 |
ஞாநி
3. இருவரின் 'இலவசக்' கூட்டணி
தமிழ்நாட்டு தேர்தல்-அரசியல், வரலாறு காணாத கேவலமான தரத்துக்கு இறங்கியிருப்பதன் அடையாளம்தான் - இலவச வாக்குறுதிகள். இதில் கூட்டணி சேர்ந்திருப்பவர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று காமராஜர் சொன்னது காலத்தால் அழியாத கல்வெட்டுக் கருத்தாய் ஜொலிக்கிறது.
காரணம் இந்த தேர்தல் இருவருக்கும் வாழ்வா சாவா என்ற கடைசித் தேர்தலாக இருப்பதுதான். கருணாநிதி தோற்றால், அத்துடன் அவருடைய அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும். ஜெயித்தால் மகன், பேரன், கொள்ளுப் பேத்தி எல்லாரையும் உத்தரவாதமான அரசியல் பதவிகளில் உட்கார வைத்துவிட்டு, நிம்மதியாக ரிட்டையர்ட் வாழ்க்கையில் கூளப்ப நாயக்கன் காதலுக்குப் பொழிப்புரை எழுதலாம்.
ஜெயலலிதா தோற்றால் சிறைவாசம் உறுதி. ஜெயித்தால், என்னவெல்லாம் நடக்கும் என்றே யாரும் ஊகிக்க முடியாது. அப்படி ஊகிப்பதையே தண்டனைக்குரிய குற்றமாகக் கருதக்கூடியவர் அவர்.
"தோல்வி பயத்தினால்தான் இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்” என்று இருவரும் ஒருவரைப் பற்றி மற்றவர் பேசுவது ஒன்றுதான் இந்தத் தேர்தல் பிரசாரத்தில் கலப்படமில்லாத உண்மையாகும்.
தமிழ்நாட்டை 34 ஆண்டுகளாகத் தமக்குள் பங்கு போட்டு வரும் இரண்டு பெரிய கட்சிகளின் இரு பெரும் தலைவர்கள் இவர்கள். இரு தலைவர்களும் எப்படிப்பட்டவர்கள்? இவருக்குப் பிறகு இவர் கட்சி என்ன ஆகும் என்ற கேள்விக் குறியை எழுப்பும் அளவுக்கு கட்சி வேறு இவர் வேறு அல்ல என்ற பிம்பத்தை உருவாக்கி வைத்திருப்பவர்கள்.
இந்த இருவரைப் பற்றியும் தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். இருவரும் தமிழக மக்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைத்தான் இருவரின் இலவச அறிவிப்புகளும் அம்பலப்படுத்துகின்றன.
சைக்கிள், புடவை, வேட்டி, டி.வி பெட்டி, இரண்டு ரூபாய்க்கு அரிசி, சும்மா பத்து கிலோ அரிசி இதையெல்லாம் இலவசமாகக் கொடுப்பதாக அறிவித்துவிட்டால், தமிழக மக்கள் உடனே தங்களுக்கு ஓட்டு போட்டுவிடுவார்கள் என்று நினைக்கிரார்கள். அதாவது தமிழக மக்களை பிச்சைக்காரர்களாக, தன்மானம் அற்றவர்களாக, எப்போதும் இவர்களிடம் கையேந்தி கிடப்பவர்களாக, புழு பூச்சி புன்மைத் தேரைகளாக மட்டும்தான் இந்த இருவரும் கருதுகிறார்கள் என்பதுதான் உண்மை.
இலவசங்களை எதிர்பார்த்து ஏங்கி கிடப்பவர்களாகவே மக்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதுதான் இருவரின் அரசியல் திட்டமுமாகும்.
தமிழக மக்களின் சுயமரியாதையையே இழிவுபடுத்தும் இந்த இலவச அரசியலை நியாயப்படுத்த கருணாநிதி, ஜெயலலிதா இருவரின் அறிவுஜீவி ஆதரவாளர்களும் முன்வைப்பது சத்துணவு திட்டத்தைத்தான். காமராஜரால் தொடங்கப்பட்டு எம்.ஜி.ஆரால் விரிவுபடுத்தப்பட்ட சத்துணவு திட்டம் மக்களை நிரந்தரமாக அடிமைப்படுத்துவதற்கான சூழ்ச்சி அல்ல. ஏழைக் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பச் செய்வதற்கு ஊக்கப்படுத்தும் திட்டம் அது. ஏழைக் குழந்தைகள் இருந்த நிலையிலேயே இராமல், கல்வி பெற்றால்தான் வாழ்க்கையில் அடுத்த் கட்டத்துக்கு செல்ல முடியும் என்ற தொலை நோக்குப் பார்வை அதில் இருக்கிறது.
ஆனால் இருவர் கூட்டணி இப்போது அறிவிக்கும் இலவசங்கள் எல்லாம், மக்களை தொடர்ந்து கையேந்துபவர்களாகவே நீடிக்கச் செய்பவை.
சைக்கிளையோ, டி.வி பெட்டியையோ, அரிசியையோ தன் சொந்தக் காசில் வாங்கிப் பெருமைப்படும் சூழலை மக்களுக்கு ஏற்படுத்த இவர்களால் முடியவும் இல்லை. விருப்பமும் இல்லை. மக்களின் வாங்கும் சக்தியை மேம்படுத்த இவர்களிடம் எந்த திட்டமும் இல்லை.
கருணாநிதி, ஜெயலலிதா இருவரின் மனநிலையும் நிலப்பிரபுத்துவ காலத்திலேயே இருப்பதுதான் இதற்குக் காரணம். உளவியல் ஆய்வின்படி இருவரும் தங்களை தஞ்சாவூர் மிராசாகவும், மைசூர் மகாராணியாகவும் கருதிக் கொள்ளும் ஆழ்மனக் கருத்தையே கொண்டிருக்கிறார்கள் என்பதையே அவர்களுடைய செயல்கள் காட்டுகின்றன.
மக்கள் எல்லாரும் பண்ணையடிமைகள். ஆண்டைக்கு 'மூட்' இருந்தால் நாய்க்கு இரண்டு எக்ஸ்ட்ரா பிஸ்கட் வீசுவதைப் போல பண்ணையாளுக்கும் விசேஷத்துக்கு இனாம்கள் தரப்படும். தேர்தல்தான் விசேஷம். அறுவடை சமயத்தில் வேலையில் சுணக்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, இந்த வருடம் பொங்கலுக்கு கூடுதலாக குடும்பத்துக்கே புத்தாடை தரப்போவதாக பசப்புவதைப் போலத்தான் இருவரும் செய்து கொண்டிருக்கிறார்கள். நிலப்பிரபுக்கள் கொத்தடிமைகளிடம் சாம தான பேத தண்ட முறைகள் அனைத்தையும் பிரயோகித்தது போலவே இவர்களிடமும் அரிசி முதல் பொடா வரை அத்தனை ஆயுதங்களும் உண்டு.
இந்த கேலிக் கூத்தில் வேதனையான அம்சம் - தமிழ் தேசியம் முதல் சந்தைப் பொருளாதாரம், சர்வதேச ஏகாதிபத்தியம், காலத்தால் அழியாத கற்பு என்று வகை வகையான சித்தாந்தங்கள் பேசக்கூடிய ப.சிதம்பரம், ராமதாஸ், வைகோ, வரதராஜன், தா.பாண்டியன், நல்லக்கண்ணு, திருமாவளவன் எல்லாரும் கூட்டணி தர்மத்தின் பெயரால், பண்ணையார்களின் கணக்குப் பிள்ளைகள் போல இருவருக்கும் 'ஆமாம்' போட்டுக் கொண்டிருப்பதுதான்.
கருணாநிதியும் ஜெயலலிதாவும் அறிவிக்கும் இலவச திட்டங்கள் எல்லாம் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு பிடிக்கக்கூடியவை. இதற்கான பணத்தை அவர்கள் சொந்த நிதியிலிருந்து தரப்போவதில்லை. மக்களிடமிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் வசூலித்த வரிப் பணத்திலிருந்துதான் செலவிடப் போகிறார்கள். இருவரும் அறிவித்துள்ள சொத்து மதிப்புக் கணக்கின்படி, கருணாநிதியின் சொத்துமதிப்பு 25 கோடி ரூபாய். ஜெயலலிதாவுடையது 14 கோடி ரூபாய். நிச்சயம் இருவருக்கும் எஞ்சியுள்ள வாழ்க்கை முழுக்க வீடு, உணவு, உடைகளுக்கு இவ்வளவு சொத்து தேவையில்லை. உடன்பிறப்பு, சகோதரி என்று பேசுகிற இருவரும் முதலில் தங்கள் சொத்தில் சரி பாதியை தமிழக ஏழை மக்களுக்கு எழுதித் தருவார்களா? தனியாரிடம் உள்ள தரிசு நிலம் போலத்தானே இவர்கள் சொத்தும்.
இலவசங்களுக்காக இத்தனை பெரும் தொகைகளை அரசு கஜானாவிலிருந்து அவர்களால் அள்ளி வீச முடியுமென்றால், ஏன் தமிழ் நாட்டில் வீட்டுக்கு ஒரு குழந்தைக்கு மருத்துவம் அல்லது பொறியியல் அல்லது வேறு உயர் கல்வி முடிக்கும் வரை முழுச் செலவையும் அரசு ஏற்கும் என்று அறிவிக்கத் தோன்றுவதில்லை? காரணம், கல்வி அறிவு கிடைத்து விட்டால், கொத்தடிமைகள் பண்னை அடிமை வேலையை விட்டு விட்டுப் போய்விடுவார்கள் என்ற 'உஷார் ' இந்த இரண்டு பண்ணையார்களுக்கும் இருப்பதுதான். அரிசியும் டி.வியும் சேலையும் வேட்டியும் கொடுத்தால்தான், மறுபடியும் கையேந்தி தங்களிடம் வந்து நிற்கவைக்க முடியும். அதுதான் இருவரின் திட்டம்.
தமிழக மக்களுக்குப் பயன் தரக்கூடிய ஒரே ஒரு இலவச அறிவிப்பை இருவரும் செய்தால் போதுமானது. அது என்ன? " நீங்களாக ஒட்டு போட்டு எங்கள் இருவரையும் துரத்துவதற்கு முன்பாக, இலவசமக இப்போதே நாங்கள் அரசியலிலிருந்து விலகிக் கொள்கிறோம்" என்ர அறிவிப்புதான். அப்படிச் செய்தால், தமிழர்களுக்கு ஒரு பத்தாண்டு நல்வாழ்க்கை இலவசமாக முன்கூட்டியே கிடைக்கும்.
(இந்தியா டுடே மே 2006)
|