கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட "கலைவாணர் என் எஸ்.கே - சிரிப்பு டாக்டர்" என்கிற புத்தகம் சமீபத்தில் வாசித்தேன். புத்தகத்தின் முதல் அத்தியாயத்திலேயே என். எஸ்.கே.யின் பல வித்தியாச குணங்களைச் சொல்லி புத்தகம் முழுதும் வாசிக்கும் ஆவலைத் தூண்டி விடுகிறார் நூலாசிரியர்!

என்.எஸ்.கே. ஒரு நாள் இரவு மொட்டை மாடியில் படுத்திருக்கிறார். அப்போது ஒரு திருடன் வந்து மொட்டை மாடியில் குதிக்கிறான். அவனைப் பார்த்து விட்டு மனைவி மதுரம் "யாரோ திருட்டு பய" என்கிறார். என்.எஸ்.கே. எழுந்து பார்க்கிறார். அவன் திருடன் தான். ஆனால் என்.எஸ்.கே தன் மனைவியிடம் இப்படி சொல்கிறார்: "என்னுடன் நாடகத்தில் நடித்தவன்; வாசக் கதவு தாழ் போட்டதால் இப்படி வந்துருக்கான்" எனச் சொல்லி விட்டு அவனுக்கு சாப்பாடு போட்டு பணம் தந்து அனுப்புகிறார். இது தான் என்.எஸ்.கே!

இன்னொரு சம்பவம். இவர் நிறுவனத்தின் கணக்கு வழக்கு பார்த்து விட்டு வருமான வருவாய் அதிகாரி ஹனுமந்த ராவ், கணக்குகளை கொண்டு வந்தவரிடம் "என்னயா நிறைய தர்மம், தர்மம் -னு கணக்கு எழுதிருக்கு. எப்படி நம்புறது?" என்று கேட்க, என்னெனவோ சொல்லியும் அவர் நம்பாததால், இப்படி சொல்லியுள்ளார். "சார் நீங்க வேணா இப்ப நேரா போய் என்.எஸ்.கே யைப் பாருங்க. உங்களை யாருன்னு சொல்லிக்காம, உங்க மகள் கல்யாணத்துக்கு வேணும்னு பணம் கேளுங்க. தர்றாரா இல்லையா பாருங்க" எனச் சொல்ல, அதிகாரி ஹனுமந்த ராவ் அதே போல் போய் ஆயிரம் ரூபாய் பெண் கல்யாணத்துக்கு வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தர என்.எஸ்.கே ஏற்பாடு செய்ய, அதைப் பார்த்து விட்டு ஆச்சரியமான ஹனுமந்த ராவ் இப்படி சொல்லி விட்டுக் கிளம்புகிறார்: "ஐயா கிருஷ்ணா, உனக்கு உங்க அப்பா தப்பான பேர் வச்சிட்டார். உனக்கு கர்ணன்னு தான் பேர் வச்சிருக்கணும். பணம் தர்மம் தருவெதேல்லாம் சரி. இனியாவது அதுக்கு ஒரு வவுச்சர் வாங்கிக்குங்க"

கலைவாணர் தன் இறுதிக் காலத்தில் பண வசதி இன்றி மருத்துவமனையில் இருந்தபோது எம்.ஜி.ஆர். அவரைப் பார்க்க வரும்போதெல்லாம் பணக் கட்டை அவர் படுக்கைக்குக் கீழ் வைக்க, "ராமச்சந்திரா. பணமா தராம காசா மாத்திக் கொடு. இங்கே இருக்க ஏழைகள் எல்லாருக்கும் அப்ப தான் தர முடியும்" என்றாராம். தன்னைப் பார்க்க வருவோர் வாங்கி வரும் பழங்கள், ஹார்லிக்ஸ் இவற்றையும் கூட மற்ற ஏழைகளுக்குக் கொடுத்து விடுவாராம் என்.எஸ்.கே.

மேற்சொன்ன சம்பவங்கள் அனைத்தும் முதல் அத்தியாயத்திலேயே உள்ளது! இப்படி படுசுவாரஸ்ய அறிமுகத்துடன் துவங்குகிறது புத்தகம்.

மளிகைக் கடை வேலை, டென்னிஸ் கோர்ட்டில் பந்து பொருக்கி போடும் சிறுவன் வேலை எனப் பார்த்து வந்தார் என்.எஸ்.கே. மாலை நேரத்தில் நாடகக் கொட்டகையில் முறுக்கு விற்கப் போகும்போது நாடகம் முழுதும் பார்த்து அதில் வரும் பாடல்களை எப்போதும் பாடுவாராம். இதைப் பார்த்து விட்டு அவர் தந்தை அவரை ஒரு நாடகக் குழுவில் சேர்த்து விட, சிறு சிறு பாத்திரங்களில் நடித்து பின் முக்கிய சிரிப்பு நடிகர் ஆனார் என்.எஸ்.கே. அதன் பின் திரைப்படத்தில் நுழைந்து கலக்கியவருக்கு வந்த பெரும் சோதனை லட்சுமி காந்தன் கொலை வழக்கு.

அப்போது பிரபலமாக இருந்த பாகவதர் மற்றும் என்.எஸ்.கே. இருவரும் அந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள். லட்சுமி காந்தன் நடிகர்களைப் பற்றி எழுதும் மஞ்சள் பத்திரிக்கை நடத்தி வந்துள்ளார். அதில் பாகவதர் மற்றும் என்.எஸ்.கே. பற்றி தவறாக எழுதியதால், அவர்கள் ஆள் வைத்து லட்சுமி காந்தனைக் கொன்றனர் என்பது வழக்கு. இது பல வருடங்கள் நடந்து அதுவரை இருவரும் ஜெயிலில் இருக்க நேரிட்டது. பின் திறமை வாய்ந்த ஒரு வக்கீலின் வாதத்தால் மேல் முறையீட்டில் இருவரும் விடுதலை ஆகினர்.

விடுதலைக்குப் பின் பாகவதர் பெரிதாய் சோபிக்காமல் போனார். ஆனால் அதன் பின் தான் என்.எஸ்.கே-க்கு கலைவாணர் என்கிற பட்டம் கிடைத்தது. தன் திரை வாழ்வின் பல வெற்றிப் படங்களை தந்ததும் "நல்ல தம்பி" உள்ளிட்ட படங்களை அவர் இயக்கியதும் அதன் பின் தான்.

அந்தக் காலம் பற்றி சில வித்யாசமான தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. நாடக குழுக்களில் நடிப்போர் சண்டை போட்டுக் கொண்டு ஊருக்கு ஓடி விடுவார்களாம்; பின் திரும்ப வந்து அதே குழுவில் சேர்ந்து கொள்வார்களாம். அனைத்துக் குழுவிலும் இது நடக்குமாம்.

இழந்த காதல் என்கிற நாடகம் அனைவருக்கும் பொதுவான ஒன்றாம். ஏதாவது ஒரு நாடக குழு கஷ்டத்திலோ அல்லது நஷ்டத்திலோ இருந்தால் இழந்த காதல் நாடகம் கொஞ்ச நாட்கள் போட்டால், நஷ்டத்திலிருந்து மீண்டு விடுவார்களாம்!

எம்.ஜி.ஆர் அறிமுகமான அதே சதி லீலாவதி படத்தில் தான் என்.எஸ்.கே.யும் அறிமுகமானார் என்பது ஆச்சரியமாய் உள்ளது.

என்.எஸ்.கே ஏற்கனவே திருமணம் ஆனவர். அதை மறைத்து மதுரத்தை மணந்துள்ளார். இறுதி வரை அவருடன் தான் வாழ்ந்துள்ளார். முதல் மனைவி என்ன ஆனார் என்கிற தகவல் புத்தகத்தில் இல்லை.

அந்தக் காலத்திலேயே பல பன்ச் டயலாக்குகளை இவர் பிரபலம் ஆக்கியுள்ளார். அதில் முக்கியமான பன்ச் இது: "இவரு சொன்ன சொன்னது தான். எவரு? இவரு!" இதனை ஒரு காலத்தில் அனைவரும் சொல்லித் திரிவார்களாம்!

ஐம்பது வயதுக்கு மேல் மனிதன் வாழ கூடாது; நான் அதற்குள் இறந்து விடுவேன் என மதுரத்திடம் சொல்லிக் கொண்டே இருப்பாராம். அதன் படி ஐம்பது வயதுக்குள் இறந்து விட்டார்.

அவர் இறப்பிற்குப் பின்னும் புத்தகம் வேறு ஏதேதோ சம்பவங்கள் சொல்கிறது. பின் திடீரென ஒரு பாராவில் கலைவாணர் அரங்கம் திறக்கப்பட்டதை வரிகளில் சொல்லி முடிகிறது. முதல் அத்தியாயத்துக்கு எடுத்து கொண்ட சிரத்தையை கடைசி அத்தியாயங்களில் காட்டவில்லை.

என்.எஸ்.கே. நடித்த 102 படங்களின் பட்டியலும் இறுதியில் தரப்பட்டுள்ளது

கலைவாணர் என்ற மாமனிதரின் வாழ்க்கையையும், கூடவே அந்த கால நாடக உலகம் மற்றும் தமிழ் சினிமாவையும் நிச்சயம் அறிய முடிகிறது இந்த புத்தகத்தில்!


நூல்: சிரிப்பு டாக்டர்
ஆசிரியர்: முத்து ராமன்
பக்கம்: 164
விலை: 70
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

Pin It