கீற்றில் தேட...

சில மருந்துகள் நம்முடைய நடுவண் நரம்பு மண்டலத்தின் மீது சோர்வைச் செலுத்தி அதனைக் குறைந்த ஆற்றலுக்குள்ளாக்குகின்றன. விழிப்பு-உறக்கச் சுழல் முறையை நடத்திச் செல்லும் மூளைப்பரப்பில் துயிலூட்டும் மருந்துகள் செயல்பட்டு மாற்றுகின்றன. இதனால் நமக்கு தூக்கம் ஏற்படுகிறது. மருந்துகள் மிக வேறுபாடுகள் கொண்டுள்ளன. தேவையான மருந்தளவு, அவை செயல்படுத்தும் கால அளவு, உதவியளவு, அபாய அளவுகளை அறிந்து, அவை பாதுகாப்புத் தரும் எல்லை ஆகியவற்றிற்கேற்ப அம்மருந்துகள் வேறுபாடு உடையன.

பினோபார்ப்பிடோன் (Phenobarnitone) அல்லது லூமினால் (Luminal) போன்ற நீண்ட நேரச் செயல்பாடு விளைவிக்கும் வெள்ளை உருப்பளிங்குப் பொடிகள் (Barbiturates) ஆறுமுதல் பத்து மணி நேரத்திறன் கொண்டுள்ளன. தொடர்ந்து பயன்படுத்துபவர்க்கு அடுத்தநாளில் மந்தமான மன நிலையையும், உறங்கி வழிகிற நிலையையும் அவை உண்டாக்கலாம். இடை நிலையில் செயல்படும் மருந்துச் சரக்குகள், பூட்டோபர்பிடோன் (Butobarbitone), சொனாரில் (Soneryl), அமிலோபார்பிடோஸ் (Amylobarbitone) அல்லது அமிடால் (Amytal) போன்றவை ஐந்து முதல் ஆறுமணியே செய்கை புரியும்.

பென்டோபார்பிடோன் (Pentonarbitone) அல்லது நெம்பூடல்(Nembutal) போன்ற குறுகிய காலத்தில் செயல்படுத்தும் மருந்துகள் இரண்டு அல்லது மூன்று மணி நேரமே பயன்படும். கடுந்தீவிரமான குறை காலமுடையவை (Ultra-Short drugs) தியோபென்டோன் (Thiopentone) அல்லது பென்டோதால் (Pentothal) போன்றவை மயக்கமூட்டுவதற்கு முன்பாகக் கொடுக்கப்படுகின்றன. தூக்க மருந்தாகப் பயன்படுத்தப்படும் வெள்ளை உருப்பளிங்குப் பொடிகள் கடுந்தீங்குகளை விளைவிக்குமாதலால் கட்டாயமாக மருத்துவர் மேற்பார்வையில் மட்டுமே இது உட்கொள்ளத்தக்கது.

(உடலும் மருந்தும் நூலிலிருந்து)