காதல் யுத்தகளத்தில் உன்னையே

பெரும் எதிரியெனக் காண்கிறேன்

போருக்குத் தயாராகு

சமர்த் தரையில் நானொரு

கோழை அரசனைப்போல

உன்னிடம்

மண்டியிட்டுச் சரணடைவேன்

உன்னழகிய நிமிடங்களில்

எதையும் வீணாக்காமல்

என்னிடத்திலிருந்து எல்லாவற்றையும்

அபகரித்துப் பறித்துக்கொள்

உன்னையே எல்லையென

உடலும் மனமும் வட்டமிட்ட

என் சுய இராஜ்ஜியத்தை

வீரக் கதைகள் பேசி

உன் விழிகளைச் சுற்றிவந்த

என் பார்வை மொழிகளை

உன்னுறக்கம் கெடுக்கவென

கணந்தோறும் துடித்ததிர்ந்த

நீயுறங்குமென் இதயப்பஞ்சணையை

இப்படி இன்னுமின்னும்

எல்லாவற்றையும் எடுத்துக்கொள்

போரின் முடிவாக

காதல் அடிமையென

உறுதியான விலங்கிட்டு

என்னையும் இறுதிவரை

உனக்கெனவே எடுத்துக்கொள்

- எம்.ரிஷான் ஷெரீப்

Pin It