Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida

ஞாநி கட்டுரைகள்

1.ஏன் 49 ஓ போடச் சொல்கிறோம்?

2. தேர்தல் முறையை ஒரேயடியாக மாற்ற வேண்டும்!

3. இருவரின் 'இலவசக்' கூட்டணி

4. ஜாதிகள் இருக்குதடி பாப்பா!

5. வாக்குறுதிகளை நம்ப முடியுமா?

6. யாருக்கு ஓட்டு போடுவது?

***********
பொதுக்கல்வியே போதுமா..?:
அ. ராமசாமி


மனிதன் கேள்வி - பதில்கள்

ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்! - 27:
ச. தமிழ்ச்செல்வன்

முட்டுச்சந்தில் மத்திய அரசு: ரவி

தமிழின் பெயரால் தழைக்கும் குப்பைகள்! - எம்.ஏ.சுசீலா

எந்த இழை இவள்: பா. உஷாராணி

பாழ்நிலம்: உஷா பால்மர்

பகடை - ம. காமுத்துரை

ஏப்ரல் இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: dheemtharikida@
hotmail.com
கட்டுரை
ஞாநி

2. தேர்தல் முறையை ஒரேயடியாக மாற்ற வேண்டும்!

முதல் ஊதாரித்தனம் தேர்தல் பிரசாரம்.

போட்டியிடும் வேட்பாளர் யார் எவர் என்பதை வாக்காளர்களுக்குத் தெரியச் செய்ய வேண்டும். போட்டியிடும் கட்சியின் கொள்கை, செயல் திட்டம் (அப்படி ஏதாவது இருந்தால் அது) என்ன என்று சொல்ல வேண்டும்.

இரண்டையுமே அரசுச் செலவிலிருந்தே செய்யலாம். இப்போது போலியோ தடுப்பு சொட்டு மருந்துக்கு அரசு விளம்பரங்களால் மக்கள் கவனத்தை ஈர்ப்பது போல, தேர்தல் ஆணையம் இதையும் வெகு எளிதாகச் செய்துவிட முடியும். வேட்பு மனுக்கள் இறுதி செய்யப்பட்டதும், வேட்பாளர் பெயர், சின்னத்துடன் மாதிரி வாக்குச்சீட்டை தயாரித்து தபால்காரர்கள் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் கொடுத்து விட முடியும். ஒரே வாரத்துக்குள் எல்லா வீடுகளுக்கும் வேட்பாளர் பட்டியல் கிடைத்து விடும்.

கட்சிகள் தங்கள் கொள்கை என்ன, செயல்திட்டம் என்ன என்பதை விளக்க, தற்போது தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ இரண்டிலும் நேரம் ஒதுக்குவது போல எல்லா தனியார் தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் ஆணையமே ஸ்லாட் எடுத்து நேரத்தை கட்சிகளுக்கு பங்கிட்டுத் தரலாம். இதே போல பத்திரிகை விளம்பரங்களுக்கும் சமமான அளவு இடத்தை ஆணையமே வாங்கி விநியோகித்துவிடலாம்.

வேட்பாளர்கள் தொகுதியில் வாக்காளர்களை நேரடியாக சந்தித்து பிரசாரம் செய்வதற்கு ஆளுக்கு ஒரு வாகனத்தையும் தினசரி இத்தனை கிலோ மீட்டர் என்ற அடிப்படையில் பெட்ரோல் செலவையும் ஆணையமே அளிக்க வேண்டும். இவை தவிர எல்லா ஊர்களிலும் எல்லா கட்சிகளுக்குமாக தலா ஓரிரு பொதுக் கூட்டங்களை ஆணையமே மேடை அமைத்து தந்து விடலாம்.

இதற்காக ஒரு தேர்தல் செலவு நிதியை ஆணையம் உருவாக்கி நன்கொடை தரும் கம்பெனிகள், அமைப்புகள், தனி நபர்கள் ஆகியோருக்கு வரி விலக்கு தரலாம்.

இதில் தனி நபர் அல்லது சுயேச்சை வேட்பாளர்கள் நிலை என்ன என்ற கேள்வி எழும். நம்முடைய தேர்தல் முறை என்பது கட்சி சார்ந்த ஜனநாயக முறைதான். கடந்த ஐம்பதாண்டுகளில் டிபாசிட்டை இழந்த சுயேச்சைகள்தான் அதிகம். அபூர்வமாக சுயேச்சைகள் எம்.எல்.ஏ, எம்.பி தொகுதியைக் கைப்பற்றிய வெற்றிச் சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தால், அவையெல்லாமே, ஒரு கட்சியில் இருந்த செல்வாக்கான நபர் கட்சித் தலைமை சீட் தராததால் கோபித்துக் கொண்டு தனியே போட்டியிட்டு கட்சியினரின் செல்வாக்கு முழுவதையும் அவர் பக்கம் திருப்பிய நிகழ்ச்சிகள்தான். அதாவது அதிலும் கட்சிதான் அடிப்படை. சுயேச்சைகளுக்கு நம் தேர்தல் முறையில் எப்படிப்பட்ட இடம் தர முடியும் என்பதை பின்னர் பார்ப்போம்.

தேர்தலின் அடுத்த கட்டம் வாக்குப்பதிவு. அன்றைய தினம் கட்சிகள் வாக்காளர்களைக் ‘குளிப்பாட்டி’ சாவடிக்கு அழைத்து வருவதற்கும், சில சாவடிகளைக் கைப்பற்ற ரவுடித்தனம் செய்வதற்கும்தான் செலவு செய்கின்றன.

இதற்கு சரியான தீர்வு வாக்காளர்கள் சாவடிக்கு வருவதற்கு பதில், சாவடி வாக்காளர்களை நோக்கிப் போவதுதான்

வாக்குப்பதிவு நாளன்று ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும். வாக்குப்பதிவு நேரத்தின் போது யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது. போலீஸ் பாதுகாப்புடன் மொபைல் வாக்குச்சாவடி வாகனம் தெருத்தெருவாக வரும். ஒவ்வொரு தெருவுக்கு தண்ணீர் லாரி வந்ததும் கரெக்டாக குடத்துடன் போய் வரிசையாக நிற்பது போல, அந்தத் தெரு வாக்காளர்கள் ஓட்டு போட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பி விடலாம். வாக்கு வாகனத்துக்குள் தேர்தல் அதிகாரியுடன் கட்சிப்பிரதி நிதிகளும் இருக்கலாம். இந்த ஏற்பாட்டில் கட்சிகளுக்கு செலவு எதுவும் கிடையாது. அரசுக்கு இப்போதைய தேர்தல் முறையில் பூத் அமைக்க ஆகும் அதே செலவுதான் இதற்கும் ஆகப் போகிறது. இதன் மூலம் கள்ள ஒட்டுக்களை ஒரேயடியாக ஒழித்துவிடலாம். அதிகமானவர்கள் வாக்களிக்கச் செய்யலாம். யாரும் வாக்குச் சாவடிகளை ரவுடித்தனத்தால் கைப்பற்ற முடியாது.

மூன்றாவது கட்டம் வாக்கு எண்ணிக்கை. மின்னணு இயந்திரங்கள் இதை விரைவானதாகவும் எளிதானதாகவும் ஆக்கிவிட்டன. இம்முறையில் ஓட்டு எண்ணும் இடத்தில் கட்சிகளின் ரவுடித்தனம் எதுவும் செல்லுபடியாகவில்லை என்பது கடந்த தேர்தலிலேயே நிரூபிக்கப்பட்டுவிட்டது.

இந்த மாற்று முறைகள் எல்லாம் ஓரளவுக்கு பணத்தின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தி சம வாய்ப்பு நிலையை உருவாக்கக் கூடியவை. தேர்தல் முறையையே அடியோடு மாற்றியமைக்கக்கூடிய இன்னும் சில புரட்சிகரமான மாற்றங்கள் தேவை. அவை என்ன?

தொகுதி மேம்பாட்டு நிதி என்ற பெயரில் வருடத்துக்கு சுமார் 1200 கோடி வீதம் பத்தாண்டுகளில் பன்னிரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் எம்.பிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கணிசமான பணத்துக்கு கணக்கே இல்லை என்று தற்போது மத்திய தணிக்கை அதிகாரிகளும் விஜிலன்ஸ் கமிஷனும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஒரு தொகுதியின் நலனை கவனிக்க வேண்டியது யார்? எம்.எல்.ஏவா? எம்.,பியா? வார்டு கவுன்சிலரா?

இப்போது இருக்கும் நம்முடைய அரசியல் அமைப்பு முறையில் ஏராளமான எம்.எல்.ஏக்கள், எம்.பிகள், பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி கவுன்சிலர்கள் என்று ‘பொது நல நிர்வாக’ப் பிரதிநிதிகள் இருப்பதால் இவர்களுக்கெல்லாம் அரசுப் பணத்தை சம்பளமாக, அலவன்சாக, போக்குவரத்துப் படியாக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இரண்டாவதாக இத்தனை பேர் ஒவ்வொரு தேர்தலிலும் ஜெயித்து வந்து ஆட்சியைப் பிடிப்பதற்கு, ஒவ்வொரு கட்சியிலும் அத்தனை பேர் வீதம் குறைந்தது நான்கு மடங்கு நபர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இதற்குப் பெரும்பணம் தேவைப்படும் சூழல்தான் ஊழலின் ஊற்றுக் கண்.

உண்மையில் ஒரு தொகுதியின் நலனை கவனிக்க இத்தனை பேர் தேவையே இல்லை. ஒரே தொகுதியில் நிறைய பஞ்சாயத்து அல்லது நகராட்சி கவுன்சிலர்களும், அதே தொகுதியில் எம்.எல்.ஏவும், அடுத்து எம்.பியும் இருக்கிறார்கள். ஒரு தொகுதியின் அன்றாடப் பிரச்சினை என்பது என்ன? குடி நீர், மின்சாரம், சாலை, போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு சார்ந்தவைதான். இவற்றையே ஏன் கவுன்சிலர், எம்.எல்.ஏ, எம்.பி மூவரும் கவனிக்க வேண்டும்?

எம்.எல்.ஏ என்றால் member of legislative assembly - அதாவது சட்டங்களை உருவாக்கும் மன்றத்தின் உறுப்பினர். எனவே அவர் வேலை சட்டங்களை உருவாக்குவது, நிறைவேற்றுவது, திருத்துவது, மாற்றுவது போன்றவைதான். இதே சட்டம் இயற்றும் வேலையை மாநில அளவில் எம்.எல்.ஏவும் தேச அளவில் எம்.பியும் செய்ய வேண்டும். இதுதான் கோட்பாடு.

எனவே நடைமுறையில் இவர்களுக்கென்று எந்தத் தொகுதியும் தேவையே இல்லை. தொகுதியை கவனிப்பதோ, தொகுதியின் சார்பாகப் பணியாற்றுவதோ இவர்கள் வேலையே அல்ல. அது பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி கவுன்சிலர்களின் வேலை.

எம்.எல்.ஏவுக்கே தொகுதி அடிப்படை தேவையில்லை என்கிறபோது எம்.பிக்கு நிச்சயம் அவசியம் இல்லை. இவர்களை தொகுதி அடிப்படையில் தற்போது வைத்திருப்பதால் எந்தப் பயனும் இல்லை. ஒரு எம்.எல்.ஏ தொகுதியை ஒரு முறை சுற்றி வருவதற்கே குறைந்தது பத்து நாட்கள் தேவை. எம்.பிக்கு அறுபது நாட்கள் தேவை. தொகுதி அடிப்படையை நீக்கிவிட்டால், எம்.எல்.ஏ, எம்.பி தொகுதிக்கே வருவதில்லை என்ற வருத்தங்களும் உருவாகப் போவதில்லை. தொகுதியில் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்க வேண்டியவர் கவுன்சிலர் மட்டும்தான்.

எம்.எல்.ஏவிடம் சிவிக் பொறுப்பை ஒப்படைத்த முடிவு சுமார் 75 ஆண்டுகளுக்கு முந்தையது. அப்போது மக்கள் தொகை குறைவாக இருந்த நிலையில் கவுன்சிலர், எம்.எல்.ஏ இரு பணிகளையுமே ஒருவரிடமே ஒப்படைப்பது சரியாக இருந்திருக்கலாம். ஆனால் அடுத்த 75 ஆண்டுகளில் மக்கள் தொகை சுமார் நான்கு மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே அன்றாட நிர்வாகத்தை கண்காணிக்கும் பணியை கவுன்சிலரிடமும், கொள்கை, சட்டங்களை வகுக்கும் பணியை மட்டுமே எம்.எல்.ஏ, எம்.பியிடமும் ஒதுக்குவதுதான் தீர்வாக இருக்க முடியும்.

இந்த முடிவு செய்துவிட்டால், அடுத்த பெரிய லாபம் எம்.எல்.ஏக்கள், எம்பிகள் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்துவிடலம் என்பதுதான். தொகுதி அடிப்படை இருப்பதால் தான் தமிழ் நாட்டில் 234 எம்.எல் ஏக்களும் இந்திய அளவில் 543 எம்.பிகளும் தேவைப்படுகிறார்கள்.

தொகுதி அடிப்படையை நீக்கி விட்டால் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மொத்தமாக நூறு எம்.எல்.ஏக்கள் போதும். மக்களவைக்கு மொத்தமாக இரு நூறு எம்.பிகள் போதும். எல்லா மாநிலங்களுக்கும் சமமான எம்.பி எண்ணிக்கை அளித்தால்தான் உண்மையான மாநில சமத்துவம் வரமுடியும்.

தொகுதி அடிப்படை இல்லாதபோது இனி எந்த அடிப்படையில் எம்.பிகளையோ எம்.எல்.ஏக்களையோ தேர்ந்தெடுப்பது?

கட்சி அடிப்படை மட்டும்தான். அதாவது வாக்குச் சீட்டில் கட்சிகளின் பெயரும் சின்னமும் மட்டுமே இருக்கும். உங்களுக்குப் பிடித்த கட்சிக்கு நீங்கள் வாக்களிக்கலாம். கடைசியில் மொத்த வாக்குகளில் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு கிடைத்தது என்று கணக்கிட்டு அதற்கேற்ப எம்.எல்.ஏ சீட் தரப்படும். ஒரு கட்சிக்கு பத்து சதவிகித வாக்கு கிடைத்திருந்தது என்றால் மொத்த எம்.எல்.ஏ சீட்டுகளான 200ல் அதற்கு 20 சீட் தரப்படும். இதன்படி எல்லா கட்சிகளுக்கும் அவை பெற்ற வாக்கின் அடிப்படையில் சீட் கிடைக்கும். பிறகு அந்தக் கட்சி தனக்குக் கிடைத்த சீட்டுகளுக்கான எம்.எல்.ஏக்கள் யார் யார் என்று பெயர்களை அறிவிக்கலாம். இதே போல எம்.பி தேர்தலிலும் செய்ய வேண்டும்.

இந்த முறையைப் பின்பற்றினால் தனியே தலித் தொகுதிகளோ, பெண்கள் தொகுதிகளோ தேவைப்படாது. ஒவ்வொரு கட்சியும் தனக்குக் கிடைத்த எம்.எல்.எ, எம்.பி சீட்டில் இத்தனை சதவிகிதம் தலித், பெண் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்ற ஏற்பாட்டை செய்து விடலாம். தவிர ஒரு மகளிர் கட்சியோ தலித் கட்சியோ, இந்த தேர்தல் முறையில் எல்லா தொகுதிகளிலும் உள்ள பெண்கள், தலித்கள் ஓட்டைப் பெற்று தானே கணிசமான சீட்டுகளை அடைய முடியும்.

இந்த முறையில் பல வசதிகள் உண்டு.

1. கட்சிக்கு இப்போது கிடைக்கும் ஓட்டுக்கும் சீட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்ற கோளாறு நீக்கப்படும். உதாரணமாக 1996 தேர்தலில் அ.தி.மு.கவுக்கு கிடைத்த ஒட்டு சதவிகிதம் 21.50. ஆனால் சீட்டு வெறும் நான்குதான். இதே கட்சிக்கு 2001ல் கிடைத்த ஓட்டு சதவிகிதம் 29.92. இந்த முறை 132 சீட்டுகள்! 1967ல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்த தேர்தலில் அதற்குக் கிடைத்த ஓட்டு சதவிகிதம் 41.38. எம்.எல்.ஏ சீட் வெறும் 50. ஆனால் காங்கிரசை விட குறைவான ஓட்டுகள் (40.77 சதவிகிதம்) பெற்ற தி.முக 138 சீட்டுடன் ஆட்சியைப் பிடித்தது.
2. விகிதாசார அடிப்படையில் கட்சி நியமிக்கும் ஒரு எம்.எல்.ஏ மோசமானவராக இருந்தால் அவரைத் திரும்பப் பெறச் செய்யும் அதிகாரத்தை மக்களுக்குத் தரமுடியும். அப்போது வேறு ஒருவரை கட்சி நியமிக்கமுடியும்.
3. கட்சிக்கு இந்த அதிகாரம் வருவதால் ஒவ்வொரு கட்சியும் தன் உட்கட்சி தேர்தல்களை ஒழுங்காக நடத்தாவிட்டால் அந்தக் கட்சியின் அங்கீகாரமே போய்விடும் என்ற சட்டத்தையும் ஏற்படுத்த முடியும்.
4. உலகத்தில் பிரிட்டன், அதன் முன்னாள் அடிமை நாடுகள், அமெரிக்கா தவிர மீதி பெரும்பாலான நாடுகளில் (ஜெர்மனி, ஸ்வீடன், ஆஸ்திரேலியா, ஜப்பான், ரஷ்யா, இஸ்ரேல்..) எல்லாவற்றிலும் விகிதாசார முறைதான் பின்பற்றப்படுகிறது.
5. இப்போதுள்ள தேர்தல் முறையில் ஒருவருக்கு 49 ஓட்டு கிடைத்தாலும் எதிர்த்தவர் 51 ஓட்டு வாங்கியதால் அவர்தான் வெல்வார் என்ற கோட்பாடு பின்பற்றப்படுகிறது. அந்த 49 வாக்குகளுக்கு பிரதிநிதித்துவமே கிடையாது. அவர்களில் பலர் அதிருப்தியடைந்து எதிர்காலத்தில் ஓட்டளிக்காமலே போகலாம். ஒவ்வொரு தேர்தலிலும் இந்தியாவில் சராசரியாக 55 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே பதிவாகின்றன. விகிதாசார முறையில் ஒவ்வொரு ஓட்டுக்கும் பயன் இருப்பதால் இன்னும் அதிகம் பேருக்கு வாக்களிக்க உற்சாகம் ஏற்பட்டு ஜனநாயகம் வலுவடையும்.
6. எந்த கட்சியையும் பிடிக்காவிட்டால் 49 ஓ பிரிவின் கீழ் அதைப் பதிவு செய்ய இப்போதே தேர்தல் சட்டத்தில் இடம் இருக்கிறது. இதை எலெக்ட்ரானிக் ஓட்டு மெஷினிலும் சேர்க்கக் கோரி உச்ச நீதி மன்றத்தின் முன்பு மனு செய்யப்பட்டுள்ளது. விகிதாசார முறையுடன் இதுவும் இணைந்தால் மக்களின் கருத்துக்கு நிஜமான பிரதிபலிப்பு தேர்தலில் கிட்டும்.
7. விகிதாசார முறையில் ஒவ்வொரு கட்சியின் உண்மை செல்வாக்கு தெரிந்துபோய் விடுவதால், கூட்டணிகள் அமைப்பதும் பேரங்களும் நியாயமான முறையில் நடக்க முடியும்.

உள்ளூர் சிவிக் பிரச்சினைகளை கவனிக்க வேண்டிய பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சிகளில் மட்டும் கட்சி அடிப்படையை ஒரேயடியாக நீக்கிவிட வேண்டும். இங்கே கட்சிக்காரர்கள் உட்பட சுயேச்சைகள் வரை யாரும் தனி நபராக கட்சி சின்னம் இல்லாமல் போட்டியிடலாம். இதன் மூலம் உள்ளூரில் உண்மையாகவே மக்கள் சேவையில் ஈடுபட்டிருக்கும் கட்சி சார்பற்ற சமூக நலத் தொண்டர்கள் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு பெருகும்.

இந்த சீர்திருத்தத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையில் நேரடி எம்.பி தேர்தலையே கூட ஒழித்துவிடமுடியும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் எம்.பிகளைத் தேர்ந்தெடுத்தால் போதுமானது. அதாவது மக்களவை மாநிலங்களவை என்ற இரண்டு தேவையில்லை. இந்த முறையை மேற்கொண்டால் தேர்தல் செலவுகள் பெருமளவு குறையும்.

இதெல்லாம் நடை முறை சாத்தியம்தானா என்று பிரமிப்பாக இருக்கலாம். நெட் மூலம் ரயில்வே ரிசர்வேஷன், தெருவுக்குத் தெரு செராக்ஸ், எஸ்.டி.டி பூத், எல்லார் கையிலும் செல்போன் போன்றவை கூட ஒரு காலத்தில் பிரமிப்பூட்டும் கனவுகளாக மட்டுமே தோன்றினயவைதான். வேட்பாளர்களாவது சொத்துக் கணக்கைத் தெரிவிப்பதாவது என்று நினைத்த காலம் போய் இன்று சொத்துக் கணக்கு தெரிவிக்காமல் வேட்பு மனுவே தாக்கல் செய்ய முடியாது என்ற நிலை வந்து விடவில்லையா?

எனவே இவற்றுக்காக கனவு காண்போம். விவாதிப்போம். உழைப்போம். ஆனால் இப்போதைக்கு இதில் நம் வசம் இருக்கும் ஒரே ஆயுதம் 49 ஓ மட்டும்தான். அதைப் பயன்படுத்தினால் அரசியல் கட்சிகளுக்கு பயம் வரும். அடுத்த கட்ட சீர்திருத்தங்களை நோக்கி அவற்றை நகர்த்த 49 ஓவை இப்போது பரவலாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே என் பரிந்துரை.

(காலச்சுவடு மே 2006)Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com