22-05-2014 வியாழக்கிழமை மாலை 6-00 மணியளவில், கர்நாடக மாநிலம், பெங்களூர்த் தமிழ்ச் சங்க கட்டிடம், திருவள்ளுவர் அரங்கில் மறைந்த, பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவரும், கர்நாடகத் தமிழர்ப் பேரவையின் தலைவருமாகிய திரு பா.சண்முகசுந்தரம் (எ) அண்ணாச்சி அவர்களின் 75 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.

மறைத்திரு பா.சண்முகசுந்தரம் நினைவு அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் “அண்ணாச்சி சிறப்பு மலர்”வெளியிடப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மலரை வெளியிட உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பெற்றுக் கொண்டார்.

காவேரிக் கலவரம், தொடர்வண்டித் துறையினரின் நிலம் கையகப்படுத்துதல், தலைமுறைக் கணக்காக வாழ்ந்தோரை வனத்துறையினர்விரட்டி அடித்தல் போன்ற நிகழ்வுகளில் கருநாடகத் தமிழரின் உரிமை காக்க முன் நின்றவரும்; ஈழ விடுதலை ஆதரவாளரும்; விடுதலைப் புலிகளின் தோழருமான அண்ணாச்சி அவர்களை நினைவு கூர்ந்து, பலரும் உரையாற்றினர்.கழகத்தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் சுருக்கம்:
கொளத்தூரில் புலிகள் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தபோது, பெங்களூரில் அண்ணாச்சி ஏற்பாட்டில் புலிகளுக்கு இரண்டு இலக்கம் உரூபாக்கள் நிதி அளித்ததுதான் அப்பயிற்சிப் பாசறைக்குக் கிடைத்த முதல் பெரிய நன்கொடை.

அவற்றோடு பயிற்சியாளர்களுக்கு, பயிற்சி முடிந்து ஈழம் திரும்பும் புலிகளுக்கான சீருடைகள், புலி இலச்சினையோடு கூடிய தொப்பிகள், தோள்பட்டையில் பொருத்தப்படும் உலோகத்தினாலான எழுத்துகள் என உதவிகள் செய்தவர்.தொடர்ச்சியாக நடேசன், டேவிட் போன்றோரைத் தங்கள் இல்லத்திலேயே தங்கவைத்து இயக்க ஆதரவு பரப்புரை பணிகளுக்கு ஊக்கமும் அளித்தவர்.

அவ்வாறு அங்கு தங்கியிருந்து பணியாற்றிய (கருப்பு) தினேஷ் தான் பிற்காலத்தில் தமிழ்ச்செல்வனாகி புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவராக, அரசியல் ஆலோசகர் அன்டன். பாலசிங்கம் அவர்களின் மறைவுக்குப் பின்னர், சர்வதேச பேச்சு வார்த்தைக் குழுவுக்குத் தலைமையேற்று சிறப்பான பங்களிப்பை ஈந்தார்.

அது போல அங்கு தங்கியிருந்த டேவிட், பின்னாட்களில் தமிழீழ அரசின் நீதித்துறையில் நீதிபதியாக பணியாற்றினார். பெங்களூரில் ஈழ ஆதரவு கருத்தரங்குகள், பேரணிகள், மாநாடுகள், கண்காட்சிகள் தொடர்ச்சியாக வீச்சாக நடத்துவதற்கு காரணமானவர்.

தமிழரல்லாத, குடியரசுத் துணைத் தலைவர் ஜாட்டி, பின்னாளில் இந்தியத் தலைமை அமைச்சராக விளங்கிய சந்திரசேகர், இந்திய பாதுகாப்பு அமைச்சராய் உயந்த ஜார்ஜ் பெர்ணாண்டஸ் போன்றோரை தமிழர் நிகழ்வுகளுக்கு அழைத்து கலந்துகொள்ளச் செய்ததன் பலனாய் பிற தேசிய இன மக்களிடையிலும், கருநாடக மாநிலத்திலும் ஈழ விடுதலைக்கான பரவலான ஆதரவுத் தளம் உருவானதற்கு காரணமானவர், அண்ணாச்சி!

தமிழர்களின் மொழி, பண்பாட்டுத் தளமாக பெங்களூர் தமிழ்ச் சங்கம் விளங்க தமிழர்களின் உரிமை காப்புத் தளமாக இயங்குவதற்கென கருநாடகத் தமிழர்ப் பேரவை உருவாக்கப்பட்டு, புலவர் பாவிசைக்கோ, பேரா. அப்துல்காதர், அறிவுமதி போன்ற பல பாவலர்கள் பங்கேற்பில் பாவரங்கங்கள், புலவர் பாவிசைக்கோ படைத்த ‘விடுதலைப் புலிகள்’, ‘மண்ணை நம்பாத மரங்கள்’போன்ற பல நாடகங்கள், பொருள் திரட்டும் பணிகள் ( பொருள் எனில் பணம் என்று மட்டும் பொருள் கொள்ளலாகாது ) என எழுச்சியும், உற்சாகமும் பொங்க களப்பணிகள் நடந்தேறியதற்கு காரணமானவர். இவ்வாறாக சுற்றிச் சுழன்று பெருவீச்சில் நடந்த எல்லாப் பணிகளிலும்அண்ணாச்சியே அச்சாணி ஆவார். அவைதாம் பின்னாளில் இராஜீவ் கொலையின் போது அவரும், அவரது மகனும், புலவர், ஜெகநாதன் போன்ற பலரும் புலனாய்வுப் பிரிவினரால், காவல்துறையினரால் பல சங்கடங்களை, கொடுமைகளைச் சந்திக்க வைத்தன.

கருநாடகத்தின் புகழ்மிக்க நடிகர் இராச்குமார், சந்தன வீரப்பனால் கடத்தப்பட்டார். நோக்கம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால், தன் நாட்டுப் பெருமைமிகு மனிதர் ஆயிற்றே என கருநாடக அரசும், தன் நாட்டில் கடத்தல் நடந்துவிட்டதே என தமிழ்நாட்டு அரசும், தங்கள் குடும்பத் தலைவரைக் கடத்திவிட்டார்களே என அவரது குடும்பத்தாரும், அவரது சுவைஞர்களும், தவித்துத் துடித்ததைப் போலவே - ஏன்?...

அவர்களனைவரையும் விட கூடுதலாக - ஏதேனும் எதிர்பாராமல் அவருக்கு (இராச்குமாருக்கு) நடந்துவிட்டால் கருநாடகத்தில் வாழும் தமிழர் நிலை என்னவாகும் என்ற பெருந்தவிப்போடு – எல்லோரிடமும் நடந்தார்; எல்லாக் கதவுகளையும் தட்டினார்; எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார், அண்ணாச்சி!

சந்தன வீரப்பனோடு, அரசுகளுக்கு ஒப்பந்தம் ஏற்பட்டு, ஒப்பந்தக் கூறுகள் நிறைவேற்றப்பட்ட பின்னரும், ஒரு வழக்கில் பெறப்பட்ட இடைக்காலத் தடையால், வீரப்பன் கோரியவாறு நீதிமன்ற பிணை ஆணை சிலருக்குக் கிடைக்காத நிலை ஏற்பட்ட போது பெருந்தவிப்போடு அலைந்து திரிந்தார். தங்கள் நலனை, பலனைக் கருதி பிறர் தவித்து நின்றதைக் காட்டிலும் தமிழர் நலனைக் கருதி தவித்துக் கலங்கியது மிகப்பெரிது.

ஆனால் இடையில் யாரோ இதனைப் பலனாக்கிக் கொள்ள, இவர் மீது நண்பர்கள் சிலரே அய்யங் கொண்டதுதான் அவருக்குக் கிடைத்த பலனாகிப் போனது ஒரு அவலம். சிற்றரசரைப் போல பெரிய மாளிகைகளில் பெருமிதத்தோடு வாழ்ந்த அவர் சிறிய வாடகை வீட்டில் வண்ணம் பழுத்த உடைகளோடு, முடங்கிய உடலோடு, உயர் சிகிச்சைப் பெற இயலா வறுமையோடு தனது கடைசி நாட்களைக் கழித்ததும் – பொதுவுக்கே தன்னை ஒப்படைத்துக் கொண்ட அவர், தனது தனி வாழ்வை, தொழிலை, அன்பு மகனைக் கூட கவனிக்காமல் விட்டதும் பேரவலம்.

ஒருகாலகட்டத்தில் அவரது நட்புறவில் முளைவிட்ட சிறு நெருடலை – அவரது இறுதிக் காலத்தை – மறைவை இப்போதும் கலங்கிய கண்களோடு அசை போடுகிறேன் பிற மாநிலங்களில் இருந்தும், கருநாடகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் தமிழ்ச்சங்கத்தினரோ, முன்னணித் தமிழர் நலம் பேணும் தமிழ்ப் பேராளர்களோ வந்துவிட்டால் தனது அனைத்து பணிகளையும் புறந்தள்ளிவிட்டு அவர்தம் நெஞ்சம் நெகிழ வரவேற்று மகிழ்வித்த விருந்தோம்பல்.

தனது தாயிடம் அவர் கொண்டிருந்த பணிவு கலந்த, அளவு கடந்த பாசம், தமிழர் நலமோ, சரக்குந்து உரிமையாளர் நலனோ, ஓட்டுநர்கள் உரிமையோ - அது காவல் துறையினராலோ, வேறு துறையினராலோ சிறு அளவில் பாதிக்கப்பட்டாலும் – பாதிப்புக்குக் காரணமானவர் அரசு, அமைச்சு, அதிகாரி என எந்த நிலையினரானாலும் அவர்கள் தங்கள் தவறைத் திருத்திக் கொள்ளும்வரை, இயலாத நிலைகளில் மன்னிப்புக் கேட்கும்வரை பருந்திடம் தன் குஞ்சுகளைக் காக்க சீறிச் சிலிர்த்துப் போராடும் தாய்க் கோழியைப் போலப் போராடும் அஞ்சா நெஞ்சம்; புரட்சிக் கவிஞர் போன்றோரின் பாக்களில் அவர் கொண்டிருந்த பிடிப்பு, புலவர் பாவிசைக்கோவின் பாக்களை, புலவரே மறந்திருக்கும் பாக்களை அடி பிறழாமல், சுவைத்து சுவைத்து சொல்லி மகிழும் பாங்கு, பன்மொழிப் புலமை; அவரது அமைதியான – ஆனால் அழுத்தமான குரல்.

இந்திய அளவில் சரக்குந்து உரிமையாளர் அமைப்பில் எந்தப் பதவியிலும் இல்லாதபோதுகூட அவர் தனித்துவமாகக் கொண்டிருந்த செல்வாக்கு; எல்லாத் தமிழினத் தலைவர்களோடும் நல்ல நட்பினைப் பேணிவந்தாலும் அந்நட்புக்காக தனது கருத்தை மாற்றிக்கொள்ளாத பேராண்மை; புலிகள் இயக்க ஆதரவுப் பணிகளில் மூழ்கிப்போய் பெரு வருவாய் ஈந்த தன் தொழிலில்எல்லாவற்றையும் இழந்து தொடக்க நிலைக்கே போய்ச் சேர்ந்த கொடுமை …..

என எவையெவையோ என் நெஞ்சத்துள் அலைமோதுகின்றன. அவரது மனித நேயம், தமிழர் பற்று, தமிழ் உணர்வு, பொதுமை உணர்வு, பண்பு நலன் என மிளிர்ந்த அவரது பொது வாழ்க்கை நமக்கான பாதை காட்டும் ஒளி விளக்கு; அவரது தனி வாழ்க்கை அனைவருக்குமான எச்சரிக்கை விளக்கு. அண்ணாச்சி இல்லாமல் போய்விடவில்லை; என்றும் வாழ்வார் நம் உள்ளங்களில்; என்றும் வாழ்வார் அனைத்து இன உணர்வுத் தமிழர் நெஞ்சங்களில்- என தமது உரையில் குறிப்பிட்டார்

Pin It