கைது செய்யப்பட்ட நபரைக் காவலில் வைத்தல்:

கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும், கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக (கைதான இடத்தில் இருந்து நீதிமன்றம் செல்வதற்கு தேவைப்படும் பயண நேரம் நீங்கலாக) அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்யப்பட வேண்டும் என்று அரசியல் சாசனத்தின் பிரிவு 22(2) கூறுகிறது. எனினும், குறிப்பிட்ட காலத்திற்குள் புலனாய்வை முடிக்க இயலாதெனின், கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்கும் மேலாக காவலில் வைப்பதை ஏற்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 167 அதிகாரம் வழங்கியுள்ளது. குற்றவியல் நீதித்துறை நடுவரின் சிறப்பு ஆணை இல்லாமல் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு குற்றவாளியை 24 மணி நேரத்திற்கு மேல் ஒரு கணம் கூட காவலில் வைத்திருக்கக் கூடாது. மொத்தத்தில், 15 நாட்களுக்கு மிகாமல் காவலில் வைக்க ஆணையிட முடியும். 15 நாட்கள் முடியும் தருவாயில் அவரைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்ய வேண்டும்.

நீதித்துறைக் காவலில் (சிறையில்) மேலும் வைப்பதற்குப் போதிய காரணங்களிலிருந்தால், அதற்கேற்ப 15 நாட்களுக்கு மிகாமல் காவலில் வைக்க அவர் ஆணை பிறப்பிக்கலாம். ஒருவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் பற்றி புலனாய்வு முடிந்தாலும் முடியாமல் இருந்தாலும் மொத்தக் கால அளவு 60 நாட்களுக்கு மேல் போகக் கூடாது. காலவரையின்றி காவலில் வைக்க அனுமதிக்கும் குற்றவியல் நீதித்துறை நடுவரின் ஆணை சட்டவிரோதமானது. புலனாய்வுக் காலத்தில் ஒரு குற்றவாளியால் பிணையளிக்க இயலாமற் போனால், 60 நாட்களுக்கு மேலும் நீதித்துறைக் காவலில் வைத்திருக்கலாம். பிணையில் விடுவிக்கக் கூடாத குற்றங்களில், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றம் விசாரணை முடியும் வரையில் சிறையில் வைத்திருக்கலாம்.

பிணை (ஜாமீன்):

பிணை என்பது, கைது செய்யப்பட்ட நபரை விசாரணை முடியும் வரையில் சட்டப்பூர்வக் காவலிலிருந்து விடுவிப்பதாகும். தன்னைக் காத்துக்கொள்ள நண்பர்களின் அறிவுரைகளைக் கேட்கவும். வழக்கறிஞரைக் கலந்தாலோசிக்கவும் சாட்சிகளைக் கண்டறியவும், சாட்சியங் களைச் சேகரிக்கவும், தனது பணியில் தொடரவும் ஒருவருக்கு சுதந்திரமளிப்பது பிணையாகும்.

பிணைமறுக்கப்பட்டால், கைது செய்யப்பட்டவர் காவலில் வைக்க அனுப்பப்படுவார். புலனாய்வுக்கும் சாட்சியங்களைப் பெறவும் உதவும் வகையில் அவர் காவலில் வைக்கப் பட்டிருப்பார்.

பிணையானது இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

  1. பிணையில் விடுவிக்கக்கூடிய வழக்குகள்
  2. பிணையில் விடுவிக்க முடியாத வழக்குகள்

பிணையில் விடுவிக்கக் கூடிய வழக்குகள்:

பிணையில் விடுவிக்கக்கூடிய வழக்குகளில், பிணையில் விடுதலை செய்வது சட்டப்படியான உரிமையாகும். பிணையில் விடுவிக்க மறுக்கக்கூடாது என்பதும், காவல் நிலையத்திற்குப் பொறுப்பான காவல்துறை அதிகாரி, காவலில் வைக்கப்பட்டுள்ள குற்றவாளியை பிணையில் விடுவிக்கலாம் என்பதும் இதன் பொருளாகும். பிணையாளிகள் இல்லாமல் கூட, குற்றவாளியிடம் பிணைமுறி (ஜாமீன் பத்திரம்) எழுதி வாங்கிக் கொண்டு விடுவிக்க ஆணையிடலாம்.

பிணையில் விடுவிக்க முடியாத வழக்குகள்:

பிணையில் விடுவிக்க முடியாத வழக்குகளில் நீதிமன்றம் மட்டுமே பிணையில் விடுவிக்க ஆணையிட முடியும். எனினும், காவல்துறை அதிகாரியோ அல்லது குற்றவியல் நீதித்துறை நடுவரோ குற்றவாளிக்கு எதிராகப் போதுமான சாட்சியங்கள் இல்லை என்றும், முறையீடு மேலும் புலனாய்வு செய்யப்படவேண்டும் என்று கருதினால் குற்றவாளியை பிணையில் விடுவிக்கலாம் (குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 437(2)). குற்றவாளி மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை பெறக்கூடிய குற்றம் புரிந்திருப்பதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக தோன்றினால் பொதுவாக பிணையில் விடுவிக்கப்பட மாட்டார். ஆனால் மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கக்கூடிய குற்றம் சுமத்தப்பட்டிருந்த போதிலும், அவர் ஒரு பெண்ணாகவோ, 16 வயதுக்குக் குறைந்த சிறுவராகவோ, நோயாளியாகவோ இருந்தால். குற்றவியல் நீதித்துறை நடுவரால் பிணையில் விடுவிக்கப்படலாம்.

குற்றம் புரிந்தவர் என்பதற்கான நியாயாமான காரணம் எதுவும் இல்லாத நிலையிலும், வழக்கு முடிவதற்கு இடையிலும், தீர்ப்புரை வழங்கப்பட்ட பின்பும் பிணையில் விடுவிக்கப்படுவதற்கு குற்றவாளிக்கு உரிமை உண்டு. அவ்வாறு விடுவிக்கப்பட்ட பிறகு, நேர்மையான விசாரணைக்குக் குந்தகம் விளைவிக்கும்படி அவர் நடந்து கொண்டாலோ அல்லது பிணை நிபந்தனைகளைக் கடைப்பிடிக்காமலிருந்தாலோ நீதிமன்ற ஆணையின் பேரில் அந்த நபரைக் காவலில் வைக்கலாம் (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு. 48).

பிணையில் விடுவிக்க நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரம்:

பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றத்திற்குள்ள தன் விருப்புரிமை அதிகாரமானது, நிறுவப்பட்ட கொள்கைகளினால் விளைந்த நீதியின் அதிகாரமாகும். பிணையில் விடுவிப்பதற்கு முன்பாக, நீதிமன்றமானது குற்றச்சாட்டின் கடுமை, சாட்சியத்தின் தன்மை, குற்றங்களுக்கான தண்டனை யின் கடுமை மற்றும் சில வழக்குகளில் குற்றவாளியின் குண இயல்பு, வசதி, தகுதி ஆகியவற்றை பரிசீலிக்க வேண்டும்.

Pin It