blood_lk

பேரிடர்களை எப்போதுமே மிகைப்­படுத்தி வகைப்படுத்தும் தொலைக் காட்சி வானிலையாளர்கள், நியு இங்கி­லாந்தில் இலையுதிர் காலக் கடும்புயல் வேகமானக் காற்றுடனும் பலத்த மழை­யுடனும் இருக்கும் என்று கணித்திருந் தனர். மனைவி ஜேன், பாஸ்டன் நகரின் நியுபெர்ரி சாலையில் பூக்கடை நிர்வ கிக்க, வீட்டிலேயே வேலைகளைப் பார்த்துக்கொண்ட பிராட் மோரீஸ் ஜன்னலுக்கு வெளியே அலைந்தாடும் மரங்களை ஓக் மரங்கள் வலுவான காற்றில் தங்கள் இலைகளை விடாப்பிடியாக வைத்திருக்க, மேப்பிள் மரங்கள் தனது பொன்னிறமும் சிவப்புமான இலைகளைப் போகவிட்டுக்கொண்டிருந்தன அடிக்கடி எட்டிப் பார்த்தவர், செய்திகளின் மிகையான தகவல்களால் பாதிக்கப்படாமல் இருந்தார். ஒரேயடியாக அரை மணி நேரம் பலத்த மழை பெய்த பிறகு, பஞ்சுப்பட்ட மேகங்கள் வேகமாக நகரும் வெள்ளி வானமாக மாறியது. நண்பகலில் கண்ணெதிரில் கணினி உயிர் இழந்தபோது, மோசமா­னவை எல்லாம் ஒரு முடிவுக்கு வந்த ­தாகத் தோன்றியது. மிகவும் சிரமப்பட்டு அவர் முடித்து வைத்திருந்த கணக்குகள் ஒரே குழுமமாகச் சுருண்டு, நீர்ப்போக்கியில் போய்விழும் பளபளக்கும் நீரைப் போல, செத்துப்போன திரைக்குள் உறிஞ்சப்பட்டன. வீட்டின் எல்லா விளக்குகளும், இயந்திரங்களும் கணினிமயமாக்கப்பட்ட டைமர், இன்டிகேட்டர் எல்லாமும் மின்தடையால் நின்றுபோனதும், அவரைச் சுற்றிலும் வீடு மூச்சிரைப்பதாகத் தோன்றியது. வெளியே மரங்களைக் காற்றும் மழையும் விளாசுகிற சப்தம் வீட்டின் அமைதியை ஊடுருவியது. வீட்டினுள் ஒரு ஸ்தூலம் கிரீச்சிட்டது. மூடப்பட்டாத ஜன்னல் கதவு, அறைந்து சாத்திக்கொண்டது. அடைக்கப்பட்டிருந்த வடிநீர்க் குழாயிலிருந்து விழும் நீர்த்துளி, கவனத்தை ஈர்க்க முரண்டுபண்ணும் மாட்டைப் போல, நிலவறைக் கிணற்றின் மரமூடியின் மீது கனமாக விழுந்தது.

மோரிஸின் வீட்டுக்கு வரும் மின்சாரம், தொலைபேசி கம்பிகள், டிவி கேபிள்களை இரண்டு ஏக்கர் தோப்பின் ஊடாக, மூன்று கம்பங்களில் வந்தன. பிராட் வெளியே வந்து புயலின் தாலாட்டில், மாறுபட்ட வெளிச்சத்தில் நின்று, கம்பிகளின் மீது மரக்கிளைகள் ஏதாவது விழுந்திருக்கிறதா என்று பார்த்தார். எதையும் காணவில்லை. கோடையில் தோப்பின் மரக்கிளைகள் மறைத்துவிடுகிற அண்டை வீடு, இப்போது மறைப்பின்றி தெரிந்தது. அண்டைவீட்டு ஜன்னலில் வெளிச்சம் இல்லை. அவரது வெற்றுடம்பில் லேசாகவே அவர் உணர்ந்த காற்றால், மரங்களின் உச்சி ஆடிக்கொண்டிருந்தது. கனத்த ஜில் மழைத் துளி தூறல்போட்டு அவரை வீட்டுக்குள் திருப்பியனுப்பியது. வீட்டிக்குள் நிழல்கள் மூலைகளுக்கு இடம் பெயர்ந்தன. கணப்பின் உலோகம் குளிர்ந்ததால் அதன் அடியில் சத்தம் எழுந்தது. மின்சாரம் இல்லாமல் செய்வதற்கு ஒன்றுமில்லை.

ஃபிரிட்ஜைத் திறந்தவர், வரவேற்று வாழ்த்தும் உள்விளக்குகள் எரியாததால் ஏமாற்றமடைந்தார். எரியுலைக் கணங்குகள் ஒரு நனைந்த விறகின் காரநெடியை வெளிப்படுத்தின. எறவானத்திலும் ஜன்னல்களின் முனையிலும் அவர் அறிந்திராத இடைவெளிகளில் காற்று சீட்டியடித்தது. இந்த நெருக்கடியில் அவர் செயலிழந்து நின்றார். தன் இயலாமையை உணர்ந்தார். நகர வங்கியில் தான் போடுவதற்காக வைத்திருந்த காசோலையும் அஞ்சலில் சேர்க்கத் திட்டமிட்டிருந்த சில கடிதங்களும் நினைவுக்கு வந்தன. ஆக, அவர் செய்வதற்கு ஏதோ ஒன்று இருந்தது. அந்தக் கடிதங்களை எடுத்துக்கொண்டு, ஈரம்புகா தோல் மழைக்கோட்டை போட்டுக்கொண்டு, "ரெட் சாக்ஸ் கேப்' போட்டுக்கொண்டார். முன்கதவில் இருந்த திருடர் எச்சரிப்பு மணி கண்சிமிட்டியபடி மெதுவாக, தனக்குத் தானே செய்துகொள்வதுபோல, முனகிக்கொண்டிருந்தது. அதன் ரீசெட் பொத்தானை அழுத்தினார். கருவி அமைதியானது. வீட்டுக்கு வெளியே வந்தார்.

கார் வழக்கம்போல ஸ்டார்ட் ஆனது ஏதோ வித்தியாசமாகத் தோன்றியது. நகர மேம்பாட்டுப் பகுதியில் உள்ள இந்த சரளைக்கல் சாலையில், வண்டிப்பாதையின் மீது இலைகள் அப்பிக் கிடந்தன. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, லாபமற்ற பண்ணையில் அண்டை வீடுகள் எல்லாமும் கட்டப்பட்டன. கவனமாக ஓட்டினார். குறிப்பாகக் காணாமல்போன களஞ்சியத்தின் பக்கத்தில் இருக்கும் வாத்துக் குளத்தைச் சுற்றிச்செல்லும்போது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இங்குதான் ஒரு பையன் தன் பெற்றோருடன் ஒரு மெர்சிடிஸ் காரைத் தண்டவாளத் தடுப்பையும் மீறிப்போய் சரிந்து விழுந்து, தண்ணீரில் மூழ்கடித்தான்.

நகரத்தில் இரண்டு தேவாலயங்கள், ஒரு மருந்துகடை, ஒரு டன்கின் தோநட், ஒரு பிஸா ஷாப், ஏறக்குறைய இத்தாலிய உணவகம், இரண்டு அழகு நிலையம், ஒரு துணிக்கடை, இதே வரிசைக் கிரமத்தில் இன்னும் சில கடைகள் வந்துபோகும், ஒரு காப்பீடு முகவர், ஒரு வழக்குரைஞர் அலுவலகம், ஒரு பல் மருத்துவர், நிலத்தரகர் அலுவலகம், ஒரு வங்கி, ஓர் அஞ்சலகம் இவ்வளவுதான்  மின்சாரம் இல்லை. ஆனாலும் வழக்கத்தைவிடச் சுறுசுறுப்பாக இருந்தன. வெளிச்சமற்ற நடைபாதைகள் பாதசாரிகளால் நிறைந்திருந்தன.

இரண்டு பெண்கள், பேச்சைத் தொடங்குவதற்கு முன்பாக, பலகாலமாய் விடுபட்ட நட்பைப் புதுப்பித்துக்கொள்வதைப் போல தழுவிக்கொண்ட காட்சி பிராட்டைத் திகைக்கச் செய்தது. மக்கள் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். தங்கள் தலைவிதியைச் சிறு குழுவாக நின்று விவாதித்துக்கொண்டிருந்தார்கள். எப்போதும் பிரகாசமாக இருக்கும் கடைச் சாளரங்கள் இருண்டு கிடந்தன. மின்தடையால் மக்கள் வெளியே, நடைமேடைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக அவருக்குத் தோன்றியது. நெரிசலான அடுக்குகளில் பைகளில் அடைக்கப்பட்ட பருப்புகள், வைட்டமின் பாட்டில்கள், குளிரூட்டப்பட்ட டோபு, சான்ட்விச் அடுக்கப்பட்டிருந்த ஆரோக்கிய உணவுக் கடை, இந்த பாக்கெட் உணவிற்கு நேர் எதிரான பழக்கடை, இரண்டும் அவற்றின் பொருள் அடுக்கும் ஜன்னலுக்கு உள்ளே ஒரு தடைசெய்யப்பட்ட இருள்குகைகள் போல இருந்தன.

ஆனாலும்கூட, வழக்கமாக அவரது டெபாசிட்களை வரவேற்கும் வங்கி அதன் கண்ணாடிக் கதவில், அருகில் உள்ள வேறு கிளை முகவரிகளைத் தெரிவிக்கும் அறிவிப்பை ஒட்டியிருக்கும் என்று அவருக்குத் தோன்றவில்லை. அடமானம் செய்பவர்களும் அனுமதிக்­கப்பட்டதைவிட அதிகமாகப் பணம் எடுத்தவர்களும் வாடிக்கையாக அமர்ந்தி­ருக்கக்கூடிய இடத்தில், மெத்தையிட்ட நாற்காலிகளில் காசாளர்கள் பேசிக்­கொண்டிருந்தார்கள். வங்கி மேலாளர் சூட் அணிந்த கிளர்ச்சியூட்டும் உயரமான பெண்மணி உண்மையில் நடைபாதை­யில் நடந்துகொண்டிருந்தார். மூச்சி ரைக்க பிராட்டிடம் சொன்னாள்: "நான் மிகவும் வருந்துகிறேன் மிஸ்டர் மோரீஸ். எங்களது ஏடிஎம், எச்சரிக்கை மணி எல்லாமும் செயலிழந்துவிட்டன. ஹார் டுவேரில் ஏதாவது மின்சாரம் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன்'.

"நாம் அனைவருமே ஒரே கட்டத்தில்­தான் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்'. பிராட் அவளுக்குச் சமாதானமாகச் சொன்னார். இருப்பினும் அவளது நம்பவியலாமையைப் புரிந்துகொண்டார். கடிதங்களைப் பெட்டியில் போடவும், வந்திருக்கும் கடிதங்களை எடுக்கவும் அஞ்சலகம் திறந்திருந்தாலும் மற்ற பரிவர்த்தனைகள் மூடப்பட்டிருக்கும் என்பதை அவரே எதிர்பார்க்கவில்லை. அமெரிக்க அஞ்சல் சேவை முழுவதுமாக நவீனமுறையில் கணினிமயமாக்கப்பட்டுள்ளதால், ஒரு கடிதம்கூட விற்பனை செய்ய இயலாது. பார்க்கும்படியாக வெளிச்சம் இருந்தாலும்கூட ஒரு அஞ்சல் தலைகூட விற்பனை செய்ய முடியாது. பிற்பகல் இருண்டுகொண்டிருந்தது. எந்த வேலையும் முடிக்கப்படாததால், ஆரோக்கிய உணவுக் கடையின் கதவைச் சோதித்துப் பார்த்தார். தாழ்ப்பாள் விலகி­யது. நிழலிருட்டில் சிரிப்பொலியைக் கேட்டார். "திறந்திருக்கிறீர்களா?'

"நிச்சயம் உங்களுக்காக'. சுருண்ட முடியும், நல்ல தோலின் நிறமும் கொண்ட கடை உரிமையாளர் இளம்பெண் ஒலிவியாவின் குரல் வந்தது. பிராட் கடையின் உள்பக்கம் தட்டுத்தடுமாறிச் சென்றார். வாசனை மெழுகுவர்த்தி வெளிச்சம் சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் நிறைந்த அடுக்குகளைக் காட்டியது. சிறு வெளிச்சத்தில் அவை பளபளத்து மின்னின. வறுத்தும் வறுபடாத முந்திரி என்று அவர் நம்பிய ஒரு பாக்கெட்டை அவர் கல்லாப்பெட்டிக்குக் கொண்டுவந்தார். "பதிவுகள் செயலிழந்துவிட்டன. எந்தச் சன்மானங்களும் ஏற்கப்படும்' ஒலிவியா ஜோக் அடித்தாள். அவர், கண் அருகில் வைத்து, சரிபார்த்துக் கொடுத்த ஒரு ஐந்து டாலர் நோட்டுக்கு அவள் தன் சொந்தப் பணப்பையிலிருந்து சில்லறை கொடுத்தாள். அவருக்கு இந்த வணிகம் தளுக்கு மினுக்காகப்பட்டது. நகரத்தின் சூழலும், பயனற்ற கேபிள்களின் தொங்கு தோரணமும் உவகையாகத் தோன்றின. முன்விளக்குகள் ஒளிர வாகனங்கள் அணிவகுத்தன. காற்றில் அதிகரித்து வந்த அசம்பவத்தின் அறிகுறி, பாதசாரி­களை மீண்டும் ஒதுக்கிடங்களை நாட வைத்தது. திரும்பவும் காருக்குள் தஞ்சமடைந்த பிராட் காரணமற்ற மகிழ்ச்சியில் சிரித்தார்.

புதிதாக மழைத்துளிகள் கார் கண்ணாடியைக் கொத்தின. அவர் தனது காரை அண்டைவீட்டுப் பக்கமாகத் திருப்பி, பண்ணையின் எல்லையாக முன்பு குறிப்பிடப்பட்டிருந்த கல்சுவர் பகுதியில் வேகம் குறைத்தார். "பொதுவழி அல்ல' என்று கடுமையாகச் சொன்னது அறிவிப்புப் பலகை. வெள்ளை ஆடை அணிந்திருந்த ஒரு பெண், பளபளக்கும் வினைல் ரெயின் கோட் மற்றும் மடத்தனமாகத் தோன்றிய வெள்ளை நிற ரன்னிங் ஷூவுடன் குறுகிய சாலையின் நடுவே நடந்து கொண்டிருந்தாள். படபடக்கும் சைகையில் காரை நிறுத்தும்படி சொன்னாள். அவர் தனது அண்டை வீட்டுக்காரப் பெண்ணை அடையாளம் கண்டுகொண்டார். இந்த குட்டைமுடிப் பெண் சில ஆண்டுகளுக்கு முன்பு, மோரீஸ் வீட்டிலிருந்து மறைந்து காணப்பட்ட வீட்டிற்குத் தன் கணவன் மற்றும் இரண்டு வளர்ந்த மகன்களுடன் குடியேறியவள். அவர்கள் மது விருந்துகள் அல்லது மண்டல முறையீட்டுக்குழுக் கூட்டம் என ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே சந்தித்துக்கொண்டனர். அவள் ஆவி போலத் தோன்றி, சைகை காட்டினாள். அவர் காரை பிரேக் போட்டு நிறுத்தி, கண்ணாடியை இறக்கினார். "ஓ பிராட்' என்று நிம்மதிப் பெருமூச்சுடன் பேசினாள். "நீங்கதானா! என்ன நடக்குது? மின்சாரம் முற்றிலுமாக இல்லை. தொலைபேசியும்கூடச் செயல்பட­வில்லை'

"என்னோடதும்தான்' அவர் அவளுக்குச் சமாதானமாகச் சொன்னார். "எல்லோரு­டையதும். இந்தக் காற்றில் எங்கேயோ ஏதோ ஒரு மரம் மின்கம்பி மீது விழுந்­திருக்க வேண்டும். இது நடக்கிறதுதான் லைனி'. அவளது பெயரை நினைவிலிருந்து தூண்டில் போட்டு பிடித்து விட்டதில் மகிழ்ந்தார். லைனி வில்லர்டு!

அவள் உண்மையிலேயே நடுங்கிக் கொண்டிருப்பதை அவர் காணும்படி காரின் இறங்கிய கண்ணாடி முன்பாக வந்தாள். அவள் உதடுகள் அழப்போகும் குழந்தையைப் போன்று குவிந்திருந்திருந்தன. மரங்களைக் காப்பாற்றப் போவது போல அவரது கார் கூரைக்கு மேலாக வெறித்தாள். அவரது முகத்துக்கு நேராக தனது கவனத்தைக் குவித்த அவள், உதறலுடன் விவரித்தாள். "வில்லர்டு வெளியூர் போயிருக்கார். வாரம் முழுவதும் சிகாகோவில்தான்.

நான் இங்கே தனியாக இருக்கிறேன். இப்ப பிள்ளைகளும் உறைவிடப் பள்ளிக்குப் போய்விட்டார்கள். என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. அதனால் ஷூவைப் போட்டுக்கொண்டு நடக்கத் தொடங்கிவிட்டேன்.'

கூச்சமும் இரைச்சலுமான அவள் மகன்களை அவர் நினைவுகூர்ந்தார். விழுந்து கிடக்கும் கற்சுவருக்கு வெளியே சாலையின் கடைசியில், பள்ளி மேலங்கியுடன் உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் இப்போது உறைவிடப் பள்ளியில் தங்குகிற வயது என்றால் இந்தப் பெண்ணும் அவள் தோற்றம் அளிப்பதைப்போல அத்தனை இளமை இல்லைதான். கட்டப்பட்ட தலைக் கைக்குட்டையால் குறுகிய அவளது முகம் வெண்மையாக இருந்தது, முயல்போல இளஞ்சிவப்பாக இருந்த மூக்கு நுனியைத் தவிர. அவள் கண்களும் இளஞ்சிவப்பு நிறத்தில் கசங்கலாகவும் நனைந்தும் இருந்தன. "உங்கள் கேப் பிடித்திருக்கிறது' நீண்ட மௌனத்தை நிரப்புவதற்காக அவள் சொன்னாள். "நீங்கள் அந்த அணியின் ரசிகரோ'.

"இயல்பைவிட அதிகமில்லை.'

"உலகத் தொடர் போட்டியில் அவர்கள் வென்றுவிட்டார்கள்.'

"உண்மைதான். காருக்குள் வாங்க லைனி' அவர் சொன்னார். நம்பிக்கையூட்டும் அவரது ஆற்றல் அதிகமாகியிருந்தது. "உங்களை வீட்டில் கொண்டு விடுகிறேன். கீழே நகரத்தில் ஒன்றுமில்லை. மின்தடை எத்தனை நேரம் நீடிக்கும் என்று யாருக்கும் தெரியாது. வங்கியும் அஞ்சலகமும்கூட அறிந்திருக்கவில்லை. திறந்திருக்கும் ஒரே இடம் ஆரோக்கிய உணவுக் கடைதான்.'

"நான் நடந்துகொண்டிருக்கிறேன்' அவள் சொன்னாள், ஏதோ இது முடிந்துபோன விஷயம்போல. "நான் தொடர்ந்து நடப்பேன்.'

"பாக்கலியா? மழை மறுபடியும் ஆரம்பமாகிறது. வானம் பொத்தலிட்டு கொட்டப்போகுது.'

கண்ணைச் சிமிட்டிக்கொண்டு, உதடுகளின் அதிர்வைக் குறைக்க ஒன்றாக அழுத்திக்கொண்டு கீழ் உதடு பக்கவாட்டில் இழுத்து விளையாட்டு காட்டியது கார் முன்விளக்கைச் சுற்றி வந்தாள். இருக்கை பக்கமாக அவர் சாய்ந்து கார் கதவின் கைப்பிடியை இழுத்து, பயணியர் கதவை அவளுக்காகத் தள்ளித் திறந்தார், ஏதோ அதை அவளால் செய்ய முடியாது என்பதைப் போல. வெள்ளை வினைல் மழைக்கோட்டு கசகசங்க அவர் காருக்குள் சரிந்து உட்கார்ந்ததும், ஒப்புக்கொண்டாள்: "நான் வீட்டைவிட்டு வெளியேறும்படியாக பீப் சத்தம் இருந்தது. வில்லர்டு பாஸ்டனிலும் இல்லை. அவரை எங்கிருந்து அழைக்க இயலும்?'

"அது திருடர் எச்சரிக்கை மணி என்று நினைக்கிறேன்' பிராட் அவளிடம் சொன்னார். "அல்லது மின்தடையை விரும்பாத வேறு ஏதாவது எச்சரிக்கை மணியாக இருக்கும். நான் உள்ளே வந்து பார்க்கிறேன். வரலாம் என்றால் பிரச்சினை என்ன என்று பார்க்கிறேன்'

சுகந்தமான வாசத்தையும் அவளுடன் காருக்குள் கொண்டு வந்திருந்தாள். அவரது சிறுவயதில் அறிந்திருந்த வாசம். இருமல் மருந்து அல்லது அதிமதுரம் போன்ற வாசம். அவள் காரின் தோல் இருக்கையில் நன்றாக உட்கார்ந்த பிறகு, "நீங்க வரலாம்' என்றாள். தொடர்ந்து, "எனக்கு ரொம்பப் பயமாக இருந்தது' என்றாள் உதட்டைச் சுழித்துக்கொண்டு, ஏதோ தனக்குத்தானே சிரிப்பதைப் போல.

அல்லது கடந்தகால நினைவில் சிரிப்பதைப் போல. வில்லர்டு வீட்டுக்கு அவர் வந்ததே இல்லை. அவர்களது வீட்டுக்குச் செல்லும் வண்டிப்பாதையின் இரு மருங்கிலும் விரிவான தோட்டப்பயிர்கள் இருந்தன. வாகனம் நிறுத்துமிடம் பெரிய வெள்ளைக் கற்களால், இவர் வீட்டில் இருப்பதைப் போன்று பழுப்புநிறக் கூழாங்கற்களால் இல்லாமல் அமைக்கப்பட்டிருந்தது. கூழாங்கற்கள் பனிப்பொழிவின்போது புல்வெளிக்குச் சிதறிப்போய்விடும் என்று அவர் எடுத்துக்காட்டியும்கூட மனைவி ஜேன் அதை வலியுறுத்தினாள். ஆனாலும் அடிப்படையில் அந்த வீடு, அவருடையதைப் போன்றே இருந்தது. லைனி முன்கதவைப் பூட்டியிருக்கவில்லை. அப்படியே பயத்தில் வெளியேறி இருந்தாள். அவளைப் பின்தொடர்ந்த பிராட், அவள் லாவகமாகக் கற்படிகளில் ஏறி வீட்டுக்குள் நுழைந்து, அவருக்காகத் துணைக்கதவைத் திறந்து நிற்பதைப் பார்த்துத் திகைத்தார்.

உள்ளே, எச்சரிக்கை மணியின் பீப் சத்தம் தெளிவாகவும் அழுத்தமாகவும் கேட்டது. அதிக சப்தம் எழுப்பும் அலார வகை. வீட்டினுள் முதலில் தவறான திசையில் திரும்பினார். தரைதளம் அமைப்பு அவர் வீட்டிலிருந்து மாறுபட்டிருந்தது. பொது அறை, வலது பக்கத்துக்குப் பதிலாக இடது பக்கத்தில் இருந்தது. அதையடுத்துதான் சமையலறை. பக்கத்தில் அல்ல. இருப்பினும் வீடு அலங்க, ஷூவை லேஸ் அவிழ்க்காமல் உதறி, தரையில் எறிந்தாள். ஒருவேளை, அவர் முன்பாகக் குனிவதைத் தவிர்ப்பதற்காக இருக்கலாம்.

"ஆமாம்' அவர் கதவின் பக்கம் நகர்ந்தார். "இது என்னுடையதைப் போலவே இருக்கிறது' என்றார். கையை உயர்த்தித் தொடப்போனவர், அவளிடம் கேட்க நினைத்து, "தொடலாமா' என்றார்.

"நீங்களே பாத்துக்கங்க' என்றாள். அவளது சொந்த வீட்டில் அவளுடைய குரல் அதன் உதறல்கள் இல்லாமல் ஏறக்குறைய வட்டார மொழிக்கு மாறியது. "என் விருந்தாளியா இருங்க.'

ரீசெட் என்ற லேபிள் ஒட்டப்பட்ட சிறிய செவ்வகப் பொத்தானை அவர் அழுத்தினார். பீப் ஒலிப்பது உடனே நின்றது. அவள் பின்னால் நெருங்கி வந்து, "அவ்வளவுதானா இதற்கு தேவையெல்லாம்' என்றாள்.

"அவ்வளவுதான்' என்றார். "மின்தடை என்பது திருடன் நுழைவதல்ல என்பதை அது அதற்குச் சொல்லும். நான் ஒன்றும் இந்தத் தொழில்நுட்பத்தில் திறமை­யானவன் என்பதல்ல'.

அவள் காரணம் புலப்படாத மகிழ்ச்சியில் சிரித்தாள். பல காலங்களுக்கு முந்தையதான, அதிமதுரம் கலந்ததான அவர் காரில் நுகர்ந்திருந்த வாசத்தில் மது இருப்பதை இப்போதுதான் உணர்ந்தார். "வில்லர்டு அப்படியொரு ஜடம்'. அவள் அவரிடம் சொன்னாள். "இந்தப் பொருள்களைப் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால் சொல்லித்தருவதில்லை. ஆம்பளை நீங்களே சொல்லுங்க, இத்தனை நாளா சிகாகோவில் இருக்கறதுக்கு வேலை இருக்கும்னு நினைக்கிறீங்களா?'

பிராட் கவனமாகப் பேசினார். "தொழில் அதிக நேரத்தைக் கேட்பதாக இருக்கும். சில நேரங்களில் ஆண்கள் தொழில் செய்யும் பெண்கள்கூட கண் பிசகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நானும்கூட எப்போதும் கூட்டங்கள், விமானப்பயணம் என்றிருந்தேன். ஆனால் வீட்டில் இருந்தபடி வேலை செய்வதே சிறப்பானதாக இருக்கிறது. எல்லா இடங்களிலும் இந்த எலக்ட்ரானிக் கம்யுனிகேஷன் வந்துவிட்ட பிறகு, அந்த அளவுக்கு வெளியே போக வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் எனக்குத் தெரியவில்லை வில்.. மிஸ்டர் வில்லர்டு தொழில்பற்றி...' அவரது வார்த்தைகள் பதற்றத்தில் மேலதிகமாகவும் பரிச்சயம் இல்லாத இந்த வீட்டில் எதிரொலிப்பதாகவும் தோன்றியது. அல்லது வீட்டின் ஓரளவு மாறுபட்டுள்ள தன்மையால் உறிஞ்சப்படுவதாகத் தோன்றியது. அவர் வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும் உள்ள பல்வேறு சிறு வித்தி­யாசங்­களில் போய் விழுந்துகொண் டி­ருந்தது ஒலி. அவர் முன்னதாகவே சொன்னதைப்­போல, மழை திரும்பி வந்தது. வெளியில் நசநசவென அறைந்துகொண்­டிருந்தது. வீட்டுக்குள் கனத்த இருளை கொண்டுவந்தது. காற்று ஒரு சாட்டையைப் போல ஈரமான மழைத் துளிகளை குருணைகளாக ஜன்னல்மீது வீசி அடித்தது.

"அவர் தொழில் எனக்கும் தெரியாது' என்றாள். "உங்களுக்குக் குடிக்க ஏதாவது தரலாமா?' அவளும் பதற்றத்துடன் கேட்டாள். இன்னொரு சிரிப்பை சேர்த்துக்கொண்டு "நீங்களும் வெளியே இருந்து வந்து இருப்பதால்...' அமைதியாக இருந்த சமையலறையைக் காட்டி, "உங்களுக்கு என்னால் காபி தர இயலாது' என்றாள்.

"என்ன குடித்திருக்கிறீர்கள்?' பிராட் அவளிடம் கேட்டார்.

அவள் கண்கள் விரிந்தன, ஏதோ ஒளியின்மையை நிறைவு செய்வதைப் போல. "ஏதோ ஒன்று என்பதை எப்படி அறிந்தீர்கள்? சில தோழியரும் நானும் மதிய உணவைச் சீரகத் தண்ணீருடன் சாப்பிட்டோம்.'

"காரில் இனிய நறுமணமாக இருந்தீர்கள்' என்று பதில் சொன்னவர், சரிபார்ப்பதைப் போல நெருக்கமாகச் சென்றார்.

அவள் முத்தங்களில் அதிமதுரம் சுவைக்கவில்லை. அந்தப் பொது அறையில் டிவி வெறுமனே வெறித்துக்கொண்டிருந்தது. குளோப் நாளிதழ் இன்னமும் அதன் பிளாஸ்டிக் உறையுடன் பிரிக்கப்படாமல் சோபா மீது வீசப்பட்டுக் கிடந்தது. லைனி ஈரம் படாமல் முத்தமிட்டாள். தாற்காலிக­மாக, ஏதோ உதட்டுச் சாயத்தைப் பரிசோதிப்பதைப் போல. பிறகு அவள் உதடுகள் தகுந்தபடி சூடேறின. தன் முகத்தை அவள் தூக்கி எழுப்ப, பரிதவித்த கைகள் அவரது பின்புறத்தில் கழுத்துக் கதுப்பைச் சுற்றின. ரொம்ப தொலைவில் இல்லை என்றும், திடீரென அகலக் கால் வைப்பதாகவும் பிராட் வியந்தார். ஆனால் அவருக்கு அவரே சமாதானம் செய்துகொண்டார். இது மனித இயல்பு, வெளியே மழை அடித்துக்கொண்டிருக்கையில் ஒதுங்கிடத்தில் நேர்ந்த இந்தத் தொடர்பும் இந்த அறையில் புலப்படாத அளவுகளில் மங்கிய இந்த ஒளியும் கேடற்றவை. அவரது துடிப்பு அவளது கூந்தலை வருடிவிடுவதாக இருந்தது. கலைந்தும், தலை கைக்குட்டையால் தட்டையாகவும் இருந்தது அவள் முடி. அவள் உதடுகளைப்போல அவரது கைகள் நடுங்கின. அவர்களது முகங்களில் கொதிப்பு ஏறியது. அவர்களது தழுவல்கள் ஆடைகளின் ஊடாக நயமற்று இருப்பதை உணரத் தொடங்கினர். "நாம் மாடிக்கு போய்விட வேண்டும்' என்றாள் திடமான குரலில். "போகிறவர்கள் யாராவது உள்ளே பார்க்கலாம்.'

"இந்த வானிலையில் யார் வருவார்கள்?' அவர் கேட்டார்.

"அவருக்கு நிறைய பெட்எக்ஸ் கடிதங்கள் வரும்' அவருக்கு முன்பாகவே அவள் படியேறினாள். படிகளில் வெளிர்பச்சை கம்பளம் விரித்திருந்தது. அவருடையது பழுப்புநிறம். லைனி பெயர் சொல்லாமல் சுட்டுப்பெயரால் தொடர்ந்து பேசினாள். "அவர் தினமும் என்னுடன் போனில் பேசுவார். பெரும்பாலும் இந்த நேரத்தில். அது அவருடைய இரவைச் சுதந்திரமாக்கிறது என்று நினைக்கிறேன்'. அவர் படியின் உச்சியில் நின்று மூச்சு வாங்கியபோது, இறுக்கமான பின்னலாடையில் நகரும் அவளது இடையை ரசித்தார். "உங்கள் போன்கூட வேலை செய்யவில்லை என்று சொன்னீர்களோ!'

"ஆமாம். கஞ்சத்தனமான ஒரு சிஸ்டத்தை வைத்திருக்கிறார். எல்லாமும் ஒரே வயரில். அது சரியாகப் புரியவில்லை எனக்கு. எங்கள் புது காரில், என்னால் ரேடியோ ஸ்டேஷனைத் திருப்ப முடிவதில்லை. நிறைய வசதிகளை வைத்து விடுகிறார்கள்.' "அதேதான்' என்று அவர் ஒப்புதல் அளித்தார். மாடியில் இருந்த அறைகளின் அமைப்பு அவரது வீட்டைக் காட்டிலும் மாறுபட்டிருந்தது. அவள் இட்டுச்சென்ற அறை மாஸ்டர் பெட்ரூமைவிடச் சிறியதாகவும் அடைசல் இல்லாமலும் இருந்தது. பீரோ மீது பல வயதுகளில் எடுக்கப்பட்ட அவளுடைய மகன்களின் போட்டோக்களும், ஐம்பதுகளின் உடைகளில் இளமையாக இருந்த சில வயதானவர்களின் படங்களும் ஒருவேளை அவளுடைய அல்லது வில்லர்டு பெற்றோராக இருக்கலாம். பல அளவுகளிலான வண்ணப்படங்கள், வண்ணம் வெளிறிய விடு­முறைக்காலச் சுற்றுலாப் படங்கள். சுவரில் இருந்த போஸ்டரில் ஒரு பெண் புலித்தோல் மட்டுமே அணிந்திருந்தாள். லைனி ஜன்னலின் ஓரமாக ஒரு கணம் நின்றாள். "பாருங்க, இலைகள் வீழ்ந்துவிட்டதால் உங்கள் வீட்டைப் பார்க்க உங்களால் முடியும்' என்றாள். அதைக் காண அவருக்கு சில வினாடிகள் ஆகின. குறுக்கிடும் மரங்களின் ஊடாக ஒரு மந்தமான நிழல்போல, புகை போலத் தெரிந்தது. "உன் கண் நல்லா இருக்கு' என்றார். இந்த அண்டைவீட்டுக்காரி தன்னைவிட வயதில் இளையவள் என்பதை உணர அவர் விரும்பவில்லை, ஆனால் வயது வித்தியாசம் எத்தனை அமைதியாகவும் சீக்கிரமாகவும் அறிவிக்கப்பட்டுவிடுகிறது. அவள் ஆடைகளைக் களைந்தாள், அது ஒரு பெரிய விஷயமே இல்லை என்பதைப்போல. ஆகா, அது ஒரு பெரிய விஷயம்தான். உடலில் சரியான இடங்களில் எலும்பும் கொழுப்புமாக, ஒடுக்கமும் மேடுமாக அவள் அழகாக இருந்தாள். நிழலான அறையில் முன்னும் பின்னும் நகர்ந்து, ஆடைகளை பிள்ளைகளின் மேசைமீது மடித்து வைத்தாள். சாலை நடுவே அவளைப் பார்த்தபோது அவளை ஆவியாக நினைத்திருந்தார், ஆனாலும் ஆவிக்கான தன்மையுடன் பட்டுக்கொள்ளாமல் நகர்ந்தாள். கார் இருக்கையில் அவள் சரிந்தபோது அவர் கண்டிருந்ததைப்போல அவளது உதடுகள் சுயவிமர்சனத்துடன் சுழித்தன. அவரது ஆடைகளைக் களைவதற்கு உதவிட வந்தாள் ஜேன் செய்யாத ஒன்று. இந்த அடிமைச் செயல் அவளது சிறிய முகம் சுருங்கிட அவரது பொத்தான்களைக் கழற்றியது அவர் அகலக் கால் வைப்பதுபோன்ற பதற்றத்தைப் போக்கி கிளர்ச்சியூட்டியது. காற்று மழையைக் கவனிக்க இயலாமல் செய்தது. அவருக்குள் இருந்த இரத்தப் புயல் அதை மூழ்கடித்துவிட்டது. செயலின் முனைப்பில் அவளது உதடுகளின் நடுவே நுனி நாக்கு வெளிநீண்டது. தலைக் கைக்குட்டை மூடாமல்விட்ட அவளது முன்நெற்றி முடிகளில் மின்னும் நீர்த்துளிகள் மழை வாசம் தந்தன. அவரது வளர்இளம் பருவத்தின் மற்றொரு மணம். "கடவுளே, நான் நேசிக்கிறேன் இதை' என்றார். "உன்னை' என்று சொல்வதிலிருந்து வலிய முயன்று தனக்குள்ளாகவே நிறுத்திக்கொண்டார்.

"இன்னும் முடியல' ஒரு தோழியுடன் பேசிக்கொண்டிருக்கும் பெண்ணின் மெல்லிய குரலில் அவள் உறுதியளித்தாள். "இன்னும் நிறைய இருக்கு பிராட்'.

மின்சாரம் வந்தது. மாடி முழுவதிலும், சுவர் மற்றும் மரவேலைகள் தெளிவாக முன்னெழுந்தன. கீழ்தளத்தில், சமையல் அறையின் பாத்திரம் கழுவும் இயந்திரம் இயங்கி அடுத்தகட்ட பணிக்கு மாறியது. முன்கதவில் திருடர் எச்சரிப்பு மணி தனது பீப் ஒலியைத் கீச்சிடுகிற தொனியில் தொடங்கியது, அடித்தளத்தில் இருந்த கனப்பு, காற்றினும் மெலிந்த ஓசையில் கனன்று எரிந்து, காற்றைவிடவும் நிலையான ஓசையுடன், குளிர்ந்த வீட்டுக்கு வெப்பத்தை மறுஅறிமுகம் செய்தது. கீழ்தளத்தில் எழுந்த விசைகூடிய ஆர்வக் குரல்கள், ஒரு மணி நேரத்துக்கு முன்பு, லைனி பயம் கொள்வதற்கு முன்பாக, தொலைக்காட்சியில் அவள் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்தாள் என்று அறிவிப்பு செய்தன.

மூச்சுக் காற்று கலந்துவிட்ட அளவுக்கு அவன் முகத்துடன் நெருக்கமாக இருந்த அவள் முகம், டிவி விளம்பர இடைவேளைபோல, பின்னுக்குத் துள்ளியது. "ஓ அன்பே' என்றாள். கண்களைக் கசக்கி பார்வையைக் குவித்தாள்.

"மீட்புக்காகத்தான்' அவர் சொன்னார். பொத்தான்களைப் போட்டுக்கொள்ளத் தொடங்கினார்.

"நீங்க போக வேண்டியதில்லை'. ஆனால் அவளும்கூட அவளுடைய அம்மணத்தில் சங்கடப்பட்டாள். வேனற்கட்டி போலக் கன்னங்கள் சிவந்து கிடந்தன.

"போகனும்னு நினைக்கிறேன்' என்றார். "அவரும் அழைக்கக்கூடும். பாஸ்டனில் மின்தடை செய்தியாக்கப்பட்டிருந்தால் அவளும் அழைக்கக்கூடும். இப்போது நீ நலமாக இருப்பாய். லைனி, கவனி. எச்சரிக்கை மணி பீப் ஒலியை நிறுத்திவிட்டது. அது சொல்கிறது. எல்லாம் நல்லபடியாக முடிந்தது. "எல்லாமும் இயல்பாக இருக்கிறது'. அது சொல்கின்றது, "அந்த மனிதனை வீட்டை விட்டு வெளியே அனுப்பு.'

"இல்ல..' அவள் வலுவின்றி மறுத்தாள்.

"அது சொல்கின்றது, இப்போது நான்தான் பொறுப்பாளன்.' அவளது அம்மணத்திலிருந்து பிராட் கண்களைத் திருப்பினார். அவளிடம் சொன்னார், "அது சொல்கின்றது: "இப்படித்தான் இது இருக்கிறது', "இதுதான் யதார்த்தம்'. (2008ம் ஆண்டு நியு யார்கர் இதழில் வெளியான சிறுகதை)

Pin It