தமிழ்நாடு இன்று பல்வேறு நெருக்கடிகளுக்கு நடுவில் சிக்கித் தவிக்கிறது. ஒருபுறம் பருவமழை பெரும்பாலான மாவட்டங்களில் பொய்த்து விட்டது. வானம் பார்த்த நிலங்கள் பாலைவனமாய்க் காட்சி தருகின்றன. இன்னொருபுறம் ஆற்று நீர்ப்பாசன நிலங்களும் ஆற்றில் நீர் வருமா என ஏங்கிப் பாலம் பாலமாய் வெடித்துக் கிடக்கின்றன.

cauvery_river_430தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான அணைகள் அனைத்துமே போதிய நீரின்றி உழவர்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளன. அணைகளுக்கு நீர் வழங்கும் ஆறுகள் அயல் இனத்தவர்களின் கையில் அகப்பட்டுக் கிடக்கின்றன. வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி இன்று தமிழனுக்கு உரிமையுடையதாய் இல்லை. அது இன்று கன்னடத்தான் ஆறு. பாலாற்றைத் தெலுங்கு தேசத்தான் உரிமை கொண்டாடுகிறான். தென் மாவட்டங்களுக்கு நீர் மூலமான முல்லைப் பெரியாற்றை மலையாளத்தான் முடக்கி விட்டான். மேற்கு மண்டலத்தை வளங்கொழிக்கச் செய்யும் அமராவதி, பவானி ஆறுகளையும் கேரளாவிற்குள்ளேயே தேக்கிவிடும் முனைப்பில் மலையாள அரசியல்வாதிகள் தீவிரமாய் உள்ளனர். தமிழ்நாடு முற்றுகை இடப்பட்டுள்ளது. நாம் என்ன செய்யப் போகின்றோம்? இதுவரை நாம் என்ன செய்து விட்டோம்?

காவிரியில் தண்ணீர் வராத பொழுது காவிரிப் படுகை உழவர்கள் போராடுகிறார்கள். முல்லைப் பெரியாறு சிக்கலுக்குத் தென் மாவட்டத்துக்காரர்கள் போராடுகிறார்கள். மேற்கு மண்டல ஆறுகளுக்குச் சிக்கல் என்கின்ற பொழுதுதான் அப்பகுதி உழவர்களுக்கு அது பற்றிய கவலையே வருகிறது. மற்ற நேரங்களில் அவரவர்கள் அவரவர் வேலையைப் பார்க்கிறார்கள்.

காவிரியைப் பற்றிப் பிற பகுதி உழவர்கள் பெரிதும் கவலைப்படுவதில்லை. கீழ்ப் பவானி உழவர்கள் காவிரியைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் என்று கேட்ட உழவர் தலைவர்கள் உண்டு. அது போலவே தென் மண்டல, மேற்கு மண்டல ஆற்றுநீர்ச் சிக்கல்கள் குறித்துக் காவிரிப் படுகை உழவர்களும் அலட்டிக் கொள்வதில்லை.

ஆனால் கர்நாடகத்தைப் பாருங்கள்! படித்தவன் படிக்காதவன் உழவர் உழவரல்லாதோர் என்றில்லாமல் அனைவருமே தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள். அங்குள்ள காவிரிப் படுகை உழவர்கள் போராட்டத்தை விட மற்றவர்கள் போராட்டமே வலுவாயிருக்கிறது. தமிழ்நாட்டின் எல்லைவரை வந்து போராடுகிறார்கள். தமிழ்நாட்டுப் பேருந்துகளை உள்ளே விட மறுக்கிறார்கள். அவர்களின் போராட்ட அழுத்தம் காரணமாக அங்கு வாழும் தமிழர்களும் அவர் களுக்கு ஆதரவாய் அறிக்கை விடுகிறார்கள். தமிழ்நாட்டின் ஞாயம் உணர்ந்தாலும் அங்குத் தமிழ்நாட்டிற்கு ஆதரவாய் யாரும் பேசிவிட முடியாது, இதை யாரும் கன்னட இனவெறி என்று சொல்வதில்லை. ‘இந்து’ ஏடு அங்கு அப்படி எழுதுவதாகத் தெரியவில்லை. அப்படி எழுதிவிட்டு அங்கே அது வெளிவந்து விட முடியுமா? காவிரி அங்கே கன்னடத்தானின் தேசியப் பெருமிதத்துக்குரிய சிக்கலாக மாறிவிட்டது. எனவேதான் மய்ய அரசு ஆணைகளும் உச்சநீதிமன்ற ஆணைகளும் ஒன்றும் உள்ளே நுழைய முடியவில்லை.

கன்னடத்தான் காவிரி ஒன்றிற்கே இப்படிக் கொதித்தெழுகிறான். தமிழ்நாட்டில் தாமிரபரணி ஒன்றைத் தவிர எல்லா ஆறுகளுக்கும் சிக்கல். ஆனால் ஆற்று நீர்ச்சிக்கல் ஒட்டு மொத்தத் தமிழ்நாட்டிற்குரிய சிக்கலாய் மாறவில்லையே? அது ஏன்? இத்துணைக்கும் இது ஏதோ அடுத்தவர் உரிமையில் தலையிடுகின்ற ஒன்றில்லை. ஆறு எங்கெங்கு பாய்கிறதோ பாய்கின்ற பகுதி மக்களுக்கு அதன் மீது முழு உரிமை உண்டு. ஆறு அது தோன்றுகின்ற பகுதி மக்களுக்கு மட்டுமே முழு உடைமையான தன்று.இது உல கெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நெறிமுறை.

நைல் ஆறு ஆப்பிரிக்காக் கண்டத்தில் பல நாடு களுக்கிடையே ஓடி ஒவ்வொரு நாட்டின் கொடையாகத் திகழ்கிறது. ரைன் ஆறு அய்ரோப்பாக் கண்டத்தில் பல நாடுகளுக்கிடையே ஓடுகிறது. அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே மிசிசிப்பி ஆறு ஓடுகிறது. ஏன் இந்தியாவிலிருந்து சிந்து பாகிசுத்தானுக்குள்ளும் கங்கை வங்காள தேசத்திற்குள்ளும் பிரம்மபுத்திரா இந்தியா வங்காள தேசங்களுக்குள்ளும் தடையின்றிப் பாய்ந்து செல்லவில்லையா? இவ்வாறுகளுக்கெல்லாம் எந்த நாடும் தனிப்பட்ட உரிமை கொண்டாடுவதில்லை.

தமிழ்நாட்டிற்குள் ஓடி வரும் ஆறுகள் அனைத்தின் மீதும் தமிழ்நாட்டிற்கு முழு உரிமை உண்டு. அண்டை இனத்தவர் அவரவர் விருப்பத்திற்கு அவற்றைத் தடுத்து நிறுத்தி விட முடியாது; கூடாது. அப்படித் தடுத்து நிறுத்தினால் தட்டிக் கேட்கின்ற முழு உரிமையும் தமிழருக்குண்டு. ஆனால் தமிழன் தன்னுரிமையைக் கேட்க ஒன்று திரளாமல் இருக்கின்றானே? நடக்கின்ற போராட்டங்கள் பகுதிப் போராட்டங்களாகவே இருக்கின்றனவே? தமிழ்நாடு முழுவதும் தழுவிய மக்கள் போராட்டமாக வடிவெடுக்கவில்லையே? ஏன்?

இதற்கான முழு முதற்காரணம் தமிழ்நாட்டுத் தேர்தல் கட்சிகளே ஆகும். பெரும்பாலான இக்கட்சிகள் ஆற்றுநீர்ச் சிக்கலை மக்களிடம் தமிழ்நாட்டு உரிமைச் சிக்கலாகக் கொண்டு செல்லவில்லை; மாறாக மாநிலங்களுக்கிடையேயான ஒருவகைத் தகராறாகவே இதைப் பேசுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக இச்சிக்கல்களைக் கையிலெடுப்பதின் மூலம் கிடைக்கும் வாக்குகளை மட்டுமே அவை கணக்கிடுகின்றன. ஆற்றுநீர்ச் சிக்கல் முதல் ஈழச் சிக்கல் வரை எல்லாவற்றிலும் இக்கட்சிகள் இப்படித்தான் நடந்து கொள்கின்றன. அதிமுகவும் திமுகவும் தமிழ் மக்களின் உயிர்ச் சிக்கலுக்குக் கூட ஒன்று சேராமல் இருப்பதற்கு இவ்வாக்குக் குறிக்கோளே, அதன் வழி பதவியைப் பிடிக்கும் நோக்கமே காரணம்.

அனைத்திந்தியக் கட்சிகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இந்தியத் தேசப்பற்று நிறைந்து வடியும் காங்கிரசு, பாசக கட்சிகளின் தலைமை கன்னடத்தானையோ, தெலுங்கனையோ, மலையாளத்தானையோ ஒரு போதும் கண்டித்ததில்லை. மார்க்சிசுட் பொதுவுடைமைக் கட்சி எப்பொழுதும் எல்லாச் சிக்கல்களிலும் தமிழ்நாட்டுக்கு எதிராகவே நிலையெடுக்கும். காவிரிப் படுகையில் செல்வாக்கு மிக்க அக்கட்சி காவிரியில் தண்ணீர் விடக் கோரிப் போராடியதாக வரலாறில்லை. இக்கட்சிகளுக்கெல்லாம் தமிழன் எக்கேடு கெட்டாலும் கவலையில்லை; இந்திய ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியத் தேச நலனுக்குத்தானே இலக்கக்கணக்கான ஈழத்தமிழரைப் பலிகொண்டு சிறீலங்கா உறவைப் பேணுகிறார்கள்! இக்கட்சிகளெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் களையப்பட வேண்டும்.

தமிழ்த் தேசிய ஆற்றல்கள்தான் ஆற்றுநீர்ச் சிக்கலைத் தமிழ் மக்களின் உரிமைச் சிக்கலாக எடுத்துச் சென்று தமிழ் மக்களை எழுச்சி கொள்ளச் செய்ய வேண்டும். காவிரி, முல்லைப் பெரியாறு, அமராவதி, பவானி ஆகிய எல்லா ஆற்றுச் சிக்கல்களுக்கும் அடிப்படை ஒன்றுதான் என்பது விளக்கப்பட்டு பகுதிப் போராட்டங்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். இப்பொழுது ஆங்காங்கே தமிழ்த் தேசிய ஆற்றல்கள் நடத்தும் போராட்டங்கள் அடையாளப் போராட்டங்களாக இல்லாமல் உயிர்ப்புள்ள தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டங்களாக வளர்ச்சி பெற வேண்டும். தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டம் வலுப் பெறும்பொழுதுதான் ஆற்று நீர்ச் சிக்கல்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள அனைத்துச் சிக்கல்களுக்கும் தீர்வு கிடைக்கும்.

Pin It