 |
ஞாநி
6. யாருக்கு ஓட்டு போடுவது?
யாருக்கு ஓட்டு போடுவது என்று முடிவு செய்வதற்கு முன்னால் எல்லா தரப்பு வாதங்களையும் பரிசீலிக்க வேண்டும் என்றார் ஒரு நண்பர். எனவே சன் டி.வி, ஜெயா டி.வி இரண்டின் செய்திகளையும் அடுத்தடுத்து ஒவ்வொரு முழு நாள் பார்த்ததில் கடும் தலைவலிதான் மிச்சம்.
இருந்தபோதிலும் கடந்த ஒரு மாத கால பிரசாரம், பத்திரிகை செய்திகள் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்தபிறகு ஒவ்வொரு கட்சியைப் பற்றியும் ஸ்வாட் அனாலிசிஸ் (Strength, Weakness, Opportunities, Threats) செய்து பார்த்தேன். ஆப்பர்சூனிட்டியும் த்ரெட்டும் அந்தந்த கட்சி அதனதன் நலனுக்காகச் செய்துகொள்ள வேண்டியவை. அவற்றின் பலமும் பலவீனமும் மட்டுமே வாக்காளர்களான நம்மை பாதிக்கக்கூடியவை.
எனவே அந்த அடிப்படையில் ஒவ்வொரு கட்சியாக, அதற்கு நாம் ஏன் ஓட்டு போட வேண்டும், ஏன் ஓட்டு போடக் கூடாது என்று பார்ப்போமா?
தி.மு.க அணி :
தி.மு.க:
ஏன் ஓட்டு போட வேண்டும்?
1. தமிழ் நாட்டில் அரசியலில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பெரியாரின் சமூக நீதி சித்தாந்தத்தின் தொடர்ச்சியாக இன்னும் ஓரளவேனும் இருந்து வரும் கட்சி.
2. தனி நபர் வழிபாடு மடமாக ஆக்கப்பட்டு வரும் சட்டமன்றத்தை மீட்டு அதன் நடவடிக்கைகளை மறுபடியும் ஓரளவு ஜனநாயகப் பூர்வமாக நடத்தக்கூடிய ஆளுங்கட்சியாக இருப்பதற்கான தகுதி உள்ள கட்சி.
3. கலைஞர் கருணாநிதி எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அது பற்றி பத்திரிகை, மீடியாவுடன் நேரடியாக தயங்காமல் கருத்து தெரிவிக்கக்கூடியவர் என்பதால், அரசு என்ன நினைக்கிறது என்பதைப் பொது மக்கள் குழப்பமின்றி தெரிந்துகொள்ள வசதியான கட்சி.
ஏன் ஓட்டு போடக்கூடாது?
1. எவ்வளவு பூசி மெழுகினாலும், கலைஞர் கருணாநிதி, மாறன் குடும்பத்தின் நலனுக்கு முக்கியத்துவம் தந்து இயக்கப்படும் கட்சி.
2. பதவி பேரங்களுக்காக மட்டுமே டெல்லி அரசியலைப் பயன்படுத்தும் கட்சி. அங்கே, இங்கே என்று இரண்டு இடங்களிலும் இதே கட்சி அதிகாரத்தில் இருந்தால், கட்சித் தலைவர் குடும்பத்தின் வியாபார தொழில் துறை ஏகாதிபத்திய விஸ்தரிப்பு கட்டுக்கடங்காமல் போய்விடும்.
3. பகுத்தறிவு, தமிழ்ப் பற்று போன்றவற்றையெலாம் வெற்று கோஷங்களாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, நடைமுறையில் அவற்றுக்கு எதிராக எல்லாவற்றையும் செய்யக்கூடிய கட்சி.
4. தமிழ் நாட்டில் ஊழல், போலீஸ் அராஜகம், தொழிலாளர் மீதான ஒடுக்குமுறை என்று எந்த சீர்கேட்டை எடுத்துக் கொன்டாலும், அதை திட்டமிட்டு கச்சிதமாகவும் அறிவியல் பூர்வமாகவும் செய்வதை ஆரம்பித்து விரிவுபடுத்தியது கருணாநிதியின் முதல் ஆட்சிக் காலம்தான் என்பதால்.
பாட்டாளி மக்கள் கட்சி:
ஏன் ஓட்டு போடலாம்?
1. சினிமா, பத்திரிகை போன்ற ஊடகங்களில் சமூக விரோதக் கருத்துகள் ஊக்குவிக்கப்படக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதால்.
ஏன் ஓட்டு போடக்கூடாது?
1. எவ்வளவு பூசி மெழுகினாலும், ராமதாஸ்& அன்புமணி குடும்ப வாரிசு அரசியலையும் சுயநலத்தையும் ஊக்குவிக்கும் கட்சி.
2. குறிப்பிட்ட ஜாதி நலனுக்காக மட்டுமே இயங்கும் கட்சி.
3. அதிகாரத்தில் இருக்க வேன்டும் என்பதற்காக எந்த கொள்கை அடிப்படையும் இல்லாமல் அடிக்கடி அணி மாறக்கூடிய கட்சி.
காங்கிரஸ்:
ஏன் ஓட்டு போட வேண்டும்?
1. மாநிலக் கட்சித் தலைவர்களான கருணாநிதியும் ஜெயலலிதாவும் தலா 24 கோடி ரூபாய் சொத்துக் கணக்கு காட்டியுள்ள வேளையில் அனைத்திந்திய கட்சியான காங்கிரசின் தலைவி சோனியாவின் சொத்து மதிப்பு வெறும் 7 கோடிதான் என்று காட்டப்பட்டிருப்பதால்.
2. மதச் சார்பற்ற கொள்கையில், தி.மு.க, அ.இ.அ.தி.மு.க போல ஊசலாடாமல், நிலையாக இருந்துவருவதால்.
3. தகவலறியும் உரிமைச் சட்டம், கிராமப்புற வேலை வாய்ப்பு சட்டம் போன்ற அதிமுக்கியமான அடிப்படை சட்டங்களைக் கொண்டு வந்ததால்.
ஏன் ஓட்டு போடக் கூடாது?
1. காமராஜருக்குப் பிறகு, சுயமரியாதை இல்லாத கட்சியாக தமிழகத்தில் ஆகிவிட்டதால். சோனியாவுக்கு பக்கத்தில் தயாநிதி மாறனை உட்காரவைத்துவிட்டு பின்னிருக்கையில் ப.சிதம்பரம் உட்கார வைக்கப்படுகிறார்! கூட்டணி ஆட்சி வேண்டும் என்று கேட்டதற்காக இளங்கோவனுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுத்த கருணாநிதி தானே இப்போது கூட்டணி ஆட்சிக்கு தயார் என்று சொல்லும்போது குறைந்த பட்சம் இளங்கோவனிடம் அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூட வலியுறுத்தத் தோன்றாத முதுகெலும்பற்ற கட்சி.
2. கட்சி நலன் என்று பார்க்காமல் கோஷ்டி நலனை மட்டுமே பார்க்கக்கூடிய ஏராளமான தலைவர்கள்தான் தமிழகத்தில் கட்சி என்று ஆக்கிவிட்டதால்.
3. பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் தொழிலாளர்கள் நலனுக்கு எதிரான பல நடவடிக்கைகளை பிடிவாதமாக மேற்கொள்வதால்.
இடதுசாரிக் கட்சிகள்:
ஏன் ஓட்டு போடவேன்டும் :
1. சுயநலம் இல்லாத நேர்மையான தலைவர்கள் இருக்கும் ஒரே அணி கம்யூனிஸ்ட் & மார்க்சிஸ்ட் கட்சிகள் இருக்கும் இடதுசாரி அணி மட்டுமே என்பதால். மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் சொத்துக் கணக்கு வெறும் 75 ஆயிரம் ரூபாய்கள் !
2. அடித்தட்டு மக்கள் நலன் பற்றி இன்னமும் சிந்திக்கும் ஒரே அணி இடதுசாரி அணிதான் என்பதால்.
ஏன் ஓட்டு போடக்கூடாது?
1. தங்கள் கொள்கை, நேர்மை, எதற்கும் சம்பந்தமில்லாத கட்சிகளுடன் 'தி.மு.க, அ.இ.அ.தி.மு.க' இருவருடனும் மாறி மாறி சில சீட்டுகளுக்காக கூட்டணி வைத்துக் கொள்வதால்.
2. தனித்து நின்று கட்சியை மெல்ல வளர்க்க, நேற்று வந்த விஜய்காந்த்துக்கு இருக்கும் துணிச்சல் கூட, நூறாண்டு கால இடதுசாரி இயக்கத்துக்கு இல்லாததால்.
அ.இ.அதி.மு.க அணி :
அ.இ.அ.தி.மு.க:
ஏன் ஓட்டு போடலாம்?
1. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி அதிகாரத்தில் இருந்தால் அதன் அராஜகம் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் ஆபத்து இருப்பதால், இப்போது டெல்லியில் தி.மு.க ஆட்சியில் இருக்கும் நிலையில் அதையே இங்கேயும் ஆளவிடாமல் இருப்பதற்காக, அ.இ.அ.தி.மு.கவுக்குப் போடலாம். 1991&96ல் ஜெய் ஆட்சி அராஜகத்தை விட 2001&2006 ஜெ ஆட்சியின் அராஜகங்கள் சற்றே குறைவாக இருந்ததற்கும் இதுவே காரணம்.
2. சத்துணவு, எய்ட்ஸ் கல்வி, மகளிர் சுய உதவிக் குழுக்கள், மொழி வளர்ச்சி, சென்னைக் குடி நீர் திட்டம், மழை நீர் சேகரிப்பு திட்டம் போன்ற சில துறைகளில் அமைதியாக சீரான பணிகளை செய்துவருவதற்காக.
3. எந்த நோக்கத்துக்காகச் செய்திருந்தாலும், சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் கிடையாது என்ற நம்பிக்கையை ஜயேந்திரரை கைது செய்ததன் மூலம் ஏற்படுத்தியதற்காக.
ஏன் ஓட்டு போடக் கூடாது?
1. ஜனநாயக அணுகுமுறையே இல்லாமல் செயல்படும் பிடிவாத குணத்தை தன் சாதனையாகக் கருதும் ஜெயலலிதாவின் தலைமை.
2. உட்கட்சி ஜனநாயகம், அடுத்த வரிசை தலைவர்கள் என்று எந்த ஜனநாயக அமைப்பிலும் நம்பிக்கை இல்லாத கட்சியாக எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இன்றுவரை இருந்து வருவதால்.
3. சட்டமன்றத்தில் தனி நபர் துதி பாடுவதற்கு மட்டுமே அனுமதித்து, மாற்றுக்கருத்துகளுக்கு இடம் இல்லாமல் செய்துவருவதால்.
4. எல்லா பிரிவு மக்களுக்கு எதிராகவும் எடுத்த கொடூர நடவடிக்கைகளைத் திரும்பப் பெற்றாலும், மறுபடியும் அதே போல நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத ஆட்சி என்பதால்.
ம.தி.மு.க:
ஏன் ஓட்டு போட வேண்டும்?
1. வைகோ சிறந்த பார்லிமெண்ட்டேரியன், சிறந்த பேச்சாளர் & எண்ட்டர்டெயினர், மனித உரிமை ஆர்வலர் என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை.
ஏன் ஓட்டு போடக்கூடாது?
1. வைகோவைத் தவிர அவர் கட்சியில் தேறக்கூடிய ஒரு தலைவர் கூட கிடையாது.
2. எதற்கும் மிகையாக உணர்ச்சிவசப்படுகிற தலைமை.
விடுதலை சிறுத்தைகள்:
ஏன் ஓட்டு போட வேண்டும்?
1. தொடர்ந்து அயராமல் களத்தில் தீவிரமாக இருக்கிற தலித் அமைப்பு என்பதால்.
ஏன் ஓட்டு போடக்கூடாது?
1. தலித் மக்களின் முதன்மையான தேவைகளான கல்வி, வேலை விஷயங்களில் அக்கறை காட்டாமல், அவர்களை இதர கட்சிகளைப் போலவே ஓட்டு வங்கியாக மட்டும் கருதுவது.
2. தலித் உட்பிரிவுகளிடையே ஒற்றுமைக்கு முயற்சிக்காமல் பிளவுகளை நீடிப்பது.
3. சந்தர்ப்பவாத கூட்டணி அரசியலையே பின்பற்றுவது.
இரன்டு அணிகளும் இலவசங்களைப் போட்டி போட்டுக் கொன்டு அறிவித்து தமிழக மக்களை சுயமரியாதையற்ற பிச்சைக்காரர்களாகவே வைத்திருக்க விரும்புவது அருவெறுப்பை ஏற்படுத்துகிறது. தன் சொந்தக் காசில் ஒரு பொருளை வாங்கி மகிழ்ச்சி அடைய ஏற்ற வாங்கும் சக்தியை தமிழருக்கு ஏற்படுத்துவதில் இருவருக்கும் அக்கறையே இல்லை.
இப்படி இரு அணிகளையும் அலசிப் பார்த்தால் இருவருக்குமே அவர்களுடைய குறைகளை மீறி ஆதரவளிக்கத் தூண்டும் அளவுக்கு எந்த பலமான காரணமும் இல்லை.
களத்தில் எஞ்சியிருப்பது வேறு யார் யார்? பாரதிய ஜனதா, புதிய தமிழகம் இரு கட்சிகளும் எந்த விதத்திலும் நம்பிக்கை தருவதாக இல்லை. கார்த்திக்கின் பார்வர்ட் பிளாக் எல்லாம் தற்போதைய தேர்தல் சோக நாடகத்தின் காமெடி டிராக்க்காக மட்டுமே இருக்கிறது. அடிஷனல் காமெடியாக சிம்ரன் முதல் தியாகு வரை நட்சத்திர பட்டாளமே உலா வருகிறது.
கடைசியில் எஞ்சியிருப்பது புதிய கட்சியான நடிகர் விஜய்காந்த்தின் தேசிய திராவிட முற்போக்குக் கழகம்தான். அதையும் அலசலாம்.
ஏன் ஓட்டு போட வேண்டும்?
1. இது வரை ஆட்சியில் இல்லாததால், ஊழல், நிர்வாக முறைகேடு என்று எந்தக் கறையும் இல்லை. புதுத் துடைப்பம் நன்றாகப்பெருக்கும் என்ற நம்பிக்கைதான்.
2. ரஜினி மாதிரி அரசியலுக்கு வருவதைப் பற்றி குழப்பியடிக்காமல், சொன்னபடி விஜய்காந்த் வந்திருப்பதால்.
ஏன் ஓட்டு போடக்கூடாது?
1. கட்சிக்கு கொள்கை என்ரு அறிவிக்கப்பட்டிருப்பது எதுவும் புதிய அணுகுமுறையில் இல்லை. எம்.ஜி.ஆரின் அண்ணாயிசத்துக்கு சமமான குழப்ப சித்தாந்தம்தான்.
2. தேர்தல் அறிக்கையில் கழகங்களைப் போலவே இலவசங்களை வாக்குறுதிகளாக அள்ளி வீசியிருப்பதால்.
3. கழகங்களைப் போலவே குடும்ப அரசியலுக்கு ஆரம்பத்திலேயே வித்திட்டிருப்பதால்.
எனவே ஓட்டு போடத் தகுதியாக ஒரு கட்சி கூட இந்தத் தேர்தலில் கண்ணுக்குப் படவில்லை. கருத்துக்கு எட்டவில்லை.
இப்படிப்பட்ட சூழலில் தனிப்பட்ட வேட்பாளரின் தகுதியை மட்டும் பார்த்து ஓட்டு போடலாம் என்று சிலர் சொல்லுகிறார்கள். அதிலும் பயனில்லை. தனி மனிதராக ஒருவர் சிறந்தவராக இருந்தாலும், அவரை நிறுத்திவைத்திருக்கும் கட்சி சரியில்லை என்றால் என்ன பயன்? அவரால் அந்தக் கட்சிக்குள் இருந்து கொன்டு என்னதான் நல்லது செய்யமுடியும்? அப்படிப்பட்டவர்களை கட்சிகள் சீக்கிரமே வெளியேற்றிவிடும். இடதுசாரிகள் எவ்வளவு நேர்மையானவர்களாக இருந்தாலும், கூட்டணி சேருபவர்களுடன் இருந்து கொண்டு என்ன செய்ய முடிகிறது? அது போலத்தான்.
எனவே ஓட்டு போடாமல் இருந்துவிடமுடியுமா?
கூடாது. கூடவே கூடாது.
எந்தக் கட்சியும் சரியில்லை, எந்த வேட்பாளரும் சரியில்லை என்றால் அதைத் தெரிவிக்கவும் நமது தேர்தல் விதிகள் இடம் தந்திருக்கின்றன. அதன்படி வாக்குச் சாவடியில் விரலில் மை வைத்த பிறகு அதிகாரியிடம் 49 ஓ பதிவு செய்யப் போகிறேன் என்று தெரிவிக்கலாம்.
இப்படி 49 ஓ போடுவதால் என்ன பயன்? அதுதான் அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர்கள் தரும் எச்சரிக்கை மணி. ஒரு ஜாதிக்கட்சிக்கு ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 3000 ஓட்டு இருந்தாலே கூட்டு சேரத்துடிக்கும் கட்சிகள், தொகுதிக்கு 5 ஆயிரம் 49 ஓ விழுந்தால், நிச்சயம் அதைப் புறக்கணிக்க முடியாது தங்களை திருத்திக் கொள்ளத் தொடங்கியாக வேண்டி வரும்.
அப்போதுதான் அடுத்த கட்டமான அடிப்படை மாற்றத்தை நோக்கி நாம் போக முடியும். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைக்கு நம் தேர்தல் முறை மாறினால்தான் எல்லா கட்சிகளின் அசல் பலமும் பிரதிபலிக்கும் அப்போதுதான் கூட்டணி என்பதற்கு சரியான அர்த்தமும் இருக்க முடியும். இப்போது யாரும் தங்கள் பலத்தின் அடிப்படையில் கூட்டு சேருவதில்லை. பலவீனங்களின் அடிப்படையிலேயே சீட்டு பிரித்துக் கொள்கிறார்கள். தமிழ் நாட்டில் தி.மு.கவுக்கும் அ.இ.அ.தி.மு.கவுக்கும் நிரந்தரமாக இருப்பது சுமார் தலா 24 சதவிகித ஓட்டுதான். அதன்படி அவற்றுக்கு சட்டமன்றத்தில் தலா 50 முதல் 60 சீட்டுகள்தான் இருக்க முடியும். வைகோவுக்கோ, திருமாவுக்கோ, இடதுசாரிகளுக்கோ தலா 5 முதல் 10 சத விகிதம் இருக்குமானால், அவர்களுக்கெல்லாம் தலா 10 முதல் 20 எம்.எல்.ஏ நிச்சயம் இருக்க முடியும். அப்படிப்பட்ட சூழலில் கூட்டணி என்பதைக் கொள்கை சார்ந்து அமைக்க முடியும்.
இந்தப் படிக்கட்டுகளிலெல்லாம் நாம் ஏறிப்போவதற்கு முதல் படிக்கட்டு 49 ஓ !
தமிழ் நாட்டில் விஜய்காந்த் கூட எல்லா தொகுதிகளிலும் போட்டியிடவில்லை. எல்லா தொகுதிகளிலும் இருக்கும் ஒரே வேட்பாளர் 49 ஓதான்!
(ஓ! பக்கங்கள் - ஆனந்த விகடன் - மே 2006)
|