Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida

ஞாநி கட்டுரைகள்

1.ஏன் 49 ஓ போடச் சொல்கிறோம்?

2. தேர்தல் முறையை ஒரேயடியாக மாற்ற வேண்டும்!

3. இருவரின் 'இலவசக்' கூட்டணி

4. ஜாதிகள் இருக்குதடி பாப்பா!

5. வாக்குறுதிகளை நம்ப முடியுமா?

6. யாருக்கு ஓட்டு போடுவது?

***********
பொதுக்கல்வியே போதுமா..?:
அ. ராமசாமி


மனிதன் கேள்வி - பதில்கள்

ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்! - 27:
ச. தமிழ்ச்செல்வன்

முட்டுச்சந்தில் மத்திய அரசு: ரவி

தமிழின் பெயரால் தழைக்கும் குப்பைகள்! - எம்.ஏ.சுசீலா

எந்த இழை இவள்: பா. உஷாராணி

பாழ்நிலம்: உஷா பால்மர்

பகடை - ம. காமுத்துரை

ஏப்ரல் இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: dheemtharikida@
hotmail.com




கட்டுரை
ரவி

அமெரிக்காவுடன் அணுஆயுத ஒப்பந்தம் முட்டுச்சந்தில் மத்திய அரசு

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் அமெரிக்க விஜயத்தின் போது, 2005 ஜுலை 18ல் அமெரிக்க அதிபர் புஷ்ஷுடன் ஒரு அணுஆயுத ஒப்பந்தத்திற்கான புரிதல் ஏற்பட்டது. 2006 மார்ச் 2 அன்று புஷ்ஷின் இந்திய வருகையின்போது, அணுஆயுத ஒப்பந்தம் இறுதிப்படுத்தப்பட்டது.

இந்தியாவிற்கு விதிவிலக்கு

தற்போதைய உலகில் அணுஆயுத நாடுகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகியவை அணுஆயுதக் குழுமத்தில் உள்ளன. இவை தவிர்த்து, 40 நாடுகள் அமைதியான வழிமுறைகளுக்கு மட்டும் அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடுகளாக ‘அணுஆயுதப் பரவல் தடைச் சட்டத்தின்' கீழ் உள்ளன. இச்சட்டம் சமநிலையற்றதென்றும் நியாயமற்றதென்றும் இதில் கையெழுத்திட இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. மேற்படி அணுசக்தி குழுமத்திற்கு வெளியே அணுஆயுதம் தயாரிக்கவல்ல நாடுகளாக இஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா ஆகிய 4 நாடுகள் உள்ளன. இந்த 4 நாடுகளின் மீதும் பொருளாதாரத்தடைகள் இருந்து வருகின்றன. தற்போதைய ஒப்பந்தப்படி மேற்படி சட்டத்திற்குள் வராமலேயே, அணுசக்தியை அமைதிப் பணிகளுக்கும், ஆயுதமாக்கலுக்கும் இந்தியா பயன்படுத்திக் கொள்ள வழிகோலப்பட்டுள்ளது சிலவரையறைகளுக்கு உட்பட்டு, இதில் இந்தியாவிற்கான தனித்துவமான பாதுகாப்பு வழிமுறைகள் தரப்பட்டுள்ளன.

இந்தியாவின் கடமைகள்

இந்த உடன்பாட்டில் இந்தியாவின் கடமைகள் என்னவென்றும் அமெரிக்காவின் கடமைகள் என்னவென்றும் அமெரிக்காவின் கடமைகள் என்னவென்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியா தற்போது தன்வசம் உள்ள அணுஉலைகளையும் அணு ஆய்வு மையங்களையும் சிவிலியன் மற்றும் மிலிட்டரி என இரண்டாகப் பிரிக்க வேண்டும். சிவிலியன் தரப்பில் உள்ள அனைத்தையும் சர்வதேச அணுசக்திக் கழகத்தின் கண்காணிப்புக்கு அனுமதிக்க வேண்டும். இதன்படி இந்தியாவிடம் தற்போதுள்ள 22 அணுஉலைகளில் 14ம், அணுஆய்வு மையங்களில் 1/3 பங்கும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். கனடாவிடமிருந்து நாம் பெற்ற சைரஸ் என்ற அணுஉலை அடுத்த 8 ஆண்டுகளுக்கு செயல்படக் கூடியது. அதை உடனே மூடிவிட வேண்டும். பிரான்சிடமிருந்து நாம் பெற்று தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் அப்சரா என்ற அணுஉலையை இடம் பெயர்க்க வேண்டும். இவை இரண்டும் ஆய்வுக்கு உட்பட்டவை. இந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாபா அணுசக்தி ஆய்வு மையத்திற்குள் இவை இரண்டும் இருப்பதால், அங்கு இவை ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதை நாம் விரும்பாததால், இந்த ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது.

வரும் காலத்தில் நம் நாட்டிலேயே தயாராகும் அணுஉலைகள் மற்றும் ஆய்வு மையங்களை எந்தப் பிரிவில் (சிவிலியன் அல்லது மிலிட்டரி) வைப்பது என்பதை தீர்மானிக்கும் உரிமை இந்தியாவிற்கு தரப்பட்டுள்ளது. இந்தியா ஏற்கனவே திட்டமிட்டு நடத்திவரும் 3 கட்ட ஆய்வு திட்டத்திற்கு இந்த உடன்பாட்டில் தடை இல்லை.

ஆனால் நாம் ஒத்துக்கொண்டுள்ளவற்றை தொடர்ச்சியாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அந்த பொறுப்பிலிருந்து நாம் நழுவிவிடமுடியாது. இதன்படி, மொத்தத்தில் இந்தியாவின் அணுசக்தி முயற்சிகள் நம்பகத் தன்மையுடனும், பாதுகாப்புடனும், வெளிப்படையானவையாகவும் இருக்க வேண்டும்.

அமெரிக்காவின் கடமைகள்

இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா செனட்டின் ஒப்புதலைப் பெறவேண்டும். இந்தியாவின் அணுஉலைகளுக்குத் தேவையான எரிபொருளை (யுரேனியம்) தடங்களின்றி வழங்க வேண்டும். 1974 பொக்ரான் அணுஆயுத சோதனையின் போது இந்தியா மீது கொண்டுவரப்பட்ட அனைத்து பொருளாதாரத் தடைகளையும் நீக்க வேண்டும்.

சர்வதேச அணுசக்திக் கழகம் மற்றும் அணுசக்தி வழங்கல் குழுவுடன் இந்தியாவிற்கு எரிபொருட்களை தனித்துவமாக வழங்குதல் குறித்து இந்தியாவுடன் இணைந்து பேசி முடிப்பது அமெரிக்காவின் கடமை.

பலன்கள்

இந்த உடன்பாட்டின் பலன்கள் தற்காலிகமானவை. யுரேனியம் போன்ற எரிபொருட்கள் இல்லாது செயலிழந்து, மேலும் மூடப்படும் அபாயத்திலுள்ள நமது அணுஉலைகளுக்கான எரிபொருள் இதன் மூலம் கிடைக்கும் “அணுசக்திக்கான எரிபொருளில் நமக்குள்ள பற்றாக்குறையை சமாளிக்க தற்காலிகமாய் இந்த ஒப்பந்தம் உதவும்'' என்று இந்தியா அணுசக்திக் கழகம் கூறியுள்ளது.

நமது எதிர்கால ஆய்வுக்கு மிகவும் பயன்தரக் கூடிய "அதிவேக பன்மடங்கு தொடர் சக்தி கொண்ட அணு உலைகளை' ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதில்லை. வரும் காலத்தில் நாம் சொந்தமாக தயாரிக்கும் அணுஉலைகளை நாம் விரும்பினால் மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

உலக நாடுகளிலிருந்து அணுசக்தித் துறையில் இந்தியா இதுவரை தனிமைப்பட்டிருந்தது, இந்த ஒப்பந்தத்தின் மூலம் தவிர்க்கப்பட்டுள்ளது. ‘அணுஆயுத வழங்கல் குழுமம்' உள்ளிட்ட அணுசக்தித் துறையில் முன்னணியில் உள்ள நாடுகளுடன் அணுசக்தி தொடர்பான புதிய கண்டுபிடிப்புக்களை பரிமாறிக் கொள்ளவும், இதன் மூலம் அகில உலக அணுசக்தி பங்களிப்பில் இந்தியாவும் இடம் பெறவும் இந்த ஒப்பந்தம் வாய்ப்பளித்துள்ளது. இந்தியா ஏற்கனவே திட்டமிட்டு நடத்தி வரும் மூன்று கட்ட அணுசக்தி பயன்பாட்டுத் திட்டத்திற்கு இந்த ஒப்பந்தம் எந்த தடையும் விதிக்கவில்லை.

தீமைகள்

இந்த உடன்பாட்டில் இந்தியாவுக்கென சில சிறப்பு சலுகைகள் தரப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி நமது ஆட்சியாளர்கள் பீற்றிக் கொள்கிறார்கள். ஆனால் இந்த சிறு சலுகைகளுக்கு நாம் தரவேண்டிய விலை மிகவும் அதிகம்.

தனித்த ஒப்பந்தம் அல்ல: மற்ற எல்லா பிரச்சனைகளுக்கும் தொடர்பற்ற ஒரு தனித்த ஒப்பந்தமாக இதைப் பார்க்க முடியாது. “அமெரிக்காவின் நீண்ட காலத் திட்டத்திற்கு இந்த ஒப்பந்தம் பெரிதும் உதவும்'' என்று அமெரிக்க செனட்டில் வைக்கப்படும் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது இந்த ஒப்பந்தத்திற்கு வெளியே ஏராளமான நிபந்தனைகள் இந்தியா மீது செலுத்தப்படும். இந்தியாவின் சுதந்திரமான அணுகுமுறை, நடுநிலைமை போன்ற நீண்டகாலக்கொள்கைகள் காவு கொடுக்கப்படும்.

சீனாவுக்கு எதிராக

சீனா நமது எதிரிநாடு அல்ல. அதனுடன் நமக்குள்ள எல்லைப்பிரச்சனைகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டு வருகின்றன. விரிந்து பரந்த சீனச்சந்தை நமக்கு மிகவும் தேவை. சீனாவுடன் நமது உறவுகள் பலப்பட்டுவரும் இந்த நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்த உடன்பாடு அந்த உறவில் விரிசலை ஏற்படுத்தக்கூடும். சோவியத் யூனியன் சிதைவுக்குப் பின் தனக்கு எதிராக எந்த ஒரு நாடும் வளர்ந்துவிடக் கூடாது என்பதில் அமெரிக்கா கண்ணும் கருத்துமாக உள்ளது. சீனா குறித்து 2005 பென்டகன் அறிக்கை இவ்வாறு கூறுகிறது. “அனைத்துத் துறைகளிலும் அதிவேக வளர்ச்சி அடைந்துவரும் சீனா, தனது வளர்ந்துவரும் எரிபொருள் தேவைகளுக்காக அமெரிக்காவிற்கும் போட்டியாளனாகவும் அச்சுறுத்தலாகவும் வளர்வதை கட்டுப்படுத்த வேண்டும்.''

ஏற்கனவே சீனாவுக்கு எதிராக ஆசியாவில் ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, தைவான் போன்ற நாடுகளை அமெரிக்கா ‘ஏவுகணை எதிர்ப்புத் திட்டம்' என்ற வளையத்திற்குள் கொண்டு வருவதாக ஆசைகாட்டி, கொம்பு சீவி விட்டுள்ளது. தற்போது இந்தியாவையும் அந்த கண்ணியில் சிக்கவைத்துள்ளது. சீனா, ரஷ்யாவுடன் இனைந்து, அமெரிக்காவின் ‘நேட்டோ' ராணுவ கூட்டமைப்பிற்கு எதிராக நம்மால் முன்வைக்கப்பட்ட ‘ஷங்காய் பிரகடனம்' இந்த ஒப்பந்தத்தின் மூலம் அர்த்தமற்றதாகிவிட்டது.

ஈரானுக்கு எதிராக

சமீபத்தில் ஈரானுக்கு எதிராக இருமுறை வாக்களித்ததன் மூலம், அமெரிக்காவின் நிர்பந்தங்களுக்கு நாம் அடிபணிய ஆரம்பித்துவிட்டோம் என்பது தெளிவாகிவிட்டது. இதன்மூலம் நமது எரிபொருள் தேவைகளுக்கு மிகவும் தேவையான ஒரு வணிக நண்பனை நாம் இழக்கும் அபாயம் ஏற்பட்டள்ளது. அணுஆயுதப் பரவல் தடைச்சட்டத்தை ஏற்றுக்கொண்டு, தனது அனைத்து அணு ஆயுத திட்டங்களையும் சர்வதேச கண்காணிப்புக்கு உட்படுத்தியுள்ள நாடு, ஈரான் மேற்படி சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தனது மின்தேவைக்காக யுரேனியத்தை மறுசெறிவூட்டும் தனது உரிமையை விட்டுக் கொடுக்க ஈரான் மறுப்பது மிகவும் நியாயமானது.

மேற்கு ஆசியாவில் தனது அடியாள் இஸ்ரேல் அணுஆயுதநாடாக மாறியதை எதிர்க்காத அமெரிக்கா, ஈரான் அமைதி வழியில் அணுசக்தியைப் பயளன்படுத்த முயற்சிப்பதைக் கூட தடுக்கிறது. சர்வதேச அணுசக்திக் கழகத்தின் தலைவர். எல்.பராடி, “3 ஆண்டுகள் சோதனை நடத்திய பிறகும் ஈரானில் அணுஆயுத திட்டத்திற்கான எந்த தடயமும் கிட்டவில்லை. வெறும் ஐயங்கள் மட்டுமே தொடர்ந்து இருந்து வருகின்றன'' என்றுதான் கூறியுள்ளார். உலகின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் வளம் கொண்ட ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா நடத்திய நாடகத்தின் ‘ரிப்ளே'தான், உலகின் இரண்டாவது மிகப்பெரிய எரிவாயுவளம் கொண்ட ஈரான் மீது நடத்தப்படுகிறது.

சர்வதேச அணுசக்திக் கழகத்திற்குள்ளேயே ஈரான் பிரச்சனையை தீர்க்க இந்தியா பாடுபடும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது பிரச்சனை பாதுகாப்பு சபைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ஈரான் பொருளாதாரத்தடைக்கு உள்ளாகும் என்று அச்சுறுத்தப்படுகிறது.

“இன்னொரு அணுஆயுத நாடு இப்பகுதியில் வருவதை இந்தியா விரும்பவில்லை'' என்று பிரதமர் கூறியுள்ளார். தற்போது இந்த அச்சுறுத்தல் காரணமாக, ஈரான் எந்த கட்டுப்பாட்டிற்கும் உடன்படாத ஒரு சுயேட்சையான அணுத் திட்டத்தை அறிவிக்கும் நிலைக்கும் சென்றுள்ளது. ஏற்கனவே ஒத்துக் கொண்டிருந்த ககட்டுப்பாடுகளிலிடருந்து விடுபடுவதாக அறிவித்துள்ளது. ''எந்தவித தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயார்'' என சவால் விடுகிறது. ஈராக் அணு உலைமீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அழித்தது போன்ற ஒரு தாக்குதலை ஈரான் மீது நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது இப்பகுதியில் பதற்றத்தையும் மிகப் பெரிய அபாயத்தையும் தோற்றுவிக்காதா? அரசின் ஈரானுக்கு எதிரான இக்கொள்கையை மத்திய அரசில் பங்கு வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியும் ஆதரித்து நிற்பதுதான் கேலிக்குரியது. ஆரம்பத்தில் இதை எதிர்த்த, பா.ஜ.க. பின்பு ஆர்.எஸ்.எஸ்.ன் வழிகாட்டுதல்படி இதை ஆதரித்தது விந்தையானதல்ல. ஈரானுக்கு அடுத்து அதிக ஷியா பிரிவு முஸ்லிம்கள் இந்தியாவில் உள்ளனர். இவர்களின் கோபத்தை முலயாமும் இடதுசாரிகளும் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது சாதுரியமானது.

தொழில்நுட்பம் மற்றும் விலை

தற்போது நம்கைவசம் உள்ள மொத்த அணுஉலைகள் நமது ஒட்டுமொத்த மின் தேவையின் 3 சதத்தைத்தான் எட்டியுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இதுமூன்று மடங்காக (9 சதம்) உயரும் வாய்ப்புத்தான் உள்ளது. இவ்வாறான நிலையில் நம் மின்தேவையை சமாளிக்க, மற்றவகை ஒரு பொரட்களை (ஹைட்ரோகார்பன்கள், இயற்கை எரிவாயு போன்றவை) நாம் தேடவேண்டியுள்ளது. அதில் ஒரு முயற்சிதான் ஈரானுடன் நாம் பேசிக் கொண்டிருக்கும் குழாய்வழி எரிவாயு ஒப்பந்தம் மற்றும் சிரியாவில் சீனாவுடன் இணைந்து அமைக்கவிருந்த “எரிவாயுக் கிணறுகள்'' போன்றவை. அமெரிக்காவின் நிர்பந்தத்தால் இவ்விரு முயற்சிகளிலும் நாம் முனைப்பாக இல்லை.

கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றிருந்தபோது, நமது பிரதமர் இத்திட்டத்திற்கு எதிராக பேசியதும், இத்திட்டத்தில் மிகவும் ஆர்வம் காட்டிய பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர் ஐயரை நீக்கிவிட்டு, அமெரிக்காவுக்கு சாதகமான முரளிதியோதரை அத்துறையின் அமைச்சராக்கியதும் தற்செயலான செயல்களல்ல. பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவின் கோர்பசேவா எலட்சினா என்பதுதான் நமக்கு இன்னும் தெளிவாகவில்லை.

அணு உலைகளைப் பொறுத்தமட்டில் அமெரிக்காவின் தொழில்நுட்பம் இந்தியாவை விட மிகவும் பின்தங்கியது. மேலும் விலை கூடுதலானது. “14.4 பில்லியன் டாலர் விலையில் 8 அணுஉலைகளை அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கும்'' என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் காண்டலிசா ரைஸ் இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு கூறியுள்ளார். நாம் இதுவரை அணுசக்தி துறைக்கு செலவழித்த தொகையை விட இது அதிகம். மேலும் திரைமறைவில் போடப்படும் இது போன்ற ரகசிய ஒப்பந்தங்கள் அமெரிக்கா மூலம் தான் நமக்குத் தெரியவருகிறது!

தற்போது இந்தியாவில் நடந்து வரும் சுயமான அணுசக்தி ஆய்வுகளின் மூலமே 2020க்குள் நாம் மின்துறையில் தன்னிறைவை எட்டமுடியும். அதுவரை நமது மின்தேவைக்கு வேறுவகை எரிபொருட்களை நாம் நம்பித்தான் ஆகவேண்டும். ஆனால் மற்றவகை எரிபொருட்கள் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தானவை என்று கூறி நம்மைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முயல்கிறது. உலகின் 30 சதம் சுற்றுச் சூழல் பாதிப்பிற்கு அமெரிக்காதான் காரணம். சாத்தான்வேதம் மட்டும் ஓதவில்லை. மேலும் 2040ல் நமக்கு தேவைப்படுவது 1 லட்சம் மெகாவாட் மின்சாரம். தற்போது ஆய்வில் உள்ள மூன்றாவது கட்டத்தில், இந்தியாவில் அபரிதமாகக் கிடைக்கும் தோரியத்தை (உலகின் மொத்த தோரியத்தில் 65 சதம் இந்தியாவில் உள்ளது) மறுசெறிவூட்டலுக்கும் மறுசுழற்சிக்கும் உட்படுத்தும் ஆய்வில் நாம் வெற்றிபெறும் போது, ஆண்டுக்கு 5.3 லட்சம் மெகாவாட் மின்உற்பத்தி வீதம் அடுத்த 300 ஆண்டுகளுக்கு நம்மால் எட்ட முடியும். இந்நிலையில் தற்காலிக குறைந்தபட்ச தேவைக்காக அமெரிக்காவிடம் நாம் சரணடைவது தேவைதானா?

மூன்று கட்ட சிக்கல்கள்

மேலும் இந்த உடன்பாடு அமுலுக்கு வருவதற்கு முன்பு மூன்று தடைகளைத் தாண்டியாக வேண்டும். முதலில் அமெரிக்க செனட்டின் ஒப்புதலைப்பெற வேண்டும். புஷ்ஷிற்கு தற்போது அமெரிக்காவில் செல்வாக்கு சரிந்துவரும் நிலையில் செனட் ஒப்புதல் அவ்வளவு எளிதாய் கிடைத்துவிடாது. ஏனெனில் இது புஷ்ஷின் தனிப்பட்ட முறையிலான கனவுத்திட்டம்.

அடுத்து சர்வதேச அணுஆயுதக் குழுமத்தில் இந்தியாவிற்கு சிறப்பான சலுகைகளைத்தரும் (Nககூக்கு வெளியே) இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும். சீனா உள்ளிட்ட நாடுகள் உள்ள இக்குழுவின் ஆதரவைப் பெறுவது எளிதானதல்ல.

மூன்றாவதாக, எத்தகைய கண்காணிப்புகளுக்கு எந்த அளவில் நாம் உடன்படுவது என்பதை சர்வதேச அணுசக்திக் கழகத்துடன் நாம் பேசித் தீர்க்க வேண்டும். இதுவும் எளிதானதல்ல. ஆனால் அதற்குள்ளாகவே, இந்தியா தனது அணுஉலைகளை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது. சில ஆரம்பக்கட்ட வேலைகளைச் செய்தால் தான் செனட்டின் ஒப்புதலைப் பெறமுடியும் என்று கூறுகிறது. ஒப்பந்தம் அமுலுக்கு வரும் முன்பு நாம் நமது கடமைகளைச் செய்துவிட வேண்டும் என்பது இதன் அர்த்தம். ஒருவேலை இதற்குப்பின்னும் செனட்டின் ஒப்புதல் கிட்டவில்லை என்றால் என்ன செய்வது? இவ்வொப்பந்தப்படி இருதரப்பினரும் தங்கள் தங்கள் கடமைகளை ஒரே நேரத்தில் செய்து முடிக்க வேண்டும்''

இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க ஒப்புதல் தேவை என்றால் இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லையா? இடதுசாரிகளின் கடுமையான வலியுறுத்தலுக்குப்பிறகு நாடாளுமன்ற விவாதத்திற்கு மட்டும் மத்திய அரசு ஒப்புக் கொண்டது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்படவில்லை. அப்படி என்றால், இந்த ஒப்பந்தம் யாரால், எங்கே தீர்மானிக்கப்பட்டது? இது குறித்து ஐக்கிய முற்போக்கு அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அக்கறை காட்டாதது ஏன்? தேசநலன்கள், பாதுகாப்பு குறித்து அவர்களுக்கு அக்கறை இல்லையா?

புதுநிபந்தனைகள்

இந்த உடன்பாட்டின் அமுலாக்கத்தின் போது புதிய நிபந்தனைகளை அமெரிக்கா விதிக்காது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இவ்வொப்பந்தத்தில் ஏற்கனவே ஏற்பட்ட புரிதலைமீறி, புஷ்ஷின் வருகைக்கு முன்பு அமெரிக்கா, நமது எஃப்.ஐ.ஆர். சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தியது. இந்திய அணுசக்திக் கழகமும் மக்கள் கருத்தும் இதற்கு எதிராக வலுவாக இருந்தாலும், புஷ் வருகையின்போது இந்த உடன்பாட்டுடன் அமெரிக்க நலன் காக்கும் 22 ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்பட வேண்டியிருந்தாலும் அமெரிக்கா தற்காலிகமாகப் பின்வாங்கியது. “2015க்குள் இந்திய அணுஉலைகளில் 80 சதம் கண்காணிப்புக்குள் வந்து விடும் '' என்று செனட்டில் தாக்கும் செய்யப்படும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது ஒப்பந்தத்தில் இல்லாத ஒன்று. மேலும் சர்வதேச ஒப்பந்தங்களை தன்னிச்சையாக மீறுவது என்பது அமெரிக்காவிற்கு கைவந்த கலை.

நமது தாராப்பூர் அணுஉலைக்கு ஒப்பந்தத்தின்படி தரவேண்டிய யுரேனியத்தை திடீரென, தன்னிச்சையாக அமெரிக்கா நிறுத்தி வைத்து நம்மை திணறச்செய்யவில்லையா? தனக்கு வேண்டும்போது மட்டும் அமெரிக்கா உடன்பாட்டை வலியுறுத்தும். சமீபத்தில் இந்தியா வந்த ரஷ்ய அதிபருடன் யுரேனியம் பெறுவதற்காக போடப்பட்ட ஒப்பந்தம் அணுஆயுத ஒப்பந்தம் இறுதிப்படுத்துவதற்கு முன்பு எவ்வாறு போடப்பட்டது? என்று அமெரிக்கா மிரட்டியது. அதேபோல் அதற்கு முன்பு இந்தியா வந்த ஆஸ்திரேலியப் பிரதமர் தங்கள் நாட்டில் உபரியாய்க் கிடைக்கும் யுரேனியத்தை (உலகில் 40% அங்குள்ளது) வழங்குவது குறித்து பதில் சொல்ல மறுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த உடன்பாட்டைக் காட்டி புஷ்ஷின் வருகையின்போது, இந்திய வேளாண் தொழிலில் அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனம் மன்சாட்டோ நுழைந்து இந்திய விவசாயத்தை சீரழிப்பது, சில்லறை வர்த்தக விற்பனையில் வால்மார்ட் நுழைய அனுமதிப்பது போன்ற அமெரிக்காவிற்கு சாதகமான 22 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இவையெல்லாம் இந்தியாவை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும். இந்த ஒப்பந்தத்தை ஒட்டி, உலகில் ஜனநாயக மாற்றத்திற்கான சர்வதேச மையத்தில் இந்தியா இணைந்து அதற்கான நிதியத்திற்கு தனது பங்கை அளிக்கவும் ஒத்துக் கொண்டது. இதை ஒட்டியே, “கியூபா, சிரியா, ஈரான், ஜிம்பாவே போன்ற நாடுகளில் ஜனநாயகத்தைக் கொண்டுவர வேண்டும்'' என்று இந்திய மண்ணில் இருந்து புஷ் அறைகூவல் விட்டார். இந்திய அரசு இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இந்தியாவின் அமெரிக்கத் தூதர் முல்போர்ட் இந்திய அரசின் கையறு நிலையை நன்கு புரிந்து கொண்டுள்ளார்.

அதனாலேயே, அவர்தன் வரம்பு மீறி இந்திய அரசை அவ்வப்போது மிரட்டுகிறார். மே.வங்க முதல்வரை கடிதம் மூலம் மிரட்டுகிறார். அஸ்ஸாம் முதல்வருக்கு உதவிக்கரம் நீட்டுகிறார். அவரைத்திரும்பப் பெறச் சொல்லி எதிர்க்கட்சிகள் கோரின. தி.மு.க. கூட நாடாளுமன்ற வெளிநடப்பு செய்தது. இருந்தும் மத்திய அரசுக்கு துணிவு வரவில்லை. நாம் சுதந்திரநாட்டில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ? என்ற ஐயம் நமக்கு வந்துவிட்டது. இவ்வளவுக்கும் பின்பு மத்திய அரசைப் பார்த்து நாங்கள் குரைக்க மட்டுமே செய்வோம், கடிக்க மாட்டோம் (அவர்கள் பாஷையில்) என்று இடதுசாரிகள் கூறுவது வியப்பளிக்கிறது. ஏனெனில், எழமுடியாமல் சவலைப்பிள்ளையாய் வீழ்ந்து கிடக்கும் மதவெறி பா.ஜ.க. என்ற பூச்சாண்டி வந்துவிடக் கூடாது, பாருங்கள் அமெரிக்காவை விட பா.ஜ.க. அபாயமானது என்பது விநோதமான காரணம். “குரைக்கிற நாய் கடிக்காது '' என்பது பழமொழி.

புதிய எழுச்சியுடன் கூடிய இந்திய நலன்

நாடாளுமன்றத்தில் இந்த உடன்பாடு குறித்துப் பேசிய பிரதமர், “புதிய எழுச்சியுடன் கூடிய இந்திய நலன்களை மையமாக வைத்து இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது'' என்று கூறினார். “அமெரிக்கா தனது நீண்ட கால நலன்களை கருத்தில் கொண்டு இந்த உடன்பாட்டை ஏற்றுக் கொண்டது'' என்று புஷ் அமெரிக்க செனட்டில் கூறுகிறார். எது சரி?

“தனது நீண்டகாலத்திட்டத்தில் தனது நலன்களையும், அதற்கான தற்காலிக திட்டங்களில் மற்ற நாடுகளுடனான உறவையும் அமெரிக்கா வைத்துள்ளது' என்பது உலகறிந்த விஷயம். உலகில் தன்னிகரற்ற தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதும், தனக்கு உடன்படாத நாடுகள் மீது முன்கூட்டிதாக்கும் தனது உரிமையை நிலைநாட்டவும் அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் தனது இளைய பங்காளியாய் இந்தியாவை அது தற்போது இணைத்துள்ளது.

வல்லரசுக் கனவு

வல்லரசாகும் கனவு இந்திய ஆளும் வர்க்கத்திற்கு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. பொக்ரான் அணுஆயுத சோதனை முடிந்தவுடன் இந்தியா வல்லரசாகிவிட்டது என்று அன்றைய உள்துறை அமைச்சர் அத்வானி முழங்கி, ஒரு வாரத்திற்குள், பாகிஸ்தான் தனது அனு ஆயுதச் சோதனையை வெற்றிகரமாக நடத்திக் காட்டியது.

தற்போது அமெரிக்க அரசியல் விவகாரத்துறை துணைச் செயலர் நிகோலஸ் பர்ன்ஸ் “இந்தியா உயர் தொழில் நுட்பம் கொண்ட அணு ஆயுத நாடு என்று அமெரிக்கா கருதவில்லை'' என்று கூறிவிட்டார். ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் கனவை அமெரிக்கா சிதைத்துவிட்டது. இவ்வளவுதூரம் அடிபணிந்தும் அமெரிக்கா இந்தியாவை நம்பத் தயாராயில்லை. ஆனால் மேற்கு ஆசியாவில் தனது அடியாளான இஸ்ரேலுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி பெற்றுத்தர அரும்பாடுபடுகிறது. தற்போது பாகிஸ்தான் கைவசம் 50 அணுகுண்டுகளும், இந்தியாவும் 100ம் இஸ்ரேலிடம் 200ம் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த அணுஆயுதங்களை ஏவுவதற்கான ஏவுகனைகளை புதிது புதிதாய்ச் செய்வதில் இந்தியாவும் பாகிஸ்தானும் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இந்த இரு நாடுகளிலுமற்ற 50 சதத்திற்கும் அதிகமான மக்களுக்கு அணு ஆயுதங்களும் ஏவுகணைகளும் தேவையில்லை. பசிக்கு உணவும் வேலையும் தான் தேவை. ஆனால் அதைப்பற்றி இவ்விரு நாடுகளின் ஆட்சியாளர்களுக்குக் கவலையே இல்லை.

முடிவாக பயன்படுத்தத் தகுதியில்லாத பயன்படுத்தினாலும் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அணுஆயுதங்களை குவித்துக் கொண்டே போவதும் அதற்காக செலவிடுவதும் முட்டாள்தனமானது. பயங்கரவாதிகளின் கைகளில் அணுஆயுதங்கள் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்நிலையில் இப்பூவுலகை யாராலும் பாதுகாக்க முடியாது. 1960களில் அமெரிக்க அதிபராய் இருந்த ஜான்.எஃப்.கென்னடி கூறியது இங்கு நினைவுகூறத்தக்கது.

“இப்பூவுலகம் ஒருநாள் யாருமே குடியிருக்க முடியாததாய் மாறும் நிலை உள்ளது. இக்கோளத்தில் வாழும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும், குழந்தையும் தங்கள் தலைகளுக்கு மேல் மெல்லிய சரடால் இணைக்கப்பட்டு தொங்கும் அணுக்கத்தி, விபத்தாலோ, தவறான கனிப்பாலோ, பைத்தியக்காரத் தனத்தாலோ அறுந்துவிழும் அபாயத்தில் ஒவ்வொரு வினாடியும் வாழ்ந்து வருகின்றனர். இந்த அணு ஆயுதங்களை நாம் அழிக்கவில்லை என்றால் அவை நம்மை முற்றிலுமாக துடைத்து எறிந்துவிடும்.''

இந்த உடன்பாட்டில், அணுஆயுதமயத்துக்கான தனது உரிமையை இந்தியா தக்க வைத்துக் கொண்டுள்ளது. அமெரிக்காவும் அதை அனுமதித்துள்ளது. “குறைந்தபட்ச நம்பகமான தாக்குதலுக்கான அணுஆயுதங்களை தயாரிக்கும் உரிமை தனக்கு இருப்பதாக இந்தியா பறைசாற்றி உள்ளது. இந்திய அணுசக்திக் கழகத்தின் தலைவர் ககோட்கரும் இதையே வலியுறுத்தியுள்ளார். சமீபத்திய பேட்டியில், இந்த குறைந்தபட்ச, நம்பகமான அணுஆயுதங்களின் அளவுகோலை வரையறுக்க நமது தேசீய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அவர்கள் மறுத்துள்ளார். இது குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில், “உலகளாவிய அணுஆயுத ஒழிப்பிற்கு இந்திய அரசு அயராது பாடுபடும்'' என்று கூறப்பட்டுள்ளதற்கு எதிரானதாகும். இக்கொள்கை இந்தியாவை மேலும் மேலும் அமெரிக்க சார்பு நாடாக சுருக்கிவிடும். மாறாய், அணுஆயுத ஒழிப்பிற்காக பாடுபடும்போதுதான் இந்தியா மூன்றாம் உலகநாடுகளின் தலைவனாக முடியும். ஒரு சுதந்திரமான அயல்துறைக் கொள்கை மூலமே இது சாத்தியம்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com