்றமா செய்துவிட்டேன் என்று திகைத்து நின்றேன். அங்கே மிகவும் என்னால் தாங்கி கொள்ள முடியாதது ஒன்று எங்கள் ஆடைகள் அனைத்தையும் கழற்றி எங்களை பரிசோதனை செய்தார்கள். அப்பொழுதுதான் நான் வெட்கி தலைகுனிந்து போனேன். நாற்பது பெண் கைதிகளுடன் ஒன்றாக எங்களையும் அடைத் தார்கள். அங்கே படுத்து உறங்க மிகவும் கஷ்டமாக இருந்தது. அங்கே மலக்குழாயையும், சாக்கடையையும் பெண்களே அள்ளுகிறார்கள். அது மனிதர்கள் வாழக்கூடிய இடமாகவே இல்லை. கர்ப்பமாக வந்த பெண்கூட அங்கேயே பெற்றுக்கொண்டு தன் குழந்தையுடன் வாழ் கிறாள். அங்கே பெண்கள் மீது சமூக அமைப்பு செய்யும் பெண்ணடிமைத்தனத்தை நன்கு அறிய முடிந்தது. தண்டனை மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமே தவிர அவர்களின் வாழ்க்கையை பாழாக்குவதாக இருக்கக் கூடாது. ஆனால் இவர் கள் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு தவறையும் அங்கிருக்கும் பெண்கள் செய்யவில்லை. சமூகம்தான் அவர்களைக் குற்றவாளிகளாக உருவாக்கி இருக்கிறது. குற்றங் களைச் செய்யத் தூண்டியிருக்கிறது. அவர்களுக்கு யார் தண்டனை கொடுப்பது என்று நானே கேள்வி எழுப்பிக்கொண்டேன். அவர்களுக்கு ஏதாவது உதவ வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

உங்கள் மேல் எத்தனை வழக்கு இருக்கிறது? அதை எப்படி கடந்து வர வேண்டும் என நினைக்கிறீர்கள்?

முதலில் நாட்டு வெடி குண்டு வீசியதாக ஒரு வழக்கு. பிறகு போலீஸ் வாகனத்தை தாக்கியதாக மற்றொரு வழக்கு என் மீது பதியப்பட்டிருக்கிறது. அடுத்து ஒரு நகைச்சுவை யான வழக்கு.

கோர்டில் நீதிபதி “உன் மீது என்ன வழக்குன்னு தெரியும்மான்னு” கேட்டார்.

“இல்ல தெரியலன்னு சொன்னேன்”

“நீ திருநெல்வேலி கலெக் டரைக் கடத்த முயற்சித்ததாக வழக்கு பதியப்பட்டுள் ளது” என்றார் நீதிபதி.

உடனே அங்கே இருந்த வழக்கறிஞர்களும் மற்றவர்களும் சிரிக்க ஆரம்பித்தார்கள்.

உடனே நீதிபதி “ஏன் எல்லோரும் சிரிக்கிறீங்க” என்று எச்சரித்தார்.

“இந்த நாட்டில் ஒரு கலக்டருக்குக் கூட பாதுகாப்பில்லை என்றால் மக்களை எப்படி காப்பாற்றப் போகிறார்கள்” என்றேன்.

அடுத்தது முதல்வரையும், பிரதமரையும் விமர்சித்ததாக வேற வழக்கு இருக்கு.

“ஒரு முதல்வரையோ, பிரதமரையோ எதிர்க் கட்சிகள் விமர்சிக்கலாம். ஆனால், சுயநலத்திற் காக எங்கள் வாழ்வோடு விளையாடும் அவர்களை நாங்க ஏன் விமர்சிக்கக் கூடாது?”

மொத்தம் 80 நாட்கள் சிறையில் இருந்திருக் கிறேன். நீ பேசியது இன்டெர்நெட், டிவி வழியா சோனியா காந்தி எல்லோரும் பார்த்துட்டாங்க. உனக்கும் இந்த போராட்டத் திற்கும் சம்பந்த மில்லை. உதயக்குமார்தான் உன்னைய தூண்டி விட்டு பேச வைத்தார் என்று கையெழுத்துப் போடு. உன்னைய விட்டு விடுவார் கள் என சொன்னார்கள். உடனே நான் சிரித்தேன். உதயகுமார் இன்னைக்கு இருப்பார் நளைக்குப் போவார். அவருக்காக நான் போராடவில்லை. நாங்கள் வாழும் இடத்தில்தான் எங்கள் சந்ததின யினர் வாழ்வார்கள். எங்களால் வேறு எங்கேயும் போக முடியாது. எங்களுக்கு அடுத்த தலைமுறை இங்கே வாழ வேண்டும் என்றுதான் நாங்கள் போராடுகிறோம். இந்த அணு உலை இருந்தால் இங்கிருக்கும் மக்கள் ஆரோக்கியமாக வாழ முடியாது என்று சொல்லி மறுத்து விட்டேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். என் சந்ததியினருக்காக என் உயிரை விட வும் தயாராக இருக்கிறேன் என்றேன்.

உங்களுக்கு சமூகத்தில் உயர்ந்த பொறுப்பு கிடைத்தால் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?

முதலில் அனைத்து பெண்களுக்கும் கல்வி கொடுக்க வேண்டும். கல்வி கற்றால் அவர்களுக்கு தன்னம்பிக்கை கிடைத்துவிடும். நாலு பேருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும், பிறகு அவர்களுக்குத் தேவையானதை அவர்களே தேடிக்கொள்வார்கள்.

உங்கள் போராட்டத்தை எப்படி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைக்கிறீர்கள்?

சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் எங்கள் போராட்டத்தின் வடிவத்தை மாற்றிக் கொள்ள நினைக்கிறோம். அறவழிப் போராட்டத்தை தான் போராட நினைக்கிறோம். இனி எங்கள் போராட்டம் எப்படி இருக்கும் என்று அரசின் கொள்கைதான் முடிவெடுக்க வைக்கும். எங்கள் உயிர் இருக்கும்வரை மண்ணையும், மக்களையும் காப்பாற்ற போராடிக் கொண்டிருப்போம்.

சந்திப்பு: குட்டி ரேவதி

உதவி: தோழர் முகிலன், கவிஞர் ஜி.எஸ்.தயாளன், கவிஞர் என்.டி. ராஜ்குமார், பத்திரிகையாளர் ரோஸ்ஆன்ட்ரோ

Pin It