 |
(மனிதன் பதில்கள் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையன்று தளமேற்றப்படுகிறது. மனிதனின் மின்னஞ்சல் முகவரி: [email protected])
வைகோவின் சந்தர்ப்பவாதம், திருமாவுக்கு ராமதாசின் மோசடி இரண்டும் நியாயம்தானா?
ஆர்.குமாரசாமி, திருப்பூர்
கடைசி நிமிடம் வரை வாஜ்பாயி ஆட்சியில் அமைசர் பதவிகளை வகித்துவிட்டு தேர்தலுக்கு சற்று முன்பு காங்கிரசுடன் சேர்ந்து மறுபடியும் மத்திய அமைச்சர் பதவிகளை தி.மு.க அடைவது ராஜதந்திரம் என்றால் வைகோவுடையதும் அப்படியே. இந்த முறை தி.மு.க ஜெயித்தால், கலைஞர் தன் கடைசி காலத்தில் ஸ்டாலினைத்தான் முதலமைச்சராக்க முயற்சிப்பார். அல்லது தயாநிதியையோ கலாநிதியையோ கனிமொழியையோ கூட முதலமைச்சர் ஆக்க முற்படுவாரே தவிர வைகோவை அல்ல என்ற நிலையில், இவர்கள் முதலமைச்சராவதற்கு எதற்கு வைகோ தன் உழைப்பைத் தரவேண்டும்? ஸ்டாலினுடன் அதிகாரப் போட்டியில்தானே ம.தி.மு.கவே உருவானது? கொஞ்சம் எம்.எல்.ஏக்களை சம்பாதித்துக் கொண்டால்தான் 2011ல் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை நோக்கியாவது வைகோ நகர முடியும். விடுதலைப் புலிகளை ஆதரித்ததற்காக பொடாவில் வைகோவை ஜெயலலிதா கைது செய்து 19 மாதம் சிறை வைத்திருந்தது அரசியல் மோதல்தான். புலிகளைக் கொண்டு தன்னைக் கொலை செய்ய வைகோ சதி செய்வதாக கலைஞர் குற்றம் சாட்டியது அரசியலையும் மீறி தனி நபர் நேர்மையையும் நடத்தையையும் அவதூறு செய்த விஷயமாகும். வைகோ இத்தனை நாள் தி.மு.க அணியில் இருந்ததுதான் அரசியல் முட்டாள்தனம்.
ராமதாசுடன் சேர்ந்து தமிழ் பாதுகாப்பு இயக்கம் நடத்தினால் அவர் தி.மு.க அணியில் தனக்கு சீட் வாங்கிக் கொடுத்துவிடுவார் என்று திருமாவளவன் எதிர்பார்த்திருந்தால், அது திருமாவின் அரசியல் முதிர்ச்சியின்மையைத்தான் காட்டும். அவருக்குக் கலைஞரையும் புரியவில்லை ராமதாசையும் புரியவில்லை. இருவரும் ஒரே வார்ப்பு என்பதே புரியவில்லை என்றுதான் அர்த்தம்.
விஜய்காந்த்தின் தனித்துப்போட்டியிடும் முடிவு சரியா?
க.கணேசமூர்த்தி, அருப்புக்கோட்டை
தனித்துப் போட்டியிடுவது என்பது அவருக்கு ஏற்ற நல்ல முடிவு. ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கும் வாய்ப்பு இல்லாமல் போகலாம். ஆனால் அவருக்கு இருக்கும் அசல் ஆதரவின் அளவைப் புரிந்து கொள்ள இயலும். தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு அடுத்த ஐந்தாண்டுகளில் பலம் பெற இதுவே சரியான அடிப்படை. தமிழ் நாட்டில் தி.மு.க, அ.இ.அதி.மு.க இரண்டுடனும் மாறி மாறிக் கூட்டு சேரும் எந்தக் கட்சியும் இவற்றுக்கு மாற்றாக வளர்ச்சியடைய முடியாது. இப்போது தி.மு.கவுடனோ, அ.தி.மு.கவுடனோ கூட்டு சேர்ந்தால் விஜயகாந்த்தின் வளர்ச்சி நெப்போலியனையும் ராதா ரவியையும் தாண்டாது. (இந்த இதழ் அச்சுக்குப் போகும்வரை) பி.ஜே.பி பல முயற்சிகள் செய்தும் விஜய்காந்த் அதனுடன் கூட்டு சேரவில்லை என்பதுதான் நமக்கு ஆறுதலான விஷயம்.
இந்தத் தேர்தலில் ஜாதிக்கட்சிகள் என்ன ஆயின?
வி.சரவணன், விழுப்புரம்
வியாபாரிகள், தொழிலதிபர்கள் தொடங்கிய ஜாதிக் கட்சிகள் அவர்கள் நலனை மட்டுமே காப்பாற்றிக் கொள்ள என்பது அந்தந்த ஜாதியில் இருக்கும் மற்றவர்களுக்கு தெரிந்திருப்பதால் அவை பலமடையவில்லை. எனவே சிலர் பெரிய கட்சிகளில் ஐக்கியமாகிவிட்டார்கள். சிலர் மறுபடியும் தொழிலை கவனிக்கப் போய் விட்டார்கள். ஒரு குறுகிய வட்டார அளவில் கணிசமான எண்ணிக்கை யில் இருக்கும் பலத்தை அடிப்படையாகக் கொண்டும் கூட்டணி சதுரங்கத்தில் சரியாக காய் நகர்த்துவதாலும் பாட்டாளி மக்கள் கட்சி தப்பித்திருக்கிறது. தலித் கட்சிகளுக்கு இந்த வட்டார வசதி இல்லை. எண்ணிக்கை கணிசமாக இருந்தும் சிதறியிருக்கின்றன. தலித் உட்பிரிவு மோதல்கள் மேலும் சிதறடிக்கின்றன. இல்லாவிட்டால் மேலும் வலிமையாக இருக்க முடியும்.
எல்லாவற்றுக்கும் மேலாக பெரும்பாலான மக்கள் ஜாதி அடிப்படையில் தேர்தலில் ஓட்டு போடுவதில்லை. அவரவர் ஜாதிக்குத்தான் மக்கள் ஓட்டு போடுவதென்று இருந்தால், ஒரு போதும் கருணாநிதியோ ஜெயலலிதாவோ ஜெயிக்க முடியாது. ஜாதியின் பிடி மக்கள் மனங்களில் அரசியலை விட, சமூக, பண்பாட்டு தளத்தில்தான் கூடுதல்.
ஜெயலலிதா ஆதரவு அலை வீசுகிறதா?
கு.கண்ணபிரான், திருச்சி
எந்த அலையும் இல்லாத தேர்தல் இது. யாருக்கும் ஆதரவு அலையும் இல்லை. எதிர்ப்பு அலையும் இல்லை. தவிர தற்போது மக்கள் கருத்து அலைகடலாக தெரியவில்லை. ஆழ்கடலாக இருக்கிறது.
புஷ் போட்ட அணு உலை ஒப்பந்தம் யாருக்கு லாபம்? இந்தியாவுக்கா? அமெரிக்காவுக்கா?
கரு. குமரகுருபரன், கோவை - 2
பொருளாதார ரீதியில் இந்திய சந்தையும் இந்திய உழைப்பும் இப்போது அமெரிக்காவுக்கு அதிகம் பயன்படும் நிலையில் இருக்கிறது. இதற்காக இந்தியாவுக்கு உதவி செய்வது போல அமெரிக்கா ஆடும் நாடகங்களில் இதுவும் ஒன்று. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் முழுக்க முழுக்க அமெரிக்க பொருளாதாரக் கொள்கையின் ஆதரவாளர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அணு உலை ஒப்பந்தத்தில் மின்சார தயாரிப்பு உலைகளை சோதனையிட ஒப்புக் கொள்வோம். ராணுவ நோக்கத்துக்காக இயங்கும் உலைகளை சோதனையிட முடியாது என்று சொல்லும் இந்திய அரசு, அதிவேக ஈனுலைகளை ராணுவ நோக்கத்துக்கானவை என்று பட்டியலிடுகிறது. ஆனால் இதுவரை இந்திய மக்களுக்கு அணுசக்தித்துறை சொல்லி வந்தது என்ன தெரியுமா? மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிவேக ஈனுலை தொழில் நுட்பத்தைத் தவிர நமக்கு வேறு வழியில்லை என்று சொல்லியது! இப்போது உண்மை வெளிவந்துவிட்டது. அமெரிக்காவுடன் இந்தியா போடும் இந்த ஒப்பந்தத்தால் ஒரே ஒரு நன்மை நமக்கு உண்டு. இந்திய அரசு சோதனைக்குட்படுத்த முன்வந்திருக்கும் அணு உலைகள் பற்றி தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் இனி கேள்வி கேட்கலாம். ஊழியருக்கு ஏற்படும் கதிர் வீச்சு முதல் கதிரியக்க விபத்துக்கள் வரை முன்போல தகவல் தர மறுக்க முடியாது.
முகமது நபிகள் பற்றிய கார்ட்டூன் விவகாரத்தில் யார் தரப்பில் நியாயம் இருக்கிறது?
ஆர்.வெங்கடாசலம், நாகர்கோயில்
இரு தரப்பிலும் இல்லை. இந்தப் பிரச்சினையில் மதம், அரசியல் இரண்டும் கலந்திருப்பதுதான் சிக்கல். கிறித்துவமும் இஸ்லாமும் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கொண்ட மதங்கள். மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக ஐரோப்பாவில் கருத்துச் சுதந்திரம் பற்றி இருக்கும் பார்வை வேறு. இந்தியா, முஸ்லிம் நாடுகள் உட்பட கீழை தேசங்களில் கருத்துச் சுதந்திரம் பற்றிய கண்ணோட்டம் வேறு. இது தவிர அமெரிக்கா இராக் மீதும் அடுத்து இரான் மீதும் மேற்கொன்டு வரும் அராஜகமான நடவடிக்கைகள் முஸ்லிம் நாடுகளில் கடும் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கம்யூனிசத்தை எதிர்ப்பதற்காக அமெரிக்காவே வளர்த்துவிட்ட ஒசாமா பின் லேடன், அதன் முகத்திலேயே குத்தியபின் , தீவிரவாதம்=அல் கொய்தா=இஸ்லாம் என்ற எளிமையான (தப்புக்) கணக்குதான் மேற்கே வலுவாகிவிட்டது.
இராக் கைதிகளை அமெரிக்கா இழிவாகவும் அருவெறுப்பாகவும் சித்ரவதை செய்யும் தகவல்களும் படங்களும் அம்பலமாகி வருவதையடுத்து உலகத்தின் கவனத்தை திசை திருப்பி, முஸ்லிம்கள் எல்லாரும் வன்முறையாளர்கள் என்ற கருத்தை வலுப்படுத்த இந்த கார்ட்டூன் பிரசுரத்தை மேலை நாடுகள் பயன்படுத்துவதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதை முழுக்கவும் கற்பனையென்று நிராகரிக்க முடியாது.
கோட் சூட் அணிந்த மேற்கத்திய அரசியல் சாணக்கியர்களும், அங்கி, தாடி பூண்ட முஸ்லிம் முல்லாக்களும் தமக்குள் நடத்தும் யுத்தத்தில் கார்ட்டூன் கூட கத்தியாக மாறிவிடுகிறது. இந்த யுத்தத்தில் நடுவே சிக்கி மடிவது அப்பாவி மக்களும் அசல் செக்குலரிஸ்ட்டுகளும்தான்.
உணர்ச்சிவசப்படாமல் இந்த விஷயத்தை அணுகும் சூழல் பெரும்பாலும் இன்று உலகத்தில் இல்லையென்றபோதும், அறிவுப்பூர்வமாக இதை ஆராய்வதை தள்ளிப் போடுவதும் சமூக விரோதச் செயலேயாகும்.
கார்ட்டூன்களுக்கு எதிரான ஆட்சேபங்கள் இரண்டு. ஒன்று முகமது நபிகளின் உருவத்தை வரைவதே தவறு. இரண்டாவது பல கார்ட்டூன்கள் நபிகளையும் இஸ்லாத்தையும் அவதூறு செய்வதாக அமைந்திருந்தது தவறு. குறிப்பாக ஒரு கார்ட்டுன் நபிகளின் தலைப் பாகையை வெடிகுண்டாக காட்டியது. இன்னொரு கார்ட்டூன் இஸ்லாம் பெண்களை இழிவாக நடத்துவதாக சித்திரித்தது. ஒரு கார்ட்டூனில் ஏசு, இந்து சாமியார் கூட உண்டு.
கார்ட்டூன் பிரச்சினை எழுப்பும் சில முக்கியமான, அடிப்படைக் கேள்விகளைப் பார்க்கலாம்.
1. இஸ்லாம் உருவ வழிபாட்டைத்தான் நிராகரிக்கிறது. உருவங்களை வரைவதை அல்ல. இஸ்லாமிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் உலகம் முழுவதும் ஓவிய, சிற்பக் கலை தழைத்திருக்கிறது. கடவுளை (அல்லாவை) உருவமற்றவராக இஸ்லாம் சொல்லுகிறது. ஆனால் நபிகள் கடவுள் அல்ல. கடவுளின் தூதராக போற்றப்படும் அவர் வரலாற்றில் நிஜமாக வாழ்ந்த மனிதர். அவரை (யாரையுமே) அவதூறாக வரைவது நிச்சயம் தவறு. ஆனால் வரைவதே தவறு என்பது எப்படி சரி?
2. ஏசு கிறித்து பற்றி கிறித்துவர்களின் மத நம்பிக்கைக்கு பொருந்தாத பல கதைகள், படங்கள் வெளியாகியுள்ளன. அவருக்கும் மேரி மக்தலீனுக்கும் குழந்தை பிறந்ததாகச் சொல்லும் டாவின்சி கோட் நாவல் சூப்பர் ஹிட் விற்பனையில் உலகெங்கும் இன்னமும் இருக்கிறது. டென்மார்க்கிலேயே ரயில் நிலைய சுவரில் நிர்வாணமாக ஏசுவின் படத்தை ஒரு ஓவியர் வரைந்தார். அது பின்னர் அகற்றப்பட்டது ஆனால் குற்றமாகக் கருதப்படவில்லை. ‘ரிட்டர்ன்’ (மறுவருகை) என்ற தலைப்பின் டென்மார்க் இயக்குநர் ஜென்ஸ் ஜோர்கன் தார்சன் எடுத்த படத்தில் ஏசு உல்லாசப் பேர்வழியாக வருகிறார். சுற்றுச் சூழலைக் காப்பதற்காக ஒரு பயங்கரவாத கும்பலுடன் சேர்கிறார். கடைசியில் அவருக்கு மரண தன்டனை விதிக்கப்படும்போது, தனக்கு சில அற்புதங்கள் செய்து கொடுத்தால் அவரை விடுவிக்க ஏற்பாடு செய்வதாக போப்பாண்டவர் பேரம் பேசுகிறார். இது போல ஏசு தொடர்பாக மேலை நாடுகளில் பல கதைகளும் படங்களும் வெளியாகியுள்ளன. அவை எதுவும் வன்முறை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்படுத்தவில்லை. நபிகள் பற்றிய சித்திரிப்புகள் மட்டும் ஏன் வன்முறைப் போராட்டங்களில் முடிகின்றன?
3. நபிகளைப் பற்றி கார்ட்டூன் போட்டதற்கு எதிர்வினையாக, யூதர்கள் பற்றியும், ஹிட்லர் யூதர்களை ஒழித்ததாக சொல்லப்படும் ‘கட்டுக் கதை’ பற்றியும் கார்ட்டூன்களை தாங்கள் வெளியிடப் போவதாக ஒரு முஸ்லிம் எதிர்ப்புக் குழு அறிவித்தது. இப்படி கருத்துக்கு பதில் கருத்து, விமர்சனத்துக்கு பதில் விமர்சனம், என்பதோடு நிற்காமல் வன்முறையை சில முல்லாக்கள் தூண்டுவது, முஸ்லிம்கள் எல்லாரும் பயங்கரவாதிகள் என்று செய்யப்படும் மேற்கத்திய, இந்துத்துவப் பிரசாரத்துக்கு சார்பாகப் போய்விடவில்லையா?
4. கார்ட்டூன்களை எதிர்த்து நடந்த போராட்டங்களில் துப்பாக்கிச் சூடுகளிலும் தாக்குதல்களிலும் இறப்பவர்கள் எல்லாரும் முஸ்லிம்கள்தான். பல முஸ்லிம் நாடுகளில் கூட்டத்தை தாக்கும் போலீஸாரும் முஸ்லிம்கள்தான். இப்படி தங்களுக்கே இழப்பை ஏற்படுத்திக் கொள்ளும் போராட்டத்தை தங்கள் மத குருக்கள் தூண்டுவதை முஸ்லிம்கள் எதிர்க்கவேன்டாமா?
5. கருத்துச் சுதந்திரம் என்பது என்ன? மதச் சுதந்திரம் என்பது என்ன? இன்னொருவர் மனம் புண்படாத வரையிலும் கருத்து சொல்லலாம் என்றால், யார் மனம் எதற்கு புண்படும் என்று எப்படி தீர்மானிப்பது? ஒருவர் மனமும் புண்படாத கருத்துக்களின் பட்டியல் மிகச் சிறியதாகவே இருக்க முடியும். மதச் சுதந்திரம் என்பது அவரவர் விரும்பும் மதத்தைப் பின்பற்றும் உரிமையும் இன்னொருவர் பின்பற்றுவதை கேள்வி கேட்காத உரிமையும் என்றால், எந்த மதத்தையும் பின்பற்றாமல் இருக்கும் உரிமை கிடையாதா? அதுவும் உண்டென்றால், நாத்திகனான என் மனதை எல்லா மதப் பிரசாரங்களும், பொது இட பஜனைகளும், சுவிசேஷ முழக்கங்களும், பாங்கு அறிவிப்புகளும் புண்படுத்துவதிலிருந்து எனக்கு என்ன நிவாரணம்?
இந்தக் கேள்விகள் எல்லாவற்றுக்கும் விளக்கமான விடைகள் என் வசம் உன்டு. ஆனால் எழுத ஏற்ற சூழல் இங்கு இல்லை. எழுதினால் என்னால் மத ஒருமைப்பாடு ஏற்படும். ஆர்.எஸ்.எஸ். முதல் அல்லே லூயா வரை ஒன்றாக இணைந்து எனக்கு தண்டனை (மரணம்தான்!) விதிப்பார்கள். இப்போதைக்கு ஒரே ஒரு சுருக்கமான விடை மட்டும். நான் சொன்னதல்ல. இன்னொரு முறை யாரும் கொல்ல முடியாத வள்ளலார் சொன்னது : மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்.
முதலில் நாம் கடவுளை மதத்திடமிருந்து காப்பாற்ற வேண்டியிருக்கிறது!
பாராளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு எப்போதுதான் தருவார்கள்?
ஆர்.விஜயலட்சுமி, காஞ்சிபுரம்
நாடாளுமன்றத்திலும் சட்டப் பேரவைகளிலும் 33 சத விகித இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதாக முழங்கும் ஒரு கட்சி கூட தமிழகத் தேர்தலில் (இந்த இதழ் அச்சுக்குப் போகும்வரை) தங்கள் வேட்பாளர்களில் 33 சதவிகிதம் மகளிரை அறிவிக்கவில்லை. தானாக இவர்கள் இதையெல்லாம் செய்ய மாட்டார்கள். இட ஒதுக்கீடு செய்யாவிட்டால், பெண்கள் ஓட்டு போடவே வர மாட்டோம் என்று போராட்டம் நடத்தினால் ஒருவேளை பயப்படுவார்கள்.
சோனியா ராஜினாமா ஸ்டண்ட்டா? தியாகமா?
முகமது இஸ்மாயில், தஞ்சாவூர்
இரண்டும் இல்லை. புத்திசாலித்தனமான அரசியல். அம்பேத்கர் தலைமையில் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டபோது எம்.பிகளுக்கு பெரிய சம்பளங்கள் இல்லாத காலம். அப்படியும் கூட வேறு வருவாய் உள்ள பதவிகளில் இருக்கக்கூடாது என்ற தடையை அவர் சட்டத்தில் சேர்த்தார். அதற்குக் காரணம் எம்.பி. பதவி என்பது மக்களுக்கு சேவை செய்வதற்கான அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் வகிக்க வேன்டிய பதவி என்பதுதான். இப்போதோ, எம்.பிகள் சம்பளங்களும், இதர வசதிகளும் பல மடங்கு அதிகரித்துவிட்டன. இன்று வேறு எந்தப் பதவியையும் ஒரு எம்.பி வகிப்பது என்பதே தேவையற்றதாகும். ஜெயா பச்சன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டபோது ஆளுங்கட்சியும் எதிர்க் கட்சியும் ஒருவரையருவர் திருடர்கள் என்று குற்றம் சாட்டிக் கொண்டன. சோனியாகாந்தியின் பரபரப்பான ராஜினாமாவுக்குப் பிறகு எல்லா கட்சிகளும் கூடிக் கொன்டு யாருமே திருடர்கள் இல்லை என்று சட்டப்படி ஆக்கிவிடலாம் என்று முயற்சிக்கின்றன!
குஜராத் பெஸ்ட் பேக்கரி முஸ்லீம் படுகொலை வழக்கில் ஸஹீரா ஷேக்கின் பல்டிசாட்சியத்துக்கு தண்டனை சரியா?
அப்துல் அஜீஸ், பேரணாம்பட்டு
சரிதான். அதே சமயம், பாதிக்கப்பட்ட ஸஹீராவை மிரட்டியும் பணம் கொடுத்தும் பல்டி அடிக்க வைத்த பி.ஜே.பி.காரர்களையும் நீதிமன்றம் முன்பு நிறுத்தவேண்டும். ஸஹீராவின் பல்டியை மீறி, குற்றவாளிகள் தண்டிக்கப்படக் காரணமாக இருந்தவர் ஸஹீராவின் அண்ணா யாஸ்மின். அவர்தான் கடைசி வரை உறுதியாக இருந்த ஒரே சாட்சி. பத்து குற்றவாளிகளை அடையாளம் காட்டினார். அவருக்குப் பாராட்டும் பரிசுகளும் தரப்படவேண்டும். தன் சிறு குழந்தையுடன் அகமதாபாதில் தையல் வேலை செய்து பிழைத்துவரும் யாஸ்மினுக்கு மீடியா இன்னும் அதிக இடம் ஒதுக்க வேண்டும்.
கலர் டி.வி.இலவசமாகத் தரப்போவதாக தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே?
லெனின் பாரதி, புனிததோமையர்மலை
சன் டி.வி. நலனைத் தவிர கலைஞருக்கு வேறு பார்வை இல்லாமல் போய்விட்டது என்பதற்கு இது இன்னொரு அடையாளம். எதற்காக இலவச டி.வி. தெரியுமா? “பெண்களின் பொது அறிவை வளர்ப்பதற்காக” என்கிறது தி.மு.க. அறிக்கை. அவமானம்! பொது அறிவை சன் டி.வி.யும் தமிழ் முரசும் வளர்த்து வரும் லட்சணம் நமக்குத் தெரியுமே!
தங்களது கேள்விகளை மனிதனுக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
|