இதயத்தினொரு பக்கம்

இரும்பினால் கிழித்துப்பின்

விஷ முள்ளினால் தைக்கிற

வலிதான் காதலோ

அலையென அடித்து

கடலுக்குள் இழுத்திடும்

கரம்தான் காதலோ

அனலுமற்று குளிருமற்று

நோய்க்குள் தள்ளிடும்

பலவீனம்தான் காதலோ

நடையுடை தோற்றம்

நாடகம் காட்டிடும்

மேடைதான் காதலோ

எல்லாம் திறந்த கதவுகளுக்குள்ளும்

இருளை மட்டும் முழுதாக அனுப்பும்

துளைதான் காதலோ

சேராக் காதலால் துயர்கொண்டு

தாடியோடலைந்தவனொருவன்

என் வீதியோரமோரிரவில்

உறக்கம் கெடுத்து

இவ்வாறு பாடிப்போனான்

நீ உறுதியாகச் சொல்

நம் காதல்

இத்துன்பமேதும் நமக்கு

என்றும் தராது தானே பெண்ணே

- எம்.ரிஷான் ஷெரீப்

Pin It