வேதக்கொ ழுப்பெடுத்துப் பன்னூ றாண்டாய் 
வேர்கொண்ட ஆல்போல நிலைத்து விட்ட
ஆதிக்கப் பார்ப்பனியக் கோட்டை தன்னின்
அடிக்கல்லைத் தகர்த்திட்ட தலைவர்; மண்ணில்
சாதிக்கப் பிறந்தபல தலைவ ருள்ளும்
தனித் தலைவர்; சனாதனத்தர் “வாஎன் னோடு;
மோதிப் பார்” என்றார்கள்; அவர்கள் தம்மின்
முட்டிகளைத் தட்டிவைத்த தலைவர் யாராம்?
ஈ.வே.ரா என்பார்கள் பகைவ ரெல்லாம்
இனமானத் தந்தை என்பார் தமிழ ரெல்லாம்
‘சாவே! வா’ என்றழைக்கும் கால மட்டும்
தமிழர்க்காய் உழைத்திட்ட தலைவர் தம்மை
நோவாதே சிலபேர்கள் நொட்டை சொல்வர்
நுனிக்கிளையில் அமர்ந்துமரம் வெட்டிக் கொல்வர்
மேவாதே அவர்பழிச்சொல்; அப்பெ யர்ச்சொல்
மெய்எழுத்தாய் நமில்கரைந்த தமிழ் உயிர்ச் சொல்
“பெரியார்சொல் புதிதல்ல; பெரியார் இங்குப்
பேசியவை புதிதல்ல; எல்லாம் முன்பே
உரியவைதாம் இம்மண்ணுக்(கு) எதுவும் அன்னார்
உரைக்கவில்லை புதிதாக” என்பார் சில்லோர்
பரிவட்டம் சூட்டுங்கள்;பெரியாருக்குப்
பல்லக்குத் தூக்குங்கள் என்று ஆர் சொன்னார்?
பெரியாரே என்ன சொன்னார்? தனைப்பிற் காலம்
வைதீகப் பிடுங்கல்எனப் பழிக்கும் என்றார்
மயிர்க்குடுமிப் பார்ப்பானின் ஆரி யத்தை
மக்கள்போர்ப் படைதிரட்டி நின்றெ திர்த்த
உயிர்ச்சொல்தான் திராவிடமாம்; வரலாற் றுண்மை
உணராமற் பேசுவது நேர்மை யன்று
தயிர்ச்சோற்றுச் சங்கரனைப்பெரியா ரோடு
சமன்படுத்திப் பேசுவது கிறுக்கர் வேலை
வாய்வீரம் பேசுவதும் தமிழீ ழத்தின்
மாவீரன் புகழ்பாடி அந்தப் போதை
போய்ஓரம் ஒதுங்குவதும் பெரியா ரால்தான்
போனதெலாம் என்பதுவும் விட்டொ ழிப்போம்
நோயாகக் கொல்கிறது சாதி; நம்மேல்
நுகத்தடியாய்க் கனக்கிறது தில்லிஆட்சி
சேயாக நமைஎண்ணி பெரியார் இங்குச்
செய்தவற்றுள் குறைகளைந்து நிறையைக் கொள்வோம்.
Pin It