ஈர நெஞ்சம்

“தோழர், எப்போது மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றாலும் என்னை அழையுங்கள்; எங்கிருந்தாலும் வந்து விடுவேன். வர இயலாத சூழல் இருந்தால் மட்டுமே யாரையாவது அனுப்பி வைப்பேன். கவலைப்பட வேண்டாம், நான் இருக்கிறேன். தோழர், நீங்கள் யாரையும் தேடிக் கொண்டிருக்க வேண்டாம்,” என்று எனக்கு ஆறுதலாய் இருந்தவர் தோழர் மோகன்ராசு.

இரத்த நாளங்களில் நீலம்பாரித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தைத் தொழிலாளி ஒருவனை, நண்பர் ஒருவர், “இலவயமாக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு, தொடர் மருத்துவத்திற்கு ஓராண்டு வரை மாதம் ரூ.ஆயிரம் வேண்டும் என்ற நிலையில் கைவிடப்பட்டவன்; யாரிடமாவது சொல்லி உதவி பெற்றுத் தாருங்கள்,” என்று என்னிடம் அழைத்து வந்தார். உடல் நலமின்றி வெளியில் செல்ல இயலாத நிலையில் அலைபேசியில் அழைத்து, “தோழர், இந்தச் சிறுவனுக்கு ஏதாவது செய்ய முடியுமா?” என்று கேட்டபோது, “தொழிலாளிச் சிறுவன், நாம் செய்யாமல் வேறு யார் செய்வார்கள் தோழர்?” என்று கேட்டுவிட்டு, “வரச் சொல்லுங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்,” என்றார்.

இது என் ஒருவனுடைய அனுபவம் மட்டுமல்ல. இது போல அவருடன் பழகிய நூற்றுக்கணக்கான தோழர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த அனுபவம் உறுதியாக இருக்கும். அந்த அளவுக்கு ஆழமான மனிதநேயம் கொண்ட தோழர். அவருக்குள் இருந்த இந்த மனிதநேயமே அவரை ஒரு மிகச் சிறந்த தொழிலாளர் தலைவராய், சமூகப் போராளியாய், தேச விடுதலைப் போராளியாய் வளர்த்தெடுத்தது.

எளிய தொடக்கம்

1966ஆம் ஆண்டு டிசம்பர் 5 அன்று, மூட்டை தூக்கும் தொழிலாளி முத்துசாமிக்கும், பாப்பாத்திக்கும் மகனாகப் பிறந்தார்; மணி, இராமச்சந்திரன், இராசேந்திரன் என்று மூன்று மூத்த உடன்பிறப்புகளுடன் நான்காவதாகப் பிறந்தார். அனைவருமே கடுமையான உழைப்பாளிகள். குடும்பமே உழைப்பாளிக் குடும்பம். அருகிலிருந்த தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆறாவது வரை மட்டுமே அவரால் படிக்க முடிந்தது. சிறு வயதிலேயே இரும்பு ஷட்டர் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் உதவியாளராக உழைக்கத் தொடங்கினார். ஐந்து ஆண்டுகள் வரை அங்குப் பணிபுரிந்துவிட்டு நகை வணிகர் ஒருவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அப்பொழுதுதான் அவருக்குத் திரும்ணம் நடந்தது; கவிதா அவர்கள் அவருக்கு ஏற்ற துணையாக, தோளோடு தோள் கொடுக்கும் போராளித் தோழியாக வந்து சேர்ந்தார். அவர்களுக்கு, தமிழ்மொழி(12ஆம் வகுப்பு), என்ற மகளும். புகழேந்தி (10ஆம் வகுப்பு) என்ற மகனும் உள்ளனர்.

பெருவணிகத்தால் பாதிக்கப்பட்ட அந்தத் தொழிலிருந்து விடுவித்துக் கொண்டு, அர்ப்பணிப்பும் போர்க்குணமும் கொண்ட மிகச் சிறந்த தொழிலாளர் தலைவராக அவரை வார்த்தெடுத்த உலைக்களமான ஓன்கார் துணி ஆலையில் ஒரு சாதாரணத் தொழிலாளியாகச் சேர்ந்தார்.

மாசுக் கழிவு மிகுந்த சுற்றுச்சூழல், நச்சுக் கலந்த வேதிப்பொருள்கள், நுரையீரலை நைந்துபோகச் செய்யும் பஞ்சுப் புழுதி, அச்சமூட்டும் இயந்திரங்கள் இவற்றிடையே தொழிலாளர்கள் கடுமையாக உழைத்துக் கொண்டு, கொடுத்த ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு, வேலைப் பாதுகாப்போ, போதிய உடல்நலப் பாதுகாப்போ இன்றி ஏழ்மையில் வாழ்ந்து கொண்டிருந்த தொழிலாளிகளோடு தானும் ஒரு தொழிலாளியாக ஆனார்.

எஃகு உறுதி கொண்ட போர்க்குணம்

ஆலைகளில் தொழிலாளர்களுக்குப் பணிப் பாதுகாப்பும் சட்டப்பாதுகாப்பும் எவ்வகை உரிமைகளும் இல்லாத நிலை கண்டு அன்று கொதித்துப் போன தோழர், தொழிற்சங்கப் பணிகளை முடுக்கிவிட்டார். ஊதிய உயர்வு, எட்டு மணி நேர வேலை, முறையான உடல்நலப் பாதுகாப்பு, பராமரிப்பு என்ற கோரிக்கைகளோடு அடுத்தடுத்த போராட்டங்களை முன்னெடுத்தார். அப்போது தோழர் பொழிலன் தலைமையில் இயங்கிய தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் அவருக்கு ஆதரவு தந்தது; துணை நின்றது.

400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விட்டுக் கொடுக்காத போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆர்ப்பாட்டம், உண்ணாநிலை, உள்ளிருப்பு, கதவடைப்பு, சட்டத்தடை, வாயிற்கூட்டம், கைது, எண்பதுக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உட்பட சிறைவாசம் என்று அடுத்தடுத்துப் போராட்டங்கள் தொடர்ந்தன. அரசியல் கட்சிகளின் கருங்காலித்தனம், தலையீடு, அச்சுறுத்தல்களும் தொடர்ந்தன. இறுதியில் அப்பகுதி சார்ந்த அரசியல் கட்சி ஒன்றின் முக்கியப் பிரமுகர் ஒருவரின் கொலையில் அது முடிந்தது. அதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் கடும் அடக்குமுறைக்கு உள்ளானார்கள்; சிதறடிக்கபட்டார்கள். கொலையில் தொடர்புபடுத்தப்பட்டு, தோழர் மோகன்ராசு உட்பட தொழிற்சங்கத் தோழர்கள் செகதீசு, முருகேசன், சங்கர் (இவர்தான் இப்போது தோழரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்ட்டுள்ளவர்) ஆகிய நால்வர் சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்களின் விடாமுயற்சியான வழக்குமன்றப் போராட்டத்தின் மூலம் வெளியில் வந்த தோழர்கள் மீண்டும் தொழிற்சங்கப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இறுதியில் போராட்டம் வென்றது. அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வு, வேலை நிரந்தரம், போனசு உட்பட அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுத் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர். தொழிற்சங்க வரலாற்றில் ஓன்கார் துணி ஆலைத் தொழிலாளர் போராட்டம் போன்ற ஒரு மாபெரும் வெற்றிகரமான போராட்டம் இப்பகுதியில் நடந்ததில்லை. அதேநேரத்தில் கொலை வழக்கிலிருந்தும் தோழர்கள் நால்வரும் நீதிமன்றத்தால் விடுவிக்கபபட்டார்கள் இது ஒரு பெரும் வீச்சை ஏற்படுத்தியது.

தமிழகத் தொழிலாளர் முன்னணி

இந்த வெற்றிக்குத் தோழரின் போர்க்குணமும் செயல்வீரமும் தொழிலாளர்கள் மீது அவர் கொண்டிருந்த அன்பும் பாசமும் அவருடன் தோள் கொடுத்து நின்ற விசயகுமார், செகதீசு, முருகேசன், சங்கர் ஆகியோருடன் பிற முன்னணித் தொழிலாளத் தோழர்கள் ஒத்துழைப்பும்தாம் முதன்மையான காரணங்களாகும். இந்த வெற்றி அந்தப் பகுதியில் இருந்த தொழிலாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்தது. அதுவரை மிகக் குறைந்த கூலிக்கு நாளெல்லாம் பாடுபட்டு வந்த சவுளித் தொழிலாளர்கள் தோழரின் தலைமையில் சவுளித் தொழிலாளர் சங்கமாக ஒன்றுபட்டுப் போராடினார்கள். அவர்கள் அப்போது பெற்றுக் கொண்டிருந்த கூலியை விட எட்டு மடங்கு கூலி உயர்வு பெற்றார்கள்.

அதையடுத்து, இதுவரை தமக்கென்று தொழிற்சங்கம் என்ற ஓன்று இல்லாமலே இருந்து வந்த துறைகள் சார்ந்த தொழிலாளர்களுக்கு, கட்டில் பீரோ தயாரிப்புத் தொழிலாளர் சங்கம், பெட்ரோல் பங்க் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றை உருவாக்கி அவர்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்தார். மேலும் இந்தச் சங்கங்களைத் தமிழகத் தொழிலாளர் முன்னணி என்ற பேரமைப்பில் ஒன்றுபடுத்தினார்.

தமிழகத் தொழிலாளர் முன்னணியைத் தமிழக அளவில் விரிவாக்கும் துடிப்போடு சென்ற ஆண்டு மே மாதம் ஈரோட்டில் தொழிலாளர் மாநாட்டை நடத்தினார். அதில் தென் மாவட்டங்களிலிருந்தும் கடலோர மாவட்டங்களிலிருந்தும் பாத்திரத் தொழிலாளர்கள், மீனவத் தொழிலாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பேரணி, கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்கம், பொதுக்கூட்டம், புகைப்படக் கண்காட்சி என்று அந்த மாநாடு மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.

அதுமட்டுமின்றி கோவை பிரிகால் தொழிலாளர் போராட்டம், சென்னை ஹ¨ண்டாய்த் தொழிலாளர் போராட்டம் ஆகியவற்றை ஆதரித்துத் துண்டறிக்கைகள் வெளியிட்டதோடு, தோழர்களுடன் தாமே நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

பாட்டாளிகள் படிப்பகம்

தொழிற்சங்கப் போராட்டத்தின் பின்விளைவாக அற்புதம் ஒன்றும் நடந்தது. அதுதான் பாட்டாளிகள் படிப்பகம். தொழிற்சங்கப் போராட்டத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து, அப்பகுதி அரசியல் பிரமுகர் ஒருவர் அதுவரை தம் கட்டுப்பாட்டில் இருந்துவந்த பொது இடத்தை, பாட்டாளிகளுக்கென்று படிப்பகம் ஒன்றை அமைத்துக் கொள்வதற்கு வழங்கிவிட்டார். கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தொழிலாளர்களும் அவர்களுடைய குழந்தைகளும் வந்து, அமர்ந்து, படித்துச் செல்லும் ஓர் அருமையான படிப்பகமாக அது சிறந்து விளங்குகிறது.

அது வெறும் படிப்பகமாக மட்டும் இல்லை. ஆண்டு தோறும் குழந்தைகளுக்குக் கட்டுரைப் போட்டிகள், ஓவியப் போட்டிகள் போன்றவற்றை நடத்திப் பரிசு வழங்கியும், மார்க்சு, இலெனின், மாவோ, பெரியார், அம்பேத்கர், பகத்சிங், சிங்காரவேலர் போன்ற மக்கள் நாயகர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியும் அது பெரும் பங்காற்றி வருகிறது

மேலும் தோழர் உமாபதியின் துணையோடு, படிப்பகம் மூலம், குழந்தைகளைச் சுற்றுச் சூழல் கல்வி, சிலம்பாட்டம் போன்ற தற்காப்புப் பயிற்சி, கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றில் ஈடுபடுத்தி, அவர்களுக்குச் சமூக உணர்வை ஏற்படுத்தினார்.

பெரியார் வாழ்க்கைப் புகைப்படக் கண்காட்சி, ஈரோடு வரலாற்றுப் புகைப்படக் கண்காட்சி, ஈழத்தமிழர் மீதான ஒடுக்குமுறையும் அவர்களுடைய வீரஞ்செறிந்த போராட்டமும் பற்றிய கண்காட்சி ஆகியவற்றை நடத்தி மக்களிடையே படிப்பகம் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

படிப்பகத்தில் கார்ல்மார்க்சு, பெரியார், அம்பேத்கர், தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்றவர்களின் படைப்புக்களும் மேலும் பல வரலாற்று நூல்களும், தலித்திய நூல்களும், சமூக வரலாற்று நூல்களும், அறிவியல் விழிப்புணர்வு நூல்களும் இடம்பெற்றுள்ளன. ஆண்டு தோறும் புதிய நூல்கள் வாங்கிச் சேகரிக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களும், ஆராய்ச்சி மாணவர்களும்கூட படிப்பகத்தால் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். படிப்பகத்தோடு உள்ள அரங்கில் அவ்வப்போது கூட்டங்களும், கருததரங்குகளும், பிற நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. படிப்பகத்துக்கு வந்து செல்லும் ஒருவர் கூட அதைப் பாராட்டாமல் சென்றதில்லை..

ஆறாவது வரை மட்டுமே படித்துள்ள தோழருக்கு, படிப்பகம் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது; படிக்கப் பழகிக்கொண்டு, படிப்பகத்தில் அமர்ந்து ஆர்வத்துடன் படிப்பார்.

அரசியல் போராளியாய்...

தொழிற்சங்க நடவடிக்கைகளோடு அவருடைய செயல்பாடுகள் ஒருபோதும் நின்றதில்லை. இளம் வயதில், தொடக்கத்திலிருந்தே மக்கள் பணியில் ஆர்வத்துடன் இருந்து வந்தார். நண்பர்களுடன் சேர்ந்து விப்சியார் (நிறமாலை) அசோசியேசன் என்ற பெயரில் சங்கம் அமைத்துப் பல நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் நடத்தி வந்தார். மந்திரமா தந்திரமா போன்ற திராவிட இயக்க நிகழ்ச்சிகளைக் கண்டு ஈர்க்கப்பட்டு கடவுள் மறுப்பிலும் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலிலும் ஆர்வம் கொண்டார். தோழர் பொழிலன், தோழர் தியாகு, தோழர் ஓவியா, தோழர் அருள்மொழி என்று இந்த வரிசையில் பலரையும் அழைத்துக் கூட்டங்கள் நடத்தினார். இதுவே அவருக்கு முதலில் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தோடு தொடர்பை ஏற்படுத்தியது. அதன் ஆதரவையும் வழிகாட்டலையும் ஏற்றுச் செயல்பட்டு வந்த தோழர், தொழிற்சங்கத்துக்கும் அரசியல் வழிகாட்டுதலுக்கும் இடையிலான உறவு குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் த.ஒ.வி.இ. விலகிக் கொள்ள, தமிழ்த் தேசிய விடுதலையில் கொண்டிருந்த ஆர்வம் காரணமாகத் தோழர் தியாகு தலைமையில் இருந்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் இணைந்தார். இருந்த போதிலும் த.ஒ.வி,இ. தோழர்களோடு நட்பாகவே பழகி வந்தார்.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் ஈரோட்டில் தமிழக எல்லைக் காப்பு, எல்லை மீட்புக்கான மாபெரும் மாநாடு ஒன்றை முன்னின்று நடத்தினார். காவிரிச் சிக்கலை ஒட்டி நடைப்பயணம், தஞ்சைப் பகுதியில் நான்கு மாவட்டங்களில் நெடுநடைப் பயணம், ஈரோட்டில் குறுநடைப் பயணம், முல்லைப் பெரியாறு அணைப் போராட்டம், பரமக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்த போராட்டம், தருமபுரியில் தலித்துக்கள் வீடுகள் எரிக்கப்பட்டதைக் கண்டித்த போராட்டம் உள்ளிட்ட, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம முன்னெடுத்த அனைத்துப் போராட்டங்களையும் தோழர் முன்னின்று வெற்றிகரமாக நடத்தினார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் துரோகமிழைத்த காங்கிரசை எதிர்த்துப் பரப்புரை இயக்கத்தை முன்னின்று நடத்தினார். பலவேறு போராட்டங்களுகாகப் பலமுறை கைது செய்யப்பட்டார்; சிறை சென்றார்.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தோழர் தியாகு மீது நம்பிக்கை இழந்து செயல்வீரரான தோழரிடம் பொதுச் செயலர் பொறுப்பை ஒப்படைத்தது. தோழர்கள் சிவகாளிதாசன், கதிர்நிலவன், வேலிறையன் ஆகியோரின் ஒத்துழைப்போடு அப்பொறுப்பைத் தோழர் மிகச் சிறப்பாக ஏற்றுச் செயல்பட்டு வந்தார்.

மானமும் அறிவும்

பிற இயக்கங்களின் தோழர்கள் சிலருடன் சேர்ந்து ‘மானமும் அறிவும் பயிற்சிப் பாசறை’ என்ற அமைப்பின் பெயரில் ஏராளமான சாதி மறுப்புத் திருமணங்களை முன்னின்று நடத்தினார். தேவைப்பட்டபோது ஆதிக்கச் சாதி வெறியர்களிடமிருந்து சாதி மறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்தார்.

மானமும் அறிவும் சார்பில் பல வெளியீடுகள் கொண்டுவரப் பெரிதும் துணை நின்றார். காசுமீர் ஒப்பந்தம், இலங்கை இந்திய ஒப்பந்தம், நேபாள விடுதலைப் போராட்டம், ஈழ விடுதலைப் போராட்டம், மனித உரிமைகளும் நீதிமன்றங்களும் ஆகியன குறித்த சிறுவெளியீடுகள் மிகவும் பரவலான வரவேற்பைப் பெற்றன.

தமிழீழ விடுதலைப் போருக்கு ஆதரவாக...

தமிழீழ மக்கள் விடுதலைப் போரில், விடுதலைப் புலிகளின்பால் உணர்சசிமயமான நம்பிக்கையை வைத்துச் செயல்பட்டார். செஞ்சோலைப் படுகொலை நிகழ்வைக் கண்டித்து மன்மோகன் சிங் கொடும்பாவி எரிப்பு, இந்தியத் தேசியக் கொடி எரிப்புப் போராட்டம், முத்துக்குமாரை இழிவு படுத்திய ஈ.வி.கே.எஸ். இளங்கோவனைக் கண்டித்த போராட்டம், இலங்கைக்கு ஆதரவான இராணுவத் தளவாட வழங்கலை மறித்த போராட்டம், தோழர்கள் சீமான், மணியரசன், கொளத்தூர் மணி ஆகியோருடன் சேர்ந்து ஈரோட்டில் நடத்திய போராட்டம் ஆகிய அனைத்துப் போராட்டங்களிலும் சிறை சென்றார். ஈரோட்டில் அல்லது தமிழகம் தழுவிய அளவில் நடந்த எந்த ஓர் ஈழ ஆதரவுப் போராட்டமும் அவரில்லாமல் நடந்ததில்லை என்னும் அளவுக்கு அதில் இரண்டறக் கலந்திருந்தார்.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும் தமிழகத் தொழிலாளர் முன்னணியும் இணைந்து ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து ஈரோட்டில் நடத்தி வந்த மாவீரர்நாள் வீரவணக்க நிகழ்வு உணர்ச்சிமயமான ஒரு நிகழ்வு ஆகும். அதில் தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டுக் குடும்பத்துடன் பேரணியிலும் வீரவணக்க நிகழ்விலும் கலந்துகொள்வார்கள். அவர்கள் அதில் கலந்துகொள்வதற்காக அவர்களது தொழிற்சங்கம் சார்ந்த நிறுவனங்களிடம் போராடி ஊதியத்துடன் கூடிய விடுப்பைப் பெற்றுக் கொடுத்திருந்தார். 2011இல் அவர் நடத்திய வீரவணக்க நிகழ்வில் காசுமீர் விடுதலை ஆதரவுத் திங்கள் இதழான ‘கன்வேயர்’ ஆசிரியர் அகமது அவர்களைக் கலந்துகொள்ளச் செய்திருந்தார். 2012ல் புகழ்பெற்ற ஈழத்து இளங்கவிஞர் தீபச்செல்வன் அவர்களை அழைத்து மாவீரர் நாளில் சிறப்புரையாற்றும்படி செய்தார். தமிழீழ மக்கள் விடுதலைக்கு ஆதரவாக அவர் ஆற்றிய பணிகளை அளவிட முடியாது.

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போருக்கு ஆதரவாக....

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான தமிழ்நாடு அளவிலான் ஆலோசனைக் கூட்டங்களில் நேரடியாகக் கலந்து கொண்டதோடு, சென்னை தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் உட்பட அந்தக் கூட்டியக்கம் எடுத்த நடவடிக்கைகள், போராட்டங்கள் அனைத்திலும் முன் நின்றார். ஊர்தியை அமர்த்திக்கொண்டு தோழர்களுடன் நேரடியாகக் கூடங்குளம் சென்று இரண்டு நாள்கள் அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். அந்தப் போராட்டததிற்குச் சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் கொண்டு வந்தார்; பரப்புரையில் பங்கேற்றார்.

தோழமை இயக்கங்களுடன்

தோழர் தனது இயக்கம் என்ற குறுகிய பார்வையோடு என்றுமே செயலபட்டதில்லை. மக்கள் சிவில் உரிமைக் கழகமானாலும், தலித் இயக்கங்களானாலும், பிற தமிழ்த் தேசிய இயக்கங்களானாலும் அவை நடத்தும் எந்த ஒரு போராட்டத்திலும் அவர் மட்டுமின்றி அவரது தோழர்களையும் பங்கேற்கச் செய்வார். தாமே முன்னின்று நடத்துவது போல நடத்துவார்; தேவையான உதவிகளைச் செய்வார். சுவரொட்டிகள் அச்சிட்டுத் தருவதிலிருந்து, அவற்றை ஒட்டுவது வரை அவரே முன்னின்று செய்வார்.

ஒரே அரசியல் கருத்துக்கொண்ட அனைவரும் ஏன் ஒன்று சேரக் கூடாது, அப்படிச் சேர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அடிக்கடி கூறும் அவர் அதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்தார். தாம் சார்ந்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தையும் தமிழக மக்கள விடுதலை முன்னணியையும் ஒன்றாக இணைக்கும் முயற்சியில் இரு அமைப்புத் தலைமைக் குழுக்களுக்கு இடையிலான கலந்துரையாடலில் ஆர்வத்துடன் பங்கேற்று வெற்றிகரமாக இணைப்பைத் தீர்மானிக்க உதவினார்.

அந்த இணைப்பு நாள் பிப்ரவரி 10 என்று தீர்மானிக்கப்பட்டு, அதற்கான இணைப்பு அறிக்கை, நிகழ்ச்சி நிரல் தயாரிக்கும் பணி நடந்து கொண்டிருந்த வேளையில் தோழர் அராஜகவாதியாக, சுயநலவாதியாக, சமூகவிரோதியாகச் சீரழிந்துவிட்ட முன்னாள் சகா ஒருவரால் கொல்லப்பட்டார் என்ற செய்தி ஆற்றொணாத் துயரை ஏற்படுத்தியுள்ளது.

அவர் உருவாக்கிய படிப்பகத்திலேயே, அவர் முன்னிரவு ஒன்றில் கத்தியால் குத்தப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையில், ஓடிச் சென்று அவரை அள்ளி மடியில் போட்டுகொண்டு அவசர ஊர்தியில் மருத்துவமனைக்கு விரைந்த தோழரிடம் அவர் இறுதியாகக் கூறியது, “செய்ய வேண்டிய அரசியல் பணி நிறைய இருக்கிறதடா, சண்முகா, (தமிழழகன்) என்னை எப்படியாவது காப்பாற்றி விடு! ”

அவர் செய்ய நினைத்திருந்த பணிகளை முன்னெடுப்பதே அவருக்குச் செய்யும் மிகச் சிறந்த வீரவணக்கமாக இருக்கும்.

தோழர் மோகன்ராஜ், உங்கள் மரணம் மலையைவிடக் கனமானது.

நீங்கள் என்றும் எங்கள் நெஞ்சில் கனலும் நெருப்பாய் இருப்பீர்கள்!

Pin It