 |
எம். சுரேந்திரன்
மகிழ்ச்சியானதா மணவாழ்க்கை?
இளைஞர் ஒருவருக்கு திருமணம் நிச்சயமாகிறது. அவரின் அலுவலக நண்பர்கள் அவருக்கு ஒரு விருந்து கொடுத்தனர். பேச்சும் சிரிப்புமான அந்த விருந்தில், பேச்சோடு பேச்சாக அந்த நண்பர் குழாம் அந்த இளைஞருக்கு, மண வாழ்க்கையின் சாராம்சங்களையும், அதில் உண்டாகக்கூடிய சிக்கல்களையும் அந்த இளைஞர் ஒரு கணவனாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களையும் தாங்கள் அனுபவத்தில் பெற்ற அறிவின் துணைகொண்டு விளக்கி கூறினர். அவர்கள் தெளிந்துரைத்ததின் சாரம் இது தான்...
1) எந்த நிலையிலும் எத்தகைய மகிழ்ச்சியான தருணத்திலும் கடந்த காலம் பற்றி முழு உண்மைகளையும் மனைவியிடம் முழுக்க சொல்லக் கூடாது.
2) எத்தனை காலம் ஆனாலும், எத்தனை குழந்தைகள் பிறந்தாலும், கணவனின் குடும்பமும் மனைவயின் குடும்பமும் வேறு வேறுதான். இரு குடும்பத்தாரும் எத்தனை குடும்ப விழக்களில் கூடி களித்தாலும் அந்த இரு குடும்பத்தாருக்கு இடையே மனகிலேசம் இருந்து கொண்டுதான் இருக்கும்.
3) கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் இருவரில் யார் தவறிழைத்தாலும், தவறு பற்றியோ நியாயம் பற்றியோ கவலையின்றி, அந்தந்த குடும்பத்தார் கணவனுக்கோ மனைவிக்கோ ஆதரவாகத்தான் பேசுவார்கள்.
4) கணவன் மனைவியிடம் மொத்த சம்பள முழு விவரத்தையும் தெரிவிக்காமல் இருப்பது நல்லது.
5) கணவன் தன் அம்மா, அக்கா, தம்பி, தங்கைகளுக்கு பண உதவி செய்ய வேண்டி இருக்கும் நிலையில் முடிந்த வரை வெளியே தெரியாத வகையில் இரகசியமாக செய்வது நல்லது. தெரிந்து பாதி தெரியாமல் பாதி செய்வது இன்னும் உத்தமம்.
6) அம்மாவிடம் “பெண்டாட்டி தாசன்'' என்றும், மனைவியிடம் “அம்மாபுள்ள'' என்றும் பெயர் வாய்க்காமல் வாழவே முடியாது.
இந்த கருத்தோட்டங்களுக்கு நடுவே, ஒருவர் இன்னும் ஒருபடி மேலே சென்று, தினமும் நேரத்திற்கு வீட்டுக்கு வரும் வழக்கத்தை வைத்துக் கொள்ளாதே. உன் எல்லா வேலைகளையும் மனைவியிடம் பட்டியலிட்டு சொல்லாதே, வெளியே போகும் தருணங்களில் எல்லாம், எப்ப திரும்பி வருவாய் எனச் சொல்லிச் செல்லாதே என்று வினோத யோசனைகளை கூறினர். மேலே சொன்ன, “செய்யக் கூடாத தவறுகளை'' ஆரம்ப காலத்தில் செய்து விட்டுதான் இன்று கைகளிலும் கால்களிலும் விலங்கிடப்படாத கைதியாக வாழ்வதாகப் புலம்பினார்.
இன்னொருவர், “வாழ்க்கை நிம்மதியாகவும், மகிழ்ச்சியானதாகவும் சௌகரியமாகவும் அமைய வேண்டுமானால், ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது தான் ஜோதியில் கலந்து ஐக்கியமாகிவிடுதல்'' என்றார். புரியாமல் விழித்தவர்களுக்கு இப்படிச் சொன்னார், “ஜோதி'' என்பது மனைவியின் குடும்பத்தைக் குறிக்கும். கல்யாணத்திற்குப் பிறகு சற்றும் தயக்கம் இன்றி மனைவி, அந்த குடும்பம், அந்த மனிதர்கள் என்று கலந்து உறவாடி ஐக்கியமாகி விட வேண்டும். அதைவிட முக்கியம் தான் ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்துதான் ஆளானோம்... தனக்கு அம்மா அப்பா அக்கா தம்பிகள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் அறவே இல்லாமல் இருப்பது'' என்றார்.
இதைக்கேட்டு எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அந்த விழாவில் (விருந்தில்) கலந்து கொண்ட அலுவலக சகாக்களில் ஒருவரும், வயதில் மூத்தவரும் மகளுக்கு திருமணைம் செய்வித்து தாத்தாவானருமான ஒருவர் சொன்னார், “இவர்கள் எல்லாம் சொல்வதில் கொஞ்சம் உண்மை இருக்கலாம். ஆனால் நான் சொல்ல விரும்புவது இதுதான். மனைவியை உளமார நேசிக்க கற்றுக் கொள், அம்மா அப்பா உடன் பிறந்தவர்களை விட கடைசிவரை வாழ்விலும், சாவிலும் கூட வரப்போகிறவள் மனைவிதான் என்பதை உணர்ந்து நடந்து கொள். நீ அப்படி நடந்து கொள்வது முக்கியமல்ல. அதைவிட முக்கியம் நீ “மனைவியே முக்கியம்'' என்று உணர்ந்து நடப்பதாக, உன் மனைவி நம்பும் வகையில் நடந்து கொள்வது என்றார். கல்யாணமாகி 30 வருடங்கள் கழிந்த பின்னும் கூட பேத்தி பிறந்துவிட்ட இந்த வயதிலும் தன் மனைவிக்கு ஆதரவாக தான் பேசுவது இல்லை என்று தன் மனைவி குறைபடுவதாகக் கூறி வருந்தினார்.
வயது 50ஐ தாண்டிய நிலையில் உள்ள இன்னொருவர் கூறியதுதான் வேடிக்கையானது, தெருகூட்டி பத்து பாத்திரம் தேய்க்கும் பெண்ணாக இருந்தாலும் மிகப்பெரிய அதிகாரியாக கலெக்டர் போல வேலை பார்ப்பவராக இருந்தாலும், பெண்கள் என்பவர்கள் சில சாதாரண விஷயங்களில் ஒத்த கருத்தும் உணர்வும் உடையவர்களாகத்தான் இருப்பார்கள். ஒரு சேலையோ அல்லது ஒரு நகையோ போல வேறு எதுவும் பெண்களை அவ்வளவு பரவசப்படுத்தாது. இதை உணர்ந்து நடந்தால் வாழ்க்கை சுவைக்கும் என்றார்.
மேலே பேசப்பட்டவை அனைத்தும் முழுக்க உண்மையல்ல... முழுக்க பொய்யுமல்ல... ஆளாளுக்கு குடும்ப சூழலுக்கு ஏற்ப மாறுபடும். ஆனால் குடும்ப வாழ்க்கையில் நாளும் மனிதர்கள் எதிர் கொள்ளும் சங்கதிகள் தான் இவை.
எங்கள் தெருவில் 68 வயதான முதியவர் ஒருவர் இறந்து போகிறார். இறந்தவரின் உடன்பிறந்த தங்கச்சி வருவதற்காக காத்திருக்கின்றனர். வெகு தூரத்தில் இருந்து பயணப்பட்டு வந்த அந்தப் பெண்மணி, தன் அண்ணனைக் கட்டிக்கொண்டு அழுகிறார். அழுகையின் ஊடே “உன்னை இப்படி கொன்னுட்டாளே'' என்று அண்ணியைக் குறை கூறி அழுததை தெருவே வேடிக்கைப் பார்த்தது.
இன்னொரு வீட்டில் ஒரு 12 வயது குழந்தை நோய் வாய்ப்பட்டு இறக்கிறது. சாவுக்கு வந்த குழந்தையின் அத்தை, “என் மருமகளை கொண்ணுட்டியேடி'' என்று தன் நாத்தனாரிடம் சண்டைக்கு நிற்கிறார்கள். எத்தனை காலம் ஆனாலும் கணவன் மனைவி என்ற இருவேறு குடும்பத்தார் மனதளவில் வேறுபட்டு நிற்பதையே இந்நிகழச்சிகள் காட்டுகின்றன.
இவையெல்லாம் தவிர்க்க முடியா சமூகச் சிக்கல்களாக நம் சமூகத்தில் ஊடும் பாவமாக விரவிக் கிடக்கின்றன. வழக்கமாக, அலுவலகத்தில் சேர்ந்து டீ குடிக்கும் நண்பர்களிடையே ஒருவர் எப்பொழுதுமே, குடிக்கும் டீக்கு காசு கொடுக்கவில்லை எனில், அவர் மரியாதை என்னவாகும் என்று, அவர் மனைவி ஒரு நாளும் யோசித்ததாகத் தெரியவில்லை. அந்த நபரிடம் தனியே விசாரித்ததில், அழாத குறையாக அவர் சொன்னது என்னவெனில் அவர் மனைவி சம்பள பில்லை ஒப்பிட்டு, மொத்த சம்பளத்தையும், வாங்கிக் கொள்வதாகவும், மதிய உணவு வீட்டிலிருந்து எடுத்துப் போகும் அவருக்கு இரண்டு ரூபாய்கு மேல் என்ன செலவு என்று கூறி தினம் ரூபாய்.2/ மட்டும் தருவதாகவும் புலம்பினார். இவர்தான், எக்காரணத்தைக் கொண்டும், மனைவியிடம் மொத்த சம்பளத்தையும் சொல்லிவிடாதே என்று உபதேசித்தவர். அதே நேரம் வாங்கிய சம்பளத்தை வீட்டுக்குக் காட்டாமல், முதல் 10 தேதிக்குள்ளேயே முழுவதையும் குடித்தே அழிக்கும்
மகானுபவன்களும் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். மனைவியின் கொடுமை தாங்காமல் குடிப்பதாகக் கூறும் ஆண்களும், கணவர் குடித்துவிட்டு வந்து ரகளை பண்ணுவதாகக் கூறி அழும் பெண்களும் நிரம்பிய குடும்பங்கள் நாடு முழுக்க இருக்கத்தான் செய்கின்றன. இன்னொரு பெண்ணின் கதையோ இன்னும் துயரமானது. நம்ப முடியாதது. கணவனும், மனைவியும் வங்கி ஊழியர்கள். இரவு சாப்பாடு முடிந்து. டி.வி.பார்த்தபடி பீன்ஸ் நறுக்கி பிரிட்ஜில் வைக்கிறார் மனைவி. கணவர் எழுந்து சென்று அதை எடுத்து குப்பைக் கூடையில் கொட்டுகிறார். “நாளைக்கு வேண்டியதை நாளைக்கு செய், இன்னைக்கு அரிந்தால் காய்கறி பொறியல் சுவையில்லாமல் போய்விடும்'' என்கிறார். இத்தகைய முரட்டு மூடர்களுடன் வாழ நேர்ந்த பெண்களும் பல்வேறு காரணங்களுக்காக காலத்தை ஓட்டியபடிதான் இருக்கிறார்கள்.
பீன்ஸ் கறியின் சுவைபற்றி யோசிக்கத் தெரிந்த அந்த மனிதனுக்கு வாழக்கைச் சுவை பற்றிய வாசனையே தெரியவில்லை என்பதுதானே உண்மை. இத்தனை அவலங்களுக்கும் என்னதான் காரணமாக இருக்க முடியும்? உண்மையில் காரணங்கள் ஆழமானவை மட்டுமல்ல. சிக்கலானவையும் கூட, குடும்ப வாழ்வில் ஆண் பெண் இருவருக்கும் பரஸ்பர நம்பிக்கையின்மை பல இடங்களில் பரவலாக காணப்படுகிறது. ஒவ்வொரு மனிதனின் உடம்பும் தனித்தனியான கெமிக்கல் தொழிற்சாலை என்று மருத்துவர்கள் கூறுவது உண்டு. ஒன்று போல இன்னொன்று இருப்பதில்லை. ஒரே மருந்து ஒருவருக்கு வேலை செய்யும், இன்னொருவருக்கு சரிபடாது. இது போலத்தான், ஒவ்வொரு மனிதனும் தனி உலகம் அந்த தனிநபர் பிறந்த வீடு வளர்ந்த சூழல் அவரின் அனுபவம், அந்த அனுபவத்தில் கற்றுக் கொண்டதாக அவர் நம்பும் விஷயம் என்று எத்தனையோ விஷயங்கள் இணைந்த கலவையாக அந்த நபர் இருக்கிறார். இப்படி இருவேறு நபர்கள் புதிதாய் இணைவது தான் திருமணம். பிறகு குடும்பம், பரஸ்பர நம்பிக்கை, ஆழமான அன்பு, விட்டுக் கொடுக்கும் மனோபாவம், மெல்லியத் தியாக உணர்ச்சி, அடுத்தவர் உணர்வுகளை மதிக்க முயற்சித்தல், ஒழுக்கமான வாழக்கை, ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்க்கை நெறி போன்றவை எல்லாம் சரியான விகிதத்தில் கலக்கும் போதுதான் மணவாழ்க்கை இனிக்கிறது.
இதில் ஒன்று குறைந்தாலும் குடும்பம் என்பது ஒரு துன்பியல் நாடகமாகிப் போகிறது. இது அல்லாமல் வரவுக்கு மீறி செலவு செய்வது, சக்திக்கு மீறி அசைப்படுவது, ஆடம்பரம், பகட்டு, அடுத்தவர் சொல் கேட்டு சொந்த புத்தி இழப்பது என்று குடும்ப குழப்பங்களுக்கான காரணங்கள் நீளும். குடும்பத்துள் நிகழும் குழப்பங்களில் பெரியவர்களின் பங்கையும் குறைத்துக் கூற முடியாது. தன் மகன் மேலே அவன் மனைவியைவிட அதிக உரிமை தங்களக்கு உண்டு என்பதை நிறுவுவதற்காக பெற்றோர்கள் அவ்வப்போது செய்யும் சின்னச்சின்ன செய்கைகளும், சொல்லும் சின்னச்சின்ன வார்த்தைகளும் கூட கணவன் மனைவியிடையே பிரிவையும் துன்பத்தையும் உண்டாக்கப் போதுமானவையாக இருக்கின்றன. தேசங்கள் மட்டுமல்ல, குடும்ப உறுப்பினர்கள் கூட தங்கள் எல்லைக்கோட்டை தாண்டாமல் இருந்தால் தான் குடும்பத்தில் குதூகலம் குறைவின்றி இருக்கும். ஆண், பெண் இருபாலரும் குறைவும் நிறைவும் மிக்கவர்களாகவே இருத்தல் உலக இயல்பு என்ற புரிதல், கணவன் மனைவி இருவருக்கும் இருக்க வேண்டும். புருஷனைப் பார்த்து ஒரு இளவயது மனைவி கூறுகிறாள். “நீ செத்தா எனக்கு எனக்கு கவலை இல்லை. வர்ற பென்ஷனை வச்சு வாழ்வேன்'' என்று. பொறுமையற்ற இது போன்று பொறுப்பற்ற பேச்சுபேசும் பெண்கள் மிகுதியாக வாழும் காலம் இது. இப்படி வெறுத்துப் போய் கூறுமளவுக்கு அந்த கணவன் என்ன பாடுபடுத்தி இருப்பான் என்பதும் கவலைக்குரிய விஷயந்தான்.
ஜெயகாந்தன் தன் சிறுகதை ஒன்றில் கூறுவார், “ ஒருத்தரை மதிக்கிறோம் என்பதற்கு என்ன அர்த்தம். அந்த ஒருவரை அவர் குறை நிறைகளோடு ஏற்றுக் கொள்வதுதான் அது.''
கணவன் மனைவியிடையே மேலே சொன்ன புரிதலும், வாழ்க்கைப் பற்றிய சரியான சிந்தனையும் இருந்தால் மணவாழ்க்கை மகிழ்ச்சியானதுதான்.
|