 |
(மனிதன் பதில்கள் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையன்று தளமேற்றப்படுகிறது. மனிதனின் மின்னஞ்சல் முகவரி: [email protected])
சோ ராமசாமி நேர்மையான நடுநிலையான விமர்சகர் என்று கூறப்படுகிறதே? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்கு அவரைத் தெரியுமா?
பாலச்சந்தர் கணேசன், மின்னஞ்சல்
தெரியும். நேரில் பழகுவதற்கு இனிமையானவர். அவருடன் கருத்து மாறுபாடு உள்ளவர்களுடன் கூட தயக்கமில்லாமல் இனிமையாகப் பழகுவார். முகத்துக்கு நேரே தன் மாறுபட்ட கருத்தைச் சொல்லிவிடுவார். ஆனால் அவர் நடு நிலையான விமர்சகர் அல்ல. ஆர்.எஸ்.எஸ் கருத்தாக்கத்தில் இருப்பவர். அதற்கு சார்பாக மக்கள் கருத்தை உருவாக்கப் பல விதங்களில் முயற்சித்து வருபவர். எண்பதுகளில் ஜயேந்திரரை சின்னக் குத்தூசியும் நானும் சந்தித்த நிகழ்ச்சியில் சோ நேர்மையாக நடந்துகொள்ளவில்லையென்பது என் நேரடி அனுபவம். இது பற்றிய விவரங்கள் சிறு நூல்களாகவும் தீம்தரிகிட இதழிலும் வெளியாகியுள்ளன. எண்பதுகளில் ஜூனியர் விகடனில் நான் பணியாற்றிய சமயத்திலும் சோ நேர்மையில்லாமல் எழுதிய ஓர் நிகழ்ச்சியை என்னுடைய சில நேர்காணல் பதிவுகளில் சொல்லியிருக்கிறேன்.
அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவிப்பதை மக்கள் உண்மையில் வரவேற்கிறார்களா? மக்கள் இதை எதிர்பார்க்கிறார்களா?
பாலசந்தர் கணேசன், மின்னஞ்சல்.
கஞ்சி குடிப்பற்கிலார். இதன் காரணம் இவையென்ற அறிவுமிலார் என்ற நிலையில் வாழும் மக்கள், இலவசங்கள் தரப்படும்போது நிச்சயம் வாங்கிக் கொள்ளத்தான் செய்வார்கள். டாக்டர் கொடுப்பது தன் நோய்க்கான மருந்து என்ற நம்பிக்கையில் தான் நோயாளிகள் மருந்தை சாப்பிடுகிறார்கள். ஆனால் இந்த நோயாளி நிரந்தரமாக நோயாளியாக இருந்தால்தான் தனக்கு லாபம் என்று டாக்டர் நினைத்து குணப்படுத்தாத மருந்தை கொடுத்து ஏமாற்றிக் கொண்டிருந்தால் என்ன ஆகும்? அதுதான் அரசியலிலும் நடக்கிறது. கல்வி, வேலை வாய்ப்பு இரண்டையும் எல்லா மக்களுக்கும் சமமாக அளித்தால் அவர்களுடைய வாங்கும் சக்தியை அதிகரிக்க முடியும். தன் சொந்தக் காசில் சைக்கிளும் அரிசியும் கலர் டி.வியும் வாங்கும், வாங்க முடிகிற மகிழ்ச்சியை மக்கள் அனுபவிக்க வேண்டும். அந்த சுயமரியாதை உணர்ச்சியை மழுங்கடிப்பதைத்தான் ஜெயலலிதாவும் கருணாநிதியும் போட்டி போட்டுக் கொண்டு செய்து வருகிறார்கள்.
இட ஒதுக்கீட்டை தனியார் துறைக்கும் விரிவுபடுத்தும் மன்மோகன் அரசின் நடவடிக்கை சரியா, தவறா?
குமரகுருபரன், திருநெல்வேலி
சரிதான். சாதி அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகள் இன்னமும் பின்பற்றப்படுகிற சமூகத்தில் அதை சரி செய்வதற்கான பல முயற்சிகளில் இட ஒதுக்கீடு முக்கியமான ஒன்று. அரசுத் துறையில் வேலை வாய்ப்புகள் சுருங்கி விட்ட நிலையில், தனியார் துறைக்கும் இட ஒதுக்கீட்டு கொண்டு வரப்பட்டேயாக வேண்டும். இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் சொல்லும் தகுதி என்ற அடிப்படை அபத்தமானது. எல்லா குழந்தைகளுக்கும் சம தரத்திலான கல்வி, வாழ்க்கை வாய்ப்புகள் தரப்படும் வரை தகுதி பற்றிய பேச்சு மேல் சாதி சதியாகவே கருதப்படும். இட ஒதுக்கீட்டை விமர்சிப்பவர்கள் வைக்கும் முக்கிய விமர்சனம், அதன் பயன், ஒடுக்கப்பட்ட சாதிகளில் உள்ள ஏழைகளுக்கு போகாமல் பணக்காரர்களுக்கே போகிறது என்பதாகும். இதை சரி செய்வது ஒன்றும் கடினமானதல்ல. ஒவ்வொரு சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிலும், முன்னுரிமை, முதல் தலைமுறை பயனாளிகளுக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்றவருக்கும் என்று ஆக்கினால் போதுமானது. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை மாற்றாமல் அதற்குள்ளேயே இதை செய்வதை நான் ஆதரிக்கிறேன்.
கருணாநிதி, ஜெயலலிதா இருவரில் கொஞ்சம் சுமாரான ஒருவரை ஆதரிக்காமல் ஏன் 49 ஓவை வலியுறுத்துகிறீர்கள்?
கருணாகரன், கோவை 1
இருவரில் சுமாரானவர் என்ற அடிப்படையை பல வருடங்கள் முயற்சித்துப் பார்த்ததில் கிடைத்த அனுபவம்தான் காரணம். இருவருக்குள்ளும் ஒரு வேறுபாடும் இல்லை என்பதே என் முடிவு. இருவரும் மக்கள் விரோதிகள். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். பல முறை நான் சொல்லியிருப்பது போல, ஜெயலலிதாவை அம்பலபடுத்துவது எளிது. கருணாநிதியை அம்பலப்படுத்துவது சற்று கடினம். அவ்வளவுதான் வித்தியாசம். வாஜ்பாயி - அத்வானி, பரமாச்சாரியார், ஜயேந்திரர் போல கருணாநிதியும் ஜெயலலிதாவும். இரண்டாம் வரிசை ஆட்கள் எளிதில் அமபலமாகிவிடுவார்கள். முதல் வரிசை நபர்கள் போட்டிருக்கும் முகமூடிகள் அவிழ்க்கக் கடினமானவை. எனவே இருவரையும் நிராகரிப்பதுதான் மக்கள் நலனுக்கான வழி என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை. தேர்தல் முறையை சீர்திருத்தினால்தான் சரியான சக்திகள் வெல்ல வழி பிறக்கும். அந்த சீர்திருத்த முயற்சிகளில் ஒன்று 49 ஓ.
தங்களது கேள்விகளை மனிதனுக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
|