அன்பே அருளே அறிவே எமையே
ஆட்கொண் டியக்கு கின்ற ஆற்றலே!
பண்பே பரிவே திருவே மனிதன்
பகுத்துணரக் கற்பித்த எந்தன் பகவனே!
மாண்பே மருவிலா வித்தே வியப்பே
மனிதப் பரிணாம வார்ப்பின் ஆதியே!
மனித மாண்பின் மின்னோட்ட விசையே
மானவாழ்வை மீட்டளித்த எந்தையே வாழி!
என் சொல்வேனையா! என் செய்வேனையகோ
எம்மக்கள் இன்னும் தூங்குகின் றாரே!
கொடிய பகைவரிட மெல்லா மிழந்தே
கையேந்தி இறைஞ்சி வாழுகின் றாரே!
அடிமைதாமென் றாரியர் காலைத் தொழக்கண்டு
அகிலம் நகைத்திடல் அறியா துள்ளாரே!
விடிவிலையோ எம்மின இழிவிற்கே விந்தையோ!
விடுதலை உணர்வினை இழந்தார் அந்தோ!
துணைசெய்யப் போராடித் தடுத்தாட் கொள்ள
துணிந்தா ரில்லை உமைப்போல் எவருமே!
ஓற்றுமையு மில்லையே பதவி இரைகாட்டி
கண்ணி வைத்தே பார்ப்பான் காத்துள்ளானே!
குடியும் தமிழும் அழியுமோ அய்யகோ!
உனைமறந்தார் உயிரை மறந்தது போலே!
பிணமென்றே எண்ணி நாயும் நரியும்
பிய்த்திழுத்துத் தின்னக் காத்துள் ளனவே!
தூண்டிலை மறந்தே தண்ணீரைப் பழிக்கும்
கெண்டையைப் போலே தமிழரே உன்னை
தூற்று கின்றார் நன்றி மறந்தே!
தமிழருள் இவரொரு நோயுற்றா ரென்பீர்.
தமிழின விடுதலைப் போர்க்களத் தேநீ
தந்திர நரிகளாம் ஆரியரை வென்றே
மீட்டளித்த அறிவை மானத்தை அழித்தாரே!
மீண்டும் அடிமை சூத்திரன் என்றே
மண்டியிட்டு அண்டிவாழ ஆயத்த மானாரே!
எமக்காக எத்துனை சிறைபட்டாய்! போராடி
இழிவு நீங்கிட இனத்தைக் காத்தாயே!
உமதுபொருள் வாழ்வு யாவையும் துறந்தாயே!
உயிருள்ள வரைஓ யாதுழைத் தாயே!
இமைக்காமல் நோய்களை சுமந்து கொண்டே
ஊரெலாம் ஓடியோடித் தேடி மனிதனாக்க
தமிழர் மூளை அணுக்களெங்கும் அறிவை,
தன்மானத்தை ஊட்டிய அன்னையே வாழ்கவே!
- மாண்பன்