மகாராஷ்டிரா, அரியானா தேர்தல் முடிவுகள் அனைந்திந்திய அரசியல் களத்தில் ஆட்சியில் பங்கு பெறாத கட்சிகளிடையே வலுவான கூட்டணி உருவாக்கத்தை நோக்கி காய்களை நகர்த்த வைத்துள்ளது. மகாராஷ்டிராவில் பா.ச.க. பெரும்பான்மை இடங்களைப் பெற்றுவிட்டது. அரியானாவில் தனித்து ஆட்சியே அமைத்துவிட்டது. இவ்விரு மாநிலங்களிலும் பா.ச.க. ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறை. கேரளா, மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களிலும் பா.ச.க. காலூன்றும் என்று அரசியல் ஆய்வாளர்களில் ஒரு சாரார் முன் வைக்கின்றனர்.

இவை அனைத்தும் ஜனதா பரிவார் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு கட்சிகளை நெருங்கி வர வைத்துள்ளன. ஆம்! நவம்பர் 6 ஆம் நாள் சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் அவர் வீட்டில் மதிய உணவுக்கு 5 கட்சிகளின் தலைவர்களை அழைத்திருந்தார். ஐக்கிய ஜனதாதளத்தின் சரத் யாதவ், மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தேவ கௌடா , இராஷ்டிரிய ஜனதாதளத்தின் லல்லு பிரசாத் யாதவ், இந்திய தேசிய லோக் தளத்தின் துசியந்த் சௌதாலா, சமதா ஜனதா கட்சியின் கமல் மொரார்கா ஆகியோர் அதில் பங்கு பெற்றனர்.

அடிக்கும் மோடி அலைக்கு தடை போடுவதே அவர்கள் எண்ணம். நாடாளுமன்றத் தேர்தலில் பீகாரில் பா.ச.க. கூட்டணி மொத்தமுள்ள 40 இடங்களில் 31 ஐ பெற்றது. இது ராஷ்டிரிய ஜனதா தளத்தையும், ஐக்கிய ஜனதாதளத்தையும் கூட்டணிக்கு தள்ளியது. அக்டோபர் முதல் வாரத்தில் சரத் யாதவ், முலாயங் சிங் யாதவை ’நட்புரீதியாக’ சந்தித்தார். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பா.ச.க. வை எதிர்கொள்வதற்காகவே இந்தக் கூட்டணி என்று நிதிஷ் குமார் பத்திரிக்கையாளர்களிடம் சொன்னார். மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித் திட்டம், நிலம் கையகப்படுத்தும் சட்டம், கருப்புப் பணம் ஆகிய மூன்றும்தான் இவர்கள் எடுக்கப் போகும் விவகாரங்கள் என்று சொன்னார் நிதிஷ்.

இந்த ஆறு சோசலிசக் கட்சிகளும் இணைந்து ஜனதா தளத்தை மீண்டும் உருவாக்கப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது. நவம்பர் 25 ஆம் நாள் குளிர்காலக் கூட்டத் தொடருக்கென்று திட்டமிட இருக்கிறார்கள். இவ்வணிகளுக்கு மக்களவையில் 15 இடங்களும், மாநிலங்களவையில் 25 இடங்களும் உள்ளன. மக்களவைக்கு முலாயம் சிங் தலைமை தாங்குவார் என்றும் மாநிலங்களவையை சரத் யாதவ் தலைமை தாங்குவார் என்றும் சொல்லியுள்ளனர்.

அவர்கள் திரும்பி பார்க்கிறார்களோ இல்லையோ நாம் திரும்பிப் பார்த்தாக வேண்டும். 1970 களில் இந்திரா தலைமையிலான காங்கிரசின் அவசர கால கட்டத்தில் ஜெயப்பிரகாசு நாராயணன் என்ற மாபெரும் தலைவரின் உருவாக்கம்தான் ஜனதா கட்சி. அவசர கால நிலைமைக்கு எதிரானப் போராட்டம் இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று ஜெயப்பிரகாசு நாராயணன் முழங்கினார். ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம், சோஷலிஸ்ட் கட்சிகள், பாரதிய லோக்தளம் ஆகியவை இணைந்து 1977 இல் அக்கட்சி உருவாக்கப்பட்டது. அவசர கால கட்டம் முடிவுக்கு வந்தது. ஜனதா கட்சி ஆட்சிக்கும் வந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு மத்தியில் காங்கிரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்து கீழிறங்கியது அப்போதுதான். ஆனால் கூட்டணி கட்சிகளின் அகந்தையாலும் பதவி வெறியாலும் மக்களின் நம்பிக்கையை இழந்த ஜனதா கட்சி சுக்கு நூறாய் உடைந்தது.

பாரதிய ஜனசங்கம், பாரதிய ஜனதாவாக உருவெடுத்தது. சோஷலிஸ்டுகள் சமதா என்றும் பிறகு சமாஜ்வாதி என்றும் உருக்கொண்டனர். ஜனதா, ஜனதா தளமானது. அதுவும் மதச்சார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் என்று உடைந்தது. மற்றொன்று, ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்று உருவமெடுத்தது. இக்கட்சிகள் மாநில அளவிலும் அக்கட்சித் தலைவர்களின் சாதிக்குள்ளும் சுருங்கிப் போயின. அதிலும் அவர்கள் குடும்ப அரசியல், ஊழல் என்று சீரழிந்துப் போனார்கள்.

1988 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் நாள் சோசலிசக் கட்சிகளை இணைத்து ஜனதா தளத்தை உருவாக்கினார் வி.பி. சிங். வி.பி. சிங் தலைமையிலான ஆட்சியும் நீடிக்கவில்லை. இப்போது, திசம்பரில் மீண்டும் ஜனதா தளம் உருவாக்கப்படலாம் என்று செய்தி வந்துள்ளது. இதை சி.பி.ஐ (எம்) வரவேற்றுள்ளது. எப்படியாயினும் பாசிசத்தை நோக்கிச் செல்லும் ஒரு ஆட்சிக்கு எதிராக இவர்கள் ஒன்றுபடுவது வரவேற்க வேண்டியதுதான். பா.ச.க. வின் செய்தி தொடர்பாளர் செய்யது சானாவாஸ் உசேன் மூன்றாவது அணியோ நான்காவது அணியோ பா.ச.க.வையும் சரி மோடியையும் சரி ஒன்றும் பாதிக்காது என்று அசட்டையாக சொல்லியுள்ளார்.

இக்கட்சிகளின் கடந்த கால வரலாறு பல கேள்விகளை எழுப்புகின்றன. காங்கிரசின் காட்டாட்சிக்கு எதிராகத் தோன்றியக் கட்சிகள் என்றாலும் காங்கிரசோடு இவை கூட்டணி வைத்தன. பா.ச.க.வோடும் கூட்டணி வைத்துள்ளன. அப்படி இருக்கையில் பா.ச.க. வையும் காங்கிரசையும் எதிர்க்கத்தான் இந்த ஐக்கியமா? மாநிலக் கட்சிகளின் பல்லைப் பிடுங்கும் பா.ச.க. வின் நகர்வுகளை எதிர்கொள்ளத்தான் இந்த ஐக்கியா? மதச் சார்பின்மை என்ற ஒற்றை கொள்கையின் அடிப்படையில் பா.ச.க. வினை எதிர்கொண்டுவிட முடியுமா? அப்படியெனில், காங்கிரசோடு கூட்டணி வைப்பார்களா? பா.ச.க. வின். உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கையை இவர்கள் எதிர்க்க வில்லையா? பா.ச.க., காங்கிரசுக்கு மாற்றாக இவர்கள் முன்வைக்கும் கொள்கை என்ன? கொள்கையில்லாமல் அதிகாரப் பசிக்காக ஓர் ஐக்கியமென்றால் வேலையின்றி, போதிய வருமானம் இன்றி பட்டினியால் வாடும் கோடிக்கணக்கான மக்களின் வயிற்றுப் பசிக்கு இவர்களிடம் என்ன தீர்வு இருக்கிறது?

2003 ஆம் ஆண்டு ஜனதா தளத்தில் இருந்து உடைந்தக் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த தேசியவாத காங்கிரசு கட்சியின்(இப்போது இக்கட்சி மகாராஷ்டிராவில் பா.ச.க. ஆட்சி அமைக்க ஆதரவு தந்திருக்கிறது) தலைவர் சரத் பவார் பின்வருமாறு சொன்னார். ‘‘இக்கட்சிகள் இணைவதை இந்நாட்டில் உள்ள விவசாயிகளும், இளைஞர்களும், உழைக்கும் வர்க்கமும் மதச்சார்பான்மையை உறுதியாகப் பேணும் மூன்றாவது அணியை எதிர்ப்பார்த்திருக்கிறார்கள். கட்சித் தலைவர்கள் மூன்றாவது அணியை உருவாக்காவிட்டால் அவர்கள் இவர்களைத் தோற்கடித்து எள்ளி நகை யாடுவார்கள்’’ என்று சொன்னார். மூன்றாவது அணி அமைக்காவிட்டாலும் சரி மாற்றுக் கொள்கையற்ற மூன்றாவது அணியை உருவாக்கினாலும் சரி மக்கள் இவர்களைப் புறந்தள்ளி எள்ளி நகையாடவே செய்வார்கள். மூன்றாவது அணி என்பதை விட கொள்கை வழிப்பட்ட மாற்று அணிதான் பா.ச.க அரசை வீழ்த்த முடியும் என்பதை கல்லறையிலிருந்து எழும் ஜனதா தளம் கருத்தில் கொள்ள வேண்டும்.

Pin It