உரையாடல்கள் 1

எங்க அப்பா பெறந்தது படிச்சது எல்லாமே மதுரையில தான். அப்புறம் அங்கயிருந்து சிவகாசிக்கு குடிபெயர்ந்தாங்க. அங்க புதுசா எதாவது தொழில் பண்ணணும்கறப்போ Printing Industry பண்ணலாம்னு முடிவுபண்ணி, சரி இந்த தொழில படிச்சிட்டு செய்யணும்கிறதுக்காக ஒரு ஏழெட்டு மாசம் மெட்ராஸ்ல அப்ரண்டிஸா சந்தமாமாவுல வொர்க் பண்னாங்க. அப்போ அம்புலிமாமா இந்தியாவுல நெறைய மொழிகள்ல வந்துட்டிருந்தது. சிறுவர் பத்திரிகைனா அம்புலிமாமாதான் லீடிங். அதோட பால்கன்னு சொல்லி அவுங்க காமிக்ஸ் பண்ணிக்கிட்டிருந்தாங்க. அது இங்கிலாந்துல பிளீட்வே பப்ளிகேஷன் பால்கன் என்ற பெயர்ல ஆங்கிலத்துல பண்ணத அப்படியே இவுங்க தமிழ்ல பண்ணிக்கிட்டிருந் தாங்க. 

இதெல்லாம் பாத்துட்டு இருந்தப்போ அதுல ஒரு ஆர்வம் வந்து, பிறகு அங்கிருந்து வெளியேறி சிவகாசி வந்து குடியேறிட்டாங்க. இங்க அச்சு இயந்திரம் வாங்கி வெச்சி வேலை செஞ்சாங்க. 1971ல் இங்கிலாந்துல பதிப்பாளர்களைச் சந்தித்து அவுங்ககிட்ட பேசினப்போ அவுங்க ஏகப்பட்ட காமிக்ஸ் வெளியிட்டிருக்காங்க. அதுல சில குறிப்பிட்ட கேரக்டர்ஸ் சஜஸ் பண்ணி இத பண்ணுங்கன்னாங்க. அதுல ஒன்னுதான் ஃபஸ்ட் பண்ணது இரும்புக்கை மாயாவி. அதுல ஒரு கம்ப்ளீட் ஸ்டோரி. பிச்சி பிச்சி தொடர்கதைன்னு இல்லாம ஒரு முழுநீள சித்திரக்கதைன்னு தமிழ்ல 1972 ல முத்து காமிக்ஸ்ல ஆரம்பிச்சது. ஸோ அந்த டேஸ்ட் அதுல இனிஷியலா ஆரம்பிச்சது. 1980 வரைக்கும் முத்து காமிக்ஸ் வந்துக்கிட்டி ருந்தது. அதுக்கப்புறம் வாரமலர் எல்லாம் பண்னாங்க, பிறகு மார்க்கெட்டிங் எல்லாம் கொஞ்சம் சிரமப்பட்டதுனால அது சரியா ஸக்ஸஸ் புல்லா வரல. நடுவுல குமுதம், மாலை மதி, காமிக்ஸ் பண்ணாங்க.

வாரமலர் முயற்சியை ஏன் கைவிட்டீர்கள்?

1980 லிருந்து 1982 வரை முத்துகாமிக்ஸில் வாரமலர் முயற்சி செய்தோம். 22 அல்லது 23  இதழ்கள்தான் வந்தன. அது அவ்வளவு வெற்றிகரமானதாக இல்லை. காரணம் காமிக்ஸ் என்றால் முழு கதையையும் படித்துப் பழகிவிட்டு இரண்டு பக்கம் இன்னைக்கு படிக்க, அப்புறம் அடுத்த வாரம் 2 பக்கம் படிக்க என்று போகும்போது ஒரு கதை முடிய ஆறு மாதம் ஆகும். அப்பொழுது அந்த கதைக்கான விறுவிறுப்பை அப்படியே நகர்த்த முடியாது.  அதாவது போன வாரம் என்ன படித்தோம். போன மாதம் என்ன படித்தோம் என்று நினைவில் கொள்ள முடியாது. அதனால் இது வெற்றிகரமாக இல்லை. அதனால்தான் அதை நிறுத்திவிட்டு வழக்கம் போல மாதம் ஒன்றாக வெளியிட்டோம்.

நீங்கள் தொடங்கிய லயன், ஜூனியர் லயன், மினி லயன் பற்றி?

லயன் காமிக்ஸ் போடணும்னு முடிவெடுத்து அதுக்கு என்ன லோகோ போடலாம்னு யோசிச்சிட்டிருந்தப்போ, Tell me why என்று ஒரு ஆங்கிலப் புத்தகம் வந்திருந்தது. அதில் காட்டுக்கு சிங்கத்த ஏன் ராஜானு சொல்றாங்கன்னு ஒரு கேள்வி. அந்த கேள்விக்கு பதில் விளக்கம் கொடுத்து அதுக்கு கீழ ஒரு சிங்கம் நிக்கிற மாதிரி படம் இருந்தது. அது ரொம்ப நல்லா இருந்தது. அதோட வால கையில புடிச்சிட்டு நிக்கிற மாதிரி. அதுக்கு தலையில ஒரு கிரீடத்த போட்டுவிட்டு, கையில ஒரு செங்கோல வெச்சிக்கிட்டு நிக்கிறமாதிரி ஒரு சின்னத்தை உருவாக்கினோம். அத லோகோவா வெச்சி 1984 ஜூலை மாசம் லயன் காமிக்ஸ் ஆரம்பித்தேன். 2 ரூபாய் விலையில் வழக்கமான அளவில் செய்தோம். 2 இதழுக்குப் பிறகு கையடக்க அளவிற்கு மாறினோம். அது ரொம்ப வெற்றி கரமாக இருந்தது. என்ன காரணம் என்று சொல்லத்தெரிய வில்லை. அந்த கதைகளுக்கு அந்த அளவு சரியாக இருந்தது. 3 வது இதழில் இருந்து ஸ்பைடர் என்று ஒரு கதாபாத்திரம் பண்ணினோம்.

அதிலிருந்துதான் இந்த கையடக்க அளவில் வெளியிட்டோம். 12 ஆண்டுகளாக முத்துகாமிக்ஸ் மார்க்கெட்ல இருந்தாலும், சிறப்பு இதழ் என்று எந்த முயற்சியும் அவர் செய்யவில்லை. என்ன இருக்கிறதோ அதை அப்படியே மாதம் வெளியிடுவார். ஆனால் நான் இதற்குள் நுழைந்ததும் ஐந்தாவது இதழையே தீபாவளி மலர் என்று இருவண்ணங் களில் போட்டு வெளியிட்டேன். அந்த நேரத்தில் காமிக்ஸில் சிறப்பு மலர் என்னும் கான்செப்டே புதுசு. யாரும் அதுவரை இந்த பரிசோதனையில் இறங்கவில்லை. இந்த துறையில் நான் இறங்காத கதைக்களமே கிடையாது.  கௌபாய், கார்ட்டூன், திகில்கதைகள், துன்பவியல், கதாபாத்திரக்கதைகள், துப்பறியும் கதைகள், போர்க்கதைகள் என நான் செய்யாத ஸ்டைலே கிடையாது. அதுவரைக்கும் இதுதான் காமிக்ஸ் என்று ஒரு exposure இருந்தவர்கள் மிகக் குறைவு. அப்போ இந்த இண்டர் நெட் எதுவுமே கிடையாது. வெளிநாட்டுக்குப் பிரயாணம் பண்ணக்கூடியவர்கள் தவிர வேறு யாருக்குமே இந்த exposure  கிடையாது. இந்தியாவைத் தாண்டி வெளியில் என்ன இருக்கு என்று தெரிவதற்கு வாய்ப்பே கிடையாது. அப்போ இது எல்லாத்துக்காகவும் நாங்க கொண்டுவந்திருக்குறதுக்கு அடிப்படைக் காரணம் அதுதான். ஒரு பலதரப்பட்ட ரசனை. 

1986இல் ஜனவரியில் திகில் காமிக்ஸ் ஆரம்பித்தோம். முதல் 3 இதழ்கள் மூன்று ரூபாய் விலையில் பெரிய அளவில் (format) ஒரு முழுநீள கதையாக இல்லாமல் சின்ன சின்ன கதைகள், 4 பக்கம், 6 பக்கம் என்ற அளவில் ரொம்ப வித்தியாசமான கதைகள், அவ்வளவு வெற்றிகரமா இல்ல. அந்த கதைகளும் அவ்வளவு வெற்றிகரமா போகல. அதனால் 4 வது இதழில் இருந்து விலையைக் குறைத்து திரும்பவும் வழக்கமான வடிவில் கதைகள் போட்டோம்.

kadaimalar_3701987 ஜனவரியில் ஜூனியர் லயன் போட்டோம். லக்கிலூக் என்ற கார்ட்டூன் கதையினைப் பலவண்ணத்தில் போட் டோம். தமிழில் இதுதான் முதன்முதலில் கார்ட்டூன் சித்திரக் கதையாக வெளிவந்தது. உலக அளவிலான கார்ட்டூன் கதாபாத்திரம் தமிழில் வெளியானது இது தான் முதல்முறை. 2.25 காசு அந்த புத்தகத்தினுடைய விலை. அது முழு வண்ண சித்திரக்கதை. பலவண்ணத்தில் கதையினை வெளியிட்டது எங்களுக்கும் முதல்முறை. அதுவரை இருவண்ணத்தில் மட்டுமே வெளியிட்டிருந்தோம். மினி லயனும் இது கூடவே தான் பண்ணோம். ஆனா இதனோட விலை ஒரு ரூபாய் தான். குறைந்த விலையில் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே போட்டோம். 64 பக்கத்தில் போட்டோம்.  இதற்குச் சிறிய கதைகளாகத் தேர்ந்தெடுத்துப் போடுவோம்.

உலகத்தர ரசனை இன்னைக்கு காமிக்ஸ்ல ரொம்ப மாறிடுச்சி. இன்னைக்கு பெரியவங்களுடைய ரசனைக்குத் தான் காமிக்ஸ் வந்துக்கிட்டிருக்கு. 20 வருஷத்துக்கு முன்னாடி எல்லாமே ஒரு துப்பறியும் கதை, கார்ட்டூன் கதைன்னு அன்னைக்கு எங்கக்கிட்ட இருந்த கதைகள் எவ்வளவு வெளியிட்டாலும் காலி பண்ண முடியாதுங்குற அளவுக்கு இருந்துச்சி. நாங்க 1987-இல் தீபாவளி மலர்னு 10 ரூபாய்க்கு அகராதி அளவுல ஒரு புத்தகம் போட்டோம். 1987-இல் பத்துரூபாய் என்பது நினைத்துப்பார்க்க முடியாத ஒரு தொகை. அந்தப் புத்தகம் போட்டதுக்கான காரணம், கையில அவ்வளவு கதைங்க இருந்தது.  நான் ஒரு ஒரு புத்தகமா 2 ரூபாய்க்குன்னு போட்டா கையில இருக்கிற கதைகள காலி பன்னுவதற்கே ஆறுமாசம் எட்டு மாசம்னு ஆகும். அதுனாலதான் ஒரே புத்தகமா போட்டோம். நம்ப முடியாத ஒரு வரவேற்பு அந்த புத்தகத்துக்கு கெடைச்சது. இன்னைக்கு அந்த புத்தகம் கிடைச்சிதுன்னா 2500 கூட கொடுத்து வாங்க ஆள் இருக்காங்க.

நீங்க வலைப்பதிவுகளில் எல்லாம் போயி பார்த்தீங்கன்னா கதைய பத்தி எழுதுறது படிச்சதுக்காகன்னு மட்டுமில்லாம, சின்ன வயசுல வீட்ல காசு கேட்டு வாங்கி, இல்ல சேத்துவச்சி கடையில போயி வாங்கி, நெறைய வீடுகளில் புத்தகத்த வீட்ல வச்சி படிக்க விடமாட்டாங்க. அப்போ பைக்குள்ள ஒளிச்சி வெச்சி பள்ளிக்கூடத்துல போயி படிக்கறது, இல்ல நண்பர்கள் கிட்ட கடன் வாங்கி படிக்கிறதுன்னு. இந்தப் புத்தகங்கள் படிக்கும்போதும், பாக்கும்போதும் அவங்களோட சின்ன வயது ஞாபகங்கள் இதில் நிறைய இருக்கு. வெறுமனே கதையைப் படிக்கிறோம்னு படிச்சா பெருசா இதுல ஒண்ணும் இருக்குறதுக்கும் வாய்ப்பில்லை. எல்லாருக்குமே இதபத்திரமா வெச்சிக்கணும்னு நெனைக்கிறதுக்கு காரணம் அது அவங்களோட Flash back.

உங்ககளுடைய காமிக்ஸ்களை எப்படி விளம்பரப்படுத்துவீர்கள்?

ஆரம்பத்தில் கல்கண்டு பத்திரிகையில் அரை பக்கம் செய்தோம், குங்குமத்தில் கொஞ்சம் செய்திருக்கிறோம். அதற்குப்பிறகு எங்களுக்கு எங்களுடைய புத்தகம்தான் விளம்பரம்.  நாங்களே அடுத்து என்ன வருதுங்குறத விளம்பரப் படுத்திடுவோம். மார்க்கெட்டிங்க்கு நாங்க பெரிய அளவுள வேறெந்த பத்திரிகையிலும் விளம்பரப்படுத்துவதில்ல. அதோடு சில நேரங்களில் ஏஜெண்ட் தேவை என்னும் போது தினசரி பத்திரிகைகளில் (தினமலர், தினத்தந்தி) விளம்பரப் படுத்தியுள்ளோம்.

நீங்கள் வெளியிட்ட கதைகளை அப்படியே வேறுசிலர் வெளியிட்டிருக்காங்க அதப்பத்தி....?

மதுரையிலிருந்து, திருச்சியிலயிருந்தெல்லாம் வந்த காமிக்ஸ் நாங்க என்ன பண்றமோ அத அப்டீயே காப்பி பண்ணி க்ரூடா இவுங்க இங்க வரஞ்சி ஒர்ரூவா ரெண்ட்ரூவானு சொல்லி நெறைய பப்ளிஷர்ஸ் வந்திருக்காங்க அந்தமாதிரி. மதுரையிலிருந்தெல்லாம் கலைபொன்னி காமிக்ஸன்னு சொல்லி ஒன்னு பண்ணாங்க. அவங்களோட வேல என்னன்னா நாங்க என்ன பன்றமோ அத அப்படியே இன்டியனைஸ் பண்ணி வரைஞ்சி அனுப்பற மாதிரி, ஒரு சீப்பான இமிடேஷன்னு வெச்சிக்கங்களேன். அது ஒரு கொஞ்ச காலம் பண்னாங்க ரொம்ப ஸக்ஸஸ் புல்லா இல்ல. இதெல்லாமே லோக்கல் அட்டெம்ட்ஸ் தான். 

சித்திரக்கதைகள் சிறுவர்களுக்கானது என்பதை நீங்கள் ஏற்கிறீர்களா?

காமிக்ஸ் என்பது சின்னபசங்க சமாச்சாரம் என்று நிறைய பேர் நினைக்கிறாங்க. பலருக்கு தினத்தந்தியின் கன்னித் தீவை தாண்டி காமிக்ஸ் இருப்பதே தெரியாது. இது எவ்வளவு பெரிய கஷ்டம் என்று தெரியவில்லை. இப்போது நாவல் எழுதணும்னு நெனச்சா தமிழில் நல்லா எழுதத்தெரிஞ்சவங்க யார்வேண்டு மானாலும் எழுதிடலாம். ஆனால் காமிக்ஸ் அப்படி எளிதானதல்ல. கோடியில ஒருத்தருக்குத்தான் அந்த திறமை இருக்கும். உதாரணத்துக்கு நான் 1986ல் ஒரு அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். அவர்கள் வரவேற்பறையில் ஒரு 15 நிமிடம் உட்கார்ந்திருக்கச் சொன்னார்கள். அப்போது அங்கிருந்த மேசை மேல் ஒரு புதிய சித்திரக்கதைக்கான கதை (script) இருந்தது. ஜேம்ஸ்பாண்ட் சித்திரக்கதை அது. அதற்கு படம் வரைகிறவர் ஸ்பெய்னில் இருக்கிறார். அவருக்கு ஆங்கிலம் தெரியாது.

எழுதுகிற எழுத்தாளர் இங்கிலாந்தில் இருக்கிறார். இவர் எழுதி அனுப்பிய கதையை அவர்கள் ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்த்து அவருக்குக் கொடுத்து, அவர் அதை புரிந்துகொண்டு படம் வரையணும். கையில் ஒரு சித்திரக்கதையின் ஒரு படத்தைக் காட்டி இப்போ இந்த சட்டகத்துக்கான கதை ஒரு முழுபக்க அளவில் இருக்கும். இந்த கதையில் முக்கிய கதாப்பாத்திரம் இரண்டுபேர் இருக்கிறார்கள் என்றால், அவர்களின் உடையின் தன்மை, வண்ணம், இவனோட  முகபாவனை என்ன, அதற்கு எதிரில் இருப்பவனு டைய முகபாவனை எப்படி இருக்கணும், இருவருக்கும் இடையிலான இடைவெளி எவ்வளவு, பின்னணி (background) என்ன இருக்கு, அந்த சூழல் எப்படி இருக்கணும் என்கிற விளக்கம் முழுதும் இருக்கும். நான் பார்த்தது ஆரம்ப ஒரு சட்டகத்துக்கான விளக்கம். அதில் ஜேம்ஸ்பாண்ட் முகம், பின்னால் ஒரு கார் போகுது ரெண்டு பேர் ஓடுவது போலும், ஒருவன் துப்பாக்கியை வைத்துக்கொண்டு துரத்துவது போலுமான காட்சி அது.  அதற்கு ஜேம்ஸ் பாண்ட் ஆடை, அளவு, அவன் முகபாவனை, ஒளியமைப்பு (lighting), பின்னால் வரும் கார் மாதிரி என எல்லா வகையான விளக்கங்களும் இருந்தன. அதையெல்லாம் பார்ப்பவர்கள் இதை சின்னபசங்க சமாச்சாரம்னு சொல்லமாட்டாங்க.

இந்தியாவுல உலகத் தரத்துக்கு காமிக்ஸ் பண்ணமுடியல. இதெல்லாம் கணினியில் செய்வதல்ல. இயல்பான திறமை (natural talent). இதுக்கு போதுமான நிதி (budget) கிடையாதே. 

வர்த்தக ரீதியான தொழிலாக இது எந்த அளவுக்கு இருக்கிறதென்று நினைக்கிறீர்கள்?

எங்க அப்பா இதைச் செய்த காலத்தில் வர்த்தகரீதியாகவும் இந்ததொழில் வெற்றிகரமாகத்தான் இருந்தது. அப்போ ஒரு புத்தகத்தினுடைய விலை 1.00 இல்லேண்ணா 1.50 காசு அவ்வளவுதான். எல்லா புத்தகமுமே அந்தவிலைக்குதான் பண்ணிட்டிருந்தாங்க.  அண்ணைக்கு மார்க்கெட்டில் எந்தப் பத்திரிகையுமே அதிகம் இல்லை. காமிக்ஸ் என்ற நிலையில் அல்ல. பொதுவாகப் பத்திரிகை, பதிப்பகம் என்றாலுமே ரொம்ப லிமிட்டெட்.  அதிகபட்சம் ஏழெட்டு  தான் இருக்கும். இன்னைக்கு கணக்கே கிடையாது. இப்போ ஒரு கடையில போயி எண்ணிப்பாத்திங்கன்னா 25 க்கு குறையாத தமிழ் பத்திரிகைகள் இருக்கும். மார்க்கெட்டிங் பழசுக்கும் இப்பைக் கும் ரொம்ப வித்யாசம். அண்ணைக்கு அவ்வளவு சிரமம் இல்லை.

அப்போ பிரிண்ட்டிங் பிரஸ் தான் முதன்மையான தாகவும், இது துணைக்கு இருந்தாலும், இதுவும் இலாபமாகத் தான் இருந்தது. விற்பனை பண்ணுவது எல்லாமே.  அண்ணைக்கு மார்க்கெட்ல கடன் கொடுக்கறதே இல்ல. எல்லாமே முன்பணம் கொடுத்து தான் வாங்கிகிட்டிருப்பாங்க.  இன்னைக்கு எல்லாமே தலைகீழா போயிடுச்சி. இன்னைக்கு யாருக்கும் முன்பணம் கிடையாது, யார் போறாங்களோ அவங்களுக்கு தான் வசூல். யார் சீக்கிரம் போறாங்களோ அவங்களுக்குத்தான் பணம். எங்களோட ரெப்ரசண்டேட்டிவ் நாலு நாள் தாமதமா போனாங்கன்னா நான் செய்தித் தாளுக்குப் பணம் கட்டிட்டேன், அங்க பணம் கட்டிட்டேன் இங்க பணம் கட்டிட்டேன்னு சொல்லிடுவாங்க. அதோட அடுத்த மாசம் தான் பணம்.

அப்போ நடைமுறைச் சிக்கல்கள் இந்த அளவுக்கு கிடையாது.  அன்னைக்குச் சிரமம் எதுவும் கிடையாது. வெற்றிகரமா போயிட்டிருந்தது. ஆனால் ரொம்ப அவங்களால இதுக்கு நேரம் ஒதுக்க முடியல. தனிப்பட்ட முக்கியத்துவம் கொடுத்து நேரம் ஒதுக்க முடியல. நான் புதுசா இந்த துறைக்குள்ள வந்தபோது, எனக்கு எந்த வேலையும் இல்ல. அப்போ எனக்கு முழுநேர வேலை இதுதான். 1984 ல் ஆரம்பிச்சேன் ஒரு ஐந்தாறு வருடங்கள் முழுநேர வேலையாக இதைத்தான் செய்தேன். அப்போ என்னால இதுக்குக் கொடுக்கமுடிந்த நேரத்தை எங்க அப்பாவால் இதற்குச் செலவிட முடியல. அதோட அவரோட வயசும் ஒரு காரணம்.

ஒரு குறிப்பிட்ட காலம்வரைக்கும் பரவலா இருந்த இந்தத்துறை வளராமல் போனதுக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

சென்னையில 65 வயசுல ஒருத்தர் கிண்டி பஸ் ஸ்டாண்டுல நின்னுகிட்டு இருந்தார்.  நான் முன்னாடி சொன்னனே அந்த 10 ரூபாய் புத்தகம் அதை கையில் வச்சிக்கிட்டு இருக்கிறார். மத்தியானம் 3 மணிக்கு இப்படி ஒரு நிமிஷம் பஸ் வருதான்னு பாக்கிறாரு, படிக்கிறாரு, பாக்கிறாரு, படிக்கிறாரு, பேருந்து நிறுத்தத்தில் நின்னுக்கிட்டு இருக்கிறவங்க எல்லாம் அவர கேலி பண்ணறாங்க. 65 வயசுல  ஒருத்தர் இத படிச்சிக்கிட்டு இருக்காரே அதுவும் சாலையில நின்னு படிச்சிட்டிருக் காரேன்னு.  நீங்க அவர்கிட்ட கேளுங்க, எனக்குப் பிடிக்குது,  இதுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியும் நான் படிக்கிறேன்னு சொல்லுவாரு. அதுனால ஏதோ சித்திரக்கதை என்றால் தினசரி பத்திரிகையில் பாக்கிறோமே அதுதான்னு நெறையபேர் நெனைக்கிறாங்க.

அதோடு இது ஏதோ ஒண்ணு பொழுதுபோக்கறதுக்கு, புள்ளைங்க படிக்கிறதுக்குன்னு அவ்வளவுதான்.  அதைத் தாண்டி இதுல என்ன இருக்குன்னு யாரும் தெரிஞ்சிக்கிறதில்ல.  இன்னைக்கு கடைக்கு போயி பார்த்திங்கன்னாலுமே அரசியல், ஜோதிடம், பக்தி, பெண்கள் பத்திரிகைகள்தான் அதிகம் விக்கிறது. யாருமே அதைத் தாண்டி வாசிப்பு எல்லையை விரிவுபடுத்திக்கொள்வதில்லை. அன்னைக்கு படிச்சிக்கிட்டிருந்தவங்க இன்னைக்கும் படிக்கிறாங்க நாளைக்கும் படிப்பாங்க அதுக்கப்பறமும் படிப்பாங்க. அதுதான் இதைக் கொண்டுபோய்க்கொண்டு இருக்கிறது. இந்த ரசனை தொடர்வதற்குக் காரணம் அதுதான்.

மொதல்ல எல்லாம் பஸ்லையோ ரயில்லையோ ஏறி உக்காந்த ஒடனே ஏதாவது புத்தகத்த எடுத்துப் படிப்பாங்க.  இப்போ ஏறி உக்காந்த உடனே கைபேசியில பேசறது, குறுஞ் செய்தி அனுப்பறது, விளையாடுறதுன்னு ஊர் வர்ர வரைக்கும் இது தான நடக்குது. முந்தியெல்லாம் எங்களுக்குப் புத்தகம் விக்கிற இடம் பேருந்து நிறுத்தமும் ரயில் நிலையமும் தான்  சாதாரணமா பொழுது போக்கிற்காகப் படிக்கும் வாசகர்கள் (casual readers) நெறையபேர் உண்டு. இன்னைக்கு அது கெடையவே கெடையாதே. இப்போ பாத்திங்கன்னா நெறைய ரயில் நிலையங்களில் புத்தகக்கடையே இருக்காது. காரணம் யாருமே வாங்குறதில்ல.

இப்போ எல்லோரும் இணையத்தைப் பயன்படுத்துறதால ஒரு வேளை இது இணையத்திற்குள் போனால் புது வாசகர்கள் வரலாம், இந்த நிலையும் மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனா இதுவும் எல்லாருக்கும் சாத்தியமானதில்ல. நாங்க 100, 200 ரூபாய்க்கு புத்தகம் போடாமல் இருக்கறதுக்கு காரணமே அதுதான். 10 ரூபாய்க்குன்னா இப்போ எல்லோராலையும் வாங்க முடியும். 100 ரூபாய்க்குப் போட்டு 1000 பேருக்குப் போய் சேருவதைவிட 10 ரூபாய்க்குப் போட்டு 10000 பேருக்குப் போய்ச் சேந்துதுன்னா நெறைய பேருக்கு போகும். அதோட  நாங்களே விக்கும் போது எங்களுக்குச் சந்தை படுத்துறதுங் கிறது சுலபம். ஆனா அதுவும் நெறையபேருக்குப் போய்ச் சேராது.

தமிழில் வெளியான பிற சித்திரக்கதைகள் குறித்து உங்கள் கருத்து? 

மாலைமதி காமிக்ஸ குமுதம் பண்ணாங்க. உண்மைய சொல்லப்போனா அத ரொம்ப நல்லாதான் பண்ணிட்டிருந் தாங்க. காமிக்ஸ கொறை சொல்லமுடியாது. 75 காசு தான்.  எனக்கு இன்னும் நெனவிருக்கு நான் ஸ்கூல் படிச்சிக்கிட்டி ருந்தப்ப வாரா வாரம் வாங்கிப்படிப்பேன். அவங்க எதிர் பார்த்த சர்க்குலேஷன் இல்ல. அந்த நேரத்துல குமுதம் கல்கண்டு எல்லாம் ரெக்கார்ட் சர்க்குலேஷன்ல இருந்தது. அப்போ இது அந்த அளவுக்கு சர்க்குலேஷன் இல்லாத காரணத்தால மாலைமதி நாவலாக மாத்திட்டாங்க. பதினைந்து நாளைக்கு ஒரு முறைங்கிற மாதிரி மாத்திட்டாங்க. ராணி காமிக்ஸ் 1984 ஜூன்ல ஆரம்பிச்சாங்க. சரியா 500 தலைப்புகள் மட்டும் தான் பண்ணாங்க. 15 நாளைக்கு  ஒன்னு போட்டாங்க. அத எப்பவுமே பெரிய க்வாலிட்டின்னு நான் சொல்ல மாட்டேன்.  பெருசா பர்ஸனல் இன்வால்வ்மென்ட் யாருக்கும் கெடையாது. மொழிபெயர்ப்பும் கூட க்ரூடா தான் இருக்கும். பெரிய அளவுக்கு அவுங்க சிரத்தை எடுத்துக்கல. இது ரெண்டு தான் முக்கியமா இருந்தது. கண்மணி காமிக்ஸ்னு மாலை முரசு குரூப்ல இருந்து பண்ணாங்க.  அப்பறம் மேகலா காமிக்ஸ்னு ஒன்னு பண்ணாங்க. அதுக்கடுத்து, ராணி காமிக்ஸ்ல வேல பாத்தவர் தனியா ஜேம்ஸ்பாண்ட் காமிக்ஸ்னு ஒன்னு போட்டாரு. அதுவும் கொஞ்சமாதான் வந்தது.

9lacs_370எனக்குப் பிடிச்சது இந்திரஜால் காமிக்ஸ் தான். 1970-களில் டைம்ஸ் ஆப் இந்தியா குரூப் பண்ணாங்க. 60 காசோ, 70 காசோதான். முழுசா வண்ணத்துல வந்தது. தமிழ்ப் பதிப்பு கொஞ்சம் சுமாராதான் இருக்கும். ஆனா தொடர்ச்சியா பண்ணிட்டிருந்தாங்க.  அவங்க பாம்பேல இருந்து யாராவது தமிழ் தெரிஞ்சவங்கள வெச்சி பண்ணும் போது அதுல சில லிமிட்டேஷன்ஸ் இருக்கும். ஆனா ஏகப்பட்ட காமிக்ஸ் பண்ணிட்டிருந்தாங்க.

அதுக்கடுத்து சொல்லணும்னா அமர்சித்ர கதா. அது இன்னைக்கில்ல, இன்னும் நூறு வருஷம் கழிச்சாலும் ஓடிக்கிட்டுத்தான் இருக்கும். அது பூராவுமே இந்திய புராணங்கள் தொடர்பான கதைகள்தான். அது எத்தன தடவ ரீபிரிண்ட் பண்ணாலும் போயிக்கிட்டுதான் இருக்கு. அவுங்கவுங்க பிள்ளைங்க தெரிஞ்சிக்கணுங்கிறதுக்காக வாங்கிக்கொடுத்துக்கிட்டுதான் இருக்காங்க. இப்போ சினி புக்ஸ், யூரோ காமிக்ஸ்னு டெல்லியில இருந்தும் பாம்பேல இருந்தும் பண்றாங்க. ஆங்கிலத்துல பிரமாதமா பண்றாங்க. 200 ரூபாய் ஒரு புத்தகம்.   சக்ஸஸ் புல்லா இருந்தாங்கன்னா இன்னும் நெறைய காமிக்ஸ் வரும். ஆங்கிலத்திலேயும்  நெறைய வருது ஆனா நிக்கிறதில்ல. கௌதம் காமிக்ஸ்னு ஒன்னு பண்ணிட்டிருந்தாங்க.  ரொம்ப நல்லா போச்சி நெறைய காமிக்ஸ் பண்ணாங்க. ஆனா திடீர்னு காணாம போயிட் டாங்க. இதுல சர்வைவ் பண்றது கஷ்டம். 

பிறமொழிச் சித்திரக்கதைகளின் பதிப்புரிமையை யாரிடம் எங்கு, எப்படி வாங்குவீர்கள்?

பதிப்பகத்தார் எல்லாரையும் ஜெர்மன் பிராங்க்பர்ட் புத்தகக் கண்காட்சியில் சந்திப்போம்.  அதில் எல்லோரையும் ஒரே இடத்தில் சந்திக்கலாம். அது 5 நாள் நடக்கும். முதலில் நமக்கு என்ன தேவை என்று பாக்கணும். இப்போ நமக்கு கௌபாய் கதைகள் வேண்டும் என்றால், அதைமட்டுமே வைத்துள்ள பதிப்பகத்தார் இருக்கின்றனர். இல்லை, நிறைய பதிப்பகத்தார் எல்லாவகையான கதைகளையும் வைத்திருப் பார்கள் ஹாரர், கார்ட்டூன், வார், கௌபாய் என்று பலகதை கள் இருக்கும். அவர்களிடம் நமக்கு என்ன வேண்டும் என்று முதலில் பேசவேண்டும். பின்னர் அவர்கள் கொடுக்கும் பட்டியலில் இருந்து நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.  ஒவ்வொரு பதிப்பகத்தாரும் கிட்டதட்ட 50-60 கதாநாயகர்களை மைய மிட்ட கதைகளை வைத்திருப்பார்கள்.

அதில் இருந்து நம்முடைய பதிப்புலகத்துக்கு, நம்மோட பண்பாட்டுக்கு, நம்மோட வாசகமனநிலைக்கு எது பொருந்தும்னு நினைக் கிறோமோ அதைத் தேர்ந்தெடுத்து, பதிப்புரிமை வாங்கித் தமிழில் போடுவோம். பதிப்புரிமையை விற்பதற்கு அவர்க ளுக்குத் தனி பிரிவு ஒன்று இருக்கும்.  பதிப்பகத்தாருக்கு அவர்களுடைய தயாரிப்பு (production) ஒருபக்கமும், உள்ளூர் சந்தை (local market) ஒரு பக்கமும் உலக அளவில் பதிப்புரிமையை விற்பதற்கு ஒரு பிரிவும் இருக்கும். எல்லோரும் அங்கு தான் வருவார்கள்.  நாம் அவர்களிடம்தான் பேச வேண்டும். அதா வது, “எங்கமொழி தமிழ் மொழி, நாங்கள் இந்த கதாநாயகனின் கதையைத் தமிழில் செய்யவேண்டும் என்று நினைக்கிறோம். ஒரு வருஷத்துக்கு இத்தனை கதை எங்களால் செய்யமுடியும். அதற்கு நாங்க Royalty இவ்வளவு தரமுடியும் என்போம்”. அவர்கள் கூட கேட்பார்கள் எப்படியோ ஒரு தொகையை பேசி முடித்து பதிப்புரிமையை வாங்கிவிடுவோம்.

அதற்குப் பின் கதைக்கான ஓவியங்களைக் குறுந்தகடு வடிவில் கொடுத்துவிடுவார்கள். இதில் கதை இருக்காது. கதை தனியாக புத்தக வடிவில் வரும். அதை நாம் தமிழில் மொழி பெயர்த்து, தட்டச்சு அமைப்பு செய்து பிறகு ஓவியத்தில் இணைத்து சில சேர்க்க வேண்டிய இடங்களையும், தேவையற்ற இடங்களையும் எங்களிடம் உள்ள ஓவியரைக்கொண்டு வரை வோம். பின்னர் பிழைதிருத்தம் சரிபார்ப்போம். இதற்கிடையில் அட்டைப் படத்துக்கான ஓவியங்கள் தனியாகச் செய்யப்படும். அதாவது 90% நாங்கள் மூலநூலின் அட்டைப்படத்தைப் போடுவதில்லை. காரணம் அவை பெரும்பான்மை நம் சூழலுக்கு ஏற்றார்போல் பளிச் என்று இருப்பதில்லை. எனவே இதற்கென்று தனியாக ஓவியர் வைத்து வரைந்து பளிச் என்ற வண்ணத்தில் அட்டைப்படங்களைப் போடுவோம். இதைத் தனியாகத் தயாரித்து வைத்துக்கொள்வோம். பின்னர், சித்திரக்கதை யினை கருப்பு வெள்ளையில் தயாரிப்போம். ஒரு பெரிய தாளினில் 32 பக்க அளவில் அச்சடித்து மடித்து சிறிய அளவில் எத்தனை பக்கங்கள் தேவையோ அதற்கு ஏற்றாற் போல் தயாரித்து புத்தகமாக்கிடுவோம். பின்பு முகவர்களுக்கு அனுப்பி விற்பனை செய்வோம்.

கதைகளை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறீர்கள்?

முதலில் நான் வாசகனாக இருக்கணும். இது படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும் என்பது எனக்குத் தெரிந்தால்தான் நான் கதைகளைத் தேர்வு செய்ய முடியும். எனவே முதலில் நான் வாசகன், பிறகுதான் நான் பதிப்பாளர் எல்லாமே. இப்போது நிறைய நிறுவனங்கள் இதில் வெற்றிபெறாமல் போனதற்கு காரணம் இதுதான். அவர்களுக்குத் தனிப்பட்ட ஆர்வம் இதில் இருந்திருக்காது. எல்லாம் சித்திரக்கதைதான். இதுவும் கதைதான் அதுவும் கதைதான் எதையாவது ஒன்றைப் போடுவோம் என்று போடுவார்கள். ஆனால், நமக்குத் தெரியணும் எது நல்லா இருக்கு எது நல்லா இல்ல, எது வாசகர்களுக்குப் பிடிக்கும், பிடிக்காது என்பது. இந்த ஓவியம் நல்லா இருக்கு, நமக்கு ஒரு கதையை முழுதும் படித்து பார்க்க முடியாவிட்டாலும் இந்த போக்கு (trend) நல்லா இருக்கு இது போகும் என்று மனதிற்குள் தோன்றும். எனக்கு முதலில் திருப்தி இருந்தால்தான் நான் வாங்குவேன். 

ஆனால் இது எல்லா நேரங்களிலும் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. பல நேரங்களில் கதையினை வாங்கிவந்து மொழிபெயர்த்து அச்சாக்கிப் படித்துப் பார்த்தால் சுமாராக இருக்கிறமாதிரி இருந்தால் அதை நான் வெளியிட்டதில்லை. கதையை விளம்பரப்படுத்தி, அட்டைப்படம், கதை என எல்லா வேலையும் முடித்த பிறகு வெளியிடாமல் வைத்திருக் கும் நூல்கள் நிறைய உள்ளன. வேறு வழியில்லை. எல்லா நேரங்களிலும் நம் முடிவு சரியாக இருப்பதில்லை. சரி வாங்கி விட்டோமே என்று அதனை வெளியிட்டால், அதனைப்படிப் பவர்கள் எல்லோருக்கும் அது ஏமாற்றமாக  இருக்கும். 

ஒரு நூலைப் பிறமொழியிலிருந்து மொழிபெயர்த்து தமிழில் வெளியிடுவதில் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன?

சில கதைகள் மிகவும் அறிவியல் புனைவாக இருக்கும் கதை ஓரளவிற்கு நாம் பயன்படுத்துவது மாதிரி இருக்கும். ரொம்ப காதுல பூசுத்துவது மாதிரி இருக்கிறதென்றால் அதை நாங்க கொஞ்சம் நமக்கேத்த மாதிரி திருத்தம் செய்வோம். அத அப்படியே போட்டா இங்க பைத்தியக்காரத்தனமா இருக்கலாம். மேலும் சில கதைகள், அதாவது ஒரு வருடத்திற்கு முன் ஒரு கதையினை வெளியிட்டோம். அது ஒரு துப்பறியும் கதை. ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு கொலை நடக்கும். அந்தக்  கொலையை குள்ளமாக இருக்கிற ஒரு ஆள்  மட்டுமே  பார்த்திருப்பான். அவனுக்கு காதும் கேட்காது வாய்பேசவும் முடியாது. அவன் என்ன நடந்தது என்பதை படமாக வரைந்து காண்பிப்பான். அந்தக்கதை பார்த்தா இயல்பிலேயே கொஞ்சம் கவர்ச்சியானதாக இருக்கும்.

அப்பொழுது அந்தமாதிரியான ஒரு கதை வருகிற பொழுது கொஞ்சம் ஓவியங்களையும் சில இடங்களில் வசனங்களையும் நாங்கள் திருத்தம் (Edit)  செய்வோம்.  கட்டங்கள் ஒரே ஒழுங்கமைவில் இருந்தால் எங்களுக்கு சிக்கல் கிடையாது.  அதுவே ஒன்று பெரியதாகவும் சிறியதாகவும் வெவ்வேறு வடிவங்களிலும் இருந்தால் அதைச் செய்வது கொஞ்சம் கடினமான செயல். இதில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தனித்துவம் (style)  இருக்கு. அதை நாங்கள் எங்களுடைய நடைக்கு மாற்றும் போது மூலநூலோடு ஒத்துப்போவது என்பது மிகவும் கடினமான ஒன்று.  (சித்திரக்கதையில் ஒரு காட்சியைக் காண்பிக்கிறார்) இப்போ இந்த படத்தில் இருக்கின்ற சாம்பல் வண்ண நிழல் (shade)  என்னதான் செய்தாலும் கொண்டுவருவது கடினம். இதில் வெளிர் மற்றும் அடர் வண்ணம் (light and dark) தெரியுது பாருங்க.

இதற்கு அவர்கள் என்ன டோன் (tone) என்ன கிரேட் (grade)  வச்சாங்கன்னு அந்த ஓவியருக்குத்தான் தெரியும். அவர்கள் கணினியில் செய்திருக்கலாம், ஓவியர் மூலமாக செய்திருக்கலாம். இதே மாதிரி எக்ஸ்டன்ட் பண்ணும் பொழுது இவ்வளவு தரமாகச் செய்வது என்பது கடினம்.  இந்த மாதிரி கதைகள் செய்யும் போது ஆர்ட் வொர்க் கொஞ்சம் கடினமாக இருக்கும்.  சில நேரங்களில் இயற்கையாக கதையே கொஞ்சம் சிக்கலாக இருக்கும். இப்போ 200 ரூபாய்க்கு ஒரு கதை பண்ணினோம். அது 19 பாகம், ஒரே கதை. அந்த கதை1986ல் ஆரம்பித்தது. உலகம் முழுதும் அதிகப்படியான விருதுகளைப் பெற்ற வெற்றிகரமான ஒரு கதை. இது இயல்புத்தன்மையுடைய ஒரு கதை. அந்தக்கதையில்  ஆரம்பம் முழுக்க ரொம்ப ஸ்லோவா போகும், ரொம்ப விருவிருப்பான கதை மாதிரி இருக்காது. ஆனால் இதுவரை நாங்கள் செய்த வேலைகளிலேயே பெரும் வெற்றிகரமானது, அதுதான்.

இதுவரை 11 பாகம் தனித்தனியாக வெளியிட்டுள்ளோம்.  இப் பொழுது 19 பாகம் முழுக்க ஒரே புத்தகமாக வெளியிடுகிறோம். இந்த கதைக்கு எடிட்டிங் வேலை செய்வதுதான் இதுவரை இருந்த வேலைகளிலேயே மிகவும் கடினமான ஒன்று. ஒவ்வொரு பாகத்தையும் எடிட் பண்ணுவதில் இருக்கிற கஷ்டம் வேறொன்றிலும் இல்லை. ஆனால் இது படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும். அதேபோல் இப்பொழுது வருடத்திற்கு ஒன்று என்று சிறப்பு இதழ் ஒன்று செய்துகொண் டிருக்கிறோம். இதுக்கெல் லாம் வேலை செய்யறது கொஞ்சம் சிரமம்.  பலதரப்பட்ட கதைகளை ஒன்றிணைத்து மொத்தமாக ஒரு தொகுப்பாக கவர்ச்சிகரமாக (attractive)  கொண்டு வருவது கஷ்டம்.

உங்கள் வெளியீடுகளின் மொழிபெயர்ப்பு வேலையை யார் செய்கிறார்கள்?

வெளிநாட்டு மொழிகளில் இருந்து எங்களுக்கு மொழி பெயர்த்துத் தருபவர்கள் தொழில்முறை மொழிபெயர்ப் பாளர்கள். அவர்களுடன் எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர்களுக்கு ஒரு பக்கத்திற்கு இவ்வளவு என்றுதான் கொடுப்போம். நாங்க கதையை அனுப்பிவிட்டோம் என்றால் ஒரு வாரத்தில் மொழிபெயர்த் துக் கொடுத்துவிடுவார்கள். தமிழில் கார்ட்டூன் மாதிரியான சில கதைகள் மட்டும் நான் செய்துவிடுவேன். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

கௌபாய் கதைகள் பண்ணுவது ரொம்ப கஷ்டம். அதுக்கு கொஞ்சம் உக்காந்து எழுதுவதற்கு பொறுமை தேவை. ஆரம்பத்தில் கொஞ்சம் நான்தான் செய்துகொண்டி ருந்தேன். இடையில் மற்ற வேலைகள் இருந்ததினால் என்னால் சரிவர செய்யமுடியவில்லை. மதுரையில் எங்க அப்பாவி னுடைய நண்பர் கருணையானந்தம் என்பவர் பணி ஓய்வுபெற்று இருக்கிறார். இப்போது வருகிற மொழிபெயர்ப்புகள் அனைத்தும் அவர்தான் செய்துகொடுக்கிறார். ஆரம்பத்தி லிருந்தே எங்களுக்கு அவர் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் அவர் LICயில் வேலை பார்த்துக்கொண் டிருந்தார். எங்களுடைய மொழிபெயர்ப்பு ஒரு நிலையாக இருக்கிறது என்றால் அதற்கு அவரும் ஒரு முக்கிய காரணம்.

உங்கள் நிறுவனத்தின் ஓவியக் கலைஞர்கள் குறித்துச் சொல்லுங்கள்?

2,3 பேர் இருக்காங்க. எங்களுக்கு இந்த அட்டைப்படம் வரைந்து கொடுப்பவர் பிறவியிலேயே காது கேட்காமல், வாய் பேச முடியாதவர். அவர் பெயர் மாலையப்பன், திருநெல் வேலியில் இருக்கிறார். 1984லிருந்து எங்களுக்கு அட்டைப்படம் வரைந்து கொடுக்கிறார். கணினி வந்தபிறகு அவர் வரைந்து கொடுப்பதை ஸ்கேன் செய்து வண்ணங்களைக் கொஞ்சம் கூடுதலாக்குவது போன்ற பணிகளைச் செய்வோம். கருப்பு வெள்ளைப் படங்களில் ரீ டச்சிங் செய்வது போன்ற ஆர்ட் ஒர்க் எல்லாவற்றையும் எங்கள் ஆர்டிஸ்ட் சிகாமணி (30 வருடமாக எங்களுடன் வேலை பார்ப்பவர்), மைதீன் இருவரும் செய்வார்கள். குமுதத்தில் படம் வரைய ஒரு அரை பக்கத்திற்கு 5000 ரூபாய் கொடுப்பார்கள் அதை 300000, 400000 பிரதி விற்பனை செய்வார்கள் அவர்களால் அதை சமன் செய்ய முடியும். அதே ஓவியம் அதே ஓவியர் எனக்குச் செய்தால் என்னால் 500 ரூபாய் தான் கொடுக்க முடியும் இதுதான் வித்தியாசம். மாஸ் ரீடர்ஷீப் இருக்கிற சமாச்சாரமாக இருந்தால் கட்டாயம் இதுல வேலை பார்க்கிறவர்களுக்கு நல்ல  பேர் இருக்கும். கட்டாயம் இன்னும் நிறைய திறமைசாலிகள் வருவார்கள். இதுல நிறைய ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கும் திறமைசாலிகள் வராமல் இருப்பதற்கும் காரணம், இது இங்கு பொருளாதாரத் தேவையை நிறைவு செய்வதற்கான துறையாக இல்லை. 

இக்கதைகள் எப்படி அச்சாக்கப்படுகின்றன?

ஒரு 20 வருஷத்துக்கு முன்னாடியெல்லாம், கருப்பு வெள்ளையில படங்களை வரைஞ்சி எல்லா வேலைகளையும் முடித்த பிறகு, அதை Negative எடுத்து கருப்பு வெள்ளையில் அச்சடிக்க ஒரே ஒரு Negative எடுத்தால் போதும். ஆனால் வண்ணத்தில் எடுக்க 4 Negative எடுக்க வேண்டும். ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு filter இருக்கும். அந்த filter போட்டு ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு Negative எடுக்கவேண்டும். நான்கு வண்ணத்திற்கும் 4  Negative எடுக்க வேண்டும். எடுத்து முடிந்ததும் மறுசீரமைப்பு (retouching) என்று தனிப்பட்ட முறையில் செய்வோம். அதற்குப் பிறகு படச்சுருளில் (film)  வேலை பார்ப்போம்.

வண்ணத்தில் சித்திரக்கதைகளைப் பதிப்பித்தலும் அதன் நுட்பங்கள் குறித்தும் கூறுங்கள்?

அடிப்படை வண்ணங்கள் மஞ்சள், நீலம், சிவப்பு, கருப்பு இந்த நான்கு வண்ணங்களைக் கொண்டே பல வண்ணங் களை உருவாக்கிவிடலாம். மூலக்கதை வண்ணத்தில் இருப்பதாக இருந்தால் சிக்கல் இல்லை. அதே கருப்பு வெள்ளையில் இருந்தால் அதை வண்ணமாக்கி வெளியிடுவது சிரமம். இப்போது இந்தக் கதை மூலமே கருப்பு வெள்ளை தான். இது கருப்பு வெள்ளை நிறத்திற்காகவே உருவாக்கப்பட் டது. எனவே அதிகமாக கருப்பு நிறம் அடிக்கப்பட்டிருக்கிறது. இதனை நாம் வண்ணத்தில் செய்தால் அது எடுபடாது. இதையே அவர்கள் வண்ணத்தில் செய்வதற்காக உருவாக்கியி ருந்தால் அதனை நாமும் வண்ணத்தில் செய்யமுடியும். அதற்கான பணம் கொடுத்தோம் என்றால் அவர்களின் நிற அமைப்பையே (color scheme) நமக்குக்  கொடுத்திடுவார்கள், அதுவும் குறுந்தகடாக வந்திடும். அதுக்கு ரொம்ப செலவாகும். அதுவும் ஒரு சிலரிடம் வாங்க முடியும், சிலரிடம் வாங்கமுடி யாது. அப்படி இருக்குற சூழ்நிலையில் நாங்க அந்த மூலநூலைப் பார்த்துவிட்டு அதில் உள்ள வண்ணங்களைத் தீட்டி பண்ணுவோம்.

பொருளாதார ரீதியாக நிறைவு தராத ஒரு துறையில் 30 ஆண்டுகளாக ஒரு ஆர்ட்டிஸ்ட் உங்களிடம் வேலை பார்ப்பது எப்படிச் சாத்தியமானது?

அதாவது, சென்னை மாதிரியான நகரத்தில் இருந்தால் இங்கு கிடைக்கும் வருவாய் போதாது தான். அதே இந்த சூழலுக்கு ஓரளவுக்கு சமாளிக்க முடியும்.

உங்கள் தந்தையை அடுத்து நீங்கள் இருப்பது போல், அவர்களைத் தொடர்ந்து அவர்கள் இந்தத்துறையில் யாராவது இருக்கிறார்களா?

இல்லை

உங்கள் தந்தையாருடன் வேலை பார்த்தவர்கள் யாராவது இங்கிருந்து பிரிந்துசென்று இந்த தொழிலைச் செய்துள்ளார்களா?

வணிக ரீதியாக (commercial) இந்த தொழில் லாபகரமானதா இருந்திருந்தால் நிறையபேர் பண்ணியிருப்பாங்க. 

உங்கள் நிறுவனத்தில் வேலை செய்த முல்லைத்தங்கராசன் பற்றிச் சொல்லுங்கள்?

அவர் ஆரம்பத்தில் இந்தத் துறையிலேயே கிடையாது. பொள்ளாச்சியில் வெங்கடேஷ்வரா பப்ளிகேஷன்ஸ் சொல்லிட்டு ஒரு நிறுவனத்துல திருப்பதி பெருமாள் பத்தி ஒரு புத்தகம் மாதிரி ஏதோ பன்னிட்டிருந்தாங்க. அவுங் பிரிண்ட்டிங்காக சிவகாசி வருவாங்க. அப்போ அவங்க மூலமா வந்தவர் இவர். அப்போ அந்த பதிப்பகத்தில் வேலை இல்லைங்கிறப்போ இங்க வந்து வேலை பாத்தாரு. இந்த துறையில இருந்தாரே தவிர அவருக்கும் படைப்பாற்றலுக்கும் (creativity) எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவர் பேரை போட்டுக்கிட்டார். அவர் கொஞ்சம் வயசுல மூத்தவரு. 

அவர் செஞ்சதுன்னு சொன்னா சின்னப்புள்ளைங்களுக் காக மாயாஜால மந்திரக்கதைகள் கொஞ்சம் எழுதுவாரு. ரத்னபாலா என்ற பூந்தளிர் மாதிரியான சிறுவர் இதழ் ஒன்னு சிவகாசியிலிருந்து ஒருத்தர் பண்ணிகிட்டிருந்தாங்க. அது காமிக்ஸ் கெடையாது.  சின்னப்புள்ளைங்க கதைகள் மாதிரி இருக்கும். அதுல கொஞ்ச நாள் வேலை பார்த்தார்.  அதுல எழுதுவாரு அந்தமாதிரி சமாச்சாரங்கள் எழுதக்கூடியவர். அவரு சென்னையில் இருக்கிற Commercial Artist  எல்லாருக்கும் கொஞ்சம் பழக்கம். அப்போ அதமாதிரி ஏதாவது வேலை வாங்கணும் வைக்கணும்னா கூட இருந்து செய்வாரு. காமிக்ஸ்ல கிரியேட்டிவிட்டிக்கும் அவருக்கும் எள்ளளவும் சம்பந்தம் கிடையாது. ஆனா அவர் பேர போட்டுக்கிட்ட தனால நெறைய பேர் அவர்தான் எழுதினாருன்னு நெனச்சிக் கிட்டு இருக்காங்க.

எங்க அப்பாவும் அவரும் நெருங்கிய நண்பர்கள். நான் என்னோட பேர் போட்டுக்குறனே, போட்டா ஏதோ நான் பொழச்சிக்கிருவேன்னு சொன்னதும் அப்பா அத ஒரு பெரிய சமாச்சாரமா எடுத்துக்கல. அப்போ இது இவ்வளவு பரவலாகும்னு யாரும் எதிர்பார்க்கல.  இது ஏதோ பண்றோம். ஓடுற வரைக்கும் ஓடட்டும் என்ற மனநிலையில தான் நாங்க பண்ணினோம். இதுக்கு இவ்வளவு ஆர்வம் இருக்கும்னு அன்னைக்கு யாரும் எதிர்பார்க்கல.  அவ்வளவுதான்.

நீங்கள் யாருக்காவது சித்திரக்கதைப் பதிப்பிற்கான பயிற்சி அளிக்கிறீர்களா?

பத்து 15 வருடத்திற்கு முன்னால் ஒரே நேரத்தில் 4,5 புத்தகங்கள் செய்ததால் ஆர்ட்டிஸ்ட் போதாமையால் சிலருக்குப் பயிற்சி அளித்தோம். ஆனால் அவர்களுக்கு இதிலேயே தொடர்ந்து செய்வதற்கு பொறுமையும் இல்லை. அதற்கேற்ற வருமானமும் இல்லை என்பதால் ஒரு கட்டத்தில் யாருக்குமே இதில் ஆர்வம் இல்லை. இதைச் செய்வதற்கு ஒரு படைப்பாக்கத்திறமை வேண்டும் இதற்கு அவர்களைக் குறை சொல்ல முடியாது. நீங்க பணச்சிக்கலில் உக்கார்ந்துகொண்டு இருக்கும்போது படைப்பு வராது. நிறைய வெளியூர்ல இருந்து வந்து வேலை பார்த்தவர்கள் இருந்தார்கள். ஆனால் முடியவில்லை.

ஏன் நீங்கள் மொழிபெயர்ப்புகளை மட்டுமே வெளியிடுகிறீர்கள்? நம் மண் சார்ந்த கதைகளை எடுத்து சித்திரக்கதையாக்கி வெளியிடுவதில்லை?

சொல்லப்போனால் ஸ்டீரியோ டைப் ஹேபிட் ஆயிடுச்சி. இன்னைக்கு எல்லாருமே வெளிநாட்டுச் சித்திரக்கதைகளைப் படித்து வளர்ந்து, இதுதான் காமிக்ஸ§ன்னு ஆயிடுச்சி.  இந்தியாவில் வெற்றிகரமாக இருந்த ஒரே மண் சார்ந்த கதைகளை வெளியிட்ட காமிக்ஸ் அமர்சித்ரகதா தான். புராணங்கள், இதிகாசங்கள் அந்த மாதிரியான கதைகளை வைத்துக்கொண்டு ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் செய்தார்கள். அதுவும் நன்றாக ஓடுகிறது. ஆனால் அதே கதையைத் தமிழில் அவர்களே செய்தார்கள் ஆனால் அது ஓடவில்லை. இது ஏன் என்று தெரியவில்லை. வெளிநாட்டுக் கதைகள் நல்லா இருக்கும் மற்றது நல்லா இருக்காது என்பது போன்ற ஒரு எண்ணமா என்வென்று தெரியவில்லை. 

மும்பை யில் டைம்ஸ் ஆப் இந்தியா குரூப் இந்திரஜால் காமிக்ஸ் என்று ஒன்று செய்தார்கள். அவர்கள் 90% அமெரிக்கன் காமிக்ஸ§ம் 10% உள்ளூர் கதைகளையும் போடுவார்கள். அந்த நேரம் மத்திய பிரதேசத்தில் சம்பல் பள்ளத்தாக்கில் பூலான் தேவி, கொள்ளைக்காரர்கள் எல்லாம் இருந்த நேரம். அப்போது அவர்கள் பகதூர் என்று ஒரு கதாப்பாத்திரத்தை அறிமுகப் படுத்தினார்கள். ஓரளவுக்கு ஓடியதே தவிர, அந்த வெளி நாட்டுக்கதைகள் அளவிற்கு வெற்றிபெறவில்லை. இதற்குப் பாதிகாரணம் உள்ளூர் கதைகளை எடுத்து இங்கிருக்கக்கூடிய ஓவியர்களை வைத்து செய்தோம் என்றால் ஓவியங்கள் உலகத்தரத்திற்கு இருக்காது.  சித்திரக்கதைகளின் உயிர்நாடியே ஓவியங்கள் தான். ஓவியங்கள் சுமாராக இருந்து கதை எவ்வளவு நன்றாக இருந்தாலும் போய்ச்சேராது. இங்கு art work standard வந்து டெவலப் ஆகி, ரிச்சா இங்கு செய்யக்கூடிய மாதிரி யாராவது வந்தால் அன்னைக்கு எடுபடலாம்.  அதுவரைக்கும் இந்த துறை எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.

setri_370நாங்களே  ஒரு ரெண்டு பக்கம் மட்டும் வர்ர மாதிரி ஒரு கார்ட்டூன் கத, ‘அதிபதி அப்பு’னிட்டு பண்ணோம் கத ரெண்டு பக்கத்தில முடியற மாதிரி சின்னதா இருக்கும் அதேசமயம் நல்லாவும் இருக்கும், அந்த கதைய நாங்களே எழுதி, சென்னையில செல்லம்னு சொல்லி ஆர்ட்டிஸ்ட் இருக்காரு அவரு எல்லா பத்திரிகைளுக்கும் படம் வரையுரவரு. அவர வச்சி வரைஞ்சி வாங்கினோம். அந்த ஆர்ட் ஸ்டைல், ஒரு ரெண்டு பக்கம் அந்த காமெடி கார்ட்டூன் ஒரு சின்ன இடைவெளியை நிரப்பறதுக்குச் சரியாக இருக்கும். அவர்கிட்ட கொடுத்தம்னா காலையில சாயங்காலம் அந்த ரெண்டு பக்கத்த வரைஞ்சி கொடுத்துடுவாரு.  அவ்வளவு வேகமா பன்றவரு, ஒரு 200, 300 ரூபாதான் அப்ப சார்ஜ் பண்ணிட்டி ருந்தாரு. 

அப்ப நீங்க அதுல எவ்ளோ எஃபட் கொடுக்க முடியும்? இந்த 200, 300 ரூபாய்க்குப் பன்றவரு எவ்வளோ டைம் எடுக்க முடியும் எவ்வளோ எஃபட் கொடுக்க முடியும்?   நாங்க நெனச்சா வேணும்னா ஒரு  இன்டியனைஸ்டு ஸ்டோரிய எடுத்து பாரின்லயே ஆர்ட்டிஸ் டெவலப் பண்ணி பண்ண முடியும், ஆள் இருக்காங்க. ஆனால் வொர்க்அவுட் ஆகாது. நம்மோட கல்சர் என்னண்னு அவுங்களுக்கு புரிய வெக்கிறது கஷ்டம். அவுங்க என்னதான் வரைஞ்சாலும் கடைசியில அவுங்க ஸ்டைல்தான் வரும். அது சக்ஸஸ் ஃபுல்லா வராது.  ரெண்டாவது, தமிழ்ல பண்ணணும் இதுல பண்ணணும்கிறத விட இது ஒரு கான்செப்ட்.  இது வந்து நம்மளோட கதையத் தான் பண்ணணும்கிறது இல்லாம, இது ஒரு கான்செப்ட், இது ஒரு ரீடிங் ஸ்டைல், இது ஒரு ரீடிங் ஹேபிட் அவ்ளோதான். நாம இத குடுத்தாதான் படிக்கணும் கிறது இல்ல. எது பிடிக் குதோ பிடிக்கிறத குடுத்துட்டு போறோம் அவ்வளவுதான்.

சித்திரக்கதைகளுக்கு அடுத்தநிலையில் மேலைநாடுகளில் பரவலாக பேசப்படுவது கிராபிக் நாவல்கள். இன்னும் அதுபோன்ற முயற்சிகள் தமிழில் வராமல் இருப்பது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? 

நம்மோட ரசனை இந்த ஒரு குறிப்பிட்ட வட்டத்தைத் தாண்டிப் போகவில்லை. 20 வருஷமா எதுல பழகி இருக்கி றாங்களோ அதாவது இப்போ கேப்டன் டைகர் கதைய கேட்டாங்க இல்லையா? இன்னும் 20 வருஷம் கழிச்சி கேட்டிங்கன்னாலும் அந்த கேப்டன் டைகர் கதைகளைத்தான் கேட்பாங்க. அதற்கு அடுத்த நிலைக்கு வரமாட்டிங்கிறாங்க. அதுதான் இன்னைக்கி எங்க வேலை கஷ்டமாகினதுக்குக் காரணம். ஏன்னா இதுக்கான தரவுகள் (source)  வந்து 80 களில் பண்ணதுதான்.

அத நாங்க எவ்வளவு முடியுமோ அவ்வ ளவுக்கு கொண்டுபோயிட்டிருக்கோம். இது ஒரு கட்டத்தில் காலியான உடனே அடுத்தது, இன்னைக்கு அவுங்க ரசனைக்கு அவுங்க பண்ணறதைத்தான் நாங்க வாங்கிப் பண்ண முடியும். அதை ஏத்துக்கணும் இல்லையா? இப்போ இந்தக் கதையெல் லாம் 80களின் இறுதியிலும் 1990ன் ஆரம்பத்திலும் UK -வில் பண்ண சமாச்சாரம். 2009 ஆச்சி இங்க நமக்கு.  இன்னமும் இத ஏத்துக்குற அளவுக்கு நாம வளரல. இது எல்லாமே வந்து எதிர்காலத்தில் நடக்குற மாதிரி எதிர்காலத்துல இருக்குற ஒரு போலீஸ்காரன் எப்படி இருப்பான் என்பது மாதிரியான ஒரு கற்பனைக் கதை இது. இன்னும் நாம இதுக்குள்ள வரல.

கிராபிக் நாவல்ல எனக்கிருக்கிற ஒரு புகார் என்னன்னா, ஓவியத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்குறாங்க. கதைகளுக்கு அந்த அளவுக்குக் கொடுக்கறதில்ல. சித்திரக்கதை என்றால் சித்திரம்தான் பிரதானம் இருந்தாலும் கதை சரியில்லை என்றால்  எதுவும் வெற்றிகரமாக ஓடாது. கிராபிக் நாவலில் கொடுக்கும் விதம் நல்லா இருக்கும். ஆனால் கதைகள் சித்திரக்கதைகளில் இருப்பதுபோல் இல்லை. கிராபிக் நாவல் என்று சொல்லப்படுவது அதிகபட்சம் வயதுவந்தவர்களுக்கு மட்டும்தான். ரொம்ப முற்போக்கான அறிவியல் புனைவுகள், உண்மையாக நடந்த போர்ச்சூழல் கதைகள் போன்றவற்றைத் தான் கிராபிக் நாவல் என்கிறார்கள். 1991-92ல் யுகோஸ்லோ வாக்கியாவில் உள்நாட்டுச் சண்டை வந்தது.

அந்த நேரத்தில் ஒரு ஓவியர் தன்குடும்பத்தோடு அங்கு இருந்தார். அவங்க வீடு, குண்டடிபட்டது எல்லாம் தினமும் ஒருபக்கம் வரைந்து பேக்ஸ் அனுப்பிவிடுவார்.  எங்க ஊரில் இன்னைக்கு நிலவரம் இது. அங்க நடந்த போர்ச்சூழலை அப்படியே படம் வரைந்து அனுப்பினார். பின்னாளில் அதை அப்படியே தொகுத்து ஒரு புத்தகமாக (Fax from Sarayavo) என்று போட்டாங்க. அது ரொம்ப பிரபலமானது. இந்த மாதிரி அதிகப்படியான நிஜ சம்பவங்கள் அல்லது அதீத அறிவியல் புனைவுகள் கொண்டவை. அதாவது கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஓவியத்திற்கு மட்டும் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுப்பவை கிராபிக் நாவல்கள்.

ஜப்பான்ல மங்கான்னு ஒரு வடிவம் உண்டு. இதுல ஒரு கதையே 5000-6000 பக்கங்கள் கொண்டதாக இருக்கும். அதை 5 புத்தகம், 15 புத்தகம் என்று போடுவார்கள். அதில் ஓவியங்கள் வித்தியாசமாக இருக்கும். ரொம்ப மொட்ட மொட்டையா இருக்கும். ஆனா அதை ஏதோ கதைக்காகப் படிக்கிறார்கள். அது ஒரு காலமும் நமக்கு ஒத்துவராது. ஜப்பானிய காமிக்ஸ் உலக அளவில் ரொம்ப பிரபலம். பல மொழிகளில் (ஜெர்மன், இத்தாலி, ஆங்கிலம்) மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நமக்குப் பரிட்சயமான காமிக்ஸ் ரசனை என்பது  வெளிநாடுகளில் இப்போது கிடையாது. அங்கு மாறி ரொம்ப காலமாகுது. இப்போ அதுக்கேத்த மாதிரி நாம்தான் மாறணும். இதுல அவங்க போயிட்டே இருக்காங்க. நாமதான் அப்படியே நிக்கிறோம். 1940-ல வந்த கதைகளைக்கூட நாங்க போட்டு இருக்கோம்.

கொஞ்சம் கொஞ்சமாதான் இந்த நிலைமையை மாற்ற முடியும். நாங்களும் அப்பப்போ புது புது முயற்சி எடுக்கிறோம். மர்ம மனிதன் மார்ட்டின் அப்படீன்னு ஒரு தொடர் பண்ணிட்டிருந்தோம். வரலாற்றில் நடந்த ஏதாவது மர்மமான ஒரு சம்பவம், கூடவே ஒரு கற்பனை, அறிவியல் புனைவு அப்படி அந்த கதை இருக்கும். அத படிச்சிங்கன்னா மண்ட காஞ்சிடும். ஆனா இன்னைக்கு அந்த ரசனை ஏற்றுக்கொள்ளப் பட்டுவிட்டது. ஆரம்பத்தில் அந்த கதை வந்தப்போ அதுக்கு ஏகப்பட்ட கருத்து வந்தது. நான் கதை பத்தி எழுதும்போதே  இந்த கதையை முதல் தடவை படிக்கும் போது சத்தியமா உங்களுக்கு எதுவும் புரியாது. திட்டிக் கிட்டேனாலும் இன்னொரு தடவை பொறுமையாகப் படிங்க, பிடிக்கும் என்றேன். அது உண்மை. அதுல இதுவரைக்கும் ஒரு ஆறேழு தலைப்பு பண்ணியிருக்கோம். அதுமாதிரி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாத்த முடியும். ஓரேயடியாக மாத்த முடியாது.

நாங்க மாடஸ்டி பிளைசி கூட டார்வின் என்று ஒருவன் இருப்பான் இருவரும் நண்பர்கள். இருவரும் சேர்ந்துதான் சண்டை போடுவார்கள். இதே கதையை ராணிகாமிக்ஸ் எடுத்து பண்ணும்போது அவர்கள் இருவரையும் காதலர்கள் போல் காட்டுவார்கள். இது கதையின் பின்னனியையே கொச்சைப்படுத்துவதுபோல் ஆகிவிடும். அந்த நட்பு, ஒருவருக் கொருவர் இருக்கிற மரியாதைதான் இதில் முதன்மையானது. நாங்க, எழுதினவங்க என்ன கற்பனை பண்ணி எழுதினாங் களோ அத எந்த விதத்திலும் கொச்சை படுத்தமாட்டோம். 

உங்களோட வாசகர்கள் பற்றி...?

viralmanidan_370இன்னைக்கு இந்த வேலை வேண்டாம் என்று உதறிவிட்டுப் போக எவ்வளவு நேரம் ஆகும். ஆனால் இத கொண்டு போற துக்குக் காரணம் அவர்களோட (வாசகர்களோட) ஆர்வமும், துணையும் தான்.  பணம் சம்பாதிக்கிறது எதுல வேண்டுமானா லும் பண்ணலாம். ஆனா மனிதர்களைச் சம்பாதிப்பது இதுல தவிர வேறு எதிலும் வர எங்களுக்கு வாய்ப்பில்லை.  இதுல எங்கெங்கேயோ எதிர்பார்க்காத இடங்களில் எல்லாம் வாசகர்கள் இருக்கிறார்கள்.  பலதரப்பட்ட வாசகர்கள் இருக்கி றார்கள். இப்போ இத நாங்க மூடிட்டு போயிட்டா உலகம் ஒண்ணும் மாறிடப் போறதில்ல. இது வந்து ஒரு ஆர்வம். அவங்களுக்கு எங்க மூலமா ஒரு சந்தோஷம். இது எங்க கையைக் கடிக்காத வரைக்கும் நாங்களும் பண்றோம். தனிப் பட்ட முறையில் சொல்லப்போனால் நானே ஒரு வாசகன். யாருக்காகப் பண்றனோ இல்லையோ எனக்காகவாவது பண்ணணும். இப்போ எத்தனை பேருக்குப் பிடிச்சதை தொழிலா செய்ய வாய்ப்பு கிடைக்கும்? கெடைச்சத சந்தோஷமாக ஏத்துக்குறோம் அவ்வளவுதான்.

நீங்க வலைப்பதிவுகளில் எல்லாம் போயி பாத்தீங்கன்னா கதைய பத்தி எழுதுறது படிச்சதுக்காகன்னு மட்டுமில்லாம, சின்ன வயசுல வீட்ல காசு கேட்டு வாங்கி, இல்ல சேத்து வச்சி கடையில போயி வாங்கி, நெறைய வீடுகளில் புத்தகத்த வீட்ல வச்சி படிக்க விடமாட்டாங்க. அப்போ பைக்குள்ள ஒளிச்சி வெச்சி பள்ளிக்கூடத்துல போயி படிக்கறது, இல்ல நண்பர்கள் கிட்ட கடன் வாங்கி படிக்கிறதுன்னு. இந்தப் புத்தகங்கள படிக்கும் போதும் பாக்கும் போதும் அவங்களோட சின்ன வயசு ஞயாபகங்கள் இதில் நிறைய இருக்கு. வெறுமனே கதையைப் படிக்கிறோம்னு படிச்சா பெருசா இதுல ஒண்ணும் இருக்குறதுக்கு வாய்ப்பில்லை. எல்லாருக்குமே இத பத்திரமா வெச்சிக்கணும்னு நெனைக்கிறது காரணம் அது அவர்களோட  flash back.

தமிழில் சித்திரக்கதைகளின் அடுத்தகட்ட வளர்ச்சி?

இங்கே காமிக்ஸ் படிக்கணும்னு நெனச்சா ஆங்கிலத்தில் தான் படிக்கமுடியும். அப்படி பார்த்தா எல்லோருக்கும் முதலில் ஆங்கிலம் நல்லா தெரிஞ்சிருக்கணும். அதோடு 200 ரூபாய் கொடுத்து ஒரு புத்தகத்த வாங்கமுடியுமா என்ற கேள்வியும் இருக்கு. ஒரு நிறுவனம் ஒரே நேரத்தில் ஒரு கதாபாத்திரத்தைப் பற்றி 24 நூல்களை வெளியிட்டது. அப்போது யார் இதற்காக 5000 ரூபாய் செலவழிப்பாங்க. மேலும் அதை ஆங்கிலத்திலேயே படித்து ரசிப்பதற்குமான ரசனை எப்படிபட்டது. இப்போ வடிவேலு நகைச்சுவையைப் பார்த்து சிரிப்பதற்கும் லார்ல் ஹார்டி காமெடியைப் பார்த்துச் சிரிப்பதற்கும் வேறுபாடு இருக்கு.

இதே நிலை தொடர்ந்தால் ஒருகட்டத்தில் புத்த கங்கள் எல்லாம் இணையத்துக்குச் சென்றுவிடும், சென்றுகொண்டி ருக்கின்றன.  நாங்களே என்று அந்த நிலைக்குப் போவோம் என்று தெரியவில்லை. நான் இதை இணையத்திற்கு கொண்டு போய்விட்டு வருடம் சந்தா இவ்வளவு என்று வாங்கிக் கொண்டு கடவுச்சொல் கொடுத்து படித்துக்கொள்ளலாம் என்று சொன்னால் எங்களுக்குச் சந்தை, தயாரிப்பு எதுவுமே தேவையில்லை. இந்த வேலையை மட்டும் செய்து படமெடுத்து கணினியில் தரவேற்றினால் வேலை முடிந்துவிடும். ஆனால், இன்னமும்  நீங்க என்னதான் கணினியில் படித்தாலும் கையில் ஒரு புத்தகத்தை வைத்துப் படிப்பதனோட அனுபவம் கிடைக்காது. அதனால் முடிந்தவரை புத்தகமாக வெளியிடுவதையே விரும்புகிறேன். இது முடியாத காரியம் என்கிற பட்சத்தில் வேண்டுமானால் இணையத்தில் வெளியிடுவேன்.

இன்னைக்கு 25லயிருந்து 65 வயசு வரைக்கும் படிக்கிறாங்க. ஆனா இங்க புது வரவு என்பது ரொம்ப ரொம்ப குறைவு. அதனால் இது பெரிதாக வளர்வதற்கு வாய்ப்புகள் ரொம்ப குறைவு. எது எப்படி இருந்தாலும் நாங்கள் இதை விடுவதாக இல்லை                                                                                                                                                                                                                                                         

Pin It