கீற்றில் தேட...

 

வாழ்நாள் முழுதுமுன்னை

தூக்கிச் சுமக்கட்டுமா

உன்னுயிருக்குக் கவசமென

என்னையே ஆக்கட்டுமா

உன் சுட்டுவிரல் காட்டும்

பொருட்களையெல்லாமுனக்கெனவே

வாங்கிக் கொடுக்கட்டுமா

கடல்பரப்பு அளவென்றாலும் சரி

உனதாசைகளையெல்லாம்

யோசித்துப் பட்டியலிட்டு

மனதில் சிம்மாசனமிட்டிருக்கும்

மகாராணியே சொல்லென்றேன்

 

புன்னகைக்கும் உதடுகளில் சிணுங்கி

அகிலத்து மரங்களையெல்லாம்

பட்டியலுக்குத் தாளாக்கவேண்டுமோவென

எண்ணச் செய்து என்

மேலுதட்டில் வியர்க்கவைத்து பின்

மெதுவாகச் சொன்னாய்

'அடைய வேண்டுமென்ற ஆசை

ஏதுமில்லை உன்னைத்தவிர'

என் வாழ்நாள் முழுவதற்கும்

நான் வாழ்ந்திடவும்

நீ மட்டும் போதுமடி என் காதல் சகியே

 

- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)