டால்ஸ்டாயின் அன்னா கரீனினா

கதைத்தல் என்பது தனி அனுபவத்தின் சாரத்தைப் பொதுவாக்கிப் பார்த்தல் என்பதே யாகும். எந்தவொரு மனிதனுக்கும் அனுபவத்தின் எல்லை மிகச்சிறியதேயாகும். படைப்பாளி தன் கதையின் வழியாக வாழ்வின் சாரத்தை வாசகனுக்கு கடத்துகிறான்.  வாசகன் தான் மயங்கிய, இரசித்த, மகிழ்ந்த கனங்களைத் தன் கதைக்குள் படைப்பனுபவத்தின் வழியாக வாசகனுக்கு கடத்துகிறான். தன் வாழ்வில் சந்தித்த மனிதர்களை, நிகழ்வுகளை வாசகன் கதைக்குள் சந்திக்கிறான். இந்த சந்திப்பின் மூலம் வாசகனுக்கு பெரும் வாய்ப்பை படைப்பாளி வழங்குகிறான்.

லியொ டால்ஸ்டாயின் கதைகள் வாசகனுக்கு அளிக்கும் அனுபவங்கள் மகத்தானவை.  ‘‘ருசியா’’வின் அன்றைய சமூகத்தைக் காட்டும் காலக் கண்ணாடி அவை’’ என்கிறார் லெனின். நிலவுடமை சமூக மதிப்பீடுகளில் சிக்குண்டும் அதிகாரப் போதையிலும் அதேவேளையில் மனிதாபிமானியாகவும் உள்ள உயர் அதிகாரி ஒருவரின் மனைவி அன்னா கரீனினா விரான்ஸ்கி என்ற இளைஞன் மீது காதல் கொள்கிறாள்.

தன் தனிமையாலும் விரக்தியாலும் சூழப்பட்ட அவளை ஏக்கத்திற்கும் தவிப்பிற்கும் உள்ளாக்கிவிட்ட விரான்ஸ்கியால் ஏமாற்றப்பட்டு தற்கொலை செய்துகொள்கிறாள்.  மணமான பெண் ஒருத்தி தன் கௌரவமான வாழ்வை இழப்பதற்கு அன்றைய சமூக மதிப்பீடுகள் எவ்வகையான குற்ற உணர்வை அவளுக்கு அளிக்கின்றன என்பதை டால்ஸ்டாய் பெண்ணின் ஆழமான, இருண்ட, அடிமைப்பட்ட இரகசிய மனங்களில் தேடி கண்டப் புதையல் அன்னா கரீனினா நாவல்.

அன்னா கரீனினாவின் அழகாலும் வசீகரத்தாலும் தூண்டப்பட்ட விரான்ஸ்கியால், துரதிஷ்டமான வசீகரத்தின் தன்னழகால் அவள் வாழ்வு சீரழியப் போவது தெரியாமல் விதி அவளைத் துரத்துகிறது. அன்றைய நிலபிரபுத்துவ சமூகத்தின் மதிப்பீடுகளால் சிக்குண்டு கிடக்கும் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரி கெரினின் படும் அவஸ்த்தைகளை டால்ஸ்டாய் விளக்குகிறார்.  மகிழ்ச்சியற்ற குடும்ப அமைப்பில் ஆண், பெண் இருபாலர்களின் உளவியல் சிக்கல்களை அசாதாரணமாக விளங்கிக்கொள்ள வாசகனுக்கு பெரும் வாய்ப்பை வழங்குகிறார் டால்ஸ்டாய்.

ருசியாவின் இரண்டாம் அலெக்சாண்டர் சக்கரவர்த்தியின் சீர்திருத்தங்களால் உருவான பண்பாட்டு மாற்றங்களை, அன்றைய காலச் சூழலில் சிதைவுறும் பெண்,ஆண் மனங்களின் நோய்மைகளைத் தனது மேதமையான எழுத்து வல்லமையின் மூலம் வழிப் படம்பிடித்துக் காட்டுகிறார் டால்ஸ்டாய். ஸிவாவின் தங்கையான அன்னா தன் அண்ணனின் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தைத் தீர்க்க வருகிறாள்.

ஸிவாவின் மண வாழ்க்கைக்கு வெளியெ அவனுக்கு இருக்கும் பெண்ணுறவால் பிரியத் துணிந்த அவன் மனைவி டோலியொடு உரையாடி குடும்பத்தை இணைத்தவள் தான் அன்னா. அந்தோ பரிதாபம்! விரான்ஸ்கியின் வலையில் விழுகிறாள்.  இல்லை... இல்லை. ஓடும் ரயிலின் முன் குதித்து தற்கொலையில் விழுகிறாள். கதை மாந்தர்களின் நுட்பமான அசைவுகளையும் உடல் மொழிகளையும் சமூக மதிப்பீடு சார்ந்த நம்பிக்கைகளையும் இழைஇழையாய் விவரிக்கிறார்  டால்ஸ்டாய்.

மாபெரும் காப்பியமான அன்னா கரீனினா நாவலில் பல்வேறு மனிதர்களின் அகம், புற உலகச் சிக்கல்களை, உயர்வு தாழ்வுகளை, விருப்பு வெறுப்புகளை அலசுகிறார் டால்ஸ்டாய்.  மனிதர்களின் முழு வாழ்க்கையையும் அவர்களின் வீழ்ச்சியையும் வாசகன் அவதானிப்பதன் மூலம் கதாப்பாத்திரங்களின் முழுவாழ்வையும் ஒரே நாவலில் தரிசிக்க வாய்ப்பை வழங்குகிறார் டால்ஸ்டாய். அன்னா கரீனினா, போரும் அமைதியும், புத்துயிர்ப்பு போன்ற உலகப் புகழ்ப் பெற்ற நாவல்களை எழுதியிருந்தாலும் அன்னா கரீனினாவில் இளமையும், துடிப்பும், துயரமும், துன்பமும் வாழ்வின் தவிர்க்க முடியாத அசுர பலத்தொடு கதாப்பாத்திரங்களைத் தாக்குவதையும் அதனை எதிர்கொள்வதையும் வாசகர் காணலாம்.

மனிதன் தன்னுடைய பலவீனங்களிலிருந்து மீண்டெழ ஓயாது  செய்யும் பல முயற்சிகளில் ஒன்றாக லியொ டால்ஸ்டாயை வாசிப்பதன்மூலம் சிறந்த வளமான அனுபவத்தைப் பெற முடியும்.  தன் புகழ்பெற்ற பாத்திரமான அன்னா நாவலில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகாண்டதாலொ என்னவொ ரயில்கள் வந்துபொகும் இடங்களில் ஒன்றான ருசியாவின் அஷ்டபொ இரயில் நிலையத்தில் டால்ஸ்டாய் மரித்துப் போனார்.

Pin It